மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

செவ்வாய், 30 டிசம்பர், 2014

கள்ளிச் செடிகள்

"என்ன கஸ்தூரி மாமியாளும் மருமகளும் எங்கயோ கிளம்புறீங்க போல..?" எதிர் வீட்டு வாசலில் நின்று கேட்டாள் பார்வதி. 

"ஆமா பார்வதி... வியாழக்கிழமையில்ல சிவன் கோவிலுக்குப் போயிட்டு தட்சிணாமூர்த்திக்கு கொண்டக்கடலை மாலை போட்டுட்டு வரலாம்ன்னு போறோம்..."

"ம்... நானும் வாரேன்..."

"சரி வா..."

"மருமககூட கோயில், கடைவீதியின்னு போக ஆரம்பிச்சிட்டே..."

"ஆமா பார்வதி... அவ மதுரையில வளர்ந்தவ... நம்ம ஊர்ல அவளுக்கு என்ன பொழுது போக்கு இருக்கு சொல்லு... அப்பாவும் மகனும் வேலைக்குப் போயிட்டு லேட்டாத்தான் வர்றாங்க... நாங்க ரெண்டு பேரும்தான் வீட்டுல இருக்கோம். தாரிணிக்கு டிவியில அழுகாச்சி நாடகமெல்லாம் பார்க்கப் பிடிக்காது. அதுவும் விளக்கு வைக்கிற நேரத்துல அழுகிற சீரியல் வீட்டுல போட வேண்டான்னு சொல்லிடுவா... இப்ப அவளோட சேர்ந்து நானும் சீரியல் பார்க்கிறதை விட்டுட்டேன்..."

"அது சரி மருமகளுக்காக மாமியா மாறியிருக்கே... நல்லாயிருக்குடி..."

"இதுல என்ன இருக்கு... அவளுக்கும் ஒரு வேலை கிடைச்சிட்டா பரவாயில்லை... அதுவரைக்கும் அவளுக்கு கொஞ்சமாவது பொழுது போகணுமின்னா இந்த மாதிரிப் போனாத்தானே ஆச்சு..."

"ம்... சரித்தான்..."

கோவிலில் சாமி கும்பிட்டு பிரகாரத்தில் உக்கார்ந்தார்கள். "ஏன்டியம்மா... புதுப்பொண்ணு... போய் தீர்த்தம் எடுத்துக்கிட்டு வா... நாங்க இங்க பேசிக்கிட்டு இருக்கோம்."

"சரி ஆண்டி..." என்றபடி தாரிணி கிளம்ப, "என்னடி நீ மருமகளை மருமகளா நடத்தாம இப்படி பெத்தபிள்ளையைக் கூட்டிக்கிட்டுத் திரியிற மாதிரி திரியிறே..."

"அவளும் ஒரு பொண்ணுதானே... எதுக்கு இப்ப இந்தப் பேச்சு..?"

"அதுக்காக... மருமகளை மருமகளா நடத்தலைன்னா நாளைக்கு நம்மளை மதிக்க மாட்டாளுங்க... எங்க வீட்ல மருமக நான் நில்லுன்னா நிப்பா... உக்காருன்னா உக்காருவா.... உனக்குத்தான் தெரியுமே..."

"இங்க பாரு பார்வதி... என்னோட மாமியார் என்னைய மக மாதிரித்தான் பார்த்துக்கிட்டாங்க... அதனால அவங்களுக்கோ எனக்கோ எந்த பாதிப்பும் வரலை... சொல்லப்போனா எங்க அம்மாக்கிட்ட சொல்லாததைக் கூட என் மாமியார்க்கிட்டதான் சொல்வேன்... அவங்ககிட்ட வளர்ந்த எனக்கு இப்போ தாரிணியை மகளா, தோழியாத்தான் பார்க்கத் தோணுதே தவிர அவ மருமகள்னு ஒரு வட்டத்துக்குள்ள வைக்க முடியல..."

"நீ இதுக்காக பின்னாடி வருத்தப்படுவே..."

"அன்னைக்குப் பார்த்துக்கலாம்... தாரிணி வர்றா... வா போகலாம்..."

"தாரிணி அந்த சட்னியை எடேன்..." என்றான் அருண்.

"இந்தாத்தானே இருக்கு... எதுக்கு சாப்பிடுறவளை டிஸ்டர்ப் பண்ணுறே... நீ சாப்பிடும்மா" என்றாள் கஸ்தூரி.

"அப்பா நாம இந்த வீட்டை வாடகைக்கு விட்டுட்டு இன்டர்சிட்டிக்குள்ள ஒரு பிளாட் பார்த்துக்கிட்டு போயிடலாம்..."

"இப்ப இந்த வீட்டை விட்டுட்டுப் போக அப்படி என்னப்பா அவசரம்?" இட்லியை சட்டினியின் தோய்த்தபடி கேட்டார் தணிகாசலம்.

"இல்லப்பா மனுசங்க சரியில்லை.... நல்லவங்க மாதிரி பழகிக்கிட்டு நஞ்சை விதைக்கிறாங்கப்பா..."

"அப்படி என்னத்தைப்பா விதைச்சாங்க...?" என்று கேட்ட தணிகாசலம் சிரித்தபடி இட்லியை வாயில் வைத்தார்.

"இல்லப்பா ரெண்டு மூணு நாளாவே டிரைன்ல வரும்போது பக்கத்து வீட்டு மகாதேவன் மாமா எதாவது சொல்லிக்கிட்டே வருவாரு.... நான் எதையும் பெரிசா எடுத்துக்கிறதில்லை... ஆனா இன்னைக்கு..."

"என்னத்தை அப்படிச் சொல்லப் போறாரு... விடு...  பெரிய மனுசன் அவரு எதாவது உன்னோட நல்லதுக்கு சொல்லியிருப்பாரு... இதுக்காக வீட்டை மாத்தனுமா என்ன?"

"இல்லப்பா... எதுக்கு அப்பா அம்மா கூட இருந்துக்கிட்டு... ஒரு லோனக்கீனைப் போட்டு சிட்டிக்குள்ள ஒரு பிளாட்டை வாங்கிட்டா வேலைக்குப் போக வர ஈசியா இருக்கும்... அப்படியே தாரிணிக்கு ஒரு வேலை வாங்கிட்டா லைப்பு செட்டிலாகும்ல.... அப்படின்னு சொல்றாரு..."

"அவரு சொன்னது சரிதானேடா... உன்னோட லைப்பை நல்லவிதமா அமைச்சிக்கச் சொல்றாரு.... இதைத் தப்புங்கிறே... எனக்கும் அம்மாவுக்கும் இந்த இடம், இந்த மக்கள் பழகிட்டாங்க... ரிட்டையர்மெண்டுக்கு அப்புறம் என்னால சிட்டிக்குள்ள இருக்க முடியாது. அதனால நீயும் தாரிணியும் சிட்டிக்குள்ள தனியா இருக்க மாதிரி ஒரு பிளாட் பார்க்கலாம்..."

"சும்மா இருங்கப்பா... அவருக்கு எதுக்கு இந்தப் பொழப்பு... நான் இப்போ எங்க அப்பா அம்மாவோட இருக்கிறது பிடிக்கலைன்னு சொன்னேனா என்ன..."

"நீ சொன்னேன்னு நாங்க சொன்னோமா?"

"இல்லப்பா... இவரு மட்டுமில்ல.... இங்க இருக்க எல்லாருமே எதாவது ஒரு விதத்துல எனக்குள்ள தனிக்குடித்தன ஆசையை ஊட்டப் பார்க்கிறாங்க..."

"ஆமாங்க தம்பி சொல்றது உண்மைதான்... இன்னைக்கு பார்வதி எங்க கூட கோயிலுக்கு வந்தா அவளுக்கு நானும் தாரிணியும் ஒண்ணா இருக்கிறது பிடிக்கலை... தாரிணியை தீர்த்தம் பிடிக்கப் போகச் சொல்லிட்டு  எங்கிட்ட மருமகளை மருமகளா நடத்துன்னு உபதேசம் பண்ணுற... மகளா நடத்துனா பின்னாடி அனுபவிப்பேனாம்..."

"சரி சொன்னா சொல்லிட்டுப் போறாங்க... அதுக்கென்ன...?"

"அவ மருமகளை நடத்துற மாதிரி நடத்தணுமாம்..."

"இப்ப என்ன சொல்ல வர்றே..?"

"அருண் சொல்ற மாதிரி வேற பக்கம் போயிடலாம்..."

"வேற பக்கம் பொயிட்டா...."

"இந்த மாதிரி ஆளுகளைவிட்டு தள்ளியிருக்கலாமே" வேகமாகச் சொன்னான் அருண்.

"இங்க பாரு அருண்... தேனீ கூடு கட்டுதுங்கிறதுக்காக வீட்டையா கொளுத்த முடியும்... உங்கம்மாவை எங்கம்மா எப்படிப் பாத்துக்கிட்டாங்களோ அதைவிட ரொம்ப பாசமா தாரிணிக்கிட்ட நடந்துக்கிறா... ஆனா அந்தப் பார்வதி அப்படியில்லை... அவ மாமியாக்கிட்ட எவ்வளவு கொடுமையை அனுபவிச்சான்னு நானும் அம்மாவும் பார்த்திருக்கோம்... இப்ப அவ மருமகளை மகளா நினைக்க ஆசைப்பட்டாலும் தான்பட்ட வலியை மருமக மூலமாப் போக்கப் பார்க்கிறா... ஆனா அவ மருமக அவளுக்கே தெரியாம புருசனை வெளிய கொண்டு போக ஏற்பாடு பண்ணிட்டா..."

எல்லாரும் அவர் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தனர். "மகாதேவனுக்கு மகன் கல்யாணம் பண்ணுன உடனே வெளிநாட்டுக்கு மனைவியோட போய்ட்டான். அந்த வருத்தம்... எல்லாருக்கும் எதாவது ஒரு வகையில பாதிப்பு இருக்கலாம். அதனால நாம ஒண்ணா இருக்கிறது அவங்களுக்கு வயித்தெரிச்சலா இருக்கலாம்.  இங்க இருந்து வேற இடம் போனாலும் இது போல மனிதர்கள் இருக்கத்தான் செய்வாங்க... நம்ம உண்டு நம்ம வேலை உண்டுன்னு போய்கிட்டே இருப்போம்.. நல்லதைக் கெட்டதை ஆராயாம நம்ம வழியில நடந்தா பிரச்சினையே இல்லை... அதுக்காக அவங்களை குத்தம் சொல்லக்கூடாது. அவங்களோட பிரச்சினைகள் அவங்களை இப்படி பேச வைக்குது சரியா..."

"ஆமாங்க... எதுக்கு நாம போகணும்... கள்ளிச்செடிக்குப் பயந்து காம்பவுண்டை இடிக்கவா முடியும்.." என்றாள் கஸ்தூரி.

"அதானே... அம்மா சொல்றது சரிதானே... நீங்க சொல்றதும் உண்மைதானேப்பா... அவங்க பேசினா பேசட்டும்... நமக்குன்னு சுய சிந்தனை இருக்குல்ல..." இது அருண்.

"என்னம்மா நீ ஒண்ணும் சொல்லலையே... தனியா இருக்கணும்ன்னா சொல்லு சிட்டிப்பக்கம் ஒரு பிளாட் பார்த்திருவோம்... சண்டேஸ்ல இங்க வாங்க... சந்தோஷமா ஆக்கி சாப்பிடுவோம்... என்ன சொல்றே...?"

"ஏம்ப்பா... உங்களுக்கு நாங்க டிஸ்டர்ப்பா இருக்கோமா என்ன... எங்களை விரட்டப் பார்க்கிறீங்க... எனக்கு இன்னொரு அப்பா அம்மா கிடைச்சிருக்காங்க... அப்புறம் நாங்க எதுக்கு உறவுகளைப் பிரிஞ்சு புறாக்கூண்டுக்குள்ள அடையணும்... சுதந்திரமா உங்க கூடவே இருக்கோமே" என்றாள் தாரிணி.

"ஆஹா... எம் மருமவ.... இல்லயில்ல மவ அடிச்சா பாரு சிக்ஸர்... இதுதான் வேணும்... கஸ்தூரி இன்னும் ரெண்டு இட்லி வையி... மனசுக்கு சந்தோஷமா இருக்கு" என்று தணிகாசலம் சொல்ல "அம்மா எனக்கும்  வையிங்க... சட்னி நல்லாயிருக்கு" என்றான் அருண். கஸ்தூரியும் தாரிணியும் சிரித்துக் கொண்டனர்.
-'பரிவை' சே.குமார்.

திங்கள், 29 டிசம்பர், 2014

மனசு பேசுகிறது : என்னம்மா இப்படிப் பண்றீங்களேம்மா..!

சில தொலைக்காட்சிகள் குடும்பச் சண்டைகளை பொதுவெளியில் வைத்து பஞ்சாயத்து பண்ணுவது போல் உலகெங்கும் காட்டி அவர்களை அசிங்கப்படுத்தி தங்களது டி.ஆர்.பி. ரேட்டிங்கை உயர்த்திக் கொள்கின்றன. ஒரு பெண் நடத்தினால்தான் அவரின் கோபங்கள், குமுறல்கள், அழுகைகள் என எல்லா நாடகமும் மக்களைச் சென்றடையும் என்பதில் எல்லா தொலைக்காட்சிகளுமே ஒரே மாதிரியான நம்பிக்கை கொண்டிருக்கின்றன.

பெரும்பாலும் சிறிய பிரச்சினையை வீட்டுக்குள் வைத்து தீர்ப்பதை விடுத்து வீதிக்கு கொண்டு வந்து தீர்ப்பதால் யாருக்கு லாபம்? நாலு சுவத்துக்குள்ள நாலு பேரை வச்சி பேசினால் தீர்ந்துட்டுப் போகுது... ஸ்டுடியோவில் வைத்துப் பேசி... நீ சொல்லும்மா... நீ சொல்லுப்பா... போலீசைக் கூப்பிடுவேன்... ஏம்மா இப்படிப் பண்றீங்களேம்மான்னு வசனம் பேசி பிரச்சினையை பெரிதாக்கி விடுவதால் யாருக்கு லாபம்? ஒரு குடும்பத்தை சந்தி சிரிக்க வைத்து தன்னோட கல்லாவை நிரப்பிக் கொள்ள நினைக்கும் தொலைக்காட்சிக்குத்தானே லாபம்.

இவர்களது குறி எல்லாமே மிகவும் ஏழ்மையான குடும்பத்தின் மீதுதான் என்பது இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்பவர்களைப் பார்த்தலே தெரியும்.. அன்றாடங் காய்ச்சிகளின் வாழ்க்கையில் ஏதோ பிரச்சினை, அதை அப்படியே விட்டால் கொஞ்ச நாளில் அவர்களே சரி பண்ணிக் கொள்வார்கள் என்றாலும் எப்படியோ அவர்களின் பிரச்சினையை மோப்பம் பிடித்து அவர்களுக்கு வலைவீசி இழுத்து வந்து விடுகிறார்கள். பெரும்பாலும் இவர்களின் முக்கியத் தேடல் கள்ளக்காதல், பொருந்தாக் காதல், காதல் தோல்வி என்பவையாகவே இருப்பதை நாம் அறியலாம். ஏனென்றால் இன்றைக்கு கள்ளக்காதல் செய்திகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் மற்றவற்றிற்கு இல்லையல்லவா? 

ஸ்டுடியோவில் வைத்து பஞ்சாயத்துப் பண்ணுகிறேன் என்று சொல்லி அவர்களைப் பேச விட்டு, அடிக்க விட்டு, மிதிக்க விட்டு வேடிக்கை பார்த்து பின்னர் வரலாற்று முக்கியத்துவமான தீர்ப்பைச் சொல்வார்கள். இடையிடையே 'என்னம்மா இப்படிப் பண்றீங்க...', 'என்னப்பா சொல்றே...', 'என்ன பண்ணப்போறே...', 'அடிக்காதீங்க...' (நல்லா அடிங்கன்னு அர்த்தம்), 'ஏம்மா உனக்கு எப்படி இப்படி செய்ய மனசு வந்தது...', 'அந்தப் பொண்ணை நினைச்சிப் பார்த்தியா...' என டயலாக் டெலிவரிகள் பல்வேறு முகபாவங்களுடன்... பாவமாய் மாட்டிக் கொண்டவர்கள்.

வாழ்க்கையில் எல்லாருக்கும் பிரச்சினை இருக்கத்தான் செய்யும்.. குடும்பப் பிரச்சினைகள் எல்லாம் குடும்பத்துக்குள்ளேயே தீர்த்துக் கொள்ள வேண்டும். கிராமங்களில் பிரச்சினை பெருசாகும் போதுதான் ஊர்க்கூட்டத்துக்கே வருவார்கள். அதுவரை தங்களுக்குள்ளேயே பேசித் தீர்த்துக் கொள்ளப் பார்ப்பார்க்கள். இப்போதெல்லாம் ஊர்க்கூட்டங்கள் குறைந்து விட்டன. ஊர்க்கூட்டத்தில் முடிவு இல்லை என்றால் நாட்டுக் கூட்டம் என்பார்கள். ஆனால் பாதிக்கப்பட்ட குடும்பத்தை கேவலப்படுத்தி அதில் குளிர்காய மாட்டார்கள்.

ஆள் பிடிக்கும் இவர்கள் குடும்பங்களில் பிரச்சினைகள் இல்லையா...? இல்லை பணக்காரர்கள் குடும்பங்களில் பிரச்சினைகள் இல்லையா...? எல்லா இடத்திலும் பிரச்சினைகள் என்பது இருக்கத்தான் செய்யும். ஏழையின் சண்டை டாஸ்மார்க் சரக்கின் வழியாக வீதியில் சிரிக்கும். பணக்காரனின் சண்டையோ பாரின் சரக்கோடு வீட்டுக்குள் விளையாடும்... அவ்வளவே... பிரச்சினைகள் என்பது எல்லா இடத்திலும் இருக்கத்தான் செய்யும். வசதி படைத்தவர்களை வைத்து நிகழ்ச்சி நடத்தினால் அதன் பின்னான விளைவுகளை எதிர்க்கொள்ள திராணி வேண்டும் என்பதாலேயே கேட்க நாதியற்றவர்களைக் கொண்டு வந்து நிகழ்ச்சி நடத்துகிறார்கள்.

எனக்கு என்ன சந்தேகம் என்றால் வசதி வாய்ப்பற்ற ஏழைகளைப் பணம் கொடுத்து ஆசை காட்டி இழுத்து வருவார்களோ என்பதுதான்... கண்டிப்பாக ஏதோ ஒரு தொகையைக் கொடுத்து ஆசை வார்த்தை காட்டித்தான் குடும்பச் சண்டைகளை ஊடகத்தில் அரங்கேற்றுவார்கள். மானங்கெட்ட மடச்சாம்பிராணிகளும் கருவாட்டுக்கு ஆசைப்பட்டு மாட்டிக் கொண்ட எலியாக மாட்டிக் கொண்டு நிகழ்ச்சியில் அழுது ஒப்பாரி வைத்து அம்புட்டையும் புட்டுப் புட்டு வைத்து அதை அவர்கள் ஒளிபரப்பிய பின்னர் உக்கித் தவிப்பார்கள். நம் அறிவைக் கொண்டு சிந்திக்க வேண்டுமே தவிர அடுத்தவனின் ஆசை வார்த்தைகளுக்கு அடி பணியக் கூடாது என்பது தெரியாத மூடர்கள் இருக்கும் வரை இவர்கள் காட்டில் மழைதான்.

ஒரு சிலர் பக்கத்து வீட்டில் சண்டை என்றால் பார்த்துக் கொண்டிருந்த வேலையைப் போட்டுவிட்டு வேடிக்கை பார்க்க வந்து விடுவார்கள். அவர்கள் வீட்டுக்குள் நாறி நாத்தப்பொணம் எடுத்துப் போய்க்கிடக்கும் கணவன் மனைவி சண்டை... இருந்தும் பக்கத்து விட்டுச் சண்டையில் கிடைக்கும் சுவராஸ்யத்தை தொலைக்க விரும்பாமல் வேடிக்கை பார்ப்பதுண்டு. அப்படிப்பட்ட ஆட்கள் இருப்பதால் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் ஜெயித்துக் கொண்டிருக்கின்றன. இந்த நிகழ்ச்சிகளை தொடர்ந்து பார்ப்பதற்கு இவர்களைப் போன்ற கூட்டங்கள் இருப்பதுதான் வேதனை என்றாலும் இதுவே இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்தும் தொலைக்காட்சிகளுக்கு சாதனை.

கணவன் சரியில்லை... மனைவி சரியில்லை... ஏமாற்றம்... வலி... வேதனை... என எதுவாக இருந்தாலும் குடும்பங்களுக்குள் தீர்த்துக் கொள்ளப் பழகுங்கள்... தயவு செய்து ஊடங்களில் கடை விரிக்காதீர்கள்... அவர்கள் காசை அள்ளிக் கொண்டு உங்களைத் தெருவில் விட்டு விடுவார்கள்... விரிசல் என்பதை மறைக்க முடியும் என்ற நிலை இருக்கும் போது ஒட்டுப் போடுகிறேன் என இவர்கள் உடைத்து வைக்கத்தான் முயற்சிப்பார்கள்... இவர்கள் யார் நம் வீட்டுப் பிரச்சினையில் சமரசமோ தீர்ப்போ சொல்ல... யோசியுங்கள் உறவுகளே... இனியும் இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு குடும்பச் சண்டைகளை கொண்டு செல்லாதீர்கள்.
-'பரிவை' சே.குமார்.

ஞாயிறு, 28 டிசம்பர், 2014

தொடர்கதை : வேரும் விழுதுகளும் (பகுதி - 14)

முந்தைய பகுதிகள் : 


பதிமூணாவது பகுதியின் இறுதியில்...

ண்டி வேகமாகப் பயணிக்க போனை காதுக்கும் தோளுக்கும் இடையில் வைத்து தலையைச் சாய்த்துப் பிடித்துக் கொண்டு ஒவ்வொருவருக்காக விவரம் சொல்ல எதிர்முனைகள் துடித்தன. 

வண்டிகள் குண்டுங்குழியுமான சரளை ரோட்டில் பயணித்து ஆர்.எஸ்.பதி. காடுகளைக் கடந்து மருதம்பட்டி தார்ச்சாலையில் ஏறியபோது...

கந்தசாமியின் தலை கண்ணதாசனின் உடம்பில் சாய, அமாவாசை இருட்டில் எங்கோ ஆந்தை அலறியது.

இனி...

ந்தசாமியின் தலை தன் மேல் சாயவும் கண்ணதாசனுக்கு ஒரு கணம் இதயமே நின்றது போல் ஆகிவிட்டது. 'சித்தப்பா..சித்தப்பா...' என்று கூப்பிட்டான். வண்டி ஓட்டிய ராசு இருட்டில் திரும்பிப் பார்க்க முடியாததால் "என்னாச்சு மாமா...?" எனப் பதட்டத்தோடு கேட்டான்.

"வண்டியை நிறுத்துடா.... சித்தப்பா... தல.... பயமா இருக்குடா..." வார்த்தை வெளியில் வராதபடி பதட்டமும் பயமும் அவனைப் பற்றிக் கொண்டன.

ராசு வண்டியை நிறுத்த, கண்ணதாசன் 'சித்தப்பா... சித்தப்பா...' என்று உலுக்கினான். ராசுவும் 'அய்யா... அய்யா...' என்று அழைத்துப் பார்த்தான்.

அதற்குள் பின்னால் வந்த வண்டிகள் எல்லாம் 'என்ன... என்ன..?' என்றபடி நிற்க, 'ஆத்தி... என்னாச்சு...?" என்ற பதறலாய் இறங்கப் போன காளியம்மாளைப் பார்த்ததும் 'ஒண்ணுமில்ல... சித்தப்பா நல்லா உக்காரணுமின்னு சொன்னாங்க... அதான்... நீங்க போங்க... இந்தா வாறோம்..." என கண்ணதாசன் அவர்களைப் போகச் சொல்ல வண்டிகள் கிளம்பின.

"என்ன மாமா ஆச்சு... நீங்க எல்லாரையும் போகச் சொல்லிட்டீங்க?" பதட்டமாய்க் கேட்டான் ராசு.

"பாப்போம்... அவங்க எல்லாம் இங்க நின்னா... சின்னம்மாவும் வந்திருக்க பொம்பளங்கைளும் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணிருவாங்க... போகட்டும்..." என்றபடி அவரை உலுக்கிப் பார்த்தவன், பயத்தோடு மூக்கில் கை வைத்துப் பார்த்தான்.

"மாமா..."

"ராசு வண்டியை எடு... மூச்சிருக்கு... மயக்கமாயிட்டாரு போல..."

"நெஞ்சுவலி வந்தா மயக்கம் வருமா..?" வண்டியை ஸ்டார்ட் பண்ணியபடி கேட்டான் ராசு.

"தெரியலை மாப்ள... முன்னப் பின்ன செத்தாத்தானே சுடுகாட்டுக்கு வழி தெரியும்... ஒண்ணும் புரியல... ஆனா நிலமை ரொம்ப மோசமா இருக்க மாதிரி தெரியுது... ஆந்தை வேற கத்துது... நல்ல சகுனமாத் தெரியலை... எனக்கு ரொம்பப் பயமா இருக்கு... இவருதான் எங்களுக்கு எல்லாமே... வண்டியை வேகமா ஓட்டு..." 

"ம்... நல்லா புடிச்சிக்கங்க..." என்ற ராசு வண்டியை விரட்டினான்.


"என்னங்க... போன் பண்ணிப் பாருங்க... ஆஸ்பத்ரிக்கு வந்துட்டாங்களான்னு... இந்த இருட்டுக்குள்ள எப்படி வண்டியில வச்சிக் கொண்டாருவாங்க..." கண்ணீரோடு பேசினாள் அபி.

"கண்ணதாசண்ணே போன் எடுக்கல... போய்க்கிட்டு இருக்காக போல... நாங் கெளம்புறேன்... நீ காலையில பிள்ளைகளைக் கூட்டிக்கிட்டு வா..." என்றான் குமரேசன்.

"முதல்ல அழகப்பண்ணனுக்கு போனடிங்க... அவங்க எப்படியும் ஆஸ்பத்திரி வந்திருப்பாங்க... அன்டயத்துல பஸ் கிடைச்சி மாறி மாறிப் போறது சிரமங்க... விடியக்காலையில எல்லாருமாவே போகலாங்க..."

"ம்... நீ சொல்றது சரிதான்... ஆனா அங்க காசு பணத்துக்கு என்ன பண்ணுவாங்கன்னு தெரியலையே..."

"எல்லாத்துக்கும் அழகப்பண்ணன் இருக்காக... கண்ணதாச மாமா இருக்காக... பயப்பட வேண்டியதில்லையில்ல... அவங்க பாக்கட்டும் நாளைக்கி நாம கொடுத்திடலாம்... இப்ப அண்ணனுக்கு போன் பண்ணுங்க..."

"சரி..." என்றபடி மொபைலில் அழகப்பனின் நம்பரை அழுத்தினான்.

"என்ன மச்சான்... சொல்லுப்பா..." அந்த நேரத்திலும் அழகப்பனின் குரல் கணீரென்று கேட்டது.

"அத்தான்... ஆஸ்பத்திரிக்கு போயிட்டீங்களா? அப்பாவை கூட்டியாந்துட்டாங்களா..?"

"இப்பத்தான் மச்சான் நானும் உங்கக்காவும் போயிக்கிட்டு இருக்கோம்... கண்ண மச்சானுக்கிட்ட பேசினேன்... ஒண்ணும் பயப்படாதே... அவரு நல்லா இருப்பாரு..."

"நா... இப்பவே கிளம்பி வரவா... எந்தாஸ்பத்திரிக்கு வாறாங்க...?"

"ராஜசேகருக்கிட்டதான் வாறேன்னு சொன்னாங்க... நீ இப்ப வந்து என்ன பண்ணப் போறே... பஸ் மாறி வர்றது சிரமம்... காலையில கிளம்பி வா... நாங்க இருக்கோமுல்ல... ஆஸ்பத்திரிக்குப் பொயிட்டு போன் பண்ணுறேன்..."

"சரி மச்சான்.."

"என்னங்க... அண்ணன் என்ன சொல்றாக?"

"அவரும் அக்காவும் ஆஸ்பத்திரிக்கு போய்க்கிட்டு இருக்காங்களாம்... பொயிட்டு கூப்பிடுறேன்னு சொன்னார்... என்னைய காலையில வரலாம்ன்னு சொல்றாரு..."

"ம்... அதான் நான் சொல்றேன்.... எல்லாருமாப் போயிருவோம்..."

"சரி..."


வசரம் அவசரமாக சட்டையை மாட்டிக் கொண்டிருந்தான் மணி. முந்தின இரவு நடந்த பிரச்சினையும் அதன் பின்னான நிகழ்வுகளும் மூவருக்குள்ளும் ஒரு சுமூகமான பேச்சை கொடுக்கவில்லை என்றாலும் அப்பாவுக்கு முடியலை என்றதும் பதறியவனை மகாதான் ஆறுதலாக அணைத்துக் கொண்டாள். சித்ராவோ 'அவருக்கு ஒண்ணும் ஆகாது... கலங்காதீக' என்று சொல்லியபடி அருகே அமர்ந்தாள்.

"இந்த நேரத்துல போவணுமாப்பா...?" மகாதான் கேட்டாள்.

"வேற என்னம்மா பண்றது.... அவருக்கு என்னாச்சோ... ஏதாச்சோன்னு மனசு தவிக்கிது... யாரும் போனெடுக்க மாட்டேங்கிறாங்க... உங்க சித்தப்பா பேசுவான்... அவனோட மொபைலும் பிஸியா இருக்கு.... எனக்குப் பயமா இருக்குடா..." கண் கலங்கினான்.

"ஐயாவுக்கு ஒண்ணும் ஆகாதுப்பா... நா வேணா சித்தப்பாவுக்கு அடிச்சிப் பாக்கிறேன்..."

"ம்..."

மணியின் போனை வாங்கி குமரேசனுக்கு அடித்தாள். ரிங்க் போக "அலோ... சொல்லுண்ணே...?" என்றது எதிர்முனை.

"சித்தப்பா நா... மகா..."

"ம்..."

"என்ன சித்தப்பா எம்மேல கோபமா...?"

"சேச்சே... ஏண்டா இப்படி பேசுறே... சித்தப்பாவுக்கு டென்சன்டா... ஆமா அப்பா, அம்மா எங்கே..?"

"இந்தாத்தான்... அப்பாக்கிட்ட பேசுங்க..." என்றபடி போனை மணியிடம் கொடுத்தாள்.

"சொல்லுப்பா..."

"ஊருக்குப் போனடிச்சியா..?"

"இல்ல... கண்ணதாசன் கூப்பிட்டதுதான்... இப்ப எந்தப் போனுக்கு அடிச்சாலும் பிஸியா இருக்கு... நீ பேசினியா..."

"ம்... இப்பத்தான் பெரியத்தானுக்கு அடிச்சேன்.... அவரும் ஆஸ்பத்திரிக்கு வந்துக்கிட்டு இருக்காராம்... அங்க பொயிட்டு போன் பண்றேன்னு சொன்னார்..."

"ம்..."

"அவருக்கு வேணா அடிச்சிப் பேசு... ஆமா இப்பவா கிளம்புறே...?"

"ஆமா... இந்த நேரத்துல ராமேஸ்வரம் வண்டி இருக்கும்... அதுல ஏறினா நேர தேவகோட்டை போயிடலாம்... நீயி..."

"அத்தான் சொல்றதை வச்சித்தான் கிளம்பணும்... அன் டயமா இருக்கு... பஸ் மாறி மாறிப் போகணும்... விடியக்காலையில எல்லாரையும் கூட்டிக்கிட்டு கிளம்பலாம்ன்னு பாத்தேன்..."

"ம்.. நா... முன்னாடி போறேன்... நீ வா..."

"சரிண்ணே... அண்ணி வர்றாங்களா?"

"மகா இருக்காளே... அவளுக்கு காலேசு... நிலமை எப்படின்னு பாத்துக்கிட்டு அவளை வரச் சொல்லலாம்..."

"சரிண்ணே... பாத்துப் போ.."

"சரிப்பா..." என்றபடி போனை வைத்தவன் "சரி... வீட்டைப் பூட்டிக்கிங்க... பத்திரமா இருங்க... நா அங்க பொயிட்டுப் போன் பண்றேன்..." என்றபடி கிளம்பினான்.

"பாத்துப் போங்க... மப்ளரைக் கட்டிக்கங்க.. உங்களுக்கு பனி ஆகாது... பஸ்ல சன்னல் பக்கமா உக்காராதீங்க..." பின்னாலே சொல்லிக் கொண்டு வந்தாள் சித்ரா.

"சரிம்மா... பாத்துக்க... நா பொயிட்டுக் கூப்பிடுறேன்..."


டாக்டர் ராஜசேகர் ஆஸ்பத்திரி வாசலில் சோகமாய் நின்றவர்களின் அருகே வண்டியை நிறுத்திய அழகேசனைப் பார்த்ததும் கண்ணதாசன் 'அத்தான்' என ஓடி வந்தான்.

"என்ன மச்சான்... என்ன சொல்றாங்க...?"

"ஐசியூல வச்சிருக்காங்கத்தான்... டாக்டர் கிரிட்டிக்கல்ன்னு சொல்றாரு... காலையில வரைக்கும் பாக்கலாம்... இல்லேன்னா மதுரைக்குத்தான் கொண்டு போகணுங்கிறாரு... பர்ஸ்ட் அட்டாக்காம்... ரொம்ப சிவியரா இருக்காம்... பக்கவாதம் வரக்கூட வாய்ப்பு இருக்குன்னு சொல்றாரு..." கண்ணன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே... "அப்போவ்..." என ஓடிய சுந்தரி, "அம்மோவ்..." என நாற்காலியில் கண்ணீரோடு அமர்ந்திருந்த காளியம்மாளைக் கட்டிக் கொள்ள அவள் தேம்பித் தேம்பி அழுதாள்.

"ம்... அப்ப காலையில வரைக்கும் எதுக்கு பாக்கணும்... இவரு பர்ஸ்ட் எய்ட் கொடுத்துட்டா நாம மதுரை கொண்டு போயிடலாமே... வண்டி வரச்சொல்லவா...?" என்றார் அழகேசன்.

"இல்லத்தான்... இவரால முடியலைன்னாத்தான் சொல்லிடுவாரே... பாத்துருவாருன்னு நம்புவோம்... அப்புறம் கடவுள் விட்ட வழி..."

"நல்லதே நடக்கும் மச்சான்... ஆமா மத்தவங்களை எல்லாம் போகச் சொல்லு... அவங்க எதுக்கு தூங்காம... இங்க நின்னு ஒரு காரியமும் இல்ல... காலையில வரட்டும்... அதான் நாம இருக்கோமுல்ல...."

"சரித்தான்... "

"அப்படியே அயித்தையையும் சுந்தரியையும் கூட அனுப்பி வச்சிரு... நானும் நீயும் போதும்..."

"வேண்டாந்தான்... அதுக இருக்கட்டும்... அங்க போயி அழுதுக்கிட்டு நிம்மதியாத் தூங்காதுக... ஆமா மணி அண்ணனும் குமரேசனும் பேசுனாங்களா...?"

"பெரியவுக நமக்கிட்ட எப்ப பேசியிருக்காக... குமரேசன் பேசினான்.... ராத்திரியில அடிச்சிப் பிடிச்சி வந்து என்ன பண்ணப் போறான்... நடக்குறது நடக்கத்தான் போகுது... காலையில வாடான்னு சொன்னேன்... ஆஸ்பத்திரி பொயிட்டு போன் பண்றேன்னு சொன்னேன்... உங்க சின்னக்கா கண்மணி கூப்பிட்டுச்சு... அவரு வெளியூரு போயிருக்காராம்... என்னாச்சுத்தான்... எப்படியிருக்காரு... பாத்துக்கங்க... காலையில வந்துடுறேன்னு ஒரே அழுகை..."

"ம்... திடீர்ன்னு இப்படி... வயக்காட்டுல இருட்டு ஏமமுன்னு பாக்காம சுத்துற மனுசன்... பேசிக்கிட்டு இருந்துட்டுத்தான் போனேன்.... சின்னவன் பிள்ளைக வர்றதைப் பத்தி சந்தோஷமாப் பேசினாரு... படுத்து கொஞ்ச நேரத்துல சின்னம்மா எழுப்பிருச்சி..."

"ம்... குமரேசனுக்கிட்ட பேசிடுறேன்... நீ மணிக்கு அடிச்சிப் பாரு...."

"சரித்தான்..."

யிருக்குப் போராடும் சூழலில் கந்தசாமி அறைக்குள் கிடக்க, காளியம்மாளோ தெய்வங்களை வேண்டியபடி நாற்காலியிலும்... சுந்தரியும் கண்ணீரோடு அவளருகேயும்... மணி மனம் முழுக்க பாரத்துடன் பஸ்ஸிலும்..., குமரேசன் வீட்டுக்கும் வாசலுக்குமாக நடந்துக்கிட்டும்... கண்மணி தலையணையை கண்ணீரால் நனைத்துக் கொண்டும்... உறக்கமின்றி விழித்திருக்க, அந்த இரவு மெல்ல நகர்ந்து கொண்டிருந்தது விடியலை நோக்கி...

(வேரும் விழுதுகளும் வளரும்)
-'பரிவை' சே.குமார்.

வெள்ளி, 26 டிசம்பர், 2014

நண்பேன்டா : தமிழ்க்காதலன்


ண்பேன்டாவில் நட்பின் சாரல் ஆரம்பகால நண்பர்கள் முதல் ஒவ்வொருவராக வரிசையாக வருகிறது. அந்த வரிசைப்படி பார்த்தால் இன்னும் சிலரின் பகிர்வுகளுக்குப் பிறகே இவன் வர வேண்டும். ஆனால் இன்றைய ஸ்பெஷலாய் இவன் மற்றவர்களை முந்திக் கொள்கிறான்.  காரணம்... படிங்க தெரியும்...

என் உயிர் நண்பன் தமிழ்க்காதலன்.

தமிழ் மேல் கொண்ட தீராக்காதலால் தனது பெயரை தமிழ்க்காதலன் ஆக்கிக் கொண்டவன். எனக்கு பள்ளிக் கால நட்போ... கல்லூரிக் கால நட்போ... பணியிட நட்போ... இல்லை இவன்.,. இணையம் மூலம் எழுத்தால் என்னுள் புகுந்தவன்... இன்று என் நட்பில் முதலிடத்தில் இருப்பவன்... இன்று மட்டுமல்ல... இருக்கும் வரை எனக்கு நண்பனாய்... நல் ஆசானாய்... சகோதரனாய் இருக்க வேண்டும் என்பதே எனது பிரார்த்தனைகளும் ஆசையும்.

பெரம்பலூர் அருகே ஒரு கிராமத்தில் பிறந்தவன் இவன், நான் மனசு வலைப்பூ ஆரம்பித்து எழுத ஆரம்பித்த உருவான நட்பு வட்டத்தில் இவனும் ஒருவன். இவனின் இதயச்சாரலுக்குள் நுழைந்த போது அங்கிருந்த கவிதைகளில்... இல்லையில்லை காவியங்களில் கரைந்து உருகி நின்றேன்... அன்று என் கரம் பிடித்த நட்பு இன்று வரை சுக துக்கம் எல்லாத்திலும் பங்கு கொள்ளும் நல்ல நட்பாக உயர்ந்து நிற்கிறது.

மிகச் சிறந்த கவிஞன். இவனது கவிதைகள் எல்லாம் ஒரு முறைக்கு இரு முறை படித்தால்தான் என்னைப் போன்ற சாதாரண மனிதர்களுக்கு அதன் அர்த்தம் புரிய வரும். அத்தனையும் மிகச் சிறப்பான கவிதைகள். எந்தத் தலைப்பைக் கொடுத்தாலும் அதன் கீழ் அருமையான கவிதையைப் படைப்பான். இருவரும் ஒரு கருவை எடுத்து எழுதுவது எனத் தீர்மானித்து அதன்படி அவன் கவிதையாகவும் நான் கதையாகவும் எழுதினோம். என் கதையை விட இவனது கவிதையே மிகச் சிறப்பானதாக இருந்தது. அப்படிப்பட்ட திறமையான கவிஞன்.

எனது கதைகளை அக்குவேர் ஆணி வேராக விமர்சிப்பவன். நல்லாயில்லை என்றால் ஏண்டா இப்படி எழுதுறேன்னு திட்டுவான்.... முகநூல் அரட்டையில் வந்து கண்டபடி திட்டுவான். மனசில் சினிமா பற்றி எழுதியதைப் படித்ததும் என்னாடா குப்பையாக வைத்திருக்கிறாய் என கத்துக் கத்து என்று கத்தினான். உனது எழுத்து எப்படி இருக்கணுமின்னு முதல்ல முடிவு பண்ணு... சும்மா எல்லாவற்றையும் கிறுக்காதே எனச் சொல்லி கதைகள் இப்படி எழுத ஆரம்பி எனச் சொல்லி எனக்கான ஒரு வாசலைக் காண்பித்தான். 

அவன் சொல்லியபடி எழுத இன்னும் நிறைய வாசிக்க வேண்டும் அத்தோடு யோசிக்கவும் வேண்டும்... நாமெல்லாம் என்ன தமிழ்க்காதலனா ஓரளவுக்காகவாவது தமிழையும் அதன் வரலாறுகளையும் கரைத்துக் குடிப்பதற்கு... அதனால் அதற்கான காலம் என்னுள் கனிய இன்னும் பல நாட்களாகும்... அதுவரை என் பாணியில் ஓரளவுக்கு அவன் நினைத்தது போல எழுதவே எண்ணம். 

எந்த ஒரு பிரச்சினை என்றாலும் அதற்கு நல்ல தீர்வு சொல்லுபவன்... இணையப் பழக்கத்தில் என்னைக் காண ஊருக்கே தேடி வந்தவன். இவன் வந்தபோது சரிவரக் கூட கவனிக்க முடியாத சூழல்... அப்படியிருந்தும் எதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் எப்போது என்னோடு ஒரு சகோதரன் போல் இதைச் செய்... அதைச் செய்யாதே என உரிமையோடு சொல்லுபவன். 

(நண்பனின் பிறந்தநாளுக்காக காயத்ரி அக்கா தயாரித்த வீடியோ வாழ்த்து... 
கவிதை : தமிழ்க்காதலன், பாடியவர் : டாக்டர் அருணாஸ்ரீ)

தமிழ்... தமிழ்... என தமிழின் தொன்மைக் காலத்து வரலாறுகளைப் படித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறான். நண்பர்களுடன் இணைந்து தமிழ்க்குடில் என்ற அறக்கட்டளை ஆரம்பித்து நிறைய உதவிகளைச் செய்து வருகிறான். நிறைய நல்ல காரியங்கள் செய்யும் இவன், தனது கவிதைப் பணியை இதயச்சாரலில் குறைத்தாலும் முகநூலில் அதிகம் பகிர்கிறான். நிறையக் கவிதைகளை பிரதி எடுக்காமலே பதிந்து தொலைத்திருக்கிறான். ஒழுங்கா பதிவை தனியாக பதிந்து வை என்று சொன்னாலும் அப்படி எடுத்து வைக்காமலே நிறைய இழந்திருக்கிறான்.

நண்பா, நீ இன்னும் உயரத்திற்குச் செல்ல வேண்டும். உனது கவிதைகள் எல்லாம் எல்லாத் திசைகளிலும் ஒளிக்க வேண்டும். தமிழ்க்காதலன் இந்த தரணியெல்லாம் தெரிய வேண்டும். உனது எண்ணங்களும் எழுத்துக்களும் பறந்து விரிய வேண்டும்.

நண்பா, எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்டா. டிசம்பர் -26ல் பிறந்தவனுக்கு காலையில் இந்தப் பகிர்வைப் பகிராமல் இரவு பதினோரு மணிக்கு மேல் பகிர்கிறேனே என்று நினைக்கலாம். என்னமோ பெரும்பாலான பகிர்வுகள் இரவில்தான் பகிர முடிகிறது என்றாலும் இந்தப் பகிர்வு காலையில் எழுத நினைத்தது உடல் நலமின்மையால் எழுதவில்லை. காய்ச்சலும் ஜலதோஷமும் இருமலுமாய் இரண்டு நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கிறது. அதனால் எழுத நினைத்த எல்லாமும் அப்படியே இருக்கிறது. உடல் சோர்வும்தான்... 

நண்பனை முகநூலிலும் போனிலும் வாழ்த்தியாச்சு. இருந்தும் மனசில் வாழ்த்தலைன்னா நல்லாயிருக்காதுல்ல... அதான் இரவு அறையில் 'ர' படம் ஓடிக்கொண்டிருக்கும் வேலையில் எழுதிக் கொண்டிருக்கிறேன் என் நண்பனுக்கான பிறந்தநாள் பகிர்வை...

(இன்றைய தினச்செய்தியில் வெளியான நண்பனின் கவிதை)
நண்பா... எல்லா வளமும் நலமும் பெற்று நாடு போற்றும் சிறந்த கவிஞனாக வாழ வாழ்த்துக்கள்.

தமிழ்க்காதலனின் கவிதைச் சாரலில் நனைய இதயச்சாரலுக்குள் சென்று வாருங்கள்.

முகநூலில் நண்பனை வாழ்த்திப் பகிர்ந்த நாலு வரி கீழே...

சாரல் என மனசுக்குள் வந்தாய்...
தூறலாக சுக ராகம் இசைத்தாய்...
பெரும் மழையாய் பெய்யெனப் பெய்து...
என்றும் என்னுள் நீடித்திருக்கும் நண்பா...
என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்டா...
 -'பரிவை' சே.குமார்.

செவ்வாய், 23 டிசம்பர், 2014

வாசமில்லா மலரிது

"சார் வேற யாரையாச்சும்...?" மெதுவாக இழுத்தான் பரத்.

"இங்க பாருங்க பரத், இது உங்களுக்கு கிடைக்கிற முக்கியமான அசைன்மெண்ட்... நீங்க இங்க வந்துட்டு சொல்லிக்கிற மாதிரி எந்த ஒரு அசைன்மெண்டும் பண்ணலை... இது உங்களுக்கு நல்ல சான்ஸ்... சொல்றதைச் செய்யுங்க..." குழல் பத்திரிக்கையின் ஆசிரியர் சந்தானம் ஆர்டர் போடுவது போலச் சொன்னார்.

"இல்ல சார்.... வேற அசைன்மெண்டுன்னா பரவாயில்லை... இது..."

"வேறயின்னா... நடிகையோட பேட்டியா... அதுனாத்தான் அம்புட்டுப் பயலும் நாக்கைத் தொங்கப் போட்டுக்கிட்டு நான் போறேன்னு நிப்பீங்களே...."

"சார் நான் நடிகையோட பேட்டி எடுக்கப் போறேன்னு சொல்லலையே... ஒரு அரசியல்வாதியோ... இல்லை ஒரு ரவுடியோன்னாக் கூட பரவாயில்லை.. இது..."

"என்னய்யா... இது.... இதுன்னு சும்மா புலம்பிக்கிட்டு.. உனக்கு ஒரு வாரம் டைம் தர்றேன்... அதுக்குள்ள கவர் ஸ்டோரி ரெடி பண்ணிக்கிட்டு வா..."

"சார்... கண்டிப்பா இந்த கவர் ஸ்டோரி வேணுமா?"

"சொல்லச் சொல்ல இன்னும் சொறிஞ்சிக்கிட்டு நிக்கிறே.... எனக்கு அடுத்த இதழுக்கு உன்னோட கவர் ஸ்டோரி வந்தாகணும்... இந்த அசைன்மெண்ட் முடியிற வரைக்கும் உனக்கு வேற எந்த அசைன்மெண்டும் இல்லை... புரிஞ்சிதா... இங்க நின்னா எதையும் புடுங்க முடியாது... போயி ஆக வேண்டியதைப் பாரு... சரியா?" கடுப்பாக சொன்ன எடிட்டருக்கு கோபம் வந்தால் வார்த்தைகள் எது வேணுமானாலும் வந்து விழுகும்.

இனி இங்கு நின்னால் இன்னும் மோசமான வார்த்தைகளைக் கேட்க நேரிடும் என்பதால் "ஓகே... ஓகே சார்.... எப்படியும் கவர் ஸ்டோரியோட வாறேன்..." என்றபடி ஆசிரியரின் அறையில் இருந்து வெளியேறினான் பரத்.

"என்ன மாப்ளே சொல்றே... ?" சிக்கனை வாயில் வைத்தபடிக் கேட்டான் தாமு.

"ஆமாடா அந்த ஆளு இந்தக் கவர் ஸ்டோரிதான் வேணுமாம்..."

"இதுல என்ன இருக்கு... நீ ரெடி பண்ணுடா..."

"என்னடா நீயி... உங்கிட்ட சொன்னா நீ இப்படிச் சொல்றே... எப்படிடா,,,"

"என்னடா... பத்திரிக்கை துறைக்கு வந்துட்டு இது பண்ண மாட்டேன் அது பண்ண மாட்டேன்னா எப்படி... பேட்டி எடுக்கத்தானே போகப்போறே...என்னமோ அங்க..."

"நிறுத்துடா... "

"என்ன புலம்பல் வேண்டிக் கிடக்கு... அன்னைக்கு நாம அரவாணிகளை மதிச்சோமா இல்லையில்ல... அலி, ஒம்போதுன்னு எவ்வளவு கேவலமாப் பேசினோம்... ஆனா இன்னைக்கு அவங்க திருநங்கைகளா எல்லா இடத்துலயும் வேலைக்கு வந்துட்டாங்க... சில நாளைக்கு முன்னால ரெயில்ல ஒரு பொண்ணுக்கு பிரசவ வலி வந்தப்போ எல்லாரும் வேடிக்கை பார்க்க ரெண்டு திருநங்கைகள்தான் பிரசவம் பார்த்து அடுத்த ஸ்டாப்பிங்க்ல ஆஸ்பிடல்ல சேர்த்து பிச்சை எடுத்து கையில் வச்சிருந்த காசையும் கொடுத்துட்டுப் போயிருக்காங்க... இன்னைக்கு திருநங்கைகள் எல்லாத் துறையிலும் சாதிக்கவும் நாம இப்ப அவங்களோட சாதனைக்காக தேடிப் போயி பேட்டி எடுக்கப் போகலையா..."

"அதுக்காக..."

"சும்மா நொதுக்காக... நொதுக்காகன்னு பொலம்பாதே மச்சி.... சில பேரைப் பிடிச்சி அவங்ககிட்ட பேசி விவரம் வாங்கி ஒரு கவர் ஸ்டோரி எழுதுறதுக்கு என்ன உனக்கு..."

"அதுக்கில்லைடா... எந்த ஒரு அனுபவமும் இல்லாம எப்படிடா..."

"இதுவரைக்கும் கவர் ஸ்டோரி பண்ணுன அனுபவம் உனக்கு இல்லையா...?"

"அது இருக்கு... ஆனா இப்படி ஒரு கவர் ஸ்டோரி... எப்படிடா... இது என்ன சினிமாவா... அவங்க கூட இருந்துக்கிட்டு அவங்களை பேட்டி எடுக்க... வாழ்க்கைடா... நடைமுறையில இது சாத்தியமாகுமா...?"

"நான் கேக்குறேன்னு தப்பா நினைக்காதே... நாம அனுபவம் வந்த பிறகுதான் எல்லாமே செய்யுறோமா... இல்லையே அந்தந்த வயசுல செய்யிறதை செஞ்சிக்கிட்டுத்தானே இருக்கோம்... படிக்கும் போது பாலத்து மறைவுல இருந்து சிகரெட் குடிச்சோமே... முன் அனுபவமா இருந்துச்சா... காலேஸ் படிக்கும் போது ஆஸ்டல்ல வார்டனுக்கு தெரியாம பீர் வாங்கியாந்து முதன் முதல்ல குடிச்சோமே... முன் அனுபவமா இருந்துச்சா... இல்ல உமாவை உயிருக்குயிரா காதலிச்சியே... அதுக்கு முன் அனுபவம் இருந்துச்சா..... இன்னொன்னு நல்லாச் சொல்லுவேன் ஆனா... வேணாம்.... எதையுமே அனுபவமில்லாமச் செஞ்சாத்தான் அதுல அனுபவம் கிடைக்கும்... "

"ம்... நீ சொல்றது சரிதான்டா... ஆனா அவங்ககிட்ட போயி எப்படி..."

"உன்னைய கவர் ஸ்டோரிதானே எழுதச் சொல்லியிருக்கார்... அனுபவ ஸ்டோரி இல்லையே... இந்த ஒரு கவர் ஸ்டோரி நீ எப்படிப் பண்ணிக் கொடுக்குறியோ அதைப் பொறுத்து நீ அவர்கிட்ட நல்ல பேர் வாங்கலாம்... அப்புறம் நல்ல நல்ல அசைன்மெண்ட் எல்லாம் உனக்குக் கொடுப்பார்.... பாத்துக்க..."

"நா... எங்க போயி... யாரைப் பார்த்து... முடியாதுன்னு சொல்ல வேண்டியதுதான்..."

"உனக்கு என்ன இப்போ... எல்லாமே முடியும்ன்னு நெனச்சா முடியும்... எனக்குத் தெரிஞ்ச நாலஞ்சு பேரோட நம்பர் தாறேன்... என்ன ஒரு மாதிரி பாக்குறே.... நானும் ஒரு கட்டுரைக்காக பாத்தவங்கதான் இவங்க... அவங்கிட்ட பேசு... அப்ப அவங்களோட வாழ்க்கையும் வலியும் உனக்குப் புரிய வரும்... அப்புறம் கவர் ஸ்டோரி கலக்கலா தயாராயிடும்..." என்றவன் அவனிடம் சில நம்பர்களைக் கொடுத்தான்.

பாரதி பூங்கா வாசலில் காத்திருந்தான். சிறிது நேரத்தில் அவள் வந்தாள். காதோரத்தில் ஒற்றை ரோஜா அழகாக வைத்திருந்தாள். 

அவளைப் பார்த்ததும் "நீங்க சாவித்திரி...." மெதுவாக இழுத்தான்.

"ஆமா..." என்றவள் "தாமுவோட பிரண்ட் பரத்தானே நீங்க..? என்று சிநேகமாய்க் கேட்டுச் சிரித்தாள்.

"வாங்க... பூங்காவுல போயி உக்காந்து பேசலாம்... இங்க வேண்டாம்..." அவசரமாகச் சொன்னான்.

"ஏன் யாராவது பார்த்தா தப்பா நினைப்பாங்களா? ஏன் சார் எங்களைப் பற்றி கவர் ஸ்டோரி பண்ணனும்... எங்க கதையைக் கேட்டு அதை உங்க பத்திரிக்கையில பக்கம் பக்கமாய் எழுதி பேர் வாங்கனும்... ஆனா எங்க கூட நின்னு பேசவோ... எங்க வீட்டுக்கு வரவோ உங்களுக்குப் பயம்... இந்தச் சமூகத்துல நாங்க இன்னைக்கு இப்படி ஒரு வாழ்க்கை வாழ்றோம்ன்னா அதுக்கு யார் சார் காரணம்... உங்கள மாதிரி ஆம்பளைங்கதானே..." சொல்லியபடி அவன் முகம் பார்த்தாள்.

அவள் இவ்வளவு வேகமாய் பேசுவதைப் பார்த்து சுற்றியிருப்பவர்கள் தவறாக நினைப்பார்களோ என்ற பயத்துடன் எதுவும் பேசாமல் நின்றான். அவளே தொடர்ந்தாள். 

"எத்தனை இரவுகள் மரக்கட்டை மாதிரி அழுதுக்கிட்டே கிடந்திருப்போம் தெரியுமா... ஒரே இரவுல எத்தனை பேர் எங்களோட வேதனை தெரியாம மாறி மாறி சுவைத்திருப்பாங்க தெரியுமா... எதுத்துக் கேட்டா காசு கொடுக்கிறோமுல்ல அப்புறம் என்னடி பத்தினி மாதிரி பேசுறேன்னு கேட்டு அடிப்பாங்க... எல்லாம் எதுக்காக வழி மாறிப்போன வாழ்க்கைக்காகத்தானே சார்... இதை விரும்பியா ஏத்துக்கிட்டோம்.... இவன் நல்லவன்னு நம்பி குடும்பத்தை விட்டு ஓடியாந்து... அவனால ஏமாத்தப்பட்டு... இன்னைக்கு இந்த நெலமையில இருக்கிறது... நான் மட்டும் இல்ல என்னைய மாதிரி நிறையப் பேர்... " பேச்சை நிறுத்தி அவனைப் பார்த்தாள்.

அவனுக்கு தேவையில்லாம வந்துட்டோமோ என்ற எண்ணம் ஓட முகமெல்லாம் வேர்த்தது. அவனைப் பார்த்து மெலிதாக சிரித்தவள் "எங்ககிட்ட பேசப் பயம்... எங்க கூட ரோட்டுல நிக்கப் பயம்... எங்க வீட்டுப் பக்கம் வரப் பயம்... ஆனா மீசை முளைக்க ஆரம்பிச்சவன் கூட எங்ககிட்ட படுக்கப் பயப்படலையே சார்... ரெண்டு நாளைக்கு முன்னால ஒரு இடத்துக்குப் போகச் சொன்னாங்க... போனா... அங்க மீசை கூட முளைக்காத நாலு பசங்க... இவனுகளுக்காக இங்க வந்தேன்னு போன்ல கூப்பிட்டா... கேட்டதைவிட அதிகமா காசு கொடுத்திருக்கானுங்க பேசாம இருந்துட்டு வான்னு சொன்னாங்க... என்னோட தொழில்... தலைவிதையை நினைச்சிக்கிட்டு மனச கல்லாக்கிக்கிட்டு....." அதற்கு மேல் பேச முடியாமல் கண் கலங்கினாள்.

பரத் பேசாமல் நிற்க, கண்ணீரைத் துடைத்தபடி "நாங்க மெஷின் இல்லையே சார்... எங்களுக்கும் மனசு இருக்கு சார்... அதை ஏன் சார் யாருமே புரிஞ்சிக்கலை... நீங்க பத்திரிக்கைக்காரர் முற்போக்கா சிந்திப்பீங்கன்னு பார்த்தேன்... ஆனா நானும் சாதாரண ஆம்பளைன்னு நிரூபிச்சிட்டீங்க... உடம்பை விக்கிறதால சமூகத்துல எங்களுக்கு கிடைக்கிற மரியாதை சார் இது... சாரி சார்... இது வலி... எங்கயாவது இறக்கி வைக்கணும்ன்னு நினைச்சேன்... நீங்க எங்க வீட்டுக்கு வரமாட்டேன் வீதியிலயும் நின்னு பேசமாட்டேன்னு சொன்னதும் கொட்டிட்டேன்... சரி விடுங்க... நீங்க என்ன பண்ணுவீங்க... சமூகத்தின் பார்வைக்கு பயப்படுறீங்க... தப்பா நினைச்சிக்காதீங்க... என்ன எதுன்னு சொல்லுங்க... என்னால என்ன முடியுமோ அதைச் சொல்றேன்... ஆறு மணிக்கு கிளம்பிடுவேன்... ஹோட்டல்ல பார்ட்டி காத்திருப்பார். சரி வாங்க பூங்காவுக்குள்ள போகலாம்..." மெலிதாக புன்னகைத்தாள்

"வேண்டாங்க... உங்க வார்த்தை ஒவ்வொன்னும் சாட்டையடிங்க... உங்ககிட்ட நிறையப் பேசணும்... இதுதான்னு இல்லாம இது தவிர்த்து நிறைய பேசணும்... அவசரமான பேச்சு சரியா இருக்காது... நீங்க இன்னைக்கு கிளம்புங்க... நாளைக்குப் பேசுவோம்... ஆனா இங்க இல்லை... டீ ஷாப்ல டீ சாப்பிட்டுக்கிட்டே பேசுவோம்..." என்று அவளை அனுப்பிவிட்டு வண்டி நோக்கி நடந்தவன் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வாழ்க்கை கொடுப்பதைப் பற்றி பக்கம் பக்கமாய் கதை எழுதி பரிசு பெற்றதும் எல்லாரிடமும் பாராட்டுப் பெற்றதும் நினைவில் வந்து மறைய வெட்கத்தோடும் வேதனையோடும் வீதியை வெறித்துப் பார்த்தான். பக்கத்து டீக்கடையில் இருந்து 'வாசமில்லா மலர் இது... வசந்தத்தை தேடுது..' என்ற பாடல் காற்றில் கரைந்து அவன் காதுகளில் தஞ்சம் புகுந்தது. 
-'பரிவை' சே.குமார்.

ஞாயிறு, 21 டிசம்பர், 2014

மனசின் பக்கம் : இதிகாச லிங்கா



லிங்கா பார்த்தாச்சு... ரஜினி ரசிகர்களுக்கு பிடிக்காத படம்தான் என்பது உண்மை. எங்கயோ கேட்ட குரல், புவனா ஒரு கேள்விக்குறி, முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபது வரை என அவர் நடிப்பாற்றலை கொண்டு வந்த படங்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளி ரஜினி என்றால் பஞ்ச் டயலாக்கும், பவர்புல்லான நடையும் என்ற நிலைக்கு அவரை சினிமா மாற்றி ரொம்ப நாளாச்சு. இந்நிலையில் அப்படி ஒரு படம்... இது பேசப்படும் படமாக அமைய வேண்டியது... ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியாததால் மிகவும் மோசமாக பேசப்படும் படமாக அமைந்து விட்டது. 

படத்தின் கிளைமேக்ஸை சின்னப்புள்ளத்தனமாக இயக்கியிருப்பது ரவிக்குமார்தானா என யோசிக்க வைத்தது. குருவியில டாக்டர்... இன்றைய சூப்பர்ஸ்டார் விஜய் பறந்ததை மறக்காத நம்மால் 64 வயதில் ரஜினி பறப்பதைப் பார்க்கும் போது அவர் மீது பரிதாபப்பட வைத்தது. ரஜினி சார்... டூயெட்டெல்லாம் வேண்டாம்... வயசுக்கு தகுந்த கதாபாத்திரமா தேர்ந்தெடுத்து நடிங்கன்னு சொல்லணும் போல இருந்தது... நாயகிகளை மையப்படுத்தும் கேமரா முன்னால் ரஜினி கையைக் காலை ஆட்டி (வேகம் இல்லை) நடனமாடியபோது. இருப்பினும் ஒரு வித்தியாசமான நாம் அறிந்த கதைக்களம்.  


ரஜினியின் நடிப்பில் பந்தாக்கள் இல்லாத ஒரு நல்ல படம்... அவசர கிளைமேக்ஸ்... இழுவையான காட்சி நகர்த்துதலால் மோசமான விமர்சனத்தைப் பெற்றுள்ளது. ரஜினி தன் ரசிகர்களுக்காக பண்ணிய படம் என்றார்கள் ஆனால் ரசிகர்களே வெறுத்துப் போய் இருக்கிறார்கள்... என்ன உலகமடா இது...  லிங்கா... மலிங்கா வேகத்தில் வந்திருந்தால் கங்குலி சிக்ஸர்தான்... இப்ப... ஹர்பஜன் சிக்ஸர் அடிச்சாலும் பலூனாய் பறக்கும் கடைசிக் காட்சியில் இந்திய அணி போல் ஆரம்பத்திலிருந்து கொண்டு வந்த கதை பொலபொலவென்று சரிகிறது. மேலும்... அட அப்பா... இதுக்கு மேல ஏதாவது பேசினா அக்கவுண்டை முடக்கிருவாங்களாமே... ஸோ லிங்காவை விமர்சிக்கவில்லை என்பதை லிங்கா மீது ஆணையாக தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.
-----------------------------------
திகாசா... என்னைக் கவர்ந்த மலையாளப் படம். ஹாலிவுட் படமான 'The Hot Chick' என்ற படத்தின் தழுவல்தான் கதை. ஆண் பெண்ணாகவும் பெண் ஆணாகவும் மாறுவதை வைத்து ஒரு நகைச்சுவைப் படத்தைக் கொடுத்திருக்கிறார்கள். படத்தின் ஆரம்பத்திலேயே இரண்டு மோதிரங்கள் பற்றி சின்ன வரலாற்றுக் கதையைச் சொல்லியிருக்கிறார்கள். அந்த மோதிரங்களை அருங்காட்சியகத்தில் இருந்து திருடி விற்க சிலர் முயலும் போது அது நாயகன் மற்றும் அவனது நண்பன் கையில் கிடைக்க, அவர்கள் அதை விற்க நினைக்கிறார்கள். அது எதிர்பார்த்த விலைபோகாததால் எதற்கு என நாயகனின் நண்பன் தன்னிடம் இருந்த ஒரு மோதிரத்தை கடற்கரையில் வீச,. மற்றொன்று நாயகன் வசம் இருக்கிறது. ஒரு தருணத்தில் கடலில் வீசிய மோதிரம் கிடைக்கப் பெற்ற சாப்ட்வேர் துறையில் பணிபுரியும் நாயகியும் திருடனான நாயகனும் மோதிரத்தை விரலில் மாட்டுகிறார்கள். அதன் பின் இவர் அவராகவும் அவர் இவராகவும் மாற விபரீதம் ஆரம்பிக்கிறது. அப்புறம் என்ன பெண் உருவில் ஆணும் ஆண் உருவில் பெண்ணுமாக ஒரே கலக்கல்தான் போங்க. 


இருவரும் போட்டி போட்டுச் செய்திருந்தாலும் பெண் உருவில் திருடனின் நடை உடை பேச்சு என கலந்து கட்டி ஆட்டம் போட்டிருக்கும் அனுஸ்ரீ பெண்ணாக நளினம் காட்டும் ஷைன் டாம் ஷாக்கோவை (சரியான தமிழ்தானா தெரியலை) பின்னுக்கு தள்ளி விடுகிறார். பெரும்பாலும் இவருக்கான காட்சிகள்தான் அதிகம்... அடாவடி, சண்டை, நண்பனை மிரட்டுதல், ஷாக்கோவை அரட்டுதல் என பின்னிப் பெடலெடுக்கிறார். இருவரும் சந்திக்கும் போது இடைவேளை... பின்னரும் படம் சுவராஸ்யமாய் போகிறது. 


-----------------------------------

ஞானக்கிறுக்கன்னு ஒரு படம் பார்த்தோம்... ஆரம்பத்தில் டேனியல் பாலாஜி பயங்காட்ட படமும் கிராமத்து வாசனையோடு அழகாய் நகர்வது போல் இருந்தது. நாயகன் வீட்டில் பிரச்சினையுடன் திருச்சி போய் வந்து... மீண்டும் திருச்சி போக... டேனியல் பாலாஜி, கிராமம், நாயகனின் அம்மா, சகோதரிகள், காதலித்த பெண் என எல்லாரையும் தஞ்சாவூர்ல இறக்கிவிட்டுட்டு... திருச்சியிலயும் பிரச்சினைன்னு சொல்லி நம்ம ஹீரோவை சென்னைக்கு அனுப்புனானுங்க... அப்பத்தான் இடைவேளை வந்துச்சு... திருச்சியில இருந்து சென்னைக்கு 320 கிமி அப்படின்னு போட்டானுங்க... 

சரி படம் தஞ்சாவூர்ல ஆரம்பிச்சி... திருச்சி வந்து... இப்ப சென்னை போகுதுன்னு பார்த்தா திருச்சியில இருந்து அரசுப் பேருந்தை சென்னைக்கு 35 கிமி வேகத்தில் ஓட்டும்... மன்னிக்கவும் உருட்டும் டிரைவரைப் போல உருட்ட ஆரம்பிச்சிட்டானுங்க... என்ன கதை... எங்கே பயணிக்குதுன்னு இல்லாம... எப்படியெப்படி எல்லாமோ சொல்லி அங்க ஒரு பாதிக்கப்பட்ட பொண்ணைக் காப்பாத்தி... அவளை ஊருக்கு அனுப்பச் சொன்னானுங்க... எங்கடான்னு கேட்டா.. காரைக்குடியின்னு சொல்லி அங்கயும் பஸ்ஸ விட்டானுங்க... சிராவயல் பொட்டல்ல புள்ளய தனியா விட்டுட்டு மீண்டும் பய சென்னைக்கு வந்துடுறான். 

ஒரு நாள் பாத்தா அந்தப் புள்ள பைத்தியமாட்டம் சென்னை மெயின் ரோட்டுல போக அப்புறம் என்ன பய நாந்தேன் உனக்குப் புருஷன்னு ரோட்டுல நின்னு கத்தி அவளை கூட்டிக்கிட்டுப் போறான்... இப்ப நாஞ்சொன்னது எதாவது புரிஞ்சிச்சா... இப்படித்தான் ஞானக் கிறுக்கன்னு சொல்லி பாத்த நம்மளை... இல்லை இல்லை... எங்களை கேனக் கிறுக்கனாக்கிட்டானுங்க... அப்பா சாமிகளா படத்தை எடுத்து ஒரு தடவை போட்டுப் பாப்பீங்களா இல்லையா...? மிடியலை சாமி.
--------------------------------

ஹத் பாசிலின் நடிப்பில் வெளியான மணி ரத்னம் நல்லா இருந்துச்சு. பஹத்தின் நடிப்பு எப்பவுமே நல்லா இருக்கும். மற்ற படங்களுடன் ஒப்பிடும் போது கொஞ்சம் சுமார்தான். 

----------------------------------


விதார்த் நடித்த காடு, பார்க்க வேண்டிய படம். நல்லா பண்ணியிருக்காங்க... சமுத்திரக்கனி போராளியாக நடித்திருக்கிறார். அவர் பேசும் வசனங்கள் எல்லாம் நறுக் வசனங்கள். படமும் நல்லாயிருக்கு... காட்டை அழிக்காதீங்கன்னு சொல்றாங்க... ஒரு முறை பார்க்கலாமே...

சினிமா சம்பந்தமான பதிவுகளைத் தவிர் என்று நண்பன் திட்டினாலும் கொஞ்சம் ரிலாக்ஸாக ஒரு பதிவு.. நண்பா மன்னிச்சு....
-'பரிவை' சே.குமார்.

சனி, 20 டிசம்பர், 2014

தொடர்கதை : வேரும் விழுதுகளும் (பகுதி - 13)

முந்தைய பகுதிகள் : 

பனிரெண்டாவது பகுதியின் இறுதியில்...

"சரி தூங்குங்க... நானும் போறேன் படுக்க..." என துண்டை உதறி தோளில் போட்டபடி கிளம்பினான்.

வெகுநேரம் பேரன் பேத்திகள் வர இருக்கும் விடியலை நினைத்து சந்தோஷத்தில் புரண்டு புரண்டு 

படுத்தவரின் நெஞ்சுக்குள் தோன்றிய வலி கொஞ்சம் கொஞ்சமாக கூட ஆரம்பித்தது.

இனி...

ந்தசாமியின் நெஞ்சுக்குள் தோன்றிய வலி பெரும் வேதனையாக மாற தாங்க முடியாமல் "காளியம்ம்ம்ம்மா" என்று தன் பலத்தைக் கூட்டி சத்தமாக அழைத்தார்.

தூக்கக் கலக்கத்தில் இருந்த காளியம்மாளோ இரண்டு மூன்று அழைப்புக்குப் பிறகு கண்ணை முழிக்காமலே "என்னங்க தூக்கத்துல கெளப்புறீங்க... என்ன வேணும்..?" என்று முணங்கியபடி எழுத்து தலையைச் சொறிந்தாள்.

"ம்.. எ...என்னமோ... தெரியலை...லா... நெ....ஞ்ச்சு வலிக்கிறா...ப்ல இருக்கு... பொ...பொரண்டு... பொ...ர,,,ண்டு படுக்குறேன்... வலி... விடலை... ரொம்ம்ம்ம்ம்ப வலிக்குது..." மெதுவாக நிறுத்தி நிறுத்திப் பேசினார்.

"ஆத்தி... என்னங்க... என்ன பண்ணுது..?" வாரிச்சுருட்டி எழுந்து லைட்டைப் போட்டாள்.

வலியின் வேதனை முகத்தில் தெரிய, முகமெல்லாம் வேர்த்திருக்க, நெஞ்சைப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தார்.

"என்னங்க... என்னாச்சி... ஆத்தி... மாரி... இது என்ன சோதனை... நா என்ன பண்ணுவேன்..." அழுது கொண்டே பிதற்ற ஆரம்பித்தாள்.

"ஏ...ஏலா... எதுக்கு அழுவுறே... கண்ணனை கூப்பிடு..." என்றார் வலியோடு.

வேகவேகமாக ஓடி கண்ணதாசன் வீட்டு வேலிக்கு முன்னே நின்று 'கண்ணா... கண்ணா...' என்று கூப்பிட்டாள். அவளின் குரல் கேட்டு வீட்டின் முன் நின்ற வேப்ப மரத்தடியில் படுத்திருந்தவன் வாரிச் சுருட்டி எழுந்தான். கைலியை இடுப்பில் நல்லாக் கட்டியபடி வந்தவன் பனைமட்டைக் கதவின் கயிரை அவிழ்த்தபடி " என்ன சின்னம்மா... என்னாச்சு..?" என்றான்.

"அப்பாவுக்கு நெஞ்சு வலிக்கிதாம்... வலியால துடிக்கிறாருடா... பயமா இருக்குடா...?"

"என்னது சித்தப்பாவுக்கு நெஞ்சுவலியா...? அவருக்கிட்ட பேசிக்கிட்டு இருந்துட்டுதானே வந்து படுத்தேன்..." என்றபடி அவசரமாக ஓடினான்.

அங்கே முகமெல்லாம் வேர்த்து வெளிறிப் போய் நெஞ்சை பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தார்.

"சித்தப்பா... என்னாச்சு... என்ன பண்ணுது...?" பதட்டமாய்க் கேட்டான்.

"ரொம்ம்ம்ம்ப வலிக்...குதுப்பா.... முடியல..." மெதுவாக மூச்சு வாங்கப் பேசினார்.

அவர் அருகே கண்ணீரோடு அமர்ந்த காளியம்மாள் ஆர்.எஸ்.பதி மருந்தை எடுத்து நெஞ்சில் சூடு பறக்கத் தடவினாள்.

"கண்ணா... ஆசுபத்ரிக்கி வேகமா கூட்டிப் போகணுப்பா..." என்றபடி விறகடுப்பில் சுடு தண்ணி வைத்தாள்.

"சித்தப்பா... வண்டியில பின்னாடி உக்காந்துப்பியலா?"

முடியுமான்னு தெரியலையே என்பது போல தலையசைக்க, இரண்டு வீட்டிலும் விளக்கெரியவும், பதட்டமான பேச்சுக்கள் வேறு கேட்கவும் பக்கத்து வீடுகளில் இருந்து ஆட்கள் எல்லாம் தூக்கக் கலக்கத்தோடு வர ஆரம்பித்தார்கள்.

"என்னாச்சு... என்னாச்சு..?" என ஆளாளுக்கு கேள்வியை அடுக்கி பதிலைப் பெற்றார்கள்.

"காளியம்மா சுடு தண்ணி வச்சிக் கொடுத்தியா...?" என்றார் ஒருவர்.

"இந்தா வக்கிறேன்.,.." என்றாள்.

"வலி வந்ததும் கொடுத்திருக்கணுமாத்தா... என்ன போ... இந்தப் பொம்பளைங்களே அழுகத்தான் செய்வீங்க ஆகுற காரியத்தை பாக்க மாட்டீங்க..." என்று சலித்துக் கொண்டார்.

"ஆசுபத்ரிக்கு கூட்டிக்கிட்டு போறதுதான் நல்லது..."

"கண்ணா... உடனே கிளம்புறதுதான் நல்லது... வலியால துடிக்கிறாரு பாரு..."

"ராத்திரி வாயு சம்பந்தமான எதாவது சாப்பிட்டிருப்பாரு... அதன் வாயு பிடிச்சிக்கிருச்சி போல..."

"ஏய் இது வாயு மாதிரி தெரியலப்பா... இது நெஞ்சு வலிதான்... என்னமா வேர்த்திருக்கு..."

"ஆமா முகமெல்லாம் வெளிறிக் கெடக்கு பாரு.." என ஆளாளுக்கும் பேச, காளியம்மாள் கொடுத்த சுடு தண்ணீரைக் கொஞ்சம் குடித்தார்.

"வண்டியில இவ்வளவு தூரம் கூட்டிப் போக முடியுமா தெரியலை... பக்கத்தூரு சாமிநாதன் ராத்திரி வீட்டுக்குத்தான் போயிருப்பான்... கூப்பிட்டா  பத்து நிமிசத்துல வந்துருவான்..."

"ஆனா... இன்னைக்கி அவனோட வண்டி போன மாதிரி தெரியலையப்பா..."

"போகலை மாமா... அவன் சவரிமலைக்கு சவாரி ஏத்திக்கிட்டு போயிருக்கான்... வர ரெண்டு மூணு நாளாகுமுன்னாங்க..."

"அப்ப வேற ஏற்பாட்டை பண்ணுங்கப்பா... மசமசன்னு நிக்காம... அவரு வலியால துடிக்கிறாரு... பேசிக்கிட்டு இருக்க நேரமா இது?"

"வயசுப்புள்ளைக ஒருத்தன் வண்டி ஓட்ட நடுவுல உக்கார வச்சி... பின்னால ஒருத்தர் உக்காந்து பிடிச்சிக்கிட்ட போதும்.. இந்தா இருக்க தேவகோட்டைக்குப் போக எம்புட்டு நேரமாகப் போகுது..." கூட்டத்தில் ஒரு கிழவி சொல்லியது.

"ஆமா பெரியத்தா சொல்றதுதான் கரெக்ட்டு... அப்படியே செய்யலாம்..." 

"கண்ணா... பயலுகளுக்கு போன் பண்ணுனியா...?"

"இல்ல... இனிமேதான் சொல்லணும்..."

"சொல்லு...  இதெல்லாம் உடனே சொல்லணும்.... நாளப்பின்ன ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆயிட்டா... அப்பவே சொல்லாம விட்டுட்டீங்கன்னு நம்மள குத்தம் சொல்லுவானுங்க..."

"இந்தா சொல்றேன்..."

"ஆமா அழகப்பனுக்கு சொன்னியா...?"

"இனித்தான் சொல்லணும்..."

"சொல்லு... அவரு பறந்து வந்துடுவாரு... சின்ன மாப்ளக்கிட்டயும் சொல்லிரு..."

"ம்..."

"ஆமா... சின்னவரு நல்லது கெட்டது எதுக்கு வாறாரு... அந்தப்புள்ளைய கட்டிக் கொடுத்து யாருமில்லாத அனாதை மாதிரி கெடக்கு... அவருதான் வரலைன்னாலும் அதையாச்சும் அனுப்புறாரா என்ன... எங்கயும் விடுறதில்லை..." புலம்பினாள் கண்ணகி.

"ஏய் இப்ப என்ன பேச்சு... அதெல்லாம் அவரு நல்ல மனுசந்தான்... அவருக்கு பிஸினெஸ்... கொற சொல்றது ஈசிபுள்ள... விடு பேசாம..." கண்ணதாசன்  மனைவியை அடக்கினான்.

"கண்ணா.... என்னால முடியலப்பா... வலி கூடுது..." கண்ணீரோடு சொல்ல, சுற்றி நின்ற உறவுகள் எல்லாம் கண்களில் நீரோடு அவசரப்படுத்த, வாலிபர்கள் ஆளுக்கொரு வண்டியில் ஆட்களை ஏற்றிக் கொள்ள, காளியம்மாவும் ஒரு வண்டியில் ஏற, கண்ணதாசனின் வண்டியை முருகேசு மவன் ராசு ஓட்ட, அதில் கந்தசாமியை அமர வைத்து கண்ணதாசன் பின்னால் பிடித்துக் கொண்டு அமர்ந்தான்.

வண்டி வேகமாகப் பயணிக்க போனை காதுக்கும் தோளுக்கும் இடையில் வைத்து தலையைச் சாய்த்துப் பிடித்துக் கொண்டு ஒவ்வொருவருக்காக விவரம் சொல்ல எதிர்முனைகள் துடித்தன. 

வண்டிகள் குண்டுங்குழியுமான சரளை ரோட்டில் பயணித்து ஆர்.எஸ்.பதி. காடுகளைக் கடந்து மருதம்பட்டி தார்ச்சாலையில் ஏறியபோது...

கந்தசாமியின் தலை கண்ணதாசனின் உடம்பில் சாய, அமாவாசை இருட்டில் எங்கோ ஆந்தை அலறியது.

(வேரும் விழுதுகளும் வளரும்)
-'பரிவை' சே.குமார்.

வெள்ளி, 19 டிசம்பர், 2014

நண்பேன்டா : திருநா(வுக்கரசு)


ண்பேன்டா பகிர்வில் இன்றைய நினைவு நீந்தலில் நண்பன் திருநாவுக்கரசு. என்னடா இவன் திருநான்னு முன்னால ஒரு பதிவு போட்டிருக்கானேன்னு நண்பேன்டாவை தொடர்ந்து வாசிக்கும் உள்ளங்களுக்கு யோசனை வரலாம். அந்தச் சகோதரன் கல்லூரியில் என்னுடன் படித்த நண்பன்... எங்கள் மூத்த சகோதரன். இவன் காரைக்குடியில் கணிப்பொறி படிக்கும் போது கிடைத்த நண்பன்.

கல்லூரி முடித்ததும் காரைக்குடியில் ஒரு பிரைவேட் கணிப்பொறி மையத்தில் சேர்ந்து படித்தேன். அப்போது எங்கள் வகுப்பில் திருநா, கணேச மூர்த்தி, பொன்ராஜ், செல்வராஜ், சிராஜூதீன், சங்கர், ராமசாமி, சிவக்குமார் மற்றும் நான் என தொடர்ந்தது ஒரே வகுப்பில் படித்து நட்புக் குழுவாக செட்டில் ஆகிவிட்டோம். இதில் திருநா திருப்பத்தூரில் இருந்து சிங்கம்புணரி செல்லும் பாதையில் திருக்களாப்பட்டி என்னும் ஊரில் இருந்து வந்தான். காரைக்குடியில் அவங்க சித்தி வீட்டில் தங்கியிருந்தான். அப்போது பார்ப்பதற்கு ஆள் மிகப்பெரிய உருவமாக உயரமாக இருப்பான். நாங்கள் எல்லாம் அவனுடன் நிற்கும் போது அபூர்வ சகோதரர்கள்தான்.

ஆள்தான் தடியாக உயரமாக இருப்பானே தவிர உள்ளத்தால் உயர்ந்த உள்ளம். அப்பா சிவகங்கையில் தாசில்தாராக இருந்தார். ஆரம்பத்தில் இவனுடன் யோசித்தே பழகினோம். ஏனென்றால் ஆள் பெரிய ஆளா இருக்கான் எதாவது சொல்வானோ என்ற பயம். கணேசமூர்த்திதான் எல்லாருக்கும் இஷ்ட தெய்வம்... ஜோக்காளி (இவர் பதிவர் பகவான்ஜி இல்லைங்கோ) அரட்டை அடிப்பதில் இவனிடம் மற்றவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். எப்போது கணேசமூர்த்தி இருக்கும் இடத்தில் சந்தோஷம் நிரம்பியே இருக்கும். அதனால் பெரும்பாலும் அரட்டை என்றால் நடுநாயகம் கணேசமூர்த்திதான். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக திருநாவுடன் எங்கள் நட்பு இறுக்கமானது.

காலையிலேயே கணிப்பொறி மையம் சென்று விடுவோம். மதியத்துக்கு சாப்பாட்டையும் எடுத்துச் சென்று அங்கயே சாப்பிட்டு விட்டு லேப்பில் எதாவது பார்த்து விட்டு மாலைதான் திரும்புவோம். பெரும்பாலான மதியவேளைகள் எதாவது தியேட்டரில் கழியும். அப்போது தேவகோட்டை திருப்பத்தூரி புதுப்படம் வெளியாகாது. காரைக்குடியில் மட்டுமே புதுப்படம் வெளியாகும். அதனால் எந்தப்படம் வெளியானாலும் அதை பார்க்காமல் இருக்கமாட்டோம். பெரும்பாலும் எல்லாருக்கும் டிக்கெட் எடுப்பது திருநாவாகத்தான் இருக்கும். மாலை வேளைகளில் கணிப்பொறி மையத்தில் இருந்து பெரியார் சிலை வரை பேசிக்கொண்டே நடப்போம். அவ்வப்போது சூப், ஐஸ்கிரீம், டி, காபி, வடை, பஜ்ஜி என எதாவது சுவைத்தபடியே அரட்டை அடித்துக் கொண்டே நடப்போம். எங்கள் கணிப்பொறி மையத்தில் இருந்து கொப்புடையம்மன் கோவில் வீதியில் இருக்கும் முருகன் மெட்டலை ஒட்டி ஆனந்தமடம் செல்லும் பாதையில் இப்போதும் இருக்கும் டீக்கடைக்கு பஜ்ஜி சாப்பிட செல்வோம் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

காரைக்குடி கணிப்பொறி மைய படிப்பு முடிந்தாலும் எங்கள் நட்பு தொடர, தேவகோட்டையில் ஒரு கணிப்பொறி மையம் ஆரம்பிக்கலாம் என முடிவெடுத்து திருநா, கருப்பையா, நான் மற்றும் சிவா நால்வரும் இணைந்து செயல்பட முடிவு செய்தோம். திருநாவின் பணமும் எங்களின் உழைப்புமாக பேர் சொல்லும் கணிப்பொறி மையமாக உயர்ந்த போது திருப்பத்தூர் கல்லூரியில் வேலை செய்த கருப்பையா பள்ளிகளுக்கு கணிப்பொறி வகுப்பெடுக்கும் காண்ட்ராக்ட் கிடைத்து நால்வர் குழுவில் இருந்து விலகினான். பின்னர் எங்கள் மூவரின் உழைப்பும் சிறந்த நிறுவனமாக தொடர்ந்து நடைபெற வைக்க, இப்படி நல்லாப் போனாத்தான் பிரச்சினை வரணுமே.... அதுவும் வந்தது,

கல்லூரியில் படித்த மாணவர்கள் சிலர் எங்களுடன் நெருக்கமாக, ஒரு பெரிய வட்டம் உருவாகியது. அந்த வட்டம் இரவு பெரும்பாலும் பாஸ்ட்புட் கடைகளில் சாப்பிட்டு கணிப்பொறி மையத்தில் தங்கி வளர ஆரம்பிக்கும் போது எங்களில் செலவு செய்பவன் திருநா என்பதை அறிந்து வட்டத்தை சுருக்க ஆரம்பித்தார்கள். முதலில் சிவா மீது சில பொய்யான குற்றச் சாட்டுக்களைச் சொல்ல திருநாவின் அன்பு சிவாவிடம் இருந்து மெல்ல விலகியது. அப்பவே நான் சுதாரித்து இருக்கணும். இருந்தாலும் சிவா இடையில் வந்தவன் நான் அவனுடன் கிட்டத்தட்ட நாலைந்து ஆண்டுகளாக நண்பன் என்ற இறுமாப்பில் இருக்க திருநாவின் பேச்சு என்னிடம் கொஞ்சம் கொஞ்சமாக குறைய, ஒரு கட்டத்தில் நான் அறைக்குள் வந்தால் அவனும் அவன் அறைக்குள் வந்தால் நானும் வெளியே செல்லும் நிலைக்கு கொண்டு வந்தது. பின்னர் சந்தோஷங்களற்ற நாட்களை நாங்கள் கொல்ல அது எங்களைத் திங்க ஆரம்பிக்க நட்பு மரணித்தது.

இந்நிலையில் மதிமுகவில் பொறுப்பில் இருந்த அண்ணனின் ஊதாரித்தனம், அப்பாவின் மரணம் என அவனின் வாழ்க்கை சந்தோஷங்களற்றுப் போக, அப்பாவின் மரணத்தில்தான் என் கைகளைப் பிடித்துக் கொண்டு நல்லாயிருந்தாருடா... இப்படி ஆயிருச்சேடா... இனி நான் என்ன பண்ணுவேன் எனக் கதறினான். என்னால் ஒன்றும் சொல்ல முடியாத நிலை... வருத்தங்களுடன் இரவு திரும்பினோம். பின்னர் அந்தக் கூட்டம் அவனை வளைத்தே வைத்திருந்தது. நாங்கள் அங்கிருந்து வெளியேற, கோயம்புத்தூரில் சிவாவும் தேவகோட்டையில் நான் என் நண்பன் முருகனுடன் இணைந்தும் கணிப்பொறி மையம் ஆரம்பித்தோம். எங்கள் மையத்தின் திறப்பு விழாவுக்கு வந்து வாழ்த்திச் சென்றான்.

எங்கள் மையம் நல்ல நிலையில் இருக்கும் போது அவனை சுற்றிய கூட்டம் காலைச் சுற்றிய பாம்பு கடிக்காமல் விடாது என்பது போல அவனை மொத்தமாக வெளியேற்றி வந்த காசை வாங்கிக்கிட்டு போ என விரட்டிவிட மீண்டும் திருப்பத்தூருக்குப் போய்விட்டான். அவன் ரொம்ப கஷ்டப்படுகிறான் என்ற செய்தி கேட்டு நானும் சிவாவும் ஒருமுறை ஊருக்கே போனோம். திருமணமாகி ஒரு குழந்தைக்கு அப்பாவான அவன் விவசாயம் பார்த்துக் கொண்டு இருந்தான். நீண்ட நேரம் பேசினான்... தப்புச் செய்துவிட்டதாக வருந்தினான். என் நண்பன் குற்ற உணர்ச்சியில் தவித்தது மனசுக்கு வலித்தது. அவனைச் சூழ்ந்த பாம்புகளை அவனை தனிமைப்படுத்திய போது நாமும் அவனை விட்டுத்தானே சென்றோம் என்ற குற்ற உணர்வு எழந்த போது எப்படிப்பட்ட நட்பை நாமும் தகர்த்திருக்கோமே என்று வருந்தினேன். இதற்கு இன்னொரு காரணமும் உண்டு தேவகோட்டைக்கு வந்த அப்பா 'திருநாவை உங்களை நம்பித்தான் இம்புட்டுத்தூரம் அனுப்பியிருக்கேன். அவன் எப்பவும் உங்களைத்தான் சொல்லுவான்... அவன் எப்படியோ அப்படித்தான் நீங்களும்... எனக்கு அவன் மட்டும் மகனில்லை... நீங்களும்தான் என்று சொன்னார். ஆனால் சந்தோஷமாக தேவகோட்டை வந்தவனை சங்கடப்படுத்தி அனுப்பியதில் எங்களுக்கும் பங்கு இருந்தது அல்லவா?

பின்னர் திருப்பத்தூர் கல்லூரியில் ஆசிரியர் பணி, அங்கே தனியாக கணிப்பொறி மையம் என அவன் செட்டிலாகிவிட, மனசு சந்தோஷப்பட்டது, போன முறை ஊருக்குப் போன போது அவனைப் பார்க்க நினைத்து போகாமல் விட்டுவிட்டேன்.  கருப்பையா எனக்கு சொந்தக்காரன் என்பதால் அவனைச் சந்தித்தபோது உனக்குத் தெரியுமா மாப்ளே நம்ம திருநா தம்பி கருணா லாரி அடிச்சு செத்துப் பொயிட்டான்ட்டா என்றதும் எனக்கு தூக்கி வாரிப் போட்டது. வக்கீலுக்குப் படிச்சிட்டு சிவகங்கையில் இருந்தவன்... தேவகோட்டைக்கு வந்து அண்ணே... அண்ணே எங்கள் பின்னே கூடப்பிறந்தவனாய் திரிந்தவன்... எப்படி இப்படி ஒரு முடிவில் மரணித்துப் போனான் என வருந்தியபோது திருமணமாகி ஒரு குழந்தை இருக்குடா மாப்ளே... பாவம் திருநா, அண்ணனும் சரியில்லை... தம்பியும் இப்ப இல்லை குடும்பச் சுமை எல்லாம் அவன் மேலதான்... எல்லா வலியையும் சுமந்துக்கிட்டு இருக்கான்டா என்ற போது என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

இந்த முறை செல்லும் போது என் நண்பனைச் சென்று பார்க்க வேண்டும். அவனோட வாழ்க்கையின் வலிகள் எல்லாம் கடந்து சந்தோஷமாக இருக்க வேண்டும்.

நண்பேன்டா தொடரும்.
-'பரிவை' சே.குமார்.

வியாழன், 18 டிசம்பர், 2014

மத மூடர்களே...

பிஞ்சுகளின் ரத்தம்
குடித்த மத மூடர்களே....

மனிதம் கொன்று
மதம் வளர்க்க
எந்த மதத்தில்
சொல்லியிருக்கிறது..?

அன்பை விதைக்கச்
சொன்ன இறைவன்
அழிவை ஆதரிப்பதாக
எப்போது சொன்னான்..?

தேவைகளுக்காக
போராட்டமா...
இல்லை
தேடி அழிக்கும்
போராட்டமா..?

உரிமைகளுக்காக
போராட்டமா...
இல்லை
உயிரை எடுக்கவே
போராட்டமா..?

எந்த மதமும்
மனித ரத்தம்
கேட்கவில்லையே..?

வாழ வேண்டிய
பிஞ்சுகளை
வாடச் செய்ய
எப்படி மனது
வந்தது..?

பிஞ்சுகளின்
கொஞ்சும் கண்கள்
கெஞ்சியும் கூட
நஞ்சு மனதில்
ஈரம் இல்லையா
முட்டாள்களே...?

கனவுகளைச் சுமந்த
வண்ணத்துப் பூச்சிகளை
ரத்த சேற்றில்
மிதக்க விட்ட மதம்
என்னடா மதம்..?

மதத்தின் பேரால்
செய்யும் செயல்களுக்கு
நியாயம் கற்பிக்க
ஒரு கூட்டம்...
அதை ஆதரிக்க
சில நாடுகள்...
வெட்கக் கேடு...!

கேவலம்...
ரத்த வாடையில்
மதம் வளர்க்க
நினைக்கும் மூடர்களே...
மனிதம் வளருங்கள்
மதம் நிலைக்கும்...
-'பரிவை' சே.குமார்.

செவ்வாய், 16 டிசம்பர், 2014

வாழ வேண்டிய வாழ்க்கை

"ஏன் இப்படி ஒரு முடிவு எடுத்திருக்கே?" கேட்ட சாம்பசிவம் சென்ற வருடம்தான் அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். மனைவி இறந்து பத்து வருடங்கள் ஆகிவிட்டது. எப்போது மனைவி பற்றி பேச்சு வந்தாலும் புண்ணியவதி போய் சேந்துட்டா என்று மேலே கையைக் காட்டுவார். அரசுப் பணியில் இருக்கும் ஒரே மகனுடன் வாழ்க்கை எந்தவித பிரச்சினைகளையும் எதிர்க்கொள்ளாமல் சந்தோஷமாகக் கழிகிறது.  இங்கே சாம்பசிவத்தின் வாழ்க்கைக் கதையை நாம் பார்க்கப் போவதில்லை... அப்புறம்..? சரி வாங்க அவங்க பேசுறதைக் கேட்போம்.

"இதுதான் நல்ல முடிவுன்னு நினைக்கிறேன்" என்றாள் அன்னம். ஐம்பதைத் தாண்டிய உருவம். எப்போதும் புன்னகை இழையோடும் வசீகரமான முகம். 

"என்ன நல்ல முடிவு... படிச்சவதானே நீயி..."

"படிச்சவளா இருந்தா ஒரு முடிவும் படிக்காதவளா இருந்தா இரு முடிவும் எடுப்பாங்கன்னு யார் சொன்னா... இன்னைக்கு படிச்சவங்களை விட படிக்காதவங்கதான் தீர்மானமான முடிவு எடுக்கிறாங்க... தெரியுமா?"

"அது சரி... பேச உனக்குச் சொல்லித் தரணுமா என்ன? ஆமா இந்த முடிவை எடுக்க யார் உனக்குச் சொன்னது?"

"என்ன சாம்பு... இப்படி ஒரு அசட்டுத்தனமான கேள்வி கேக்குறே.? நான் என்ன சின்னப்பிள்ளையா மத்தவங்க சொல்லிக் கேட்க... சுயமா முடிவெடுக்கத் தெரியாதா என்ன..."

"சுயமா முடிவெடுக்கிறாளாம் சுயமா...? அறிவு கெட்டுப் போயி... நாங்கள்லாம் இருக்கும் போது இவுக போறாகளாம்..." கோபமாகப் பேசினார்.

"இப்ப எதுக்கு இவ்வளவு கோபப்படுறே சாம்பு" அவள் சாம்பு என்று மறுபடியும் சொன்னதும் அவருக்கு சர்வ நாடியும் அடங்கிப் போனது. பல வருடங்களுக்கு முன்னர் அவள் அவரை அப்படிக் கூப்பிட்டிருக்கிறாள். பின்னர் இப்போதுதான் சாம்பு என்று விளித்திருக்கிறார்கள். இடைப்பட்ட காலங்களில் பல வருடங்கள் பேசாமலேயே கழிந்தன... சில வருடங்களாக பேசினாலும் வா போ என்று சொல்வாளே தவிர பேரைச் சொல்லவோ அல்லது இந்தா 'சாம்பு'  என்று இப்போது சொன்னாளே...  அப்படி அழைக்கவோ மாட்டாள். 

"இப்ப என்ன சொன்னே...? சாம்பு... சாம்புன்னுதானே சொன்னே.."

அப்படி அழைக்கவே கூடாது என்றிருந்தவள் எப்படி அப்படி அழைத்தேன் என்று யோசித்தபடி "ஏதோ யோசனையில சொல்லியிருப்பேன்... சரி அப்படிச் சொன்னாத்தான் என்னவாம்... சாம்புன்னு சொல்ல எனக்கு உரிமையில்லையா என்ன..?" அவரிடமே கேள்வியைத் திருப்பினாள்.

அவள் அப்படிக் கேட்டதும் "உனக்கு உரிமை இருக்க மாதிரி எனக்கும் இருக்குல்ல... அதான் கேட்டேன்... சரி அதை விடு... நீ எதுக்காக இந்த முடிவெடுத்தே... நாங்கள்லாம்.... இல்லையில்ல நான் என்ன செத்தா பொயிட்டேன்..."

"ஏய் நீ எதுக்கு இப்ப இப்படிப் பேசுறே...? ஏதோ நீ ஒருத்தன் எனக்கு உறவா இருக்கேன்னுதான் உங்கிட்ட வந்தேன்... அதுவும் நாம ரெண்டு பேரையும் பிரிச்ச கடவுள் ஒரே ஊருக்குள்ள வாழக் கொடுத்து வச்சிருக்கான்... அதான் தைரியமா உங்கிட்ட யோசனை கேட்கலாம்ன்னு கிளம்பி வந்தேன்... நீ என்னடான்னா வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கிறே... என்னையப் பொறுத்தவரை இதுதான் நல்ல முடிவுன்னு தெரியுது..."

"கடவுள் எங்க பிரிச்சான்... நாமதானே பிரிஞ்சோம்... இன்னைக்கு இது நல்ல முடிவுன்னு சொல்றவ அன்னைக்கு உங்கப்பன் முடிவைத்தானே ஆமோதித்தாய்... அன்னைக்கு இதுதான் நல்ல முடிவுன்னு பிடிவாதமா இருந்திருந்தா இன்னைக்கு இந்த நிலை வந்திருக்காது..."

அதைக் கேட்டுச் சிரித்த அன்னம், "சொந்த மாமன் மகன் நீ... குடும்பப் பகையில நம்ம காதல் எரிஞ்சி போச்சு... அன்னைக்கு நான் உன்னைத்தான் கட்டுவேன்னு நின்னுருந்த எரிஞ்ச பகையில எங்கப்பன் ஆத்தா உசிரும் சேந்திருக்கும். என்ன என்னோட கல்யாணத்துக்குச் சேராத குடும்பம் உன்னோட கல்யாணத்துல சேந்துக்கிச்சு... நான் தான் அனாதையா அழுதுக்கிட்டு கிடந்தேன்... சரி... விடு... காலம் போன பின்னால காலாவதி ஆன காதலை பேசி என்ன பண்ணச் சொல்றே... உனக்கும் நல்ல துணை... எனக்கும் நல்ல துணை... என்ன கொடுத்த கடவுள் என்ன நினைச்சானோ தெரியல... அவங்க ரெண்டு பேரையும் கூட்டிக்கிட்டு நம்ம ரெண்டு பேரையும் இப்படி தனிமரமாக்கிட்டான். ஆனா உனக்கு பிறந்தது உன்னை மாதிரி சொக்கத் தங்கம்... உன்னை தங்கமாப் பாத்துக்கிறான். ஆனா எனக்கு..." பேச்சை நிறுத்தி பெருமூச்சு விட்டாள்.

"இங்க பாரு அன்னம்... அவனுகளும் நல்லவனுங்கதான்... ஏதோ கால நேரம்... விடு... அதுக்காக இந்த முடிவு வேண்டாம். நாங்க எல்லாரும் பெரிய லெவல்ல இருக்கும் போது நீ தனியா அநாதையாட்டம் முதியோர் இல்லம் போறேன்னு சொல்றது வீம்புக்கு வேணுமின்னா சரியாத் தெரியலாம்... ஆனா மத்தவங்களுக்கு எப்படியோ எனக்கு... " என பேச்சை நிறுத்தியவர் "அது சரியில்லை... வேண்டாம் விடு..." குரல் உடைந்தது.

"ஏய் சாம்பு நீ என்ன இன்னும் என்னைய மறக்கலையா..? உன்னோட காதலை தூக்கிப் போட்டுட்டு அப்பன் காட்டுன ஆளுக்கு கழுத்த நீட்டுனவ நான்...  நீ எதுக்கு இப்ப கண் கலங்குறே... இங்க பாரு... ஒண்ணுக்கு ரெண்டு பிள்ளைகளைப் பெத்தேன்... என்னைய இங்கயும் அங்கயும் மாத்தி மாத்தி அடிக்கிறானுங்க... என்னால முடியல... மருமக்கள குத்தம் சொல்ல மாட்டேன்... அவளுக என்ன பண்ணுவாளுங்க... இவனுக சரியில்லை... அதான் யாருக்கும் பாரமில்லாம அங்க போயிடலாம்ன்னு பாக்குறேன்..."

"என்ன கேட்டே... மறக்கலையான்னா... அது சரி... மறக்கிற வாழ்க்கையாடி அது... " என்றவர் "சாரி அன்னம்... ஏதோ ஞாபகத்துல டி போட்டுப் பேசிட்டேன்... சரி விடு... அவனுககிட்ட நான் வந்து பேசுறேன்... என்ன சொல்றானுங்கன்னு பாக்குறேன்... ஒத்து வரலைன்னா பேசாம இங்க வந்திரு... மோகன் உன்னைய பெத்த தாயாட்டம் பாத்துப்பான்..."

"அத்தை மகளை டி போட்டு பேசுறது என்ன தப்பு... நீ வந்து அவனுககிட்ட பேசி மரியாதையை கெடுத்துக்காத... உனக்கு ஒரு அவமானம்ன்னா என்னால தாங்க முடியாது... எனக்காக விசாரி... நல்ல இல்லமாப் பாத்து சேர்த்து விடு... வாரம் ஒருவாட்டி வந்து பாரு... எனக்கு அது போதும்.. மோகன் நல்லாப் பாத்துப்பான்தான்... இல்லைன்னு சொல்லல... ரெண்டு பிள்ளைக இருக்கும் போது அவனுக்குப் பாரமா அங்க வந்து தங்கிக்கிட்டு நல்லா இருக்கும்ன்னு நினைக்கிறியா... அதுபோக பாக்கிறவங்க என்ன நினைப்பாங்க... வேண்டாம் விட்டுடு..." சொல்லியவள் சேலை முந்தானையால் கலங்கிய கண்ணைத் துடைத்துக் கொண்டாள்.

"அழுகுறியா... ஏய்... அன்னம்... இங்க பாரு... இங்கருடி... நா... நா இருக்கேன்... உன்னைய எங்கயோ ஒரு அநாதை இல்லத்துல விட்டுடமாட்டேன்டி... கண்ணத்துடை... சரி... வா போகலாம்... எதையும் நினைச்சுக் கலங்காதே... நாளைக்கு நான் நல்ல முடிவாச் சொல்றேன்... நா என்ன முடிவு சொன்னாலும் அதை ஏத்துப்பேங்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு..." என்றபடி சிமிண்ட் பெஞ்சில் இருந்து எழுந்து அவள் முகம் நோக்கினார். 

"அன்னைக்கு என்னோட முடிவு நம்மளப் பிரிச்சிருச்சு... இன்னைக்கு நீ எடுக்கிற முடிவு எனக்கு விடுதலை வாங்கிக் கொடுக்குமின்னா கண்டிப்பா ஏத்துப்பேன்..." என்று சிரித்தபடி அன்னமும் எழ மெதுவாக பேசியபடி பூங்காவை விட்டு வெளியே வந்தார்கள்.

ரவெல்லாம் யோசிச்சிப் பார்த்து இதுதான் சரியான முடிவு என நினைத்து மறுநாள் மகனிடம் பேசினார். அவனுக்கு இதில் உடன்பாடு இல்லாததால் யோசித்தான். 

"இந்த வயசுல நம்ம கிராம வீட்ல தங்குறதுங்கிறது அவ்வளவு நல்லாயில்லைப்பா... நான் இருக்கும் போது நீங்க அங்க தங்கினா ஊருக்குள்ள தப்பா பேசுவாங்க... அதுவுமில்லாம அன்னம்மாவும் உங்க கூட தங்குறதை கிராமத்துச் சனம் எப்படி எடுத்துக்குமோ தெரியலை" என்று மெதுவாகச் சொன்னான்.

"ஏம்ப்பா... யோசிச்சிப் பாரு... நாமளும் அவளை விட்டுட்டா அவ எதாவது முதியோர் இல்லத்துல போயி அநாதையா நிப்பாப்பா... அவ அநாதையா நின்னா உங்கம்மா என்னைய மன்னிக்க மாட்டா... ஏன்னா அன்னத்தைப் பத்தி அவளுக்கு எல்லாமே தெரியும்... ப்ளீஸ் எனக்காக இதை ஏத்துக்க கொஞ்ச நாள் எனக்கு அவளும் அவளுக்கு நானும் உதவியா இருந்துக்கிறோம்..."

"அவங்க நிலைமை எனக்குப் புரியுதுப்பா... ஆனா ஊர்ல தப்பா..." எதுவும் சொல்லுவாரோ என பேச்சை நிறுத்தி அவரைப் பார்த்தான்.

அவரோ அவன் என்ன சொல்ல வருகிறான் என்பதை அறிந்து "ஊர்ல எல்லாருக்கும் அவ என்னோட அத்தை மகள்ன்னு தெரியும்... இந்த வயசுல ஒருத்தருக்கு ஒருத்தர் உதவியா இருக்கதுல என்ன தப்பு.... ஊர்ல யாரும் தப்பான கண்ணோட்டத்துல பேச மாட்டாங்க... அப்படியே பேசினாலும் அதைப்பத்தி எனக்கு கவலையில்லை... ஏன்னா எங்க உள்ளம் சுத்தமானதுன்னு எங்களுக்கும் தெரியும்... உனக்குந் தெரியும்.." என்றார்.

"அதுக்கில்லைப்பா.... வேணுமின்னா அன்னம்மா இங்க வந்து இருக்கட்டும்.." என்ற மகனிடம் அன்னம் பேசியதையெல்லாம் விவரமாய் எடுத்துச் சொல்லி ஒரு வழியாக அவனின் சம்மதத்தைப் பெற்றார். 

'என்ன தாத்தா அன்னப்பாட்டியோட லிவிங்க் டூகெதரா' என்று சொல்லிச் சிரித்த பேத்தியிடம் 'வாழ வேண்டிய வாழ்க்கையிடா... உனக்குப் புரியாது' என்று சொல்லிவிட்டு 'இந்த வயசுல அவ அநாதை இல்லத்துக்குப் போறதுக்கு என்னோட மனசு இடம் கொடுக்கலையேடி... என் செல்ல அன்னலெட்சுமி' என்று அவள் தலையை தட்டிவிட்டு அன்னத்திடம் சம்மதம் வாங்கி விடலாம் என்ற நம்பிக்கையில் அவளைப் பார்க்கக் கிளம்பினார்.
-'பரிவை' சே.குமார்.