மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 29 நவம்பர், 2009

கல்லூரிக்காலம் - I

கல்லூரிக்காலம்... அந்த நாட்கள்தான் எத்தனை இனிமையான நாட்கள். எங்கிருந்தோ வந்து எனக்குள் ஐக்கியமான நட்புகள்... எனது படைப்பு பத்திரிக்கைகளில் வெளிவந்தது... இலக்கியப் போட்டிகளில் வென்ற பரிசுகள்... எனக்குள் நுழைந்து என்னை மகன் போல் நடத்திய பேராசிரியப் பெருமக்கள்... இன்னும் எத்தனை எத்தனையோ அந்த வசந்த காலத்தில்...


பள்ளிப்படிப்பு முடிந்ததும் கல்லூரியில் சேர காரணமாக இருந்தவர் எனது மூத்த அண்ணா. இல்லையென்றால் பனிரெண்டாம் வகுப்பு முடிக்குமுன்னரே எனது தந்தை எங்கள் ஊருக்கு அருகிலிருக்கும் நூற்பாலையில் எனக்கு வேலைக்கு ஏற்பாடு செய்துவிட்டார். எனது அண்ணாவிடம் அழுது புலம்ப, அவர் நாங்கள்தான் படிக்கவில்லை (அவர் +2 வரை படித்தார். குடும்ப கஷ்டத்தால் மேல படிக்கவில்லை) அவங்க ரெண்டு பேரும் (நானும், தம்பியும்) நல்லா படிக்கட்டும் என்று சப்தம் போட, அப்பா அதற்கு மேல் ஒண்றும் சொல்லவில்லை.

ரிசல்ட் வந்ததும் கல்லூரியில் விண்ணப்பம் செய்தோம். கணிப்பொறியியல் துறைக்கும் விண்ணப்பித்தேன். 6000 ரூபாய் கட்டினால் இடம் தருவதாக தெரிவித்தனர். குடும்ப சூழல் இடம் தரவில்லை. (சில காலங்களுக்குப் பிறகு அதே கணிப்பொறியியல் துறையில் நான்கு வருடம் வேலை செய்து எனது ஆசையை தீர்த்துக் கொண்டேன்) கல்லூரியில் இடம் கிடைத்து. என்னுடன் படித்த நண்பர்கள் ஒரு சிலரைத்தவிர மற்றவர்கள் வேறு பாடப்பிரிவுகள், வேறு கல்லூரி என பிரிந்து சென்றனர்.

எனது கல்லூரி வாழ்வின் முதல் நாள் எனது அட்லஸ் சைக்கிளில் கிளம்பினேன்.வகுப்பறைக்கு சென்றால் எல்லோரும் புது முகம். எனக்கு கடைசி பெஞ்சில் உட்காரும் பழக்கம் இல்லை என்பதால் இரண்டாவது பெஞ்சில் அமர்ந்தேன். வகுப்பு தொடங்கிய போது என்னுடன் படித்த சிவபால மூர்த்தி வந்தான் (என்னுடன் ஒண்ணாப்பு முதல் கல்லூரி வரை படித்த நண்பன்). அப்பா ஒருத்தன் வந்துட்டான் என்று நினைத்த மனசு அவனுக்கு உட்கார இடம் கொடுத்தது. ஆனால் அவனோ ஒரு புன்னகையுடன் கடைசி பெஞ்சுக்கு போய்விட்டான். (மூன்று வருடங்கள் அவனுக்கும் எனக்குமான உறவில் அதிகம் பேசியதென்னவோ புன்னகை மட்டும்தான்.)

பிறகு மரியக்கண்ணு, தேவசகாயம் என எனது பள்ளித்தோழர்கள் வந்தனர். எனக்கு அருகில் அமர்ந்திருந்த்வர்கள் இருவரும் (அண்ணாத்துரை மற்றும் சேவியர்) எனக்கு அறிமுகமாயினர். எனக்குள் ஒரு புதிய நட்பு வட்டம் உருவாகியது. எங்கள் வகுப்பில் பத்து பெண்கள் உள்பட 33 பேர் சேர்ந்திருந்தோம் (பின்னர் 3 பேர் விலகி சென்றுவிட 30 ஆனோம்).

எல்லாக் கல்லூரியையும் போல எங்கள் கல்லூரியிலும் ராகிங் நடந்தது. பாடவேளை முடிந்து அடுத்த ஆசிரியர் வருவதற்குள் வந்து எங்களை ஒரு வழி பண்ணிவிட்டார்கள். அன்று மதியம் சாப்பாட்டு இடைவேளையில் ஒரு பெண்கள் குழு வந்தது, எல்லோரிடமும் பேரு என்ன அப்பா பேரு என்ன என்று கேட்டது. (அப்பா... காளிக் கூட்டம்) என்னிடம் கேட்க, அமர்ந்தபடி சொல்ல,எந்திரிடா என் டுபுக்கு என்றது ஒண்ணு... எழுந்து சொன்னேன். (ம்... என்ன செய்ய... அவள்கள் அனுபவித்ததன் எதிரொலி.... என்ன செய்யட்டும். ) பெண்களிடம் கேள்வி கேட்கும் போது பல புரியாத கேள்விகள். (ஹி.... ஹி.... இப்ப புரியும்) ஒருவழியாக சமாளித்தாயிற்று.

கல்லூரி முடிந்து வீட்டிற்கு கிளம்ப எத்தனித்தபோது நாலு பேர் வந்து எங்களை அப்படியே கல்லூரிக்குப் பின்னால் இருக்கும் முந்திரிக் காட்டுக்கு ஓட்டிச் சென்றனர். (பசங்களை மட்டும் தான்). அங்கு எங்களுக்கு முன்னர் பல பேர் ராகிங்கில் சிக்கி சீறழிந்து கொண்டிருந்தனர். என்னவோ தெரியவில்லை நான் சின்ன ஆளாக் இருக்கவும் என்னை பேர் கேட்டதோடு ஓரமாக நிற்க சொல்லி விட்டனர் (சத்தியமா உண்மைங்க. நம்பினால் நம்புங்க).

என்னுடன் வந்த மரியக்கண்ணு பெரிய ஆளா இருப்பான். அவனை எல்லோருக்கும் ஒரு யுனிவர்சிட்டி சல்யூட் அடி என்றனர். அவன் முழிக்க, ஒருவன் எழுந்து எப்படி என்று சொல்லிக் கொடுத்து அவனை அடிக்கச் சொல்ல, அவனும் அடித்தான். (கருமம்... கண்றாவி...).

இன்னொருவனை பாடச் சொல்ல, அவனும் 'ஆயிரம் நிலாவே வா...' என்ற பாடலை பாடினான். என்னடா ஆயிரம் நிலவைக் கூப்பிடுறே... சரி அப்படியே இற்ங்கு வரிசையில ஒரு நிலா வரைக்கும் வா என்று ஒருவன் கூற். 999 நிலவே வா... 998 நிலாவே வா... என்று ஒரு ஒரமாக நின்று அவன் பாடினான். ஒருவனை கோழி பிடிக்கச் சொன்னார்கள். அவனும் 'பேக்.. பேக்.. என்று ஓடினான். என்னும் எத்தனை..? (சில நாட்களில் அவர்களெல்லாம் நண்பர்களாக மாறினர்).

மறுநாள் காலை ஒரு கூட்டத்திடம் மாட்டிக் கொண்டோம். அவர்கள் சட்டையை இன் பண்ணி வந்தவர்களை எடுத்து விடச்சொன்னதோடு முதலாம் ஆண்டில் இன் செய்யக் கூடாது என மிரட்டல் வேறு விட்டனர். (நம்ம எப்பவும் இன் பண்றதேயில்லை. அதனால கவலையே படலை). இந்த மிரட்டல் ஒரு வாரம் மட்டுமே தாக்குப் பிடித்தது என்பது வேற விஷயம்.

ஒருவன் ஒரு பொண்ணை (இரண்டாம் ஆண்டு மாணவிகளில் அழகான பெண் என்ற வர்ணனை வேறு) எனது வகுப்புத் தோழனிடம் காட்டி ரோஸ் கொடுக்கச் சொல்ல, அவனும் அந்த அண்ணன் கொடுத்ததாக சொல்லி கொடுத்து விட்டான்.(சில நாளில் ரோஸ் கொடுத்தவனுக்கும் வாங்கியவளுக்கும் லவ்விருச்சுங்க...)

ராகிங்கெல்லாம் முடிந்து கல்லூரி ஸ்டிரைக், அடிதடி எனத் தொடர்ந்த போது அண்ணாத்துரை, ராமகிருஷ்ணன், பிரான்சிஸ், முத்தரசு பாண்டியன், ஆதி ரெத்தினம், நவனீதன், திருநாவுக்கரசு, சேவியர் என புதிய நட்புவட்டம் உருவாகியது. இந்த நட்பு வட்டம் எனக்கு கிடைத்த வரம் என்றே சொல்லலாம்.

கல்லூரிக்காலம் தொடரும்.

-சே.குமார்

ஞாயிறு, 22 நவம்பர், 2009

பள்ளிப்பருவம் - III

டுநிலைப் பள்ளி முடித்து மேல்நிலைப் பள்ளிக்குப் பயணம். அதற்கென நுழைவுத்தேர்வு வேறு. தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே சேர்த்துக் கொள்ளப் படுவார்கள். சிபாரிசிலும் சிலர் சேர்த்துக் கொள்ளப்படுவதுண்டு. (ஏழைக்களுக்கு அந்த கொடுப்பினை எங்கும் இல்லை. அரசியல்வாதியாகவோ அல்லது அந்த ஏரியாவில் செல்வாக்கு மிகுந்தவரின் பிள்ளையாகவோ அல்லது ஆசி பெற்றவரின் பிள்ளையாகவோ இருக்க வேண்டும்.)

பரிட்சை எழுதிவிட்டு தினமும் தபால்காரரை எதிர்பார்த்து காத்திருக்க, ஒருநாள் லெட்டர் வந்தது. பிரிக்கும்வரை இதயம் எக்ஸ்பிரஸ் ரயிலாய் தடதடத்தது. (பெயிலா இருந்தா அம்மா கொன்னுபுடுவாங்களே...)நல்லவேளை தேறிவிட்டேன். பள்ளியில் சேர்க்க வரச்சொன்ன அன்று அம்மா என்னை பள்ளிக்கூடம் கூட்டிக்கொண்டு போய் சேர்த்துவிடும்படி சித்தப்பாவிடம் கூற, அவர் வேலை இருப்பதாகக் கூறி மறுத்துவிட்டார். (அன்று அவர் மீது கோபம் வந்தது. ஆனால் இன்றும் அவர் மீது உள்ள மரியாதை மட்டும் குறையவில்லை.)

எங்கள் ஊரில் இருந்து குறுக்காக நடந்து கூட்டிக்கொண்டு போய் அம்மா சேர்த்துவிட்டார். எங்கள் படிப்புக்காக அதிகம் கஷ்டப்பட்டவர் எங்கள் அம்மாதான். (அப்பா வேலை காரணமாக வெளியூரில் இருந்தார்.)

பெரிய பள்ளியில் சேர்ந்தாச்சு. ஒண்ணாப்பு முதல் எட்டாப்பு வரை எங்கூட படித்த நண்பர்களைப் பிரிந்து புது இடம். மனசுக்கு கஷ்டமாக இருந்தாலும் புது பள்ளிக்கூடம் போற சந்தோஷம்.முதல் நாள் பள்ளிக்கு சென்றால் இருவரைத்தவிர அனைவரும் புதுசு. என்னுடன் ஒண்ணாப்பு முதல் படித்த சிவபாலமூர்த்தியும் சுந்தரும் என் வகுப்பில். குத்தாலத்தில் குளித்தது போல் இருந்தது. (இருக்காதா பின்னே... யார்கிட்ட போயி பேச முடியும்... நமக்கு ஒரு துணைதானே.)

அது ஒரு கனாக்காலம் தான் போங்க. நாலு கிலோ மீட்டர் சைக்கிள் பயணம். பரிட்சை முடிந்து பள்ளிக்குப் போனா பரிட்சைப் பேப்பர் கொடுக்குறதுக்குப் பதிலா தலைமை ஆசிரியர் கிளாசுக்கு வந்து மார்க்கை வாசிக்கிறாருங்க. (என்ன கொடுமை சார் இது.) எந்திரிக்கச் சொல்லி வாசிச்சு, கடைசியில எல்லாப் பாடத்திலயும் பாசனவங்க எந்திரிங்க... ஒரு பாடம் பெயிலானவங்க எந்திரிங்க... ரெண்டுபாடம் பெயிலானவங்க... எல்லாத்திலயும் பெயிலானவங்க எந்திரிங்கன்னு சொல்லி நோகடிச்சுடுவாரு. (சை... அந்த அனுபவம் இருக்கே... நல்லவேளை பசங்க மட்டுமே படிக்கும் பள்ளியாப்போச்சு.)

எப்படியோ நாலு வருசம் அப்புடியே ஓடுச்சுங்க, நம்ம நல்லநேரம் பெயிலாகாமல் படிச்சு வெளியில வந்துட்டோம். (சாதனைதான் போங்க). ஒரு சில ஆசிரியர்கள் மேல் என்னை அறியாமல் ஈர்ப்பு வந்தது.

அதில் குறிப்பிடத்தக்கவர்கள் சவரிமுத்து ஐயா, தாசரதி ஐயா, ராய் சார், ஜோசப் ராஜ் சார், சொக்கலிங்கம் சார், ஜோசப் சார் (இவரு இங்கிலீஷ் எடுத்தாரு. பரிட்சையில பிட் அடிச்சவனை பேப்பர் கொடுக்கும் போது கரெக்டா புடிப்பாரு. அனா அவனை அடிக்கமாட்டாரு. யாரப்பா பார்த்து எழுதினேன்னு கேட்டு அவனை வரச்சொல்லி பளார்ன்னு ஒரு அறை விடுவாரு பாருங்க. அப்பா... நானும் வாங்கியிருக்கேன். அப்புறம் யாருக்கும் காட்டுறதில்லையில்ல...எப்புடி மனசு வரும்... ). சாமிநாதன் சார் (புளியங்குச்சிய எடுத்தா குச்சி நொறுங்கிறவரை அடிதான் போங்க), ஆகியோர்.

இவர்களில் நான் கல்லூரியில் படிக்கும் போது கலை இலக்கியப் பெருமன்றத்தில் இருந்த போது சவரிமுத்து ஐயா, தாசரதி ஐயாவுடனான தொடர்பு தொடர்ந்தது. அது இன்றுவரை தொடர்கிறது. அது எனது பாக்கியம்.

அடுத்த கட்டுரையில் மறக்க முடியாத கல்லூரிக்காலம் பற்றி பார்ப்போம்.

-சே.குமார்

ஞாயிறு, 15 நவம்பர், 2009

பள்ளிப்பருவம் -II

பள்ளிப் பருவம் -II... இதுவும் நடுநிலைப்பள்ளி சம்பவங்களின் தொகுப்புதான். நாலாப்பு படிக்கும் போது பாக்யராஜின் 'தூறல் நின்னு போச்சு' படம் வந்துச்சு. ஒருநாள் அம்மா, நான், அக்கா, தம்பி எல்லோரும் படம் பார்க்க போனோம். அடுத்த நாள் பள்ளிக்கூடம் போனப்ப மத்தியானம் சாப்பிட்டுட்டு மரத்தடியில நின்னு மரக்குரங்கு (அதாங்க ஒரு கம்பை வச்சு வட்டம் போட்டு விளையாடுவாங்களே... அதான்) விளையாடுனவங்களை பார்த்துக்கிட்டிருந்தேன்.

மரத்து மேல இருந்து குதிச்ச சவரிமுத்து அண்ணன், நேரே எம்மேல வந்து விழுந்தாரு. நான் கீழ விழுந்தப்ப கை ஒடிஞ்சிருச்சு, கை வலியோட வகுப்புல இருந்துட்டு வீட்டுக்கு வந்தா கையை தொங்க விட முடியலை. வலி உயிர் போகுது. அம்மா திட்டிட்டு, ஆவரை இலையை பறித்துக் கொண்டு வந்து வேகவைத்து ஒத்தடம் கொடுத்தாங்க. சரியா வரலை. அப்புறம் காலையில திட்டிக்கிட்டே நுடவைத்திய சாலைக்கு கூட்டிக்கிட்டு போனங்க.

ரெண்டு மாசத்துக்கு மேல கட்டுப்போட்டோம். பள்ளிக்கூடத்துக்கு சட்டை போடமத்தான் போவேன். (வகுப்புல எதுவும் சொல்லுறதில்லை. தனி மரியாதைதான் போங்க). நாங்க கட்டுப்போட போறதுக்கு பக்கத்து ஊர்ல போயி பஸ் புடிக்கனும். கிளம்புறப்ப டாண்ணு தூறல் நின்னு போச்சுல இருந்து 'ஏரிக்கரை பூங்காற்றே...' பாட்டை ரேடியோவில போடுவாங்க. (அப்ப அந்த பாட்டு மேல ஒரு மோகம்)

அம்மாகிட்ட இந்த பாட்டைக் கேட்டுட்டு வர்றேம்மான்னு சொன்னாப்போதும், ஆமா இவருக்காக பஸ்காரன் நிப்பான். வாடா. பாக்யராஜ் மாதிரி சண்டை போடுறேன்னுதான் கை ஒடிஞ்சு கிடக்கு வாறியா.. இல்லையா..? என்று கத்துவார். (நாம... பாக்யராஜ் மாதிரி சண்டை... என்ன சிறுபிள்ளைத்தனமான பேச்சு பாருங்க).

இப்பவும் தூறல் நின்னு போச்சு பாட்டைக் கேட்டா மரக்குரங்கும் கையும் மறக்காமல் ஞாபகத்தில் வரும்.

ஆறாவது படிக்கும் போது அல்வா விற்பனை அமோகமா நடந்ததுங்க.(அப்பவே தொழிலதிபருங்க) ஒரு ரூபாய்க்கு வாங்கினா ஒரு ரூபாய் 20 காசுக்கு விக்கலாம். சில சமயம் லாபமான 20 காசுக்கு நாமளே சாப்பிட்டுறது. ( லாபம் நினைக்காத முதலாளி)

அப்புறம் திங்கட்கிழமை மதியம் பக்கத்துல ஞாயிற்றுக்கிழமை வாரச்சந்தை நடக்கிற இடத்துல போயி நான், பழனி, சேகர், முத்துப்பாண்டி எல்லோரும் காசு பொறக்கி (இப்பவும் நாம பொறுக்கிதாங்க.) கடலை மிட்டாய் வாங்கி சாப்பிட்ட அந்த நாட்கள் இன்னும் இனிமையாய் நெஞ்சுக்குள்.

அந்த நடுநலைப்பள்ளிக்கு பின்பொரு நாள் நானும் எனது நண்பன் முருகனும் நாங்கள் நடத்திய கணிப்பொறி மையம் மூலமாக சில உதவிகளை செய்த போது தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களால் கௌரவிக்கப்பட்டோம்.
 
-சே.குமார்

வெள்ளி, 13 நவம்பர், 2009

பள்ளிப்பருவம் - I

பள்ளிப்பருவம்... என்றும் மனதுக்குள் மழைக்கால காளானாய் மகிழ்ச்சி தரக்கூடியது. அந்தப் பருவத்து வசந்த காலத்தை அசை போட்டுப் பார்ப்பதே பள்ளிப்பருவம் - I.


நான் படித்தது நகரத்தில் இருந்தாலும் கிராமத்துப் பிள்ளைகளை நம்பி நடத்தப்பட்ட ஒரு நடுநிலைப்பள்ளி. ஆறு வயதில் ஒண்ணாப்பு சேர்க்கப்பட்டேன். எங்க ஊர்ல இருந்து மூன்று கிலோமீட்டர் நடந்தே வந்து படிக்கணும். (ம்... இப்பல்லாம் 3 வயசுல பள்ளிக்கூடம் போறாங்க. வீடு வரைக்கும் பேருந்து வசதி உண்டு. புஸ்தக முட்டையும் அதிகம். பணம் கட்டி படிக்கிறதால பொறுப்பும் அதிகம். நமக்கு அது இல்லிங்கோ).

மூணாப்பு வரைக்கும் எல்லோரும் பாசுங்க. அதனால எங்க ஊருல நிறைய பேரு நாலாப்பு வரைக்கும் படிச்சவங்க. (நாலாப்பு போயி பெயில் ஆகிட்ட மேல படிக்கிறதில்லை). எனக்கு ஆனா, ஆவன்னா எல்லாம் ஒண்ணாப்புல சொல்லிக் கொடுத்தாலும். எ, பி, சி, டி மூணாப்புலதான் சொல்லித் தந்தாங்க.

புஸ்தக மூட்டையில புஸ்தகம் இருக்கோ இல்லியோ மதிய சாப்பாட்டுக்கு தட்டு இருக்கும். (மதிய உணவுக்காகவே பள்ளிக்கூடம் வந்தவங்க பலபேரு. (வறுமைதாங்க... வேற என்ன சொல்ல...). அப்புறம் மழை வர்ற மாதிரி இருந்தா போதும் கிரமாத்துப் பிள்ளைங்கல்லாம் போங்கன்னு சொல்லுவாங்க பாருங்க பள்ளிக்கூடமே காலியாகிவிடும். (கிராமத்துப் பிள்ளைங்க தாங்க அதிகம்) .

அதுவும் மழை விழுந்தாப் போதும் புத்தகப்பைய பள்ளியிலயே வச்சுட்டு(மறக்காம தட்ட எடுத்துக்கிட்டு) ஆட்டம் போட்டுக்கிட்டு போற சுகம் இருக்கே... அத இன்னைக்கு நினைச்சாலும் மனசு கூத்தாடுதுங்க...மழைத் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிவரும் போது எதிர்த்து வரும் மீனை அடித்துப் பிடிக்கும் அந்த சந்தோஷ நாட்கள் மீண்டும் கிடைக்குமா.?

ஒண்ணாப்புல எனக்கு பாடம் சொல்லிக்கொடுத்தவங்க மரியம்மை ஆசிரியை. எனக்கு அனா, ஆவன்னா கற்றுக்கொடுத்த தெய்வம் அவங்க.(அவங்க இப்ப தெய்வமாகிட்டாங்க...). நான் சின்னப்பயல இருக்கேன்ன்னு(இப்பவும் சின்னப்பிள்ளையாவே இருக்கேன்) அம்மா என்னைய மறுபடியும் ஒண்ணாப்புல போடச் சொன்னப்ப. அவங்க நல்லா படிக்கிறவனை(!!!???)எதுக்கு பெயிலாக்கணுமுன்னு மறுத்துட்டாங்களாம். (என்ன கொடுமை சார் இது.)

அவங்க ரொம்ப நல்லவங்க. யாருக்கும் தீங்கு நினைக்க மாட்டங்க. குறிப்பா நல்லா பாடம் நடத்துவாங்க. அவங்கமேல எல்லோருக்கும் பாசம் உண்டு.(ஒண்ணாப்புல வகுப்பு எடுக்கிறதால பசங்க அம்மா மாதிரி நினைச்சு பழகுவாங்க). அவங்க இப்ப இல்லை. எல்லாம் காலத்தின் கட்டாயம்.

என்ன ரொம்ப நல்லவங்களான என் ஆசிரியர், என் கல்வித் தாய் நோய்வாய்ப்பட்டு, ரொம்ப கஷ்டப்பட்டு இறந்தாங்க. அதுதான் மனசுக்கு கஷ்டமா இருக்கு. அவங்களுக்கு இந்த முதல் கட்டுரையில் அஞ்சலி செலுத்துறேன்.

அடுத்த கட்டுரையில் பள்ளிபருவம் II தொடரும். வாசித்து கருத்துக்களை பின்னூட்டம் செய்யுங்கள். மீண்டும் சந்திப்போம்.

-சே.குமார்