மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 31 ஜூலை, 2013

சினிமா செய்திகள் : மரியான் பார்த்த ரஜினி - நயன் இடத்தில் அனுஷ்கா

மாப்பிள்ளை படத்தை கேட்டு வாங்கிப் பார்த்த மாமனார்....

ரஜினிகாந்த் தனது வீட்டில் உள்ள திரையரங்கில் மருமகன் தனுஷ் நடித்த மரியான் படத்தை பார்த்துள்ளார். 

படங்களை விளம்பரப்படுத்த விரும்புவோர் அதை ரஜினிகாந்துக்கு போட்டு காட்டி சூப்பர் ஸ்டார் எங்கள் படத்தை பார்த்துவிட்டு பாராட்டியுள்ளார் என்று அறிவித்துவிடுவார்கள். அடடா ரஜினி பாராட்டியுள்ளாராமே என்று அந்த படத்திற்கு மவுசு அதிகரித்துவிடும். இப்படி பலர் தங்களின் படங்களை விளம்பரப்படுத்துவதை பார்த்த ரஜினி படம் பார்ப்பதை தவிர்த்தார். 


ரஜினி தான் குடியிருக்கும் வீட்டுக்கு பின்புறம் உள்ள வீட்டை வாங்கி அங்கு க்யூப் தொழில்நுட்பத்துடன் கூடிய திரையரங்கு ஒன்றை வடிவமைத்துள்ளார். 

இந்நிலையில் அவர் ரவிச்சந்திரனை அழைத்து நீங்கள் தயாரித்த மரியான் படத்தை கொஞ்சம் போட்டுக் காட்டுங்களேன் என்று கூறியுள்ளார். ரஜினியே கேட்டுவிட்டார் என்று மரியான் பிரிண்ட் ஒன்றை ரவிச்சந்திரன் அனுப்பி வைத்துள்ளார். 

அதை தனது க்யூப் தொழில்நுட்ப திரையரங்கில் போட்டு பார்த்து ரசித்துள்ளார் ரஜினி. மரியான் படத்தில் ஹீரோவாக நடித்துள்ளது ரஜினியின் மாப்பிள்ளை தனுஷ், இசையமைத்துள்ளதோ கோச்சடையான் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்யாவின் ராஜ்ஜியத்தில் அனுஷ்கா 'இன்' நயன் 'அவுட்'

ஊரெல்லாம் ஆர்யாவுக்கும் நயன்தாராவுக்கும் காதல், ரகசியமா குடும்பமே நடத்துறாங்கன்னு பேச்சா கிடக்கு. ஆனால் நிஜம் வேறாக இருக்கிறது. ஆர்யாவுடன் ரொம்ம்ப்ப நெருக்கமாக இருப்பது அனுஷ்காதான் என்கிறார்கள். 

இரண்டாம் உலகம் ஆரம்பித்த சில மாதங்களிலேயே இருவரும் தங்களுக்கென தனி உலகத்தை உருவாக்கி வாழ ஆரம்பித்துவிட்டதாகச் சொல்கிறார்கள் யூனிட்டில். இரண்டாம் உலகம் படம் முடிந்த பிறகும் கூட, இருவரும் மிக நெருக்கமாக உள்ளார்களாம். 


சமீபத்தில் நடந்த சிங்கம் 2 வெற்றி விழா பார்ட்டிக்கு ஹைதராபாதிலிருந்து ஜோடியாகவே வந்த அனுஷ்காவும் ஆர்யாவும் விடியும் வரை விருந்தில் இருந்துவிட்டு, விடியலில் ஜோடியாகவே புறப்பட்டார்களாம். அதுமட்டுமல்ல, ருத்ரமாதேவி படத்துக்காக வாள் சண்டைப் பயிற்சிக்குப் போன அனுஷ்காவுக்கு பாதுகாப்பாக கூடவே இருந்தாராம் ஆர்யா. 

இப்படி பல கதைகளை ஆந்திர திரையுலகப் பத்திரிகைகளும் இணையதளங்களும் தொகுத்து வெளியிட்டு வருகின்றன. நெசமா பொய்யா என்பது சம்பந்தப்பட்டவர்கள் ஜோடி மாற்றும்வரை தெரியப் போவதில்லை!

செய்திக்கு நன்றி : இணையப் பத்திரிக்கைகள்
படங்களுக்கு நன்றி : கூகிள் இணையம்

-'பரிவை' சே.குமார்

இறந்துவிட்டாரா நடிகை கனகா? வீண் பரபரப்பை ஏற்படுத்திய "டிவி' சேனல்கள்

"புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நடிகை கனகா காலமானார்' என்று, "டிவி' சேனல்கள், நேற்று பிற்பகல் வெளியிட்ட தகவல், தமிழகம் முழுவதும், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், உயிருடன் உள்ள நடிகை கனகா, ""நான் நலமுடன் உள்ளேன். ஆண்களை பிடிக்காததால், திருமணம் செய்து கொள்ளாமல், தனிமையில் வசித்து வருகிறேன். எனக்கு புற்றுநோய் இருப்பதாக கூறி, தேவதாஸ் என்பவர், என் சொத்துகளை அபகரிக்க பார்க்கிறார்,'' என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.


கடந்த, 1989ல் வெளியான, "கரகாட்டக்காரன்' படத்தின் கதாநாயகியாக, தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகி, பரபரப்பாக பேசப்பட்டவர் நடிகை கனகா. "புருஷன் எனக்கு அரசன், துர்கா, சாமுண்டி, கும்பக்கரை தங்கையா, தாலாட்டு கேக்குதம்மா, அம்மன் கோவில் திருவிழா, சக்கரைத்தேவன்' உட்பட பல படங்களில், நடிகர்கள், ரஜினி, பிரபு, விஜயகாந்த், கார்த்திக், மம்முட்டி, மோகன்லால் உட்பட பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்துள்ளார்.

பழம் பெரும் நடிகை தேவிகா இவரது தாய். தேவிகா இறந்த பின், படங்களில் நடிப்பதை கனகா தவிர்த்தார். "கணவர்' என, கூறிய நபர் மற்றும் "ஆவி' அமுதா ஆகியோருடன் ஏற்பட்ட பிரச்னையால், மிகவும் வேதனைப்பட்டார். 2004ல் இருந்து, திரையுலகை விட்டு ஒதுங்கியிருந்தார்.


புற்றுநோய்?

இந்நிலையில், "நடிகை கனகா புற்றுநோயால் அவதிப்படுகிறார். கேரளா மாநிலம், ஆலப்புழாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்' என, இரண்டு தினங்களுக்கு முன், தகவல் வெளியானது. இதுகுறித்து, ஆலப்புழாவில் உள்ள தனியார் மருத்துவமனையை தொடர்பு கொண்டபோது, தகவல் உறுதியாகவில்லை. இதனால், நடிகை கனகா எங்கு இருக்கிறார் என, இரண்டு நாட்களாக பரபரப்பு காணப்பட்டது.

பிளாஷ் நியூஸ்:

இந்நிலையில், நேற்று பிற்பகல், "நடிகை கனகா இறந்துவிட்டார்' என, சில தமிழக, "டிவி' சேனல்களில், "பிளாஷ் நியூஸ்' வெளியானது. இது, கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் நடிகை கனகா வீடு உள்ளது. அங்கு, பத்திரிகையாளர்கள் சென்றபோது, கனகா, அவர் வளர்க்கும் பூனைகளுக்கும்,கோழிகளுக்கும் நிதானமாக தீனி போட்டுக் கொண்டு இருந்தார். 


அதிர்ச்சி அடைந்த பத்திரிகையாளர்கள், நடந்த விஷயம் குறித்து அவரிடம் விளக்கம் கேட்டனர். அப்போது நடிகை கனகா கூறியதாவது: நான், ஆலப்புழாவில் சிகிச்சை பெற்று வந்தாக கூறப்பட்டது, தவறான தகவல். நான், சென்னை வீட்டில் தான் இருகிறேன். எனக்கு புற்றுநோய் என, வதந்தி பரவியிருக்கிறது. நல்ல வேளை, "எய்ட்ஸ்' என்று செய்தி வரவில்லை. இந்த வதந்திகளை, என் தந்தை என்று கூறிக் கொள்ளும், தேவதாஸ் என்பவர் தான் பரப்புகிறார். இதையே காரணமாக வைத்து, என்னை சந்தித்து பேசி, என் சொத்துகளை அபகரிக்க பார்க்கிறார். பத்திரிகைகளில் செய்தி வந்ததும், என்னை தேடி ஆலப்புழாவுக்கு அவர் செல்லாமல், என் சென்னை வீட்டிற்கு வர முயன்றதை வைத்து பார்க்கும் போது, அவர் தான் என்னை பற்றி தவறான செய்தி பரப்பியிருக்கலாம் என, சந்தேகப்படுகிறேன். என் அம்மாவுக்கு ஒரு நல்ல கணவனாக, எனக்கு நல்ல தந்தையாக அவர், எந்நாளும் நடந்து கொண்டதில்லை. அம்மா இறந்த பின், எனக்கு பல சிரமங்கள் வந்தன. அவற்றை சமாளித்து, அமைதியாக வாழ்ந்து வருகிறேன். அப்பா என்று சொல்லிக் கொண்டவருக்கு, என்னைவிட, என் சொத்து மீது தான் அதிக கவனம். இதனால் தான், எனக்கு ஆண்களை பிடிக்காமல் போனது; "இனி திருமணம் வேண்டாம்' என, முடிவெடுத்து தனிமையில் வாழ்ந்து வருகிறேன். என் வீட்டில், வேலைக்காரி மட்டுமே உடன் இருக்கிறார். எக்காரணத்தை கொண்டும் என் தந்தை என, கூறிக் கொண்டிருக்கும் தேவதாசை, என் வீட்டிற்குள் அனுமதிக்க மாட்டேன். என் அம்மாவிற்கு அவர் செய்த துரோகத்தை மன்னிக்கவே மாட்டேன். சில நடிகர், நடிகைகளிடம் பேச முயற்சித்தேன். அவர்கள் பேச விரும்பவில்லை; பரவாயில்லை. பத்திரிகைகளில் எனக்கு புற்றுநோய் என செய்தி வந்தது, வருத்தமாக இருக்கிறது. தற்போது, நான் இறந்துவிட்டதாக செய்தி வந்து இருப்பது, அதிர்ச்சியாக இருந்தாலும், உங்களின் (பத்திரிகையாளர்கள்) சந்திப்பால், நான் நல்லபடியாக இருப்பது, மக்களுக்கு தெரிந்துவிடும்; இது சந்தோஷமாக இருக்கிறது; யார் மீதும் நான் வருத்தப்பட்டு என்னவாகப் போகிறது. இவ்வாறு, நடிகை கனகா கூறினார்.

பாசம் எங்கே?:

என்னைச் சேர்ந்தவர்கள் எனக்கூறி கொள்பவர்களுக்கு, என்னைவிட, என் சொத்தின் மீது தான், கவனம் அதிகம் உள்ளது. அவர்களைப் பார்த்தால், வெறுப்பு தான் வருகிறது. மனிதர்களைவிட வளர்ப்புப் பிராணிகள் மீது தான் பாசம் அதிகம் இருக்கிறது. எனவே தான், 35 பூனை, 35 கோழிகளை வளர்த்து வருகிறேன். இவை என்னிடம் பாசமாக உள்ளன. இதுவே எனக்கு மன நிறைவாக உள்ளது. இவ்வாறு, கனகா கூறினார்.


தந்தை பேட்டி:

கனகாவின் தந்தை தேவதாஸ் கூறும்போது, ""கனகாவுக்கு புற்றுநோய் என, பத்திரிகைகளில் செய்தியைப் பார்த்துவிட்டு தான், கனகா வீட்டிற்குச் சென்றேன். என்னை வேண்டாதவனைப் போல நினைக்கிறாள். வேலைக்காரியை விட்டு என்னைத் துரத்திவிட்டாள். என்ன தான் அலட்சியப்படுத்தினாலும், அவள் என் மகள்; அவள் மீதான பாசம் குறையாது. தனிமை தான் அவளை இந்த நிலைக்குக் கொண்டு வந்துவிட்டது,'' என்றார்.

நன்றி : தினமலர்
-'பரிவை' சே.குமார்

திங்கள், 29 ஜூலை, 2013

எங்க ஊருத் திருவிழா

சின்ன வயதில் திருவிழாக்கள் என்றாலே சந்தோஷம் சொல்லிமாளாது. எங்கள் பக்கம் பங்குனியில் ஆரம்பிக்கும் கோவில் திருவிழாக்கள் ஆடி மாதம் வரை தொடர்ந்து கொண்டே இருக்கும். பெரும்பாலும் கிராமங்கள் முதல் நகரம் வரை மாரியம்மன் கோவில் செவ்வாய் உற்சவவிழா நடக்கும். குறிப்பிட்டுச் சொன்னால் கோட்டூர், அருணகிரிப்பட்டணம், கோட்டையம்மன் கோவில், காரைக்குடி மாரியம்மன் கோவில் திருவிழாக்கள் சுற்று வட்டார மக்கள் எல்லாம் கொண்டாடும் திருவிழாக்களாகிவிட்டன. இதனிடையே ஆனி மாதம் ஊர் கூடி வடம் பிடிக்கும் சிறப்பான கண்டதேவி தேரோட்டம் வேறு (சாதிப்பிரச்சினையில் சிக்கி இப்போது தேரோட்டம் நடப்பது என்பது அரிதாகிவிட்டது) . எத்தனை விதமான சந்தோஷங்களைக் கொடுத்த திருவிழாக்களை அனுபவித்திருக்கிறோம்.

நாங்கள் படிக்கும் போது எங்கள் ஊரில் அவ்வளவாக திருவிழா நடைபெறாது. பக்கத்து ஊர்களில் நடக்கும் திருவிழாக்களுக்குத்தான் செல்வோம். எங்கள் ஊரிலும் வருடா வருடம் வைகாசி மாதம் முதல் நாள் இரவு ஒன்பது மணிக்கு மேல் திருவிழாவிற்கான கூட்டம் கோவிலின் முன்பு கூட்டப்படும். உக்கார்ந்து காரசாரமாகப் பேசி கடைசியில் ஒரு சிலரின் பிடிவாதத்தால் இந்த வருடம் செவ்வாய் கிடையாது என எல்லாரும் ஒருமனதாய்(!) தீர்மாணித்து கலைந்து செல்ல கூட்டம் மட்டுமல்ல செவ்வாய் போட்டுவிடுவார்கள் என ஆவலாய் கோழிக்கூட்டின் மேல் கொட்டக் கொட்ட அமர்ந்திருக்கும் எங்களின் சந்தோஷமும் நமுத்துப் போகும். மற்ற ஊர்களுக்குப் போகும் போது என்னப்பா இந்த வருசமும் உங்க ஊரில் திருவிழா இல்லையா? எப்பத்தான்டா செவ்வாய் போடுவீங்க? என்று நக்கலாகக் கேட்பார்கள். பதில் சொல்லாமல் சிரித்தே மழுப்பி விடுவோம்.

பத்துப் பதினொன்னு படிக்கும் போது திருவிழாக் கொண்டாட வேண்டும் என பசங்களெல்லாம் ஒரு குழுவாக கிளம்பி அதில் கொஞ்சம் வெற்றியும் கண்டோம். கல்லூரியில் படிக்கும் போது எதிர்ப்பாளர்களை எதிர்த்து நின்று பிரச்சினையை போலீஸ் ஸ்டேசன் வரைக்கும் கொண்டு சென்று வெற்றிக் கொடி நாட்டினோம். அதன் பின்னான வருடங்களில் இந்த வருசம் வெளச்சல் இருந்ததா இல்லையா... முடியுமா முடியாதா... கண்மாயில் தண்ணீர் இருக்கா இல்லையா... என எதைப்பற்றியும் யோசிக்காமல் வருடம் வருடம் வைகாசி மாதம் செவ்வாய் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. கண்மாயில் தண்ணீர் இல்லை என்றால் இப்போது ஊரில் குடிநீர்த் தொட்டி இருப்பதால் கண்மாய்க்கு பைப் இழுத்து வைத்திருக்கிறோம். குழி வெட்டி நிரப்பிக் கொள்வோம். முன்பு எங்கள் கண்மாயை ஒட்டி இருக்கும் தோட்டத்தில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து சேர்ப்போம்.

(கோவில் கட்டுமானப் பணி நடந்து கொண்டிருந்த போது எடுத்த படம்)

வைகாசி மாதம் இரண்டாவது செவ்வாய்க்கிழழை அம்மனுக்கு காப்புக்கட்டுவதில் இருந்து எங்க ஊர்த் திருவிழா தொடங்கும். தினமும் மாலை கண்மாயில் இருந்து சாமிக்கரகம் எடுத்து வந்து கோவிலில் வைத்து பூஜைகள் செய்து கொண்டைக்கடலை, பானக்கம் எல்லாம் கொடுத்து மொளக்கொட்டி இரவு மீண்டும் கரகத்தை கண்மாயில் கொண்டு போய் கொட்டிவிட்டு வருவோம். அந்த ஒரு வாரமும் இப்படித்தான். திங்களன்று இரவு வாழைமரம், தோரணம் எல்லாம் விடியவிடியக் கட்டுவோம். அடுத்தநாள் அதாவது செவ்வாய்க்கிழமை அன்றுதான் திருவிழா, அசைவச் சாப்பாட்டுக்கான சமையல், கரகம் வைக்க வேப்பிலை கொண்டு வருதல் என பரபரப்பாக நாளாக இருக்கும். அன்று இரவு அம்மனுக்கு கரகம் எடுத்தல், எல்லாருடைய வீட்டிலும் கரகம் வைத்து இருப்பார்கள். வீடு வீடாக மேளதாளத்துடன் சென்று அழைத்து வந்து கோவிலில் இறக்கி வைப்பார்கள். மறுநாள் காலை சாமி கும்பிட்டு கரகத்தை தூக்கி வழியெங்கும் மொளக்கொட்டி சாமிக் கரகம் எடுப்பவரை ஆட வைத்து கண்மாயில் எல்லாக் கரகங்களையும் கொட்டிவிட்டு குடங்களில் தண்ணீர் எடுத்துக் கொண்டு வந்து கோவிலில் சாமி கும்பிடுவோம்.

ஆரம்பத்தில் நம்ம ஊரில் செவ்வாய் போட்டால் போதும் எல்லா ஊரிலும் போல் நம்ம ஊரிலும் மைக்செட் பாட வேண்டும் என்றுதான் நினைத்தோம். அப்புறம் படிப்படியாக செவ்வாயின் போது வெள்ளிக்கிழமை விளக்குப்பூஜை ஏற்பாடு செய்தோம். அப்படியே திருவிழா அன்று காலை பால்குடம் எடுக்க வைத்தோம். இப்ப எங்கள் ஊர் செவ்வாய் சிறப்பான திருவிழாவாக ஆகிவிட்டது. 

திருவிழா அன்று கையிருப்பைப் பொருத்து நாடகம். கரகாட்டம், ஒயிலாட்டம், திரைப்படம் என எதாவது ஒன்று இரவு முழுவதும் நடத்தப்படும். கடந்த சில வருடங்களாக வாணவேடிக்கையும் உண்டு. சிறிய கிராமம்.... எல்லாருமே உறவுகள்... மனசுக்குள் கோபதாபங்கள் இருந்தாலும் எல்லாம் மறந்து சந்தோஷமாக எல்லாரும் நின்று செவ்வாய் கொண்டாடுவது என்பதில் ஒரு அலாதி சுகம்தான்.

எல்லா ஊரிலும் கோவில்கள் கோபுரத்துடன் அழகாக இருக்கின்றன். நம் ஊரில்தான் இன்னும் ஓட்டுக் கொட்டகையில் இருக்கு என்று இளைஞர்களான நாங்கள் தூபம் போட எங்களுடன் ஒத்துப் போகும் சில பெரியவர்கள் ஆமோதிக்க கூட்டத்தைக் கூட்டி வீட்டுக்கு இவ்வளவு வரி என்று சொல்லி வேலை ஆரம்பித்து இப்போ முடியும் தருவாயில்...

சென்ற வருடம் கோவில் கட்டுமானப்பணிக்காக ஒரு கரகம் வைத்து சாமி கும்பிட்டோம். இன்னும் வேலை இருப்பதால் இந்த வருடமும் விடாமல் ஒரு கரகம் வைத்து சாமி கும்பிட்டார்கள். இப்பொழுது வேலைகள் முடிந்து பெயிண்ட் அடிக்கும் பணிகள் நடக்கின்றன. ஆவணி 30ந்தேதி கும்பாபிஷேகம் செய்ய இருக்கிறார்கள்.

என்றோ நாங்கள் பற்றவைத்த நல்ல நெருப்பு இன்று ஜோதியாய் எங்கள் ஊரில் ஒளி வீசுகிறது. தொடர்ந்து ஒளிவீசும் என்ற நம்பிக்கையோடு நாங்கள்...

திருவிழாக்கள் என்ற தலைப்பில் சிலவற்றைப் பற்றி பகிர நினைத்து எங்க ஊர்த்திருவிழாவிலேயே நின்றுவிட்டது. மற்றொரு முறை திருவிழாக்கள் பற்றி பகிர்ந்து கொள்கிறேன்.

மீண்டும் ஒரு தலைப்பில் பேசுவோம்....
-'பரிவை' சே.குமார்.

புரிந்தும் புரியாமலும்


நீண்ட நிலா முற்றத்தில்
மூலைக்கு ஒருவராய்
நீயும் நானும்...

நேற்றுவரை நமக்குள்
நிகழ்ந்த சங்கமத்தின்
ஈரம் இன்னும்
இனிப்பாய் நெஞ்சில்..!

நீ எனக்களித்த
முத்தத்தினால் சிவந்த
என் கன்னம்
இன்று அவமானத்தால்..!

நீ காதல் பரிசாய்
எனக்களித்த சங்கிலி
என் வாயில்
பரிதவிப்போடு..!

நம்மைப் பிரிக்க
கடவுளுக்கு கூட
அதிகாரம் இல்லை...
என்றாயே..!

இதோ பிரிக்கக் கூடிய
கூட்டத்தின் எதிரே
மரப்பாச்சிகளாய் நாம்..!

வளவளவென்று
பேசியபடி அவர்கள்...
வாயடைத்து நாம்..!

எங்கே நாம் பார்த்தால்
அழுது விடுவோமோ...
என்பதால் நிலம்
பார்த்தபடி நான்...
நிலா பார்த்தபடி நீ..!

எனக்கு நீ...
உனக்கு நான்...
நமக்கேன் குழந்தை
என்ற நீ...

குழந்தையில்லா
காரணத்தைக்
கையில் ஏந்தி
பிரிக்க நினைப்போர்
முன் வாயடைத்து..!

உன்னைப் புரிந்தும்
புரியாமல் நான்..!

** இது ஒரு மீள் பதிவு
-'பரிவை' சே.குமார்

ஞாயிறு, 28 ஜூலை, 2013

புற்று நோயின் பிடியில் நடிகை கனகா


கரகாட்டக்காரன் படத்தில் அறிமுகமாகி அன்றைய கிராமத்து இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் கனகா. மாஜி ஹீரோயின் தேவிகாவின் மகள். தமிழ், மலையாளத்தில் உள்ள அத்தனை டாப் ஹீரோக்களுக்களுடன் ஜோடியாக நடித்தார். தமிழ், மலையாளம், கன்னட மொழிகளில் 75 படங்கள் வரை ஹீரோயினாக நடித்தார். 2004ம் ஆண்டு குஸ்ருதி என்ற மலையாளப்படத்தில் கடைசியாக நடித்தார். தமிழில் கடைசியாக நடித்தது சிம்மராசி.

அம்மா தேவிகாவின் மரணத்திற்கு பிறகு கனகாவின் வாழ்க்கையே திசை மாறியது. மகளை வெளி உலகம் தெரியாமல் பொத்தி பொத்தி வளர்த்தார். அதனால் அவரது மறைவுக்கு பிறகு கனகாவால் வாழ்க்கையை தனியாக எதிர்கொள்ள முடியவில்லை. அம்மா தேவிகாவால் புறக்கணிக்கப்பட்ட அவரது தந்தையும் அவருக்கு ஆறுதலாக இல்லை. 

முத்துக்குமார்  என்ற வெளிநாட்டு இன்ஜினீயரை திருமணம் செய்து கொண்டார். அந்த வாழ்க்கையும் கனகாவுக்கு இனிக்கவில்லை. யாரைப் பார்த்தாலும் வெறுப்பு, பயம் அவருக்கு. அதனால் ஒரு மனநோயாளி போன்றே நடந்து கொள்ள ஆரம்பித்தார். தந்தை தன்னை கொல்ல முயற்சிப்பதாகவும், சொத்துக்களை பறிக்க முயற்சிப்பதாகவும் வழக்கு போட்டார். தன் கணவரை காணவில்லை கண்டுபிடித்து தாருங்கள் என்று போலீசில் புகார் செய்தார். ஆவி அமுதா என் கணவரை பிடித்து வைத்துக் கொண்டு தர மறுக்கிறார் என்று புகார் செய்தார். ஆவி அமுதா, கனகா மீது தொடுத்த மானநஷ்ட வழக்கு இன்னும் நடந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் கடந்த ஆண்டு ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தனது வீட்டை காலிசெய்து விட்டு சென்று விட்டார் கனகா. அவர் எங்கு இருக்கிறார் என்ன செய்கிறார் என்றே தெரியாமலே இருந்தது. இப்போது அவரைப் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகி உள்ளது. 

கடுமையான புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் கனகா கேரளாவில் உள்ள ஆலப்புழாவில் தனியார் மருத்துவமனை ஒன்றில் ஓராண்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். புற்றுநோய் குணப்படுத்த முடியாத அளவுக்கு முற்றிவிட்டதால் கைவிடப்பட்ட புற்றுநோயாளிகளை அவர்களின் மரணகாலம் வரை வைத்து பராமரிக்கும் மருத்துவனைக்கு மாற்றப்பட்டு விட்டார். இப்போது அந்த  மருத்துவமனையில் கனகா மரணத்தை எதிர்பார்த்து புற்றுநோயுடன் போராடிக் கொண்டிருக்கிறார்.

கனகா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது அவரை பக்கத்தில் இருந்து பார்த்துக்கொள்ளகூட யாரும் இல்லை. அவர் யாரையும் அனுமதிக்கவில்லை என்று அந்த மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இப்போது அனுமதிக்கப்பட்டிருக்கும் மருத்துவமனை நிர்வாகத்திடம் தன்னை சந்திக்க யாருக்கும் அனுமதி தரக்கூடாது என்று கனகா கூறியிருக்கிறார். இதனால் மருத்துவமனை நிர்வாகம் கனகாவை யாரும் சந்திக்க அனுமதிப்பதில்லை என்று கூறுகிறார்கள். 

கருப்பு, வெள்ளை காலத்து கனவு கன்னியின் மகள், வண்ண சினிமா காலத்தில் மின்னிய நாயகி இப்போது யாருமற்றவராக மரணப் படுக்கையில்...!! 

நன்றி : தினமலர்
-'பரிவை' சே.குமார்

சனி, 27 ஜூலை, 2013

மனசின் பக்கம்... கொஞ்சம் வலி கொஞ்சம் சுயம்

தேவகோட்டையில் நேற்று முன்தினம் பட்டப்பகலில் வீடு புகுந்து செட்டியாரைக் கொலை செய்து ஆச்சியை கத்தியால் குத்தி நகைகளையும் பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றிருக்கிறது ஒரு கும்பல். இது இப்போது தேவகோட்டைப் பகுதியில் அடிக்கடி நிகழும் நிகழ்வாகிவிட்டது. கொலையாளிகளைக் கண்டுபிடிக்கச் சொல்லி அவர் சார்ந்த கட்சியும், செட்டியார்களும், சமுதாய அமைப்புக்களும் நேற்று போராட்டம் நடத்தியிருக்கின்றன. சட்டம் ஒழுங்கை சரி செய்வோம் என்று சொல்லும் காவல்துறையினர் ஒரு சாராருக்குப் பல்லக்குத்தூக்கிகளாகவே பலகாலமாக இருந்து வருகின்றனர். லஞ்சம் கொடுத்தால் வேலை என்றே தொந்தி தூக்கிய போலீசாரும் உலா வருகின்றனர். போக்குவரத்துப் பிரச்சினையையே சரி செய்யாத காவல்துறை இது போன்ற கொலைகளைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது.

*****

பாராட்டு விழாக்களுக்காக படப்பிடிப்பை ரத்து செய்து தங்கள் அன்பைக் காட்டும் தமிழ்த் திரைப்பட உலகம் மூன்று தலைமுறைக்கு பாட்டு எழுதிய வாலிபக் கவிஞன் வாலியின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தியவுடன் அவரது இறுதி ஊர்வலத்தன்று அவரவர் படப்பிடிப்பை நடத்திக் கொண்டிருந்தனர் என்றும் அந்த மூத்த கவிஞனுக்கு ஒரு இரங்கற்கூட்டம் கூட நடத்தப்படவில்லை என்றும் பத்திரிக்கைகளில் படித்தபோது நடிகர்கள் நடிகர்கள்தான் என்பது அப்பட்டமாகத் தெரிந்தது.

                                   *****

நண்பர் ஸ்டார்ஜன் இண்டிபிளாக்கரில் சிறந்த பிளாக்கருக்கான போட்டி இருக்கு நீங்களும் பதிந்து வையுங்கள் குமார் என்று சாட்டில் தெரிவித்தார். நானும் சரியென்று சொல்லி இதுவரை அந்தத் தளத்திற்குச் செல்லாததால் இரண்டு தினம் முன்னர் அங்கு சென்று முதலில் எனது வலைப்பூவை இணைத்து அனுமதி வாங்க நினைத்து அதற்கான முஸ்தீப்புக்களைச் செய்தேன். உடனே எனது மின்னஞ்சல் முகவரிக்கு காத்திருங்கள் என்று தகவல் வந்தது. நேற்று மீண்டும் எனக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது அதில் உங்கள் வலைப்பூவை எங்களுடன் இணைக்க முடியாது... அனுமதி நிராகரிக்கப்பட்டதுன்னு வந்துச்சு... என்னடான்னு அங்கிட்டு இங்கிட்டு எல்லாப் பக்கமும் போய் பார்த்த அசல் பதிவுகளைவிட நகல் பதிவுகள் அதிகமிருக்குன்னு அவங்க இணைச்ச இணைப்புல போனப்போ சொன்னுச்சு. நானும் படித்ததில் பிடித்தது, சினிமா செய்திகள் என கொஞ்சம் படித்தவற்றைப் பகிர்வேன். அப்படியிருக்கலாமுன்னு போய் பார்த்தா நான் எழுதிய கதைகள், கவிதைகள், கட்டுரைகள், ஊருக்குப் போறேன்னு சொன்ன பதிவுகள் அனைத்தையும் நகல்ன்னு சொல்லிருச்சு. அடப்பாவி மக்கா எழுதவன் அசலா இருக்க நகலாமே நகல்ன்னு நமக்கு இண்டிபிளாக்கர் என்ன கொடுத்தாலும் வேண்டாம் மக்கான்னு வந்துட்டேன்.

                                   *****

எங்கள் ஊருக்கு அருகில் ஒரு பையன் காதல் திருமணம் செய்திருக்கிறான். அவனும் பெங்களூரில் வேலை பார்த்துக் கொண்டிருந்திருக்கிறான். அந்தப் பெண் கர்ப்பிணியாக இருந்ததால் ஊரில்தான் இருந்திருக்கிறது. இரட்டைக் குழந்தை என்பதை ஸ்கேனில் தெரிந்து ரொம்ப சந்தோஷமாக இருந்திருக்கிறார்கள். சில நாட்களுக்கு முன்னர் வலி எடுக்க அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். முதல் குழந்தை எடுக்கும் போது என்ன செய்தார்களோ தெரியவில்லையாம். அந்தப் பெண் இறந்து போக, கொஞ்ச நேரத்தில் வயிற்றுக்குள் இருந்த குழந்தையும் இறந்து போச்சாம். இந்தக் கொடுமையில் மேலும் ஒரு கொடுமையாக வெளியில் எடுக்கப்பட்ட குழந்தையும் இறந்து போச்சாம். மூவரையும் பறி கொடுத்த குடும்பம் கதறித்துடித்து பெங்களூரில் இருந்த பையனுக்கு இலைமறை காயாக விவரத்தைச் சொல்லாமல் போட்டு உடைக்க, அவனும் இரயிலுக்கு உயிரைக் கொடுத்துவிட்டானாம். என்ன சொல்வது இங்கு நடத்த தவறுக்கு காரணம் படைத்தவனா இல்லை மருத்துவர்களா... இந்தச் செய்தி கேட்டது முதல் கஷ்டமா இருக்கிறது. நால்வரின் ஆத்மாவும் சாந்தியடையட்டும்.

                                   *****

போன வாரம் யூரிக் ஆசிட் பிரச்சினையால் கால் நடக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டுப் போனேன். மருத்துவம் மாத்திரை என எடுத்தும் வலி குறைந்திருந்தாலும் இன்னும் சில சமயங்களில் வலி இருக்கிறது. அதைச் சாப்பிடாதே... இதைச் சாப்பிடாதே என மருத்துவர் ஒரு லிஸ்டே கொடுத்தார். அதெல்லாம் பார்த்தால் எதையும் சாப்பிட முடியாது போல. இந்த வயதிலேயே எல்லாத்தையும் ஒதுக்கிட்டு சோறு மட்டும் எப்படி சாப்பிடுவது... யூரிக் ஆசிட்டைக் குறைக்க எதாவது தமிழ் மருத்துவம் இருக்கா... என்ன மருந்து சாப்பிடலாம்... தெரிந்த நண்பர்கள் சொல்லுங்களேன். நானும் முயற்சிக்கிறேன்.

                                   *****

அப்புறம் சாரு விமர்சகர் வட்டம் ஒரு சிறுகதைப் போட்டி அறிவிச்சிருந்தாங்க... சரி நம்மளும் கலந்துக்கலாமுன்னு முன்னாடி எழுதிய ஒரு கதையை அனுப்பி வச்சேன். அவங்களும் போட்டியில சேர்த்துக்கிட்டாங்க... அவங்க பக்கத்துல பதிஞ்சிருக்காங்க... அங்க போயி படிச்சிட்டு கதை பிடிச்சிருந்தா 'Rate UP' கொடுங்க.... பிடிக்கலைன்னா 'Rate Down' கொடுங்க... பின்னூட்டம் தேவையில்லை... அப்படியே போட்டாலும் என்னோட பெயரை அங்கு குறிப்பிட வேண்டாம். காரணம் ஆசிரியர் யார் என்பது வெளியில் தெரியக்கூடாது என்பதே முக்கியமான நிபந்தனை. அந்த நிபந்தனையை என் நண்பர்கள் அடிச்சு உடச்சிட்டாங்க. இருந்தாலும் நீங்களும் உடைச்சுடாதீங்கன்னு முன்னெச்சரிக்கையா சொல்லிக்கிறேன். அப்புறம் அங்க ஒரு நண்பர் முதல் மரியாதை கதையை காபி பண்ணியிருக்கதா சொல்லியிருக்கார். நானும் பலமுறை முதல் மரியாதை பார்த்திருக்கிறேன். கதை இப்படின்னு என்னக்குத் தெரியலை... முதல் மரியாதை மாதிரி இருக்கானு எனக்குச் சொல்லுங்க உறவுகளே... அங்கே செல்ல இணைப்பு இதோ... 
                        நெஞ்சம் மறப்பதில்லை 

                                   *****

கால் வலியால் நிறைய எழுத வேண்டியவைகளை ஒதுக்கி வச்சாச்சு. அதில் தொடர்கதையும் தொடராமல் கிடக்கு... அதற்கான பகுதிகள் எழுதப்படாமலே கிடக்கிறது. வாரம் ஒரு நாள் எதாவது தலைப்பில் ஒரு கட்டுரை எழுதலாம் என ஆரம்பித்து இரண்டு வாரம் எழுதியாச்சு. இந்த வாரம் அதுவும் கோவிந்தா... வேலையிலும் கொஞ்சம் பிரச்சினை... வேறு கம்பெனிக்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்... கடவுள் புண்ணியத்தில் கிடைத்தால் பல கஷ்டங்கள் நீங்கும். பார்க்கலாம்.

நன்றி மீண்டும் மற்றுமொரு மனசின் பக்கத்தில் சந்திப்போம்.

-'பரிவை' சே.குமார்.

வெள்ளி, 26 ஜூலை, 2013

கருப்பண்ணே... நீங்கதாண்ணே உண்மையான ஹீரோ...

கடந்த 20 நாட்களாக சிவகங்கை மற்றும் நகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் வேல்முருகன் போர்வெல்ஸ் என்ற திரைப்படத்திற்கான படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இது குறித்து திரைப்பட இயக்குநர் கோபி பத்திரிக்கைக்கு அளித்த பேட்டி.


அங்காடித் தெரு படத்தின் நாயகன் மகேஷ் கதாநாயகனாக நடிக்க வேல்முருகன் போர்வெல்ஸ் என்ற பெயரில் திரைப்படம் சிவகங்கை பகுதியில் எடுக்கப்பட்டு வருகிறது. சிவகங்கையை சொந்த ஊராகக் கொண்ட கஞ்சா கருப்பும், நானும் பங்குதாரராக இணைந்து படம் எடுத்து வருகிறோம். சிவகங்கை மாவட்டத்தில் ஒரு பகுதி செழுமையாகவும், மற்றொரு பகுதி வறட்சியாகவும் உள்ளது. தண்ணீர் பஞ்சம், போர்வெல் தொழிலாளர்களின் வாழ்க்கை முறை படத்தின் மையக் கருவாக இருந்தாலும், நகைச்சுவை, பாடல்கள், காதலுக்கும் படத்தில் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.

 நடிகர் கரண் கதாநாயகனாக நடித்த மலையான் எனது முதல்படம். நடிகர் கஞ்சா கருப்புடன் இணைந்து தயாரிக்கும் வேல்முருகன் போர்வெல்ஸ் எனது இரண்டாவது படமாகும். இந்தப் படத்தில் அங்காடித் தெரு படத்தின் நாயகன் மகேஷ் கதாநாயகனாக நடிக்க, ஆரிசி அவருக்கு ஜோடியாக கதைநாயகியாக உள்ளார். இதேபோல் தீப்பெட்டி கணேசன், பிளாக் பாண்டி உள்பட பலரும் நடிக்கின்றனர். பாடலாசிரியர்கள் நா.முத்துக்குமார், சினேகன், பா.விஜய் ஆகியோரின் பாடல்களுக்கு ஸ்ரீகாந்த் தேவா இசை அமைத்துள்ளார். விரைவில் இப்படம் திரைக்கு வரவுள்ளதாக இயக்குநர் கோபி தெரிவித்தார்.

 120 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ள நடிகர் கஞ்சா கருப்பு கூறியதாவது.

தண்ணீர் பிரச்சனையை பிரதமர் கூட தீர்க்க முடியாத நிலையில் போர்வெல் லாரி மூலம் தண்ணீர் பஞ்சத்தைத் தீர்க்கும் வேல்முருகன் என்ற பாத்திரத்தில் இப்படத்தில் நடித்துள்ளேன். சிவகங்கை போஸ்நகர் எனது சொந்த ஊர் என்பதால் திரைப்படத்தின் மூலம் வளர்ந்த நான் ஊருக்குப் பெருமை சேர்க்க இப்படத்தை சிவகங்கையில் தயாரித்து வருகிறேன் எனறார் நடிகர் கஞ்சா கருப்பு.

படம் பற்றிய செய்திகள் ஒருபுறம் இருக்க,  இப்படத்தின் படப்பிடிப்பு சிவகங்கை, காரைக்குடி, நாட்டரசன் கோட்டை ஆகிய இடங்களில் நடந்து வருகிறது. இப்படத்திற்காக ரூ.20 லட்சம் செலவில் ஒரு புது போர்வெல் லாரியை கஞ்சா கருப்பு வாங்கி இருக்கிறாராம். 

படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் எந்த ஊரில் தண்ணீர் இல்லையோ அந்த ஊருக்கு லாரியை கொண்டு சென்று இலவசமாகவே போர்வெல் போட்டுக் கொடுக்கிறாராம். இதுவரை 12 ஊர்களில் 50 போர்வெல் போட்டுக் கொடுத்திருக்கிறாராம் கருப்பு.  இப்போ எங்க ஊருக்கு ஒரு போர்வெல் போட்டுத்தாங்கண்ணே... என்ற கோரிக்கைக் குரல்கள் இப்போது மனுக்களாகக் குவிகிறதாம் நடிகர் கஞ்சா கருப்புவிடம்.


 தங்கள் ஊர்களிலும் போர்வெல் போடச்சொல்லி 100-க்கும் மேற்பட்ட மனுக்களை கஞ்சா கருப்புவுக்கு அனுப்பியுள்ளார்களாம். இவரும் சளைக்காமல் எல்லா மனுக்களுக்கும் பதில் அனுப்பியதோடு, மனு கொடுத்த ஊருக்கும் போய் பார்த்து தேவையென்றால் போட்டுத் தருவதாக வாக்களித்துள்ளாராம். 

மேலும் தேடி வருபவர்களிடம் கஞ்சா கருப்பு அவர்களும் படப்பிடிப்பு முடிவதற்குள் எல்லா ஊர்களுக்கும் வந்து போர்வெல் போட்டுத் தந்திடறோம்ணே.. கவலய விடுங்க என ஆறுதல் வார்த்தை சொல்லி அனுப்புகிறாராம்.

இப்போ எங்க மாவட்டத்து மக்களுக்கு அண்ணன்தான் உண்மையிலே ஹீரோ....

திரு. கஞ்சா கருப்பு அவர்களை எல்லாரும் சேர்ந்தே வாழ்த்துவோம்...

நன்றி : பத்திரிக்கைச் செய்திகள்
படங்கள் : இணையம்

-'பரிவை' சே.குமார்.

புத்தக விமர்சனம் : தொலைதூர உறவுகள்

இதுவரை புத்தக விமர்சனம் என்று ஒன்று செய்ததில்லை. இது நண்பனின் புத்தகத்தை எனது பாணியில் விமர்சிக்கும்.... விமர்சிக்கிற அளவுக்கு நான் என்ன எழுத்தில் கரை கண்டவனா என்ன.... நானெல்லாம் இப்பொழுதுதான் எழுத ஆரம்பித்திருக்கிறேன். ஆனால் நண்பரோ படிக்கும் காலத்திலேயே தாமரை, செம்மலர் என கலக்கியவர். அவரது புத்தகத்தில் இருக்கும் கதைகள் என்னைக் கவர்ந்த விதத்தை தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்... அவ்வளவுதான். இதை விமர்சனமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். இருவரும் கல்லூரியில் ஒன்றாக சுற்றியவர்கள்... இப்போதும் அதே நட்போடு இருப்பவர்கள்.... எனவே அவரது கதைகளை விமர்சிக்கவில்லை. என் நண்பனின் கதைகளை வியந்து பாராட்டுகிறேன்.

எனது அருமை நண்பர் முனைவர். கரு.முருகன், தேவகோட்டை ஸ்ரீசேவுகன் அண்ணாமலைக் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராக இருக்கிறார். சிங்கப்பூர் தமிழ்ச் சிறுகதைகள் குறித்த ஆய்வில் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார். நல்ல சிந்தனையாளர், பேச்சாளார். பட்டி மன்றங்களிலும் கவியரங்கங்களிலும் கலக்கி வருகிறார்.

விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர், கிராமத்திலிருந்து நகரத்திற்கு வந்த குடும்பம் என்பதால் இவரது கதைகளில் கிராமிய மணம் வீசுகிறது. இந்தச் சிறுகதைப் புத்தகம் 2007ல் வெளியாகிவிட்டது என்றாலும் வெளிநாட்டு வாழ்க்கையில் வருடம் ஒரு முறை போகும் போது படித்திருந்தாலும் இதைப் பற்றி பகிர வேண்டும் என்பதாலேயே இந்த முறை புத்தகத்தை எடுத்து வந்தேன்.

அணிந்துரை வழங்கியிருக்கும் எங்கள் குரு மகா சன்னிதானம் குன்றக்குடி தவத்திரு பொன்னம்பல அடிகளார் அவர்கள், 'சொல்ல விளங்கும் கருத்தை உயிர் அணுவைப் போல் உள்ளே வைத்து விளக்கும் ஆற்றல் பாராட்டத்தக்கது' எனத் தெரிவித்துள்ளார்.

திரு. சா.கந்தசாமி அவர்கள் தனது முன்னுரையில் நீண்ட நாவலாக எழுதக் கூடிய குடும்பத்தின் சரித்திரத்தை ஆசிரியர் சிறுகதையாக எழுதியுள்ளார் என்று கூறியிருக்கிறார். இதில் இருக்கும் எல்லாக் கதைகளையும் பற்றி எழுதினால் நீண்ட பதிவாகிவிடும் என்பதால் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல என்னைக் கவர்ந்த கதைகளில் சிலவற்றைப் பற்றி எழுதுகிறேன்.

முதல் கதையான 'தொலைதூர உறவுகள்' என்பதே புத்தகத்தின் தலைப்பாகவும் அமைந்திருக்கிறது.  இன்றைய குடும்ப உறவுகளின் நிலையை அப்பட்டமாக படம்பிடித்துக் காட்டும் சிறுகதையாக இந்தக் கதை அமைந்திருப்பது சிறப்பு. இன்று எல்லாக் குடும்ப உறவுகளுமே கணிப்பொறி வழியாகத்தான் அன்பைப் பரிமாறிக் கொண்டு வாழ்கிறார்கள் என்பதை அழகாகப் படம்பிடித்துக் காட்டுகிறார். இன்றைய தலைமுறை கணிப்பொறி, நேற்றைய தலைமுறை தொலைபேசி வழி உறவில்தான் வாழ்கிறது என்று சொல்லி முடித்திருக்கிறார்.

'அதுதான் வேணும்' என்கிற கதையில் தாழ்ந்த சாதிக்கரப்பயலுக்கு என் பெண்ணைக் கட்டித்தருவேன் என்று சொல்லும் அரசியல்வாதி, பெண் கேட்டு தாழ்ந்த சாதிப் பையன் வரும் போது அவனை விரட்டுவதும் பின்னர் தாழ்ந்த சாதிக்காரனுக்கு கொடுக்கிறேன்னு சொன்னேன்... ஒண்ணுமில்லாதவனுக்கு கொடுக்கிறேன்னு சொல்லலையே என்று அந்தஸ்து  குறித்து பேசுவதாக முடித்திருக்கிறார். எல்லாருக்கும் அதுதான் வேணும் என்ற எண்ணம் எழத்தானே செய்கிறது. இந்தக் கதை எங்களது பேராசான். மு.பழனி இராகுலதாசன் அவர்களால் மேம்படுத்தப்பட்டு தாமரை இதழில் வெளியானது என்பதை தனது என்னுரையில் நண்பர் தெரிவித்திருக்கிறார்.

மற்றொரு கதையான 'நுனிப்புல்'லில் வெளிநாட்டில் இருக்கும் மகனுடன் விவசாயியான அப்பா போனில் பேசுவதுபோலும் அப்பாவின் கோபத்தையும் பையனின் வெளிநாட்டு வாழ்க்கையின் வேதனைகளையும் அழகாகப் படம்பிடித்துக் காட்டியிருக்கிறார்.

சாதகப் பறவைகளில் ஜாதகம் பார்த்து நல்ல நேரம் பொருத்தம் என வாழும் குடும்பத்தின் தலைவன் ஜாதகத்தில் புலியான ஒருவரிடம் தனது மகனின் ஜாதகத்தை பார்க்க வருகிறார். அங்கே ஜாதகம் பார்க்கும் ஐயரோ சாதகம் சரியில்லாத பெண்ணைக் கட்டி சந்தோசமாக வாழ்ந்து வருவதைக் கேட்க நேரிட ஜாதகம் பார்க்காமலே திரும்புவதாக முடித்திருக்கிறார்.  

மேலும் இந்தத் தொகுப்பிலுள்ள தவளைகள், உப்பு. பூமராங், சுழல், ஆனந்த மடம், நரிப்பல்லு, அ(ச்)சோக மரங்கள், வேரில்லாத மரங்கள் என ஒவ்வொரு கதையிலும் சமூக அவலங்களைக் கோடிட்டுக் காட்டியிருக்கிறார். இந்த சிறுகதைத் தொகுப்பில் மொத்தம் 19 சிறுகதை முத்துக்கள் இருக்கின்றன. அழகான எழுத்து நடையில் அருமையான கதைகளின் தொகுப்பாக வெளிவந்திருக்கிறது இந்தத் 'தொலைதூர உறவுகள்'.

இந்தத் தொகுப்பில் இருக்கும் கண்ணகி என்ற கதை கல்லூரியில் படிக்கும் போது பரக்கத் அலி என்ற நண்பர் நடத்திய கவி'தா' என்ற கையெழுத்துப் பிரதியின் சார்பாக நடத்த சிறுகதைப் போட்டியில் பேராசிரியர் அய்க்கண் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு 'பல்லக்கில் ஏறும் பட்டங்கள்' என்ற சிறுகதைத் தொகுப்பில் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் சிறுகதைத் தொகுப்பை சென்னை, பாண்டி பஜார், மாசிலாமணி தெருவில் இருக்கும் சேது அலமி பதிப்பகத்தார் வெளியிட்டிருக்கிறார்கள். இவர்கள் புதிய எழுத்தாளர்களின் கதைகளை வெளியிட்டு அவர்களுக்கு நல்லதொரு விலாசம் தருபவர்களாக இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அவர்களது நல்ல பணி தொடரட்டும்.  

கதைகளை எழுதிய நண்பர் அவற்றை பேராசியர் முனைவர். வ,தேனப்பன் அவர்களிடம் கொண்டு காண்பிக்க அவரும் பொறுமையாகப் படித்து அவற்றைச் செம்மைப்படுத்திக் கொடுத்திருக்கிறார்கள். அவர்களுக்கும் தனது முன்னுரையில் நூலாசிரியர் நன்றியைத் தெரிவித்துள்ளார்.

நண்பரின் இரண்டாவது படைப்பு இது. இதன் பிறகும் இலக்கணம் சம்பந்தமான புத்தகங்களை வெளியிட்டிருக்கிறார். அவரின் ஆழ் மனதில் புதைந்து கிடக்கும் இன்னும் இதுபோன்ற எண்ணற்ற சிறுகதைகளை அவர் தொகுப்பாக கொண்டு வர வேண்டும் என்பதே எனது விருப்பம்.

தொலைதூர உறவுகளைத் தந்தவர்....


நண்பர்கள் முடிந்தால் இந்தப் புத்தகத்தை வாங்கிப் படிக்கவும்.

நன்றி.
-'பரிவை' சே.குமார்

மறக்க முடியா மழை நாள்


மழை மேகம் சூழ்ந்த மாலை
வெயிலின் உக்கிரம் கரைந்து
மழையின் வாசம் நுகர்ந்த காற்று...
கருமேகம் கண்டு பயந்தோடி
இருப்பிடம் விரையும் பறவைகள்...
காற்றோடு காதல் கொண்டு
சந்தோஷமாய் தலையாட்டும் நெல்மணிகள்...
லேசான தூறலுக்கே வீடு நோக்கிப்
பாய்ச்சலெடுக்கும் பசுக்கள்...
கனமழை வந்தாலும் மேய்ச்சலை
விடமாட்டோமென மேயும் எருமைகள்...
மழையில் நனையாமல் காத்துக்கொள்ள
கொங்காணிகளுக்கும் உடலை
மறைக்கும் மாடு மேய்க்கும் மனிதர்கள்...
தண்ணீரில் விழும் மழைத்துளியோடு
மல்லுக்கு நிற்கும் மீன்குஞ்சுகள்...
குதிக்கும் மீன்களைக் குறிவைத்து
தூறலில் தவமிருக்கும் கொக்கு...
இருண்ட ஈசானிய மூலையில்
ஒளிரும் மின்னலைத் தொடர்ந்து
இடிக்கும் இடியின் வெடியோசை...
தூறல் வருமுன்னே தூரமாய்
ஓடி ஓளியும் மின்சாரம்...
மழையின் வேகம் கூடக்கூட
பெருக்கெடுத்து ஓடும் நீரின் சலசலப்பு...
எல்லாம் பார்த்துப் பழகிப்போன
மழை வேகமெடுத்துப் பேய்மழையாய்
சோவென்று கொட்டினாலும்
சன்னலோரத்தில் அமர்ந்து சாயந்திர
மழையை ரசிக்கும் மனசுக்குள்...
ஓடும் தண்ணீரில் விட்ட கத்திக்கப்பலும்...
மழையில் நனையும் ஆசையும்...
இன்னும் மரிக்காமல் மாம்பூவின் வாசமாய்....


-'பரிவை'  சே.குமார்

வியாழன், 25 ஜூலை, 2013

'ரெங்கநாயகி என்று பாடிய வாலிக்கு அதிமுகவிலிருந்து யாரும் அஞ்சலி செலுத்தலையே...' கருணாநிதி


ரெங்கநாயகி என்ற தலைப்பிலே கவிதை பாடியவர் கவிஞர்வாலி. ஆனால் அவர் மறைந்த நிகழ்ச்சிக்கு அதிமுகவினர் யாரும் வரவில்லை என்றால் என்ன காரணமோ தெரியவில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட கேள்வி பதில் பாணி அறிக்கை.. 

கேள்வி: காவியக் கவிஞர் வாலியின் மறைவுக்கு அஞ்சலி செலுத்த அ.தி.மு.க. சார்பில் யாருமே வந்ததாகத் தெரியவில்லையே? 

கருணாநிதி: கவிஞர் வாலி, புரட்சி நடிகர் எம்.ஜி.ஆருக்கு மிகவும் வேண்டியவர். இன்றைய முதல்வர் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற போது, வார இதழ் ஒன்றில் ரெங்கநாயகி என்ற தலைப்பிலே கவிதை பாடியவர். அவர் எந்த அரசியல் கட்சியையும் சேராதவர். அனைவரிடமும் அன்பாகப் பழகக்கூடியவர். அவர் மறைந்த நிகழ்ச்சிக்கு அ.தி.மு.க.வினர் யாரும் வரவில்லை என்றால், அதற்கு என்ன காரணமோ தெரியவில்லை. 

கேள்வி: சென்னையில் குடிநீர் இல்லாமல் மக்கள் அவதிப்படுகிறார்களே, அதைப்பற்றி அ.தி.மு.க. அரசு கவலைப்படுவதாகத் தெரியவில்லையே? 

கருணாநிதி: அண்ணா நகர் மண்டலத்தில் குடிநீர் இன்றி மக்கள் தவிப்பு. வாரம் ஒரு முறை மட்டுமே வருகிறது தண்ணீர் லாரி என்ற தலைப்பில் நாளேடு ஒன்றில் வெளியிட்டுள்ள செய்தியில், சென்னை மாநகராட்சி, அண்ணா நகர் மண்டலத்தில் ஏற்பட்டுள்ள குடிநீர்த் தட்டுப்பாட்டால் பகுதிவாசிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். அண்ணா நகர் மண்டலத்தில் உயர் அதிகாரிகள், அரசியல் தலைவர்கள், செல்வந்தர்கள் வசிக்கும் பகுதிகளில் குடிநீர் விநியோகம் தங்குதடையின்றி நடந்து வருகிறது; ஆனால் அப்பாராவ் தோட்டம், அவ்வைபுரம், அருணாசலம் தெரு, பிள்ளையார் கோவில் தெரு உள்ளிட்ட அடித்தட்டு, நடுத்தர மக்கள் வசிக்கும் ஷெனாய் நகர் பகுதிகளில், கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக, வீடு மற்றும் தெருக் குழாய்களில் குடிநீர் வருவதில்லை. 

ஷெனாய் நகர் பகுதிவாசிகள், நள்ளிரவு நேரங்களில், குடிநீருக்காக காலிக் குடங்களுடன் அலைந்து கொண்டிருக்கின்றனர். அதேபோல், அண்ணா நகர், பெரிவரி சாலை 7வது பிரதான சாலையில் உள்ள குடிசை மாற்று வாரியகுடியிருப்புப் பகுதிகளில் உள்ள தெருக் குழாய்களில், கடந்த இருபது நாட்களுக்கு மேலாகதண்ணீர் வரவில்லை. வாரத்திற்கு ஒரு முறைதான் லாரிகள் வருகின்றன. அந்தப்பகுதிவாசிகள் சாலை மறியல் நடத்தியும் பயனில்லை. 

அமைந்தகரை, பூவிருந்தவல்லிநெடுஞ்சாலையை ஒட்டியுள்ள திருவீதியம்மன் கோவில் தெருவிற்கும் கடந்த 2 மாதங்களுக்குமேலாக, லாரிகள் மூலம் வாரத்திற்கு ஒருநாள்தான் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. அதுவும்,குறிப்பிட்ட எண்ணிக்கையிலான குடங்களுக்கு மட்டும்தான் என்று எழுதப்பட்டுள்ளது. ஏட்டில் இவ்வளவுதான் வந்துள்ளது; உண்மை இதை விட மிகவும் மோசம்! 

கேள்வி: அன்னிய முதலீட்டிற்கு தாங்கள் கடுமையாக எதிர்ப்பினைத் தெரிவித்ததைப் போல மத்திய உள்துறை அமைச்சகமும் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறதே? 

கருணாநிதி: பத்திரிகை, செய்திச் சேனல்கள், ரேடியோ ஆகிய துறைகளில் அன்னிய முதலீட்டின் அளவை 26 சதவிகிதத்திலிருந்து 49 சதவிகித மாக உயர்த்த மத்திய வர்த்தக அமைச்சகம் எடுத்த முடிவைப் பற்றி, இந்தத் துறையில் அன்னிய முதலீட்டை அதிகரிப்பது, மிகவும் ஆபத்தான போக்கு, உள்துறை அமைச்சகம், இதற்குக் கடும் ஆட்சேபத்தைத் தெரிவிக்கும் என்றும், பத்திரிகை உள்ளிட்ட துறைகளில் வெளிநாட்டு நிறுவனங் களை அனுமதிப்பது, உள்நாட்டுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்றும் மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறியதாக செய்தி வந்துள்ளது. அன்னிய முதலீட்டிற்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்க்கட்சிகள் எல்லாம் தொடர்ந்து அறிக்கை விடுத்த பிறகு, நேற்றைய தினம் நம்முடைய மாநில முதல்வர்கூட அதைக் கண்டித்து அறிக்கை விடுத்திருக்கிறார். 

கேள்வி: இந்த ஆட்சியில் மணல் கடத்தல் அதிகமாவதைப் பற்றி தொடர்ந்து செய்திகள் வருகின்ற நிலையில், நெல்லையில் மணல் லாரியைத் தடுத்த தாசில்தார் மீதே தாக்குதல் நடந்ததாகச் செய்தி வந்திருக்கிறதே? 

கருணாநிதி: நெல்லை அருகே நாங்குனேரியிலும், மற்றப் பகுதிகளிலும் திருட்டு மணல் லாரிகளில் ஏற்றிச் செல்வது பற்றி தொடர்ந்து செய்திகள் வந்தபோதிலும் அ.தி.மு.க. அரசு அதைக் கண்டுகொள்வதாகத் தெரியவில்லை. கடந்த ஆண்டு இதே ஜூலை மாதத்தில், 24ஆம் தேதியன்று மணல் கடத்திய பிரச்சினையில் போலீஸ் துப்பாக்கிச் சூடே நடைபெற்று ஒருவர் இறந்தார். தற்போது 16ஆம் தேதியன்று மணல் அள்ளிய லாரி ஒன்று நாங்குனேரி ஊருக்குள் சென்று கொண்டிருந்த போது, சரவணன் என்ற தாசில்தார் அதைத் துரத்தியதாகவும், லாரி வேகமாகச் சென்றதால் அங்கே சென்று கொண்டிருந்த ஒரு இருசக்கர வாகனத்தில் மணல் லாரி மோதி, சுடலைக்கண்ணன் என்ற சிறுவன் பலியாகியிருக்கிறான். மணல் லாரியிலிருந்து இறங்கியவர்கள் தாசில்தார் சரவணனைத் தாக்கியிருக்கிறார்கள். காயமடைந்த தாசில்தார் சிகிச்சை பெற்று வருகிறார்... 

கேள்வி: தமிழக அரசின் தலைமைச் செயலாளரை நேரில் ஆஜராக உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருப்பது அரசுக்கு அவமானம் அல்லவா? 

கருணாநிதி: அவமானம் எனக் கருதினால்தானே அவமானம்! காவல் துறையில் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பான ஒரு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழகம் உட்பட நான்கு மாநிலத் தலைமைச் செயலாளர்கள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டுமென்று 25-4-2013இல் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. இது தொடர்பாக எந்தவிதமான பதில் மனுவும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாததால், 16-7-2013 அன்று உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நேரத்தில், "தமிழகம் உள்ளிட்ட நான்கு மாநிலத் தலைமைச் செயலாளர்கள் 31-7-2013 அன்று உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகி, காவல் துறையில் சீர்திருத்தம் தொடர்பான தங்கள் விளக்கத்தை அளிக்க வேண்டும்" என்று நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார். மேலும் அவர் "கோர்ட் உத்தரவை அவமதிக்கும் அதிகாரிகள் தண்டிக்கப்பட்டால்தான் இதுபோன்ற தவறுகள் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருக்கும்" என்றும் கூறியிருக்கிறார். 

அதுபோலவே, ஆட்டோ கட்டணத்தை முறைப்படுத்தி நிர்ணயிக்க வேண்டுமென்று ஒரு வழக்கு. அந்த வழக்கும் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டு, கடந்த மே மாதம் 6ஆம் தேதியன்று இரண்டு மாதங்களுக்குள் ஆட்டோ கட்டணத்தை முறைப்படுத்தி நிர்ணயித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென்று தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். ஆனால் தமிழக அரசு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யாமல் மேலும் அவகாசம் கோரியிருக்கிறார்கள். 

அந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசின் சார்பில் மேலும் அவகாசம் கேட்ட காரணத்தால், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்களது கடும் கண்டனத்தைத் தமிழக அரசுக்குத் தெரிவித்ததோடு, தமிழக அரசுக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்திருக்கிறார்கள்.

-செய்திக்கு நன்றி : தட்ஸ் தமிழ் இணையம்
-படத்துக்கு நன்றி : கூகிள் இணையம்
-'பரிவை' சே.குமார்.

மரணம் ஜனித்த ஜனனம்

(தொடர்கதையை வாரத்தில் இரண்டு நாள் பதிய எண்ணியிருந்தேன். உடல்நலம் சரியில்லாததால் நேற்று பதிய இருந்த தொடர்கதை இன்னும் செப்பனிடப்படாமல் இருப்பதால் நீண்டநாட்களுக்குப் பிறகு சிறுகதை ஒன்றைப் பகிர்கிறேன்... நன்றி)

"அய்யோ... நான் பொறந்த சாமி..." கமலத்தின் அழுகுரல் கேட்டு அடுப்படியில் இருந்த மருமக பானு வருவதற்குள் ஊர்ச்சனம் கூடிவிட்டது. ஆளாளுக்கு என்னடி ஆச்சு... என்னாச்சு... என்று பதற...

"அத்த... என்னாச்சு அத்த... " என்று கத்திய நெறமாசக்காரியான பானுவ கட்டிக் கொண்டு "நம்ம குடும்பமே அந்தல சிந்தல ஆகப்போகுதேடி... நா என்ன செய்வேன்.... அய்யோ எஞ்சாமி..." என்று கத்தினாள்.

"என்னன்னு சொல்லுடி... வயித்துப் புள்ளக்காரிய கத்தவிடாம..." அதட்டலாக கேட்டாள் பர்வதம்.

"அக்கா.... எங்கண்ண மரத்துல இருந்து விழுந்துட்டாராம்... இப்பதான் எம்மவ போன் பண்ணினா..." அவள் முடிப்பதற்குள் பானு "என்னப் பெத்த ஐயா... அப்போவ்... அய்யோ... நா என்ன செய்யிவேன்..." என்றபடி வயிற்றில் அடித்துக்கொள்ள...

"அடியேய்... அடி நெறமாசக்காரி வயித்துல அடிச்சுக்கக்கூடாது. அவள ரெண்டு பேரு புடிச்சு அமத்துங்கடி... பானு உங்கப்பனுக்கு ஒண்ணும் ஆகாது... பஞ்சா அவள உள்ள கொண்டு போய் தண்ணி கிண்ணி கொடுத்து உக்கார வையுங்க..."

"இங்க பாரு கமலம்... உம்மவ என்ன சொன்னுச்சு... அடி பலமா பட்டிருக்கா என்ன... ராசு எப்படி விழுந்தானாம்... வெவரமா சொல்லு..." பக்கத்தில் வந்து பக்குவமாய் கேட்டார் ஊர்ப் பெரியவர் ராமையா.

"நா... என்னத்த சொல்லுவேன் அம்மான்...." என்றபடி மூக்கை சிந்தியவள் "அண்ண காளமாட்டுக்கு வாகங்கொலை வெட்டியாந்து வைக்கும்... இன்னைக்கும் வெட்ட போயிருக்கு... மடக்கரை செய்யில இருக்கிற பெரிய மரத்துல ஏறி வெட்டும் போது பிடி தவறி விழுந்துருச்சாம்.... தலயில நல்ல அடியாம்... பேச்சு மூச்சு இல்லையாம்.... நல்லவேள ரோட்டோரத்துலங்கிறதால அந்தப்பக்கமா வந்த சேகர் பாத்துட்டு ஆளுகளை கூப்பிட்டு ஆசுபத்திரிக்கு தூக்கிக்கிட்டு போயிருக்காக..."

"அடக்கொடுமையே... டாக்டரு என்ன சொன்னாராம்..?"

"தெரியலையே... என்ன சொன்னாருன்னு தெரியலையே..."

"உம் மவ நம்பரை கொடு.... கண்ணா இந்த நம்பருக்கு அடிச்சுக் கேளு..."

கண்ணன் போன் அடித்து ராமையாவிடம் கொடுக்க, "ஆத்தா... நான் ராமையா ஐயா பேசுறேன்... மாமா எப்படியிருக்கான்... என்ன சொல்றாங்க..." அவரது கேள்விக்கான விவரங்களை அவள் சொல்லச் சொல்ல அவரது முகம் மாறிக்கொண்டு வர ஆரம்பிக்க கமலம் பெருங்குரலெடுத்து அழுகலானாள்.

"இங்க பாரு கமலம்... நீதான் தைரியமா இருக்கணும்... நெறமாசப்புள்ள... நீ அழுதா அதுவும் கத்தி எதாவது ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆயிட்டா... பூமிநாதன்கிட்ட கொண்டு போனாங்களாம்... அவரு பாத்துட்டு பாக்க முடியாது மருதைக்கு கொண்டு போங்கன்னு சொல்லிட்டாராம். மருதைக்கு கொண்டு பொயிட்டாங்களாம்... உம்மவ வீட்டுக்கு வந்திருச்சாம்.... ரொம்ப மோசமாத்தான் இருக்கும் போல..."

"அய்யோ அண்ணே...." என்று கமலம் கத்த "என்னப் பெத்த அப்போவ்..." என்று பானுவும் கத்த ஆரம்பித்தாள்.

"கமலம் உம்மவனுக்கு விவரத்தை சொல்லிட்டு கெளம்பு... நாம மருதைக்கு போலாம்.... பானுவ கூட்டிக்கிட்டு போவேண்டாம்... பஸ்சுல அவ இந்த நெலமயில அவ்வளவு தூரமெல்லாம் பிரயாணம் செய்ய முடியாது... இங்க இருக்கவுக பாத்துக்கட்டும். வா நாம நாலஞ்சு பேரு போகலாம்..." என்ற ராமையாவிடம் "ஐயா நானு வாரேன்... எங்கப்பாவ பாக்கணும்...என்னால இங்க இருக்க முடியாது..." என்றபடி அழுதாள் பானு.
"இல்லத்தா... இந்த நெலமயில நீ பஸ்சுல வர முடியாது... உங்கப்பனுக்கு ஒண்ணும் ஆவாது... நாங்க பொயிட்டு நெலமயப்பாத்துட்டு போன் பண்றோம்... நீ காலயில வரலாம்... ஆத்தா ரெண்டு பொம்பளய இங்க இருந்து பத்தரமா பாத்துக்கங்க..." என்று ரெண்டு மூணு பேரை கிளம்பச் சொன்னார்.

****

மதுரை மீனாட்சி மிஷன் வாசலில் இறங்கிய கமலம் கதறிக் கொண்டு ஓடினாள். ராமையா ரிசப்ஷனில் விவரம் கேட்டு எல்லோரையும் அழைத்துக் கொண்டு ஐசியூ  நோக்கி விரைந்தார்.

அங்கு நின்று கொண்டிருந்தவர்கள் கமலத்தின் அழுகுரல் கேட்டு திரும்ப, கமலத்தைக் கண்ட கனகம் " அத்தாச்சி... " என்றபடி அவளிடம் ஓட, "அண்ணபொண்டி... எங்கண்ணனுக்கு என்னாச்சு..." என்று அவளை கட்டிக் கொண்டு கதற

"கமலம்... இது ஆசுபத்ரி... பொறுமையா இருங்க.... ஒண்ணு ஆவாது..." ஒருவர் அவர்களை அடக்க

"என்னாச்சு அண்ணபொண்டி..."

"அத நா... எப்புடி சொல்லுவே... நல்லாத்தான் போனாக இப்படி விழுந்து கெடக்காகலே..."

"அம்மா... கொஞ்ச சும்மா இருங்கம்மா... நர்சு கத்துனா வெளியில போகச் சொல்லுங்கன்னு சொல்லுது..."

"ராசா.... நம்ம தெய்வம் சாஞ்சிருச்சே..."

"அயித்த... அப்பா சும்மா இருப்பாக... அழுவாதீக... எல்லாரும் பேசாம இருங்க" தனது கண்கள் கலங்கி இருந்தாலும் மற்றவர்களை கட்டுப்படுத்தி தன்னையும் கட்டுப்படுத்திக் கொண்டு இருந்தான் மூத்தவன் முத்துராசு.

அங்குமிங்கும் ஓடிய நர்ஸ் ஒருத்தியிடம் "ஏம்மா... நெலம எப்படியிருக்கு..." என்று மெதுவாக கேட்டார் ராமையா.

"இருங்க... இப்ப டாக்டர் வருவாங்க... வந்து சொல்வாங்க" என்றபடி எதுவும் சொல்லாமல் சென்றாள்.

சில மணி நேரங்களுக்குப் பிறகு வெளியே வந்த டாக்டர், "பெரியவங்க ரெண்டு பேரு எங்கூட வாங்க..." என்றபடி அவரது அறைக்குச் சென்றார்.

அறைக்குள் நுழைந்து கதவை சாத்தியதும் "என்னால முடிஞ்சதை செஞ்சிருக்கேன். கண்டிசன் ரொம்ப மோசமாத்தான் இருக்கு... என்னால இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது... முடிஞ்சளவு முயற்சி செய்து பார்க்கிறோம்" என்றதும் அவர் கையை விரிக்கிறார் என்பதை புரிந்து கொண்டவர்கள் எதுவும் சொல்லாமல் வெளியேறி மற்றவர்களிடம், "கவலைப்பட வேண்டாம்... நாளைக்குத்தான் எதுவா இருந்தாலும் சொல்ல முடியுமின்னார்... பிரச்சினை இல்லையின்னு சொன்னார்" என்றனர்.

****

"அலோ... யாரு... " தனக்கு வந்த போனுக்கு பதிலளிக்கும் விதமாக மற்றவர்களிடம் இருந்து தள்ளி வந்து பேசினார் ராமையா.

"மாமா... நான் கண்ணன் பேசுறேன்..."

"என்னப்பா... இந்த நேரத்துல என்ன எதாவது பிரச்சினையா..."

"இல்ல மாமா... பானுக்கு வயித்தவலி வந்து துடிக்கிறா... எல்லாரும் ஆஸ்பத்திரியில இருக்கயில... எங்களுக்கு என்ன பண்றதுன்னு தெரியல... அவ புருஷனுக்கு போன் பண்ணின அவன் மாமாவ பாக்க ஆஸ்பத்திரிக்கு வந்துக்கிட்டு இருக்கானாம்... அவன் அங்க வந்துட்டு இங்க வாற வரைக்கும் அவ தாங்க மாட்டா போல... வலியில ரொம்ப துடிக்கிறா மாமா"

"என்ன மாப்ளே... படிச்சபுள்ள நீங்க... யோசிக்கலாமா... உடனே சட்டுப்புட்டுன்னு காருக்குப் போன் பண்ணி ஆசுபத்ரிக்கு கொண்டு போங்க மாப்ளே.... இங்கயும்  நெலம சரியில்ல... அந்தப்புள்ளகிட்ட எதுவும் சொல்லிக்கிட்டு இருக்க வேண்டாம்... இறைவன் சித்தம் எப்படியோ அப்படியே நடக்கட்டும்..." என்றபடி கமலத்திடம் வந்தவர்

"கமலம்... பானுக்கு வலி வந்திருச்சாம்... ஆசுபத்ரிக்கு கூட்டிப் போகச் சொல்லிட்டேன்... ஒம்மவன் இங்க வந்துக்கிட்டு இருக்கானாம்..."

"என்னம்மான் சொல்றீங்க... இந்த நெலமயில... நாம என்ன பண்றது... கடவுள் இப்படி சோதிக்காறானேம்மான்..."

"என்ன பண்றது... நம்ம கஷ்டத்துக்காக பொறக்கப் போறதை தள்ளிப் போட முடியுமா சொல்லு நடக்கிறது நடக்கட்டும்..."

"இல்லம்மான்... பொறக்குறபுள்ள எங்கண்ணன முழுங்கிட்டு பொறந்துட்டா..."

"அப்படி ஏன் நெனக்கிறே... உங்கண்ணன் பொழக்கிறதும் பொறக்குற புள்ளயால இருந்தா... இல்ல அப்படியே எதாவது ஆனாலும் உங்கண்ணன் வந்து பொறந்திருக்கிறதா நெனச்சுக்குவோம்..."

"என்னம்மான் இப்படி தர்ம சங்கடமான நெலயில மாரியாத்தா விட்டுட்டா..."

"சரி மெதுவா உங்க அண்ண பொண்டாட்டிகிட்ட வெவரத்தைச் சொல்லு... சத்தம் எதுவும் போடாம... என்னதான் நடக்குதுன்னு பாப்போம்..." என்றபடி பேசாமல் போய் அமர்ந்தார்.

சிறிது நேரத்தில் அங்கு வந்து சேர்ந்தான் கமலத்தின் மகன்.

"என்னாச்சு மாமாவுக்கு.... எப்படியிருக்காக..." பதட்டமாக கேட்டான்.

"பேராண்டி... உம் மாமன் நெலம ரொம்ப மோசமா இருக்கு... டாக்டருங்க பாத்துக்கிட்டு இருக்காங்க... பெரிய டாக்டர் சிரமங்கிற மாதிரி சொல்றார்.... சரி நாங்க இங்க பாத்துக்கிறோம் அங்க உம்பொண்டாட்டிக்கு வலி வந்து ஆசுபத்ரியில சேத்து இருக்காங்க.... அங்க அந்தப்புள்ள நீங்க யாருமில்லாம ரொம்ப கஷ்டப்படும்... உடனே நீ கெளம்பு... அவளுக்கு துணையா இரு... பிரச்சினையின்னா நான் போன் பண்றேன்...."

"என்னய்யா... இது இந்த நேரத்துல... பொறக்குற கொழந்த மாமாவை... " மெதுவா இழுத்தான்.

"என்னடா பேசுறே... எதுக்கும் எதுக்கும் முடிச்சுப் போடுறே... எங்க காலத்துல படிப்பறிவு இல்ல.... இப்படியெல்லாம் பேசினோம்... நீங்க படிச்சவங்க நீங்களுமா இப்படி..."

"இல்லய்யா... அப்படி எதாவது ஒண்ணுன்னா.... அந்தப் புள்ள நமக்கு எதுக்கு...."

"சீக்கழுத அப்படி ஏன் நெனைக்கிறே... அவரு விழுந்ததுக்கும் இது பொறக்குறதுக்கும் ஏன் முடிச்சுப் போடுறே... சாவுங்கிறது எல்லாருக்கும் வாரதுதான்... இந்தப்புள்ள பொறக்கலையின்னா ஒம்மாம விழுந்திருக்க மாட்டரா என்ன... தலவிதி எப்படியோ அப்படித்தான் நடக்கும்.  இதோட பிறப்புல அவனோட முடிவு இருக்கணுமின்னு... அது நல்லதோ கெட்டதோ.... எதாயிருந்தாலும் ஏத்துக்கத்தான் வேணும். கெட்டதா இருந்தா அவரே வந்து பொறந்திருக்கிறதா நெனச்சுக்குவோம். இல்ல நல்லதா இருந்தா தாத்தாவ காப்பாத்திக் கொண்டாந்துருச்சின்னு நெனச்சுக்குவோம்.... அதைவிட்டுட்டு தவறா ஏன் நினைக்கணும்... நம்ம ராசையா பொறந்தன்னைக்கு அவன் ஆத்தா பெரசவத்துலயே பொயிட்டா... அவனை எல்லாரும் ஆத்தாவ கொன்னுட்டு பொறந்தவன்னு பேசுனாங்க... என்னாச்சு.... அவன் பொறந்ததுக்கு அப்புறம்தான் அந்த வீட்டு நெலம சீராச்சு... இம்புட்டு சொத்தும் சேர்ந்துச்சு... தெரியுமா உனக்கு.. இன்னைக்கு போலீஸ்ல பெரிய போஸ்ட்டுல இருக்கான். எந்த ஒரு எழப்புக்கும் அதோட தொடர்ச்சியா வார எதுவும் காரணம் இல்ல... எல்லாம் நாமளா முடிவு எடுத்துக்கிறதுதான்... நீ எதப்பத்தியும் கவலைப்படாதே... உம்புள்ள நல்லபடியா பொறக்கணும்... நீ மொதல்ல கெளம்பு... அங்க அந்தப்புள்ள நெனெப்பெல்லாம் இங்கதான் இருக்கும். நீ பக்கத்துல இருந்தா அதுக்கு ஆறுதலா இருக்கும். போ..."

****

அதிகாலை 4.30 மணி...

"சாரிங்க எங்களால முடிஞ்ச செஞ்சோம்... தலையில இருந்து வார பிளட்டை நிப்பாட்ட முடியலை... எவ்வளவோ முயற்சி பண்ணியும் காப்பாத்த முடியலை.... " என்று டாக்டர் சொல்ல அழுகுரல்கள் ஓசை மருத்துவமனையையே உலுக்கியது..

அதே நேரம்...

வலி அதிகமாகி பிரசவ அறைக்குள் கொண்டு செல்லப்பட்ட பானு வலி பொறுக்க  முடியாமல் கதறினாள்... வெளியே அவள் கணவனும் மற்ற உறவுகளும் கவலையுடன் காத்திருந்தனர். கண்ணனின் போன் அடிக்க எடுத்தவன் பானுவின் அப்பா இறந்த செய்தி கேட்டு மற்றவர்களிடம் பதட்டமாய் சொல்ல உள்ளே "அப்பா" என்ற பானுவின் குரலும் "குவா... குவா..." என்ற குழந்தையின் குரலும் கேட்டது.
-'பரிவை' சே.குமார்.

புதன், 24 ஜூலை, 2013

சினிமா செய்திகள் : கே.ஆர்.விஜயா , ஆண்ட்ரியா , ஐஸ்வர்யா அர்ஜூன்

மீண்டும் நடிப்பு களத்தில் குதித்த கே.ஆர்.விஜயா
ரசிகர்களால் புன்னகை அரசி என்று அழைக்கப்பட்டவர் கே.ஆர்.விஜயா. பழம்பெரும் நடிகையான இவர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ளார்.
உடல் நிலையை கருதில் கொண்டு நடிப்பதில் இருந்து விலகி இருந்த கே.ஆர்.விஜயா தற்போது நிலாவின் மழை என்கிற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தை எஸ்.பி.ஆர்.பிக்சர்ஸ் தயாரிக்கிறது. ரவிஷங்கள் ஒளிப்பதிவு செய்ய, எஸ்.பி.சுகுமார் இசையமைக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி எஸ்.பி.ஆர் இயக்குகிறார்.


படத்தில் கே.ஆர்.விஜயா சமூக சிந்தனையுள்ள டாக்டர் வேடத்தில் நடிக்கிறார். பொதுமக்களுக்கு சேவை செய்வதே லட்சியம் என்ற உயர்ந்த சிந்தனையுடன், குறைந்த வருமானம் வந்தாலும் போது என்று நினைத்து மக்களுக்கு உதவும் டாக்டரக செயல்படும் இவருக்கு, சவாலாக ஒரு நிகழ்வு ஏற்படுகிறது. உயிருக்கு போராடும் வாலிபரை காக்கும் பொறுப்பு அவரை வந்து சேருகிறது. அந்த இளைஞரை நோயிலிருந்து மீட்கும் போராட்டத்தில் வெற்றி பெற்றாரா என்பதே கிளைமாக்ஸ்.
முக்கிய வேடத்தில் பாண்டு நடிக்கிறார். முதலில் படத்தில் நடிப்பது குறித்து யோசித்த கே.ஆர்.விஜயா, இயக்குநர் சொன்ன கதையைக்கெட்டு இந்த படத்தில் நடித்தே ஆக வேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்டாராம்.

‘அன்னயும் ரசூலும்’ ரீமேக்கில் ஆண்ட்ரியா!
அண்மையில் மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘அன்னயும் ரசூலும்’. இந்தப் படத்தை ராஜீவ் ரவி இயக்கியிருந்தார்.


இதில் பிரபல இயக்குனர் ஃபாசிலின் மகன் ஃபஹத் ஃபாசில் நாயகனாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக ஆன்ட்ரியா ஜோடியாக நடித்தார். இந்தப் படத்தில் நடித்த போதுதான் நடிகை ஆண்ட்ரியாவை தீவிரமாக காதலிப்பதாக இயக்குனர் பாசில் மகனும், பிரபல மலையாள நடிகருமான பாஹாத் பாசில் கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். இதனை ஏற்க மறுத்த ஆண்ட்ரியா புதிய படத்தில் பாசிலுடன் நடிக்க வந்த வாய்ப்பைவும் உதறி தள்ளினார்.
இந்நிலையில் இப்படத்தை தமிழில் ரீமேக் செய்யும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ரீமேக் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ‘ரெட் ஜெயன்ட் மூவீஸ்’ நிறுவனம் கேட்டுள்ளதாக ‘அன்னயும் ரசூலும்’ மலையாள படத்தின் தயாரிப்பாளர் வினோத் விஜயன் தெரிவித்துள்ளார். மலையாளத்தில் ஆண்ட்ரியா நடித்த கேரக்டரில் தமிழிலும் ஆன்ட்ரியாவே நடிக்க இருக்கிறாராரம்.

பட்டத்து யானை நாயகியை தேடி வரும் வாய்ப்புகள்
மலைக்கோட்டை படத்தை தொடர்ந்து ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஷால்-பூபதி பாண்டியன் கூட்டணி மீண்டும் கைகோர்த்திருக்கும் படம் பட்டத்து யானை.
இதில் விஷாலுக்கு ஜோடியாக அறிமுகமாகியுள்ளார் அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யா. திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை தனது மகளுக்கு இருந்ததால்தான் பட்டத்து யானை படத்தின் மூலம் அறிமுகம் செய்தாராம் அர்ஜூன். அதோடு படப்பிடிப்பு சென்னையில் நடந்த போது கூட தன் மகளை பார்ப்பதற்காக ஸ்பாட்டுக்கு செல்லவில்லையாம். காரணம் என்னவென்றால் தன்னை பார்த்தால் மகளுக்கு நடிப்பு சரியாக வராது என்பதால்தான்.


இருப்பினும் ஐஸ்வர்யாவின் நடிப்பு குறித்து இயக்குனர் மற்றும் விஷாலிடம் அடிக்கடி கேட்டு தெரிஞ்சிகிடுவாராம். அந்த வகையில் தனது மகள் முதல் படம் என்பது தெரியாத அளவுக்கு நடித்திருப்பதாக சொல்கிறார்கள். இந்நிலையில் பட்டத்து யானை படம் வெளியாவதற்குள் மேலும் இரண்டு நிறுவனங்கள் ஐஸ்வர்யாவின் கால்ஷீட் கேட்டுள்ளனர்.
ஆனால் அர்ஜூனோ படம் வெளியான பிறகு புதிய படங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தலாம் என கூறி அனுப்பி வைத்துவிட்டாராம். இதனிடையே பட்டத்து யானை திரைப்படம் வரும் 26ம் தேதி திரைக்கு வர உள்ளது.
-செய்திகளுக்கு நன்றி : தினமணி
-படங்களுக்கு நன்றி : கூகிள் இணையம்
-''பரிவை' சே.குமார்.

செவ்வாய், 23 ஜூலை, 2013

'அஜீத் ஷாலினி மாதிரி, சிறந்த தம்பதிகளாக வாழ்ந்து காட்டுவோம்!' - சிம்பு


எங்க அப்பா அம்மா சம்மதத்துடன் ஹன்சிகாவைத் திருமணம் செய்து கொள்வேன். அஜீத் - ஷாலினி மாதிரி நானும் ஹன்சிகாவும் நல்ல தம்பதிகளாக வாழ்ந்து காட்டுவோம், என்று நடிகர் சிலம்பரசன் தெரிவித்துள்ளார். சிலம்பரசன் என்கிற சிம்புவுடன் தொடர்ந்து வேட்டை மன்னன் மற்றும் வாலு ஆகிய இரு படங்களில் ஹன்சிகா ஹீரோயினாக ஒப்பந்தமானபோதே, இருவருக்கும் காதல் என்ற செய்தி வரும் என பலரும் எதிர்ப்பார்த்தனர். எதிர்ப்பார்ப்பை பொய்யாக்காமல், சீக்கிரமே உண்மையை ஒப்புக் கொண்டனர் இருவரும். அதுமட்டுமல்ல, திருமணப் பேச்சை கூட ஆரம்பித்துள்ளனர்.

‘‘ஹன்சிகாவை என் மகன் சிலம்பரசன் திருமணம் செய்து கொள்ள விரும்பினால், அதை எதிர்க்க மாட்டேன்'' என்று சிம்புவின் தந்தையும் பச்சைக் கொடி காட்டிவிட்டார். 

முதல் நாள் இதற்கு மறுப்பு தெரிவித்த ஹன்சிகா, அடுத்த நாள் விடியற்காலையிலேயே, சிம்புவை தான் காதலிப்பது உண்மை என்றும், இது தனிப்பட்ட விஷயம், விட்டுடுங்க என்றும் கூறிவிட்டார். அடுத்த சில நிமிடங்களில் சிம்புவும் தங்கள் காதலை உறுதிப்படுத்தினார்.


இந்த நிலையில், சிம்பு விலாவாரியாக தங்கள் காதல் மற்றும் திருமணத்தை உறுதிப்படுத்தியுள்ளார். அவர் கூறுகையில், "நானும், ஹன்சிகாவும் ஒருவரையொருவர் மிக தீவிரமாக காதலித்து வருகிறோம். உயிருக்கு உயிராக பழகி வருகிறோம். நான், ஹன்சிகாவுடன்தான் இருக்கிறேன்.

என் பெற்றோர்கள் சம்மதத்துடன், நான் ஹன்சிகாவை திருமணம் செய்து கொள்வேன். எங்கள் இருவருக்கும் திருமணம் நடப்பது உறுதி. அநேகமாக அடுத்த ஆண்டு நடக்கலாம்.

அஜித்-ஷாலினி எப்படி சிறந்த நட்சத்திர தம்பதிகளாக வாழ்ந்து காட்டுகிறார்களோ, அதேபோல் நானும், ஹன்சிகாவும் சிறந்த தம்பதிகளாக வாழ்ந்து காட்டுவோம்,'' என்றார்.


செய்திக்கு நன்றி : தட்ஸ் தமிழ் இணையம்
படங்களுக்கு நன்றி : இணையம்
-'பரிவை' சே.குமார்

'நான் அண்ணா... விஜய் எம்ஜிஆர்...!' - சொன்னாரா எஸ்ஏசி?


தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, இனி வரும் அரசியலில் நான் அண்ணா... என் மகன் விஜய்தான் எம்ஜிஆர், என்று இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகரன் சொன்னதாக வெளியாகியுள்ள செய்திகள் இரு கழகங்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இது விஜய்க்கு பெரும் நெருக்கடியாக அமையும் என்று திரையுலக வட்டாரத்தில் பேசப்படுகிறது. 

சினிமாவில் நடிக்க ஆரம்பித்த போதே அரசியலை மனதில் வைத்து மகனுக்கு இளைய தளபதி என்று பட்டம் சூட்டிவிட்டவர் எஸ் ஏ சந்திரசேகரன். இத்தனைக்கும் அன்றைக்கு அவர் ஒரு நடிகராகவே யார் மனதிலும் இடம்பெறாத நேரம். காதலுக்கு மரியாதை வரை சுமாரான வெற்றிகள்தான். 

அதன் பிறகு வந்த வெற்றிகளை அரசியல் பிரவேசத்துக்கான முன்னோட்டமாகவே பார்த்தனர். அதன் பிறகு ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றினர். அதற்கு தலைவராக எஸ்ஏ சந்திரசேகர்தான் இருக்கிறார். 

திமுக ஆட்சிக் காலத்தில் விஜய்யின் அரசியல் பிரவேச முஸ்தீபுகள் இரு தரப்பிலும் உரசலைத் தோற்றுவிக்க, சடாலென அதிமுகவுக்கு வெளிப்படையாக ஆதரவளித்தனர். அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததும், அந்த வெற்றியில் தன் பங்கு ஒரு அணில் அளவுக்கு இருந்ததாக விஜய்யே அறிக்கை விடுத்தார். 

அதிமுக ஆட்சிக்கு வந்த முதல் ஒன்றரை ஆண்டுகளில் விஜய்க்கு பிரச்சினை ஏதுமில்லை. ஆனால் இரண்டாம் ஆண்டில் அவரால் வாய் திறந்து எதுவும் சொல்ல முடியாத நிலை. வருங்கால முதல்வரே, ஜனாதிபதியே என்கிற ரேஞ்சுக்கு பிறந்த நாளுக்கு போஸ்டரெல்லாம் அடித்து, பிரமாண்ட பந்தல் போட்டும், அதைக் கொண்டாட முடியாமல் கமுக்கமாகப் பிரிக்க வேண்டிய நிலை. 



இந்த நிலையில் இனி வெளிப்படையாக தங்கள் இயக்கம் சார்பில் நிகழ்ச்சி நடத்த முடிவு செய்துள்ளார்களாம்.

 "தமிழகத்தின் முதல்வராகும் தகுதி விஜய்க்கு இருப்பதாகவே நினைக்கிறார் எஸ்ஏசி. அவரைப் பொறுத்தவரை, திராவிட கட்சிகளில் அண்ணாவும் எம்.ஜி.ஆரும்தான் தலைவர்கள். அதேபோல இப்போது அண்ணா ரேஞ்சுக்கு தன்னையும், எம்.ஜி. ஆருக்கு நிகராக தன் மகனையும் ஒப்பிட்டு பல இடங்களிலும் பேசி இருக்கிறார். இது ஆட்சி மேலிடத்துக்கும் தெரியும். எதிர் தரப்புக்கும் தெரியும். இந்தப் பேச்சுதான் அவர்கள் இருவருக்கும் பெரும் பிரச்சினையைத் தரப் போகிறது. ஒருவேளை அதை வைத்தே அரசியலைத் தொடங்கிவிடலாம் என எஸ் ஏ சி தரப்பு நினைத்திருக்கிறதோ என்னமோ?" என்கிறார்கள் உளவுத் துறை வட்டாரங்களில். 

ஆனால் எஸ்ஏசி தரப்பிலோ, யாரிடமும் அப்படியெல்லாம் சொல்லவில்லை என்ற ஒற்றை வரி மறுப்போடு அமைதி காக்கிறார்கள்.

செய்திக்கு நன்றி : தட்ஸ்தமிழ் இணையம்
படங்களுகு நன்றி : கூகிள் இணையம்
-'பரிவை' சே.குமார்