மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 16 டிசம்பர், 2009

கல்லூரிக்காலம் -V


எனது முதல் கதைக்கு ஐயாவிடம் இருந்து ஐம்பது சதவிகித மார்க் கிடைத்ததால் சந்தோஷம் அடைந்தேன். நாமும் எழுதலாம் என்று நினைத்துக் கொண்டேன். பின்னர் கவிதை எழுதுவதில் நாட்டம் போனது. ஆனால் சிறிய கவிதைகளை எழுதுவது எப்படி என்று தெரியவில்லை.நான் எழுதிய கவிதைகள் எல்லாமே நீளமாக இருந்தன.

அப்போதுதான் எனக்கும் முருகனுக்கும் ஒரு எண்ணம் உதித்தது, அது கையெழுத்துப் பிரதி ஒன்று ஆரம்பிக்கலாம் என்பதே. ஆவலுடன் அதற்கான ஆயத்தப்பணிகளில் இறங்கினோம். எனது நண்பர்கள் யாரும் வருவதாக இல்லை, முருகன் பக்கமும் அதே நிலை. என்ன செய்யலாம் என்று நினைத்தபோது, பெண்களுக்கு இடமளிக்கலாமே என்று சுபஸ்ரீ மற்றும் கனிமொழியை கைகாட்டினார் ஐயா. அவர்களிடம் பேசியதில் கனிமொழி மறுத்துவிட, சுபஸ்ரீ இணைந்து கொண்டார்.

நாங்கள் மூவரும் இணைந்து 'மனசு' என்ற பெயரில் கையெழுத்துப் பிரதி நடத்த முடிவு செய்து களத்தில் இறங்கினோம். அப்போது சுபஸ்ரீ வகுப்புத் தோழர்களும் எங்களின் நண்பர்களுமான அம்பேத்கார் மற்றும் இளையராஜா (நல்லா படம் வரைவான்) இருவரும் எங்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று வந்தார்கள். மூவர் ஐவரானோம்.

அதன் பிறகு பிரபாகரன் என்ற நண்பரும் இணைந்து கொண்டார். முதல் பிரதி வெளிவருவதற்கான வேலைகளில் சுறுசுறுப்பாக ஈடுபட்டோம். மூன்றாம் ஆண்டு தமிழ்த்துறை மாணவன் கேசவனும் அவரது நண்பர் நவனீதன் என்பவரும் 'தென்றல்' (பேர் சரியா என்று தெரியவில்லை) என்ற கையெழுத்துப் பிரதி நடத்தி வந்தனர். அவர்களது பத்திரிக்கையில் விளம்பரம் கொடுத்து அமர்களமாக முதல் பிரதி கொண்டு வந்தோம்.

கல்லூரி நூலகம், பொது நூலகம், துறைகள் சுற்றுக்கு, பெண்கள் ஓய்வறை, ஆசிரியர் குழுவுக்கு என ஐந்து பிரதிகள். முதல் முயற்சியில் பேராசிரியர்களின் பாராட்டுடன் வெற்றி பெற்றோம். எல்லோருக்கும் சந்தோஷம்.

அதன் பிறகு தொடர்ச்சியாக நிறைய கையெழுத்துப் பிரதிகள் வர ஆரம்பித்தன.

அதில் குறிப்பிடத்தக்கது எனது சகோதரர் பழனியப்பன் (தற்போது பத்திரிக்கை துறையில் நல்ல பொறுப்பில் இருக்கிறார்) தனது நண்பர்களுடன் இணைந்து நடத்திய 'ரோஜா', எல்லா கையெழுத்துப் பிரதியும் 40 பக்க நோட்டு வடிவில் இருக்க, ரோஜாவோ கிராப் நோட்டு வடிவில் வந்தது. பழனியின் கையெழுத்து அச்சில் வார்த்தது போல் இருக்கும். சும்மா சொல்லக்கூடாது அவரது எழுத்தில் ரோஜா அழகாய் மலர்ந்தது. (மனசுக்கு போட்டியாய் ரோஜா மலர்ந்தது என்றால் மிகையாகாது). பின்னர் மனசுக்கும் அவர்தான் அச்சுக்காரர் ஆனார். எனோ தெரியவில்லை நீண்ட நாட்கள் ரோஜா மலரவில்லை (ரோஜாவின் முள் நட்புக்குள் குத்தியதோ?)

மற்றொன்று நணபர் பரக்கத் அலி நடத்திய கவி'தா', (அவரது காதலி பெயர் என்று வதந்தி பரவியது. உண்மையா என்பது தெரியவில்லை). உன்மையை சொன்னால் நாங்கள் குழுவாக நடத்தியதை அவர் ஒருவராக நடத்திக் காட்டினார். கவி'தா' சார்பாக சிறுகதைப்போட்டி வைத்து அதில் வெற்றி பெற்ற கதைகளை தொகுத்து தேனப்பன் ஐயா மூலமாக புத்தகமாக கொண்டுவந்தார். அதில் முருகன், மற்றும் பழனியின் கதைகளும் பிரசுரமாயின என்பது சந்தோஷமான நினைவுகள்.

அதே நேரத்தில் கலையிலக்கியப் பெருமன்றத்திலும் உறுப்பினரானோம். ஐயா வசம் இருந்த தாமரை, செம்மலர், சுபமங்களா ஆகியவற்றின் ஏஜென்ஸி உரிமையை எங்களிடம் கொடுத்தார். ஒரு புத்தகத்துக்கு 25 பைசா கிடைக்கும். மன்றத்தில் உள்ள எல்லோருக்கும் புத்தகம் போட வேண்டும். புத்தகம் வந்துவிட்டால் போதும் அன்று மாலை கல்லூரி முடிந்ததும் சைக்கிளில் வீதிவீதியாக சுற்றுவோம். அதன் மூலம் காசு கிடைத்ததோ இல்லையோ மனசுக்கு நிறைவும், நல்லோர்களின் நட்பும் கிடைத்தது.

எந்த பிரச்சினையும் இல்லாமல் வெளிவந்து கொண்டிருந்த மனசுக்குள் விரிசல் வந்தது. யாரோ ஏதோ சொன்னார்கள் என ஆசிரியை குழுவில் இருந்து சுபஸ்ரீ விலகினார். அவரைத் தொடர்ந்து அம்பேத்காரும், பிரபாகரனும் விலகினர்.

அறுவர் குழு மூவர் குழு ஆனது. அதன் பிறகு ஒரு பிரதி மட்டுமே வந்தது என்று நினைக்கிறேன். அத்தோடு மனசுக்கு மூடுவிழா நடத்திவிட்டோம்.

பல வருடங்கள் கழித்து அதே கல்லூரியில் சுயநிதிப் பிரிவான கணிப்பொறியியல் துறையில் நானும், முருகனும் (இப்போது அதே கல்லூரியில் தமிழ்துறை பேராசிரியராக இருக்கிறான்) வேலை செய்த போது அப்போதைய முதல்வர் எங்களிடம் நீங்கள் நடத்திய மனசு போல் இப்ப உள்ள பசங்க நடத்த முன் வரமாட்டேங்கிறாங்க என்றார் (அப்போது எங்கள் கல்லூரியில் கையெழுத்துப் பிரதிகளே இல்லை).

அவர் அப்படி சொன்னது எங்கள் மனசுக்கு கிடைத்த வெற்றி என்றே நாங்கள் நினைத்தோம். அதன் பிறகு முருகன் அது போல் ஒரு பத்திரிக்கை கொண்டுவர முயற்சித்தான். கொண்டு வந்தானா தெரியவில்லை அதற்குள் நான் கல்லூரியில் இருந்து வெளியே வந்து விட்டேன்.

எனக்குள் என்றும் மறக்கமுடியாத பெயர் 'மனசு'. அதனால்தான் இந்த வலைப்பூவிற்கு அதே நாமகரணம். இப்போதும் மனசை நினைத்தாலே என் எண்ணங்கள் கல்லூரிக்குள் பட்டாம்பூச்சியாய் வலம் வர ஆரம்பித்துவிடும். ம்... அது ஒரு கனாக்காலம்.
 
-சே.குமார்

0 எண்ணங்கள்: