மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 5 அக்டோபர், 2014

தொடர்கதை : வேரும் விழுதுகளும் (பகுதி - 2)

முந்தைய பகுதி : பகுதி-1...

ரண்டு நாட்களாகப் விடாது பெய்த பேய் மழை கொஞ்சம் குறைந்திருந்தாலும் இன்னமும் கருமேகம் கூடுவதும் லேசாகத் தூறுவதுமாகத்தான் இருந்தது. வாயில் நிஜாம் லேடி புகையிலையை அதக்கியபடி கட்டிலில் அமர்ந்திருந்த கந்தசாமி, புகையிலை எச்சில் ஒழுகாதவாறு முகத்தை சற்றே தூக்கி வாயை அஷ்ட கோணலாக்கி "மழ கொஞ்ச விட்டாப்ல இருக்குல்ல' என்றார்.

வாசிக்காதவர்கள் தொடர்ந்து வாசிக்க இங்கே சொடுக்கவும்.

தொடர்வது பகுதி - 2

'ந்த மழச் சனியன் விடாது போல... இப்புடி பொத்துக்கிட்டு கொட்டிக்கிட்டே இருக்கு... லேசா விட்டப்போ வெட்டரிக்கும்ன்னு பாத்தா எம்புட்டுத் தண்ணிதான் வச்சிருந்துச்சோ... விட மாட்டேங்குதே.. இந்த மனுசன் போனவரு என்ன பண்ணுறாரோ தெரியலை... மழ வந்தா திரும்பி வரவண்டியதுதானே... வயலுக்குள்ள திரிஞ்சிட்டு அப்புறம் நீதான்டி போச்சொன்னேன்னு கத்துவாரு...' தனக்குள் முணங்கியபடி சோறு வைக்க விறகு அடுப்பை பற்றவைத்தவள், 'மழ நேரத்துல இந்த வெறகு வேற ஈரங்காத்துக்கிட்டு புடிச்சித் தொலயாதே... ஊதி ஊதிச் சாவவேண்டியதுதான்' என்று சத்தமாகச் சொன்னாள்.

'இந்தப்பயக வேற இன்னுங் காசனுப்பாம இருக்கானுக... இந்த மழ பேஞ்சதுக்கும் அதுக்கும் அம்புட்டுப் பேரும் ஒரம் போடவும் மருந்தடிக்கவும் ஆரம்பிச்சிவாய்ங்க...'  புலம்பியபடியே சேலை முந்தானையை  தலையில் போட்டுக் கொண்டு வாசலுக்குப் போய் எட்டிப் பார்த்தாள்.

மழையில் ஏதோ பேசியபடி கையில் மண்வெட்டியுடன் ராசப்பன் மகனும் கணபதியும் போய்க்கொண்டிருந்தார்.

"போறது ஆரு... ராசுப்பய மவனா...?" கத்தினாள்.

"ஆமா அப்பத்தா... என்ன வெசயம்?" எதிர்க்கேள்வியோடு நின்றான்.

"ஒங்க ஐயா... வயப்பக்கந் தண்ணி வெட்டிவிடப் போனாவ... அங்கிட்டுப் பாத்தியா?"

"ஐயாதானே... மேட்டுச் செய்யிப்பக்கமாப் பாத்தே... கண்ணச் சித்தப்பா ஏதோ சொன்னதும் வேப்பந்தலப்பக்கமாப் போனாவ... வந்துக்கிட்டு இருப்பாவ... நீங்க நனையாதீக... " என்று சொல்லியபடி நடந்தான்.

'இவரு இப்புடித்தான்... எந்திரிச்சி போ மாட்டாரு... போனா எதாவது கிறுக்குத்தனமாச் செய்யிறதே வேலயாப் போச்சு... இந்த மழயில வேப்பஞ் செய்யிக்கு எதுக்குப் போவணும்... சொன்னா கத்துறேன்னு திருப்பிக் கத்துவாரு... அங்கிட்டு முள்ளங்கிள்ளுமாக் கெடக்கும்... மழயில ஊறுன முள்ளுக் குத்தினா என்னாத்துக்காகுறது... இந்த மனுசன் வேற வேசாடு தாங்க மாட்டாரு...என்ன கத்தி என்ன பண்றது... காலம் பூராங் கத்துறதே பொழப்பாப் போச்சு...' முணங்கியபடியே புகைந்து கொண்டிருந்த அடுப்பை ஊதிவிட்டவள் கண் எரிய முந்தானையால் கண்ணைத் துடைத்து விட்டு அதிலே 'சிர்' என்று மூக்கையும் சிந்தி விட்டு முந்தானையை இடுப்பில் சொருகிக் கொண்டாள் அணையும் அடுப்பை ஊதிவிடுவதும் வாசலில் கந்தசாமி வர்றாரா என எட்டிப் பார்ப்பதுமாக இருந்தாள்.

வாசலில் யாருடனோ சத்தமாகப் பேசும் கந்தசாமியின் குரல் கேட்கவும் 'அப்பா வந்துட்டாரு' என்று சொல்லிக் கொண்டாள். படியில் ஏறி வாளியில் இருந்த தண்ணீரைச் சாய்த்து காலைக் கழுவி விட்டு மண்வெட்டியை அங்கேயே வைத்து விட்டு திண்ணையில் ஏறி நின்னு "அப்பா என்ன மழ... பொத்துக்கிட்டு ஊத்துதுலா... வேப்பஞ் செய்யிலாம் நெறஞ்சி நிக்கிதுலா... வட்டத்தலப்பக்க போமுடியாம வெள்ளக்காடாக் கெடக்குலா... இன்னிக்கும் மழ தொடந்தா வேந்தங்கம்மாத்தண்ணி வட்டத்தலக்கி வந்திரும்... " என்றபடி தலையில் கிடந்த சாக்கை எடுத்து கொடியில் போட்டார்.

"இந்த ஏலாவுக்கு கொறச்சலில்லை... மழ வந்தா வரவேண்டியதுதானே... எதுக்கு வேப்பஞ்செய்யிக்குப் போனிய... அங்கிட்டு முள்ளுங்கிள்ளுமாக் கெடக்கும்..." கோபமாகக் கேட்டாள்.

"அட... வேப்பந்தலைக்கு போக நெனக்கலத்தா... நம்ம கண்ண நின்னான்... அவனே எல்லா வயலுலயும் தண்ணிய வெட்டி விட்டுட்டு வந்துட்டேன்னு சொல்லி போ சித்தப்பான்னுதான் சொன்னான். சரி.. வந்தது வந்துட்டோம்ன்னு வேப்பஞ் செய்யிக்குப் போன மழ பிடிச்சிக்கிச்சு..." என்றபடி காளியம்மா கொடுத்த துண்டால் துவட்டி அதைக் கட்டிக் கொண்டு ஈர வேஷ்டியை அவிழ்த்து அலசப் போனார்.

"அப்டியே மழயில போட்டுட்டு வாங்க... அப்பொறமா அலசிக்கலாம்..." என்று சொன்னதும் 'செரி' என்று மழைத் தண்ணீரில் நனையுமாறு போட்டுவிட்டு வந்து 'ஸ்... அப்பா... என்னமா குளிருது" என்றபடி கட்டிலில் அமர்ந்தார்.

சூடா வரக்காப்பியை அவரிடம் கொடுத்தவள் "ஏங்க... இந்தப் பயக இன்னம் பணமே அனுப்பல... இனி எல்லாரும் ஒரம் போட, மருந்தடிக்க ஆரம்பிச்சிடுவாங்களே... நாம காசுக்கு என்ன பண்றது...?" என்றாள்.

"ஆமா... அனுப்பட்டும்... அவனுகளுக்கும் செலவு இருக்குமில்ல... மழ பெய்யுமின்னு அவனுகளுக்கு என்ன தெரியும்... செல்வி வூட்டுக்காரருக்கிட்ட வாங்கிக்கலாம்... நாளக்கே சொன்னா மாப்ள ஒரத்தையே எடுத்தாந்து குடுத்துட்டுப் போயிடுவாக... அப்பறம் என்ன... விடு அனுப்புவாய்ங்க..." என்றபடி காபியை உறிஞ்சப் போனவர் டம்ளரைப் பார்த்து "எங்க எம்போகாணி... இதுல கொடுத்திருக்கே...?" என்றார்.

"காலயில குடிச்சது... கழுவாமக் கெடக்கு... கழுவலாம்ன்னு பாத்தா இந்தா இப்புடி மழ பெய்யுது... ஒருதா சாப்பிட்டுட்டு மொத்தமா இந்தப்பக்கமா ஒக்காந்து கழுவிடலான்னு நெனச்சேன்... அடிக்கடி ஒக்காந்து எந்திரிக்கவா முடியுது... ஒரு நா குடிச்சா உங்க வெரதங் கெட்டுப் போயிடாது..." என்று சொல்லியபடி சோற்றைப் பாக்கப் போனாள். அதன் பிறகு ஏதாவது பேசினால் என்ன நடக்கும்ன்னு அவருக்கு நல்லாவே தெரியும் என்பதால் சத்தமில்லாமல் குடித்து முடித்தார்.

"என்னங்க... ஊருக்குப் போன் பண்ணுனீங்களா?" தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த கணவன் மணியிடம் கேட்டாள் சித்ரா.

"ஊருக்கா... சும்மாவே அப்பாவுக்கு போன் பண்ணினா கத்திப் பேசணும்... இப்ப தொடர்ந்து மழை வேற பெய்யுது... போன் லைன் எல்லாம் ஒழுங்கா இருக்கோ இல்ல அறுந்து கெடக்கோ தெரியல... அது போக ஆபீஸ்ல வேலை அதிகம்... எங்கிட்டுப் பண்றது...?"

"மழை நேரத்துல ரெண்டு பேரும் தண்ணிக்குள்ள திரிஞ்சி எதையும் இழுத்துக்கிட்டுறாம.... அப்புறம் நாமதான் அதுக்கும் அழுகணும்..."

"அதானே... என்னடா இம்புட்டுக் கரிசனமாக் கேக்குறாளேன்னு பாத்தேன்... உங்கவலை உனக்கு... அது சரி... ஆடு, மாடு வேணான்னா எங்க கேக்குறாக... வயசான காலத்துல எல்லாத்தையும் விட்டுட்டு இங்கிட்டு வந்து கெடங்கன்னு ஆத்தாக்கிட்ட எத்தன தடவ சொல்லியிருப்பேன். ரெண்டும் அந்த ஊரை விட்டு வரமாட்டேங்குதுக... சரி வயலயாச்சும் பாவுகத்துக்குப் போடச் சொல்லி யாருக்கிட்டயாச்சும் கொடுங்கன்னு சொன்னா என்னால முடிஞ்ச வரைக்கும் விவசாயம் பண்ணுறேன்னு சொல்லிட்டார்..."

"ஆமா... இருக்க இந்த வீட்டுக்குள்ள அவுகளையும் கொண்டாந்து வச்சிக்கிட்டாத்தான் வாழும்... அதான் உங்க தம்பி மாளிகை மாதிரி வீடு கட்டி வச்சிருக்காருல்ல... அங்க போயி இருக்கச் சொல்ல வேண்டியதுதானே... எல்லாத்துக்கும் நாந்தேன் வடிச்சிக் கொட்டணுமாக்கும்... என்னைய எங்காத்தாப்பன் என்ன நேரத்துல பெத்தாங்களோ... "

"இப்ப எதுக்கு தேவையில்லாமப் பேசுறே... அவங்கள இங்கயா கூட்டியாரணுமின்னு சொன்னேன்... என்ன இருந்தாலும் அவுக என்னைய பெத்தவங்க... இன்னைக்கு பாக்குற இந்த வேலையே அவரு விவசாயம் பண்ணி படிக்க வச்சதாலதான் கிடைச்சது... இத்தன பவுசா நீ வாழக் காரணம் அந்தாளு கஷ்டப்பட்டு படிக்க வச்சதாலதான்... இல்லேன்னா எங்க பெரியப்பன் மவனுகளாட்டம் நானும் விவசாயம் பாத்துக்கிட்டுத்தான் இருந்திருப்பேன்... நீ நாலு மாடுகள வச்சிக்கிட்டு எறள்ளிக்கிட்டு திரிஞ்சிருப்பே...?"

"அப்பா சாமி... நாயேன் எறள்ளப் போறேன்... நீங்க இந்த உத்தியோகம் பாக்கலைன்னா எங்கப்பா எதுக்கு உங்களுக்கு கட்டப் போறாரு... சரி... சரி.,..எனக்கு உங்க புராணம் கேட்டுக் கேட்டு புளிச்சிப் போச்சு... இங்க பாருங்க... மகா காலேசுப் படிக்கிறா... இருக்க சின்ன வீட்டுல அவுகளக் கொண்டாந்து வச்சிக்கிட்டு அதெல்லாம் சரி வராதுங்க... போறமா பாக்குறமா... மாசாமாசம் பணம் அனுப்புறோமா... அதுதான் சரி... இப்ப போன் பண்ணிப் பாருங்க... பயிரெல்லாம் தண்ணியில போயிருச்சோ... என்னவோ...  வெளயலைன்னா என்ன பண்ணுறது சொல்லுங்க..."

"அதானே பாத்தேன்... என்னடா சோனையன் குடுமி சோலியில்லாம ஆடாதேன்னு பாத்தேன். எங்க இந்த வருசம் அரிசி வராதோன்னு கவலையில போன் பண்ணச் சொல்லி நிக்கிறே... சரி பேசுறேன்..." என்றபடி மொபைலில் அம்மா என்று இருந்த நம்பரை அழுத்தினான்.

நீண்ட நேரம் ரிங் போகவும் "என்னடி... அம்மா எடுக்க மாட்டேங்கிது..." என்று மனைவியிடம் கேட்க, "மெதுவா எந்திரிச்சி வந்துதானே எடுக்கணும்.. வேணுமின்னா உங்கம்மாளுக்கு ஒரு செல் வாங்கிக் கொடுங்க" என்று சிரித்தபடி அவனின் அருகில் அமர்ந்த சித்ராவை, 'உனக்கு நய்யாண்டி' என தலையில் கொட்டினான். எதிர்முனையில் போன் எடுக்கப்பட்டதும் 'எடுத்துருச்சு' என்பதுபோல் தலையாட்டினான்.

"அலோ... ஆருப்பா...? கொஞ்சஞ்சத்தமா பேசுங்க... மழ பெஞ்சிருக்கதால கொரக்கொரன்னு கேக்குது..." என்று கத்தினாள் காளியம்மாள்.

(வேரும் விழுதுகளும் வளரும்...)
-'பரிவை' சே.குமார்.

9 எண்ணங்கள்:

UmayalGayathri சொன்னது…

கிராமிய மணம்கமழும் கதை நன்றாக போகிறது...நன்றி.

துரை செல்வராஜூ சொன்னது…

வீட்டுக்கு வீடு வாசப் படியாத்தான் இருக்கு!..

Menaga Sathia சொன்னது…

அட,அடுத்த கதை ஆரம்பித்தாச்சா...வாழ்த்துக்கள் சகோ..இப்போதான் 2 பகுதியும் படித்தேன்...

கிராமிய மணத்தோடு அருமை ....

”தளிர் சுரேஷ்” சொன்னது…

சுவாரஸ்யமாக செல்கிறது! தொடர்கிறேன்! நன்றி!

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்

கதை நன்றாக உள்ளது. மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்..

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

ம்ம்ம் ஏம்பா இப்படி கஷ்டப்பட்டு வளர்க்கும் அம்மா அப்பாவ பாத்துக்கறதுல இப்படி ஒரு மனசு வருதோ....அதே பொண்ணுங்களோட அம்மா அப்பா? நாளைக்கே நம்ம பிள்ளைங்க? உலகம் ரொம்ப வினோதமானது! இதையெல்லாம் படிக்கும் போது மனசுகனக்கின்றது..... சித்ராவும் மணியும் பேசுவதை வாசிக்கும் போது கண்ணில் அந்தப் பரிதாபமான வெள்ளந்தியான பெரிசுக மனத்திரையில் படமாக விரிவதைத் தடுக்க முடியல...மனம் வலித்தது....அரிது அரிது மானிடராய் பிறத்தல் அப்படினு ஔவை சொன்னாங்க...அனா மானிடப் பிறப்பே கேவலமோனு தோணுது....

J.Jeyaseelan சொன்னது…

எங்கள் வீட்டுக் கதை போலவே போகிறது சார், இன்னும் எங்க ஐயா அவரோட டம்ளர்ல மட்டும்தான் காபி குடிப்பார், மாத்திக் கொடுத்தா எங்க என் போகாணி எனக் கேட்பார், இந்த வயசிலும் வயல்காட்டில் உழைத்துக் கொண்டே தான் இருக்கிறார்கள், உங்கள் கதை நாயகர்கள் போல... செம இன்ட்ரெஸ்டிங்கா போகுது சார்...

கோமதி அரசு சொன்னது…

கதையை அருமையாக கொண்டு போகிறீர்கள் .வயலுக்கு போன கணவன் வீடூ திரும்ப நேரம் ஆகும் போது உண்டாகும் பதைப்பு, வந்தபின் அவரை கவனிக்கும் கவனிப்பு, வழக்கமாய் குடிக்கும் போகாணி இல்லை என்பதற்குமனைவி சொல்லும் காரணம் எல்லாம் பார்த்து, கேட்ட அனுபவ எழுத்துக்கள்.
மகன் அனுப்புவார்கள் என்று சொல்லும் நம்பிக்கை வார்த்தைகள்
மகன், மருமகள் பேசும் வார்த்தைகள் எல்லாம் மிக அருமை.

r.v.saravanan சொன்னது…

வயதானவர்களின் அன்பும் அவர்கள் கஷ்டமும் இள வயதினர் அறிந்தால் தானே.