மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 10 ஆகஸ்ட், 2015

கிராமத்து நினைவுகள் : மழைத் தண்ணி



கிராமத்து வாழ்க்கையில் அனுபவித்த சந்தோஷங்களில் முக்கியமானவைகளில் மழை நாட்களும் ஒன்று. இன்று இந்த பாலைவனப் பூமியில் மழையைப் பார்ப்பது என்பதே அரிதாகிவிட்டது. ஊருக்குப் போன் பண்ணும் போது மழை பெய்கிறது என்றால் 'நல்ல மழையா..? தண்ணி நிறைந்து ஓடுதா...?' எனச் சந்தோஷமாகக் கேட்கச் சொல்கிறது. பள்ளியில் படிக்கும் காலத்தில் மழையில் நனைந்த நினைவுகளையும், அதன் பின்னான விளையாட்டுக்களையும் குறித்து கிராமத்து நினைவுகள் பகுதியில் மழைக்காலம் என்னும் தலைப்பில் முன்பே பகிர்ந்திருக்கிறேன். எனவே இப்போது மழைத் தண்ணி பற்றிப் பார்ப்போம்.

மழை பெய்ததும் மேட்டுப் பகுதியில் இருந்து தாழ்வான பகுதி நோக்கி தண்ணீர் ஓடும்... அது பார்க்க சின்ன ஆறு போல் காட்சியளிக்கும். பெருமழை பெய்து முடிந்து தண்ணீர் ஓடும்போது அதன் மீது விழும் சிறு தூறலின் துளிகள் தெறித்து எழுவது அவ்வளவு அழகாக இருக்கும். இதேதான் கண்மாய் தண்ணீர் மீது மழைத்துளி விழும்போதும்... அந்த அழகை எல்லாம் நேரில் ரசித்திருந்தால் மட்டுமே சிலாகித்துப் பேசமுடியும். மற்றபடி சினிமாவில் மழை பெய்வதைப் பார்த்தேன்... முகநூலில் மழை பெய்ததைப் பகிர்ந்திருந்தான் பாரு... செம... என்றெல்லாம் பேசத்தான் முடியுமே தவிர அதை அனுபவித்த அந்த சுகானுபவத்தை ஒருபோதும் உடம்பில் சில்லிட வைக்க முடியாது.

நகரங்களை விட கிராமங்களில்தான் மழைத்தண்ணீர் ஓடும் அழகை அதிகம் ரசிக்க முடியும். காரணம் என்னவென்றால் பத்துப் பதினைந்து வீடுகள் நெருக்கமாய் இருக்கும்... அவற்றிற்கு இடையே சந்துகள் இருக்கும்... பெய்யும் மழைத்தண்ணி வீடுகளின் ஓடுகளிலும் கூரைகளிலும் விழுந்து வெளியாகி சந்துக்களின் வழியாக தாழ்வான பகுதிகளான வயல்களை நோக்கியோ அல்லது ஊரை ஒட்டியிருக்கும் சிறு ஊரணிகளை நோக்கியோ பயணிக்கும்... சலசலவென ஓடிவரும் தண்ணீரில் குதிகால் நனைய எதிர்புறமாக ஓடுவது... குறுக்கே அணை கட்டி தண்ணீரை நிரப்பி அணையில் ஓட்டையிட்டு திறந்து விடுவது... காகிதக் கப்பல், கருவை , வேப்பமர இலைகளைப் பறித்து அதில் விடுவது... என எல்லாமுமே மழையில் நனைந்தபடியே நடக்கும். அப்படி அனுபவித்த அந்த இன்பம் அலாதியானது.  இப்ப லேசா நனைந்தாலே சளி பிடிக்கும் என்கிறோம். ஒரு தும்மல் தும்மினாலே டாக்டரிடம் ஓடுகிறோம். அன்று தும்மியபடியே மழையில் ஆடிய நாட்கள் நிறைய உண்டு. ஏன் மழை விட்டதும் ஈர மணலில் கபடி விளையாடுவதும்... சண்டையிடுவதும் கூட நடக்கும்.

மழை ஓட்டு வீட்டின் மீது சடச்சடவென பெய்யும் போது அந்த வீட்டுக்குள் அமர்ந்து அந்த இசையைக் கேட்பது கூட ஒரு சுகம்தான். மழை வேகம் பிடிக்க ஆரம்பித்தவுடன் மழை நீர் ஓடுகளில் நெளிவான பாதையில் பயணித்து கீழே விழ ஆரம்பிக்கும். மழையின் வேகத்துக்கு ஏற்ப நீரும் ஓடுகளின் வழியே வழிந்து தரையைத் தொட்டு பயணிக்கும். அந்த மழை நீரை பாத்திரங்களில் பிடித்து வைத்து சமையலுக்கும் குடிக்கவும் பயன்படுத்துவார்கள். மழை விழ ஆரம்பித்ததும் பிடிக்க மாட்டார்கள். ஓட்டில் இருக்கும் அழுக்கெல்லாம் போகட்டும் என்று கொஞ்சம் நேரம் தண்ணீரை பிடிக்காமல் இருந்து பின்னர் பிடிப்பார்கள். அண்டா, குண்டா, அலுமினியப் பாத்திரங்கள், காசாணித் தவலைகள் என எல்லாவற்றிலும் நீரை நிரப்பி வைப்பார்கள்.

மழை நீரில் சமைத்தால் சாதம் பூப்போல இருப்பதுடன் மறுநாள் கஞ்சி குடிக்கும் போது அதில் இருக்கும் நீச்சத்தண்ணியும் (நீராகாரம்) மணமாக இருக்கும். கண்மாய்த் தண்ணீரில் சமைத்தாலும் இப்படித்தான் இருக்கும்.  கண்மாயில் தண்ணீர் குறைந்து தெளிவில்லாமல் கிடக்கும் நீரை மண்டித் தண்ணீர் என்போம். சமையலுக்காகவே அதைக் கொண்டு வந்து பானையில் ஊற்றி தேத்தாங்க் கொட்டையை வைத்து தண்ணீருக்குள் உரசி உரசி மண்டித் தண்ணீரை நல்ல தண்ணீராக மாற்றி சமையலுக்கு பயன்படுத்துவார்கள். 

மழை நாட்களைத் தொடர்ந்து வீட்டிற்கு யாராவது வந்தால் கூட மழைத்தண்ணி இருந்தா கொடுத்தா... பைப்புத்தண்ணி தாகம் நிக்கிது இல்லை என்பார்கள். கிராமங்களில் வீட்டுக்கு வீடு மணலைப் பரப்பி அதன் மீது மண்பானையில் தண்ணீர் நிரப்பி குடிக்கப் பயன்படுத்துவார்கள். அதில் மழைத் தண்ணீரை ஊற்றி வைத்தால் தொண்டைக்குள் இறங்கும் போது அப்பப்பா... என்ன... சில்லு... ஆஹா... செம்பு... செம்பா தண்ணி போய்க்கிட்டே இருக்கும். அதிலும் குறிப்பாக தண்ணீர் வாசமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே வெட்டி வேர் கொண்டு வந்து போட்டு வைப்பார்கள்.


மழைக் காலம் முடிந்தாலும் அண்டா, குண்டாக்களிலும் இருக்கும் தண்ணீரை மழைத்தண்ணி.. மழைத்தண்ணி என்று வைத்து வைத்துக் குடிப்பார்கள். அதுவும் ஓட்டில் இருந்து வழியும் இந்த மழை நீரைப் பிடிப்பதற்காகவே தகரம் வாங்கி அழகாக வளைத்து நாலைந்து ஓடுகளைச் சேர்த்து அடித்து வைத்திருப்பார்கள். அதாவது நாலைந்து ஓடுகள் வழியாக வழியும் தண்ணீரெல்லாம் அந்த தகரத்தின் வழியே வந்து மொத்தமாக குடத்தில் விழும்.  மேலே படத்தில் இருப்பது போல் மொத்தமாக தகரம் வளைத்து ஓரு ஓரத்தில் மட்டும் விழ வைப்பார்கள்.

எங்கள் வீட்டில் கூட ஆரம்பத்தில் ஓடுகளின் மூலம் விழும் தண்ணீரைப் பிடிக்க அம்மா, அக்காவெல்லாம் பரபரப்பாக இருப்பார்கள். நாங்கள் பாத்திரங்களை எடுத்துக் கொடுப்போம். நனைந்து கொண்டே தண்ணீர் பிடிப்பது கூட சுகம்தான் இல்லையா... அப்படியாவது மழையில் நனையலாமே என்ற நப்பாசைதான்... டேய் நனையாதேடா என அம்மா கத்திக் கொண்டு நின்றாலும் நாம நனையாம இருப்போமா என்ன... அப்போதுதான் எல்லா வேலையும் பாக்குறது. அப்படித்தான் இந்த தண்ணீர் பிடிக்கும் நிகழ்வும்.

கூரை வீடாக இருந்தால் அதில் தண்ணீர் பிடிக்க முடியாது. அவர்கள் எல்லாம் பக்கத்து வீடுகளில் குடம் கொடுத்துப் பிடித்துக் கொள்வார்கள். எங்கள் வீட்டில் கூட முன்னால் கிடந்த இடத்தில் ஒரு கிடுகு கொட்டகை போட்டபோது கிடுகு கொட்டகை மற்றும் ஓட்டு வீடு இணையும் இடத்தில் தகரம் அடைத்து தண்ணீர் உள்ளே விழாதவாறு வைத்துவிட்டோம். அத்தோடு மழை நீர் பிடிக்க முடியாமல் போய்விட்டது. ஆனால் மழைத்தண்ணி குடிக்காமல் இருக்க முடியுமா என்ன மழை பெய்ய ஆரம்பித்ததும் அருகே இருக்கும் பஞ்சம்மா வீட்டுக்கு குடங்களைக் கொண்டுக்கிட்டு ஓடுவோம். குடம் குடமாக பிடித்துத் தூக்கி வருவோம். சில நேரங்களில் பஞ்சம்மாவே பிடித்து நிறைத்து வைப்பார். மழை விட்டதும் போய் தூக்கி வருவோம். பெரும்பாலும் அக்கா தூக்கி வந்துவிடும். சில நேரங்களில் நானும் தம்பியும் உதவியாய்...  மழைத்தண்ணி மீது அம்புட்டு ஆசை.

பள்ளியில் இருந்து வரும்போது செம்மண்ணில் நிறைந்து நிற்கும் மழைத்தண்ணியில் ஆட்டம் போட்டு வந்த காலம் எல்லாம் கனாக்காலம் போங்க. ம்... இப்பவும் மழையில நனைய ஆசைதான்... ஊரில் இருக்கும் வரை மழையில் நனைந்து கொண்டு வண்டியில் பயணம் செய்திருக்கிறேன். இங்க தினமும் வேர்வையில் நனைகிறேன்...

-'பரிவை' சே.குமார்.

36 எண்ணங்கள்:

ஸ்ரீராம். சொன்னது…

ஈரமான நினைவுகள். மழைத் தண்ணீரை குடிக்கவோ, சமையலுக்கோ பயன்படுத்தியதில்லை.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

சில்லிட்ட வைத்தது இனிய நினைவுகள்...

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

எங்களது பள்ளி நாள்களை நினைவுபடுத்திவிட்டீர்கள். மழை காலத்தில் நாங்கள் பண்ணும் அட்டகாசத்தை நினைத்தால் இன்னும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

கார்த்திக் சரவணன் சொன்னது…

மழை பெய்த அடுத்தநாள் ஊரிலிருக்கும் ஊருணி, சுனைகள் நிரம்பியிருக்கும். அங்கே ஒரு ஆனந்தக் குளியல் போடுவோமே... அழகான நினைவுகள்....

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

நினைவுகள் என்றுமே இனிமையானவை
தம+1

சாரதா சமையல் சொன்னது…

உங்கள் நினைவுகளை அருமையான பதிவாக கொடுத்தீருக்கீங்க குமார்.

balaamagi சொன்னது…

மழையில் நனைய இன்னமும் பிடிக்கும்,
அருமையான நினைவலைகள்,,,
வாழ்த்துக்கள்.
நன்றி.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

ஆஹா உங்கள் அனுபவங்கள் அனைத்தும் எங்களுக்கும் உண்டு...வீட்டில் பானை பானையாக பாத்திரங்களில் எல்லாம் மழைத் தண்ணீர் பிடித்து, அதிலேதான் சமையல் செய்து. குடித்து, குளித்து ஆட்டம் போட்டு....அதுவும் வெயில் காலம் முடிந்து முதல் மழையில் நனைவது இருக்கே ஆஹா.....ஊரில் உள்ள வாய்க்காலில் ஆடுவோம்....மழைத்தண்ணீர் நிரம்பி வழியும் வாய்க்கால்....அந்த மழைத்துளிகள் தட் தட் என்று நாதத்துடன் முற்றத்தில் விழுந்து தெரிக்குமே ஆஹா....கிராமத்து நினைவுகள்...மழைத் தண்ணீரில் துணிகள் நன்றாக வெளுக்கும் தெரியும் இல்லையா சோப்பு நுரை நன்றாக வரும்.....

இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம் அருமையான பதிவு....மனதை நிறைத்தது....கண்ணில் ஏக்கத்துடன்...

கேரளாவில் இப்போதும் நன்றாக இருக்கும்...

சென்னையில் மழைத்தண்ணீர் பூமியைத் தொட்டபின் வாந்தி எடுக்க வைக்கும்....

KILLERGEE Devakottai சொன்னது…

நினைவுகள் பின்னோக்கி ஓடியது நண்பரே...

”தளிர் சுரேஷ்” சொன்னது…

சின்ன வயதில் தாத்தா வீட்டில் இப்படி மழை நீர் பிடிப்பது உண்டு! ஓட்டில் இருந்து விழும் அந்த நீரை கொதிக்க வைத்து அருந்துவது உண்டு. அதன் வாசமே தனி! அருமையான நினைவுகளை கிளறி விட்டீர்கள்! நன்றி!

இளமதி சொன்னது…

மழைத் தண்ணி மனசுக்குத் தந்த சுகமே தனி!

மிக மிக அருமையான கிராமத்து நினைவுகளில் எங்களைக்
கரைத்துவிடுகிறீர்கள் சகோ!
மனம் லயித்து வாசித்தேன்!
முடிவில் நீஈஈஈண்ட பெருமூச்சு மட்டுமே எங்களுக்கு இங்கு மிச்சம்!..:(

மிகச் சிறப்பு! வாழ்த்துக்கள் சகோ!
த ம +

சென்னை பித்தன் சொன்னது…

மழை என்பதே மகிழ்ச்சி தரும் ஒன்ரு .முற்றத்தில் அரிக்கஞ்சட்டி வைத்துத் தண்ணீர் பிடித்த நாட்கள்!
நினைவுகளைத் தட்டி எழுப்பிய பகிர்வுக்கு நன்றி குமார்

அ. முஹம்மது நிஜாமுத்தீன் சொன்னது…

//மழையில் நனைந்து கொண்டு வண்டியில் பயணம் செய்திருக்கிறேன். இங்க தினமும் வேர்வையில் நனைகிறேன்...//

அட, இதுவும் மழைதான் - வியர்வை மழை!

சுகமான பதிவு!!

வெங்கட் நாகராஜ் சொன்னது…

இனிமையான நினைவுகள். நெய்வேலியில் மழையில் நனைந்து, வாசலில் இருக்கும் கால்வாயில் பேப்பர் கப்பல்கள் செய்து விட்டு விளையாடுவோம்.... தில்லியிலும் மழை அவ்வப்போது பெய்கிறது. தில்லியில் பலரும், பெரியவர்கள் கூட மழையில் நனைவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்! குழந்தைகளோடு மழையில் நனைந்து விளையாடுவார்கள். நமக்குத் தான் கொஞ்சம் தயக்கம்! :)

Nagendra Bharathi சொன்னது…

அருமை

Unknown சொன்னது…

மலரும் நினைவுகள்! அதில் நனைந்தேன் நானும்!

துரை செல்வராஜூ சொன்னது…

மழை பற்றிப் படிக்கும் போது - மழைச் சாரலாக மனதில் மகிழ்ச்சி!..

யாருக்குத் தான் மழையில் நனையப் பிடிக்காது!..

ராமலக்ஷ்மி சொன்னது…

நினைவுகளை மலரச் செய்யும் அருமையான பதிவு.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க நண்பரே...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அம்மா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சகோதரி...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க துளசி சார் / கீதா மேடம்..
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சகோதரா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அக்கா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சகோதரா...
ரொம்ப நாள் ஆச்சு...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க நண்பரே...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அக்கா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.