மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 22 ஜனவரி, 2010

வெற்றுடம்புடன் விளைநிலம்



ன்று கதிர்களால் காதலிக்கப்பட்ட எம் வயல்கள் இன்று கருவேல மரங்களின் கட்டுப்பாட்டில்... எங்கு நோக்கினாலும் வயல்களும் விவசாய காலத்தில் பயிர்களுமாக காட்சியளித்த எங்கள் கிராமத்தின் அடையாளம் தொலைந்து வெகு காலமாகிவிட்டது. அடுத்த வயலைக் காணமுடியாத அளவுக்கு கருவேல மரங்களும்... மக்கிய முள்ளுமாய்.

ஒரு காலத்தில் எங்கள் ஊரில் எல்லோர் வீட்டிலும் காளை மாடு இருக்கும். பருவ மழை தொடங்கியதும் ஏர் பிடித்து வயலில் உழுது தொளி அடித்து நாற்றுப் பாவி விடுவோம். மழை அதிகரித்து கண்மாய் நிறைந்தால் அந்த வருடம் பஞ்சமில்லை என்ற நிம்மதி. அதுவும் கண்மாக்குள் இருக்கும் முனியய்யா கோவில் வன்னி மரத்தைச் சுற்றிப் பெருகி முனியய்யாவின் இருப்பிடம் தண்ணீருக்குள் மறைந்தால் கண்டிப்பாக நல்லா விளையும் என்ற நடைமுறை கணக்கு ஒன்று உண்டு.

பார்த்துப் பார்த்து உரமிட்டு பயிர் வளர்ந்ததும் அதைப் பறித்து நடுவார்கள். அதற்கு நாற்றுப் பறித்தல் என்று பெயர். பயிரை பறித்து சிறுசிறு முடிகளாக கட்டி, வேறொரு இடத்தில் பெண்கள் நடுவார்கள். அதற்கு நடவு என்று பெயர். நடவுக்கு வரும் பெண்களுக்கு விதவிதமான சமையல், காபி, பலகாரம் எல்லாம். ரோட்டோரத்தில் நாற்று முடி ஒன்றை வைத்து பாட்டுப்பாடி காசு வாங்கும் அந்தப் பெண்களின் சந்தோஷம்... எவ்வளவு பணம் கொடுத்தாலும் கிடைக்காது.

பயிர் வளர வளர அதை பார்த்துப் பார்த்து சந்தோஷப்பட்ட அந்த தினங்கள்... இப்ப நினைத்தாலும் மனசுக்குள் மழைக்காலம். நட்ட பயிர் நேரே நிமிர்ந்து வளர ஆரம்பித்தால் கருநடை திரும்பிருச்சு என்றும் கருக்கூட ஆரம்பித்தால் பொதி கட்டிருச்சு என்றும் விவசாயிகள் ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொள்ளும் அந்த சந்தோஷ தருணங்கள் இப்போது எங்கள் கிராமத்தில் இல்லை.

கதிர் அறுத்து... கட்டு சுமந்து... நெல் அடித்து... அதை தூற்றி... பிணையல் விட்டு... வைக்கோலை... வைக்கோல் படப்பு என்று அழைக்கப்படும் இடத்திற்கு கொண்டு செல்லும் வரையான அந்த இனிய நிகழ்வுகள் இனி திரும்ப வராது.

பசுமையான இந்த வாழக்கையை எனக்கு அளித்த கிராமம் இன்று பசுமையிழந்து... பொட்டில்லாத முகமாக பொலிவிழந்து கிடக்கிறது. காரணம்... இயந்திரமாகிவிட்ட உலகத்தில் வயலை உழ மணிக்கு இவ்வளவு காசு என்று டிராக்டர்கள் குவிந்துவிட்டன. அதனால் மாட்டிற்கான தேவை குறைய, வீடுகளில் மாடும் குறைந்தது.

நாற்றுப்பாவி நட்டு... எதுக்கு ரெட்டைச் செலவு டிராக்டரை விட்டு உழுதுட்டு விதச்சு விட்டா அறுக்குறதுக்கும் மிஷின் வந்தாச்சு அப்புறம் என்ன ஆளைத்தேடி அலைய வேண்டாம் என்ற எண்ணம் எங்கள் ஊரில் எல்லோர் மனதிலும் வந்த நேரம் விவசாய வேலை குறுகினாலும் விவசாயம் மடியவில்லை என்ற எண்ணம் அதிக நாட்கள் சந்தோஷத்தைக் கொடுக்கவில்லை.




அதிக விலை கொடுத்து உரங்களை வாங்கி பயிருக்கு இட்டு பொதியான சமயத்திலோ அல்லது கதிர் அறுக்கும் சமயத்திலோ பக்கத்து ஊரில் இருக்கும் கோயில் மாடுகள் நாசமாக்க, நாங்கள் அடைந்த அந்த துக்கம் இன்னும் கண்ணுக்குள் நிற்கிறது.

அதற்காக வயல்களில் குடில் அமைத்து மார்கழிக் குளிரில் எங்கப்பா உள்பட விவசாயிகள் எல்லாம் அவர்களது வயல்களில் இரவில் போய் படுத்தது காவல் இருந்தது. அதுவும் அருகில் சுடுகாடு இருக்க எங்கப்பாவும் சின்னய்யாவும் தத்தம் வயல்களில் இரவு நேரத்தில் படுத்த அந்த நாட்கள் அவர்களுக்கு விவசாயத்தின் மீது இருந்த காதலை பறை சாற்றியது. அப்பா இல்லாத நாட்களில் அம்மா என்னையும் தம்பியையும் போய் பார்த்து வரச்சொல்வார்கள். போவோம் என்றா நினைத்தீர்கள் பாதி தூரம் போய் டார்ச லைட்டை அடித்துப் பார்த்துவிட்டு ஒடி வந்து விடுவோம்.

கோயில் மாடுகளை நிர்வாகம் ஒன்றும் செய்யாத காரணத்தால் கொஞ்சம் கொஞ்சமாக விவசாயம் கரைந்தது. இன்று விளைநிலங்கள் எல்லாம் வேலிக்கருவை என்று செல்லமாக அழைக்கப்படும் கருவேல மரங்களின் காடாக மாறிவிட்டது.

ஒரு காலத்தில் முப்போகம் விளைந்த் வயல்கள் இப்போது முள்கள் சூழ்ந்து பரிதாபமாய்....

காரணம்... இளைஞர்கள் எல்லாம் வேலை தேடி வெளி நாடுகளில் தஞ்சம்... ஓடி ஓடி விவசாயம் செய்தவர்கள் எல்லாம் காலத்தின் கட்டாயத்தில் முதிர்ச்சி என்னும் விவசாயத்தில்... பலர் பூமி விவசாயம் பொய்த்ததால் மேலே போய்விட்டார்கள். என்ன செய்ய...

பணம் இருக்கும் தோட்ட விவசாயிக்கு மின்சார சலுகை வழங்கும் அரசு சிறிய விவசாயிகளை கண்டு கொல்வது இல்லை என்பதே நிதர்சன உண்மை. உரத்திற்கு மானியம் என்பார்கள் ஆனால் மானியம் யாருக்கு என்பது அவர்களுக்கே வெளிச்சம். சினிமாக் காரனுக்கு தமிழ் பேர் வச்சா வரி விலக்கு கொடுக்கும் அரசு, விவசாயம் செய்தால் என்ன தருகிறது?

விவசாயம் எப்படி செய்வது என்பது விவசாயியின் மகனான எனக்குத் தெரியும் என்பது சந்தோஷம் ஆனால் என் வாரிசுகளுக்கு...?

நகரத்தை ஒட்டி இருக்கும் விளை நிலங்களெல்லாம் வீடுகளாக மாறி வரும் வேளையில் கிராமத்து நிலங்கள் பயனின்றி பாழ்பட்டு வருகின்றன.

என் சிறுவயதில் அழகிய சிற்றூறாக இருந்த என் கிராமம் போன்ற பல கிராமங்கள் இன்று பொலிவிழந்து எதோ ஒரு காட்டிற்குள் இருப்பது போன்ற பிரமையை ஏற்படுத்துகின்றன என்பதே உண்மை.

காலப் போக்கில் விவசாயம் என்றால் என்ன என்பது கல்வெட்டில் மலர்ந்தாலும் ஆச்சரியமில்லை.

-சே.குமார்.

0 எண்ணங்கள்: