மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

செவ்வாய், 19 மார்ச், 2013

அதீதத்தில் 'கண்ணில் ஆடும் காலம்'


காலையில எங்கட  கிளம்புறே என்ற அப்பாவிடம் தம்மத்துல குளிச்சி எத்தனை வருசமாச்சு… தண்ணி நிறைய கெடக்குதாம், அதான் நானும் ராமுவும் குளிக்க போறோம் என்றேன். அப்படியே லெட்டர்  எதுவும் வந்திருக்கான்னு  தபாலாபீஸ் சாமிநாதன் செட்டியார்கிட்ட  கேட்டுட்டு வா எனச் சொன்னதும் இன்னும் லெட்டர் வருதா? என்ற ஆச்சர்யத்துடன் என்னப்பா இன்னும் லெட்டர் எல்லாம் வருதா? என்றேன் சிரித்துக் கொண்டே.
ஆமா…. கோர்ட்,இன்சூரன்ஸ்காரன் அனுப்புறது அப்படியிப்படின்னு சில லெட்டர் வரும். போயி இன்னார் மகன்னு சொல்லி கேட்டியன்னா வந்திருந்தா கொடுத்திருவாரு. மறந்துறாம கேட்டுட்டு வா… இல்லைன்னா சாயந்தரம் நான் நடந்து போய்  கேட்டுட்டு வரணும்… என்று அப்பா சொல்லிக் கொண்டிருக்கும் போதே வண்டி கிளம்பியது.
வண்டியில் போகும் போது “ஏன்டா  மச்சான்… இன்னமாடா நம்ம ஊருக்கு  லெட்டரெல்லாம் வருது… இப்போ போஸ்ட்மேன் யாருடா?” என்றேன் ஆவலாய்.
“எங்க மச்சான் எல்லாருக்குமெல்லாம் வர்றதில்லை. மாமா வாத்தியாரா இருந்ததால எதோ புக்கு அது இதுன்னு வரும். தபால்காரரெல்லாம் அதிகம் வர்றதில்லை.. நானும் பார்த்ததில்லை… யாராவது அங்கிட்டுப் போனா வாங்கிக்கிட்டு வந்திருவோம்.”
“பரவாயில்லையே… நம்ம ஊருக்கும் தபால் இன்னும் வருதுன்னா சந்தோஷமாத்தான் இருக்கு. நாம சின்னப் பிள்ளைகளா இருக்கும் போது ஒரு ஓட்டச் சைக்கிள்ல வயர்கூடைய தொங்கப் போட்டுக்கிட்டு தலையில வெயிலுக்கு துண்டை சுத்திக்கிட்டு வருவாரே குமாரசாமி ஐயர் ஞாபகத்துல இருக்காராடா”
“மறக்க முடியுமா மச்சான்… உடம்புல சட்டைய ஒரு பக்கம் மட்டும் போட்டுக்கிட்டு பூணூல் தெரிய வருவாரே… அதுவும் மழை பேஞ்சு கம்மா நெறஞ்சிருக்கும் போது குறுக்கால முழங்காலு தண்ணிக்குள்ள நடந்து வந்து தருவாரே… அவர மறக்க முடியுமா…”
“ம்… மாமா, சின்னத்தா, அப்பா, அண்ணன் , அக்கா, தம்பியின்னு எல்லாருக்கும் முறை வச்சித்தான் கூப்பிடுவாரு.”
“ஆனா என்னய எண்ணக்கடை முதலாளிம்பாரு… உன்னைய சின்ன வாத்தியாருன்னு சொல்வாரு… நம்ம கட்ட சுரேசுப் பயல பஞ்சாயத்து மவனேன்னு கூப்பிடுவாரு… பாண்டிய மட்டும் நாம எல்லாரும் கூப்பிடுற மாதிரி பொத்தமுட்டின்னுதான் சொல்லுவாரு…”
“அவரு மணக்குடிதானேடா… இப்ப அங்கதான் இருக்காரா… நீ பாத்திருக்கியா…”
“முன்னாடி பாத்திருக்கேன்… இப்ப முடியாம இருக்காருன்னு ஒரு தடவ மாமா சொன்னாங்க… ஒரு தடவ பாத்தப்போ என்னை அடையாளம் தெரியலை… இன்னார் மகன்னு சொன்னதும் அடேய் களவாணிப் பயலே… வளர்ந்துட்டியல்ல அதான் அடையாளாம் தெரியலை… எல்லாப் பயலுவலும் நல்லா இருக்காங்களா… ஆமா உங்க ஊரு எழுத்தாளன், அதான்டா சின்ன வாத்தியார் எப்படிடா இருக்கான்… இன்னும் எதாவதுதான் எழுதிக்கிட்டுத்தான் இருக்கான் போல… ரெண்டு மூணு தடவை புத்தகத்துல ஊர் போரோட பாத்திருக்கேன்… எங்கடா இருக்கான்னு கேட்டார்.”
“அவருக்கு எல்லாரையும் பிடிப்பதைவிட என்னை கொஞ்சம் கூடுதலா பிடிக்கும். நான் படிக்கும் போது கதை எழுதி வந்தப்போ பத்திரிக்கை அனுப்புற பணத்தை நா இல்லாதப்போ அவரே கையெழுத்துப் போட்டு அம்மாகிட்ட கொடுத்துட்டுப் போயிருக்கார்… ம்… நல்ல மனுசன்…”
“காலம் நம்மகிட்ட இருந்து எத்தனையோ பேரை பிரிச்சிடிச்சிடா… பள்ளிக்கூடத்துல உம்மேல பாசமா இருக்குமே வாசுகி டீச்சர்… ரெண்டு மாசம் முன்னால இறந்து போச்சுடா… அப்புறம் பெட்டிக்கடை முருகேசு அண்ணன்… அதான்டா பள்ளிக்கூடம் விட்டா அங்கதானே நிப்போம்… போன மாசம் திடீர்ன்னு செத்துப் போச்சுடா… இவ்வளவு ஏன் நம்ம கூட படிச்சிச்சுல்ல கவிதா, கொஞ்ச நாளைக்கு முன்னால அரளி விதையை அரச்சிக்குடிச்சிட்டு செத்துப் போச்சுடா…”
எவ்வளவு பிரிவுகள்… இழப்புக்கள்… நல்லது கெட்டது எதுவுமே தெரியாமல் வெளிநாட்டில் வாழ்ந்து இரண்டு மூன்று வருசத்துக்கு ஒரு முறை ஊருக்கு வரும் போது இதுபோல் கேள்விப்பட்டு வருத்தப்பட மட்டுமே முடிகிறது என் போன்ற வெளிநாட்டு வாசிகளால் என்று நினைக்கும் போது மனசுக்குள் ஒரு அழுத்தம் வந்து அமர்ந்தது.
“என்னடா சொல்றே… எதுவுமே தெரிஞ்சிக்க முடியாம போகுதுடா… சொந்தத்துல நல்லது கெட்டதுன்னா அம்மா சொல்லிடும்… மத்ததெல்லாம் தெரிய வாய்ப்பில்லாம போகுதுடா… டீச்சர், கவிதா, முருகேசண்ணன் செத்ததை நீயாவது சொல்லியிருக்கலாமுல்லடா…” வருத்தம் தோய்ந்த குரலில் வார்த்தைகள் நொறுங்கி வெளியே வந்தன.
“ஆமா… அப்படியே போன் பண்ணி கிழிச்சிட்டே… அதான் இப்போ சொல்லிட்டோமுல்ல… செத்தவங்களைத் தவிர அவங்க வீட்ல நமக்கு யாரையும் தெரியாது… சரி வா குளியலைப் போடு… இப்படி குளிச்சி வருசக் கணக்காயிருச்சுல்ல உனக்கு… நல்லா அழுக்கை தேச்சுக்குளி…”

கதையை இனி அதீதத்தில் தொடர்ந்து படித்து உங்களின் கருத்தை அங்கும் இங்கும் பதியுங்கள்... 
அதீதத்தில் தொடர.... 'கண்ணில் ஆடும் காலம்'
  – “பரிவை” சே குமார்.

4 எண்ணங்கள்:

RAMA RAVI (RAMVI) சொன்னது…

எவ்வளவு இழப்புகள் பிரிவுகள்??

ஆதீதத்தில் தொடருகிறேன்.

தமிழ்மகன் சொன்னது…

கணனியில் அழிந்த கோப்புக்களை துல்லியமாக மீட்டெடுப்பதற்கு ----- http://mytamilpeople.blogspot.in/2013/03/recover-deleted-files-from-hard-disk.html

arasan சொன்னது…

தெளிந்த நீரோடை போல் எழுத்து முழுக்க ஏக்க மூச்சுக்கள் பொதிந்துள்ளன நண்பா ...
தொடர்ந்து வருகிறேன் ...

Asiya Omar சொன்னது…

கதை சுவாரசியமாக போகுது.வலைப்பூ முகப்பு அருமை சகோ.