மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2015

தணியுமோ சா'தீ'...!


'சாதிகள் இல்லையடி பாப்பா...' என்று குழந்தைகளிடம் சொன்னான் பாரதி. ஆனால் நாம் பள்ளியில் சேர்க்கும் போதே என்ன சாதி என்று சேர்க்கை விவரக்குறிப்பில் எழுதிக் கொடுத்துவிட்டுத்தான் வகுப்பறைக்கு அனுப்புகிறோம். அங்கு பாரதி சொன்னான் என்று சொல்லிக் கொடுத்தாலும் நான் இன்னார்தான்... இந்தச் சாதிதான் என்பதை பள்ளிக்கூடம் அழகாகச் சொல்லிக் கொடுக்கிறது. அப்புறம் எப்படி சாதிகள் இல்லையடி பாப்பான்னு சொல்லி சாதி என்னும் தீய விதையை முளைக்காமல் செய்வது...?

சில வருடங்களுக்கு முன்னர் வரை கல்லூரிகளில் சாதிப்பற்றும் சாதீய அடிதடிகளும் கொடிகட்டிப் பறக்கும்... இப்போது குறைந்திருப்பது போல் தெரிகிறது.  எங்கள் கல்லூரி அன்று சாதி என்னும் சகதிக்குள்தான் கட்டிடங்களாய் நின்றது ஆனால் இன்று நிறைய மாற்றங்களைச் சந்தித்து சிறப்பான கல்லூரியாக உயர்ந்து நிற்கிறது.  நாங்கள் படிக்கும் போது அரிவாள் வெட்டுக்களும் அடிதடிகளும் நிறைந்திருந்தது. அடிதடிகளோ காலவரையற்ற கல்லூரி மூடலோ இல்லாத வருடம் எதுவுமேயில்லை என்று சொல்லலாம்.  அந்தளவுக்கு ஜாதீய மோதல்களும் நீ பெரியவனா... நான் பெரியவனா என்ற அடிதடி ஆட்டங்கள் நிறைந்திருக்கும். இன்று கல்லூரிக்குள் ஜாதீய தாக்கங்கள் குறைந்து இருப்பது போல் தெரிகிறது. தூரத்துப் பச்சை கண்ணுக்கு அழகாக இருக்கும் என்பார்கள். அது போல் இருக்கலாமோ என்று நினைத்தாலும் அன்றைக்கு இருந்த சூழலுக்கும் இன்றைய சூழலுக்கும் நிறைய வித்தியாசம் இருப்பதைக் காண முடிகிறது. மாற்றங்கள் நன்மையைக் கொடுத்தால் நல்லதே.

சா'தீ'.... இது இன்று உயிர்க்கொல்லும் விருட்சமாக நம் முன்னே நிற்கிறது. இதை முழுவதுமாக அழித்துவிடலாம் என்றெல்லாம் கனவுக்கோட்டை கட்ட முடியாது. ஏனென்றால் அன்று இருந்த சாதி வெறிக்கும் இன்றைய சாதி வெறிக்கும் நடுவில் ஏகப்பட்ட மாற்றங்கள்... அன்று பெரும்பாலும் அடிதடியில் முடிந்தது... இடைப்பட்ட காலங்களில் கொலை வாளினை எடடா என்று கவிஞன் சொன்னதை தப்பாக புரிந்து கொண்டு மாற்றி மாற்றி வெட்டிக் கொண்டார்கள். இன்று இன்னும் மேலே போய்விட்டார்கள். இந்த சாதியின் வெறி எந்தளவுக்கு முன்னேறியிருக்கிறது என்பதை சமீபத்திய தேர் எரிப்பு சம்பவம் சொல்லும். எப்படிப்பட்ட கொடுமை அது... இதற்கு மேல் என்ன செய்ய வேண்டும்.... சொல்லுங்கள்.

இந்த நிகழ்வுக்கு பின்னர் நடந்த நிகழ்வுகளை அனைவரும் அறிவோம். கவிஞர் பழனி பாரதி தனது முகநூல் பக்கத்தில் தீச்சுவாலையின் படமிட்டு 'தேர் எரிகிறதே... 
தேவி எங்கே போயிருக்கிறாள்..?' 
என்று எழுதியிந்தார். இங்கே சாமி இருக்கு... இல்லை என்ற இருபாலரும் பலவிதமான கருத்துக்களைப் பகிர்ந்திருந்தார்கள். அது குறித்து நான் பேசவரவில்லை... ஏனென்றால் நான் தீவிர சாமிப் பற்றுள்ளவன்... எனவே எது குறித்துப் பேசினாலும் சர்ச்சைதான்.... காரணம் இருக்கு என்று நினைப்பவன் வழியும் இல்லை என்று நினைப்பவன் வழியும் நன்றாகவே பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது. எனவே இங்கு சாமி குறித்த விவாதத்திற்கு பயணப்பட விரும்பவில்லை...  நாம் பேச வந்தது சா'தீ' என்னும் கொடுர ஜ்வாலையைப் பற்றித்தான்... எனவே அதன் பின்னே செல்வோம். திரு. பழனி பாரதியின் கவிதையைப் படித்ததும் அதை வைத்தே நானும் கவிதை ஒன்றை நீளமாக எழுதினேன்... இன்னும் பதிவிடவில்லை...  
தேர் எரிகிறது...
தேவியும் எரிகிறாள்...
வெற்றியுடன் 
வேடிக்கை பார்த்துச்
சிரிக்கிறது 
சா'தீ'ச் சுவாலை... 
என்று ஆரம்பித்து இன்னும் சில சா'தீ'ய சாடல்களோடு முடித்திருக்கிறேன்.... இன்னும் கொஞ்சம் நெருப்பின் ஜ்வாலையைக் கூட்டினால் நல்லாயிருக்குமே என்பதால் அப்படியே வைத்துவிட்டேன். 

இந்தச் சா'தீ' எத்தனையோ உயிர்களைக் குடித்திருக்கிறது... இந்த சாதீய மோதலில் இவன் மட்டுமே அடிக்கிறான்... அவன் அடிவாங்கிக் கொண்டே இருக்கிறான் என்பதெல்லாம் சுத்தப் பொய்... இவனும் அடிக்கிறான்... அவனும் அடிக்கிறான்... சாதி என்னும் சகதியை இங்கே அம்புட்டுப் பயலும் சந்தனமாகத்தான் பூசிக் கொண்டு திரிகிறான். இவனுக்காக அவனை ஓட ஓட அடிக்கிறார்கள் என்பதெல்லாம் அரசியல்வாதிகள் அரசியல் நடத்த கட்டும் கதைகள்... அதை நம்பி அவனுக பின்னால் போய் பாதாளத்துக்குள் விழுந்து சாகிறார்கள் பரிதாபத்துக்குரிய சாதி ஆடுகள். என்ன செய்வது... இங்கே படிப்பு கற்றுக் கொடுப்பதைவிட சாதி கற்றுக் கொடுப்பதே பெரிதாகத் தெரிகிறது.

இவன்... அவன்... என்ற வாசகங்கள் குறிப்பிட்ட சாதிக்கானது அல்ல... எல்லாச் சாதியினருக்கும்தான்... ஒரு இடத்தில் இந்த ரெண்டு சாதிக்காரணும் அடித்துக் கொள்கிறான் என்றால் மற்றொரு இடத்தில் அந்த ரெண்டு சாதிக்காரனும் அடிச்சிக்கிறான். ஆக இது எல்லா இடத்திலும் மாறி மாறி நடந்து கொண்டுதான் இருக்கிறது. இலக்கியம் வளர்க்கலாம் வாருங்கள் என்று அழைத்தால்  நாமோ சா'தீ'யைத் தூக்கி சட்டையாக அணிந்து கொண்டு ஆங்காங்கே இயக்கம் வளர்த்துக் கொண்டிருக்கிறோம். அரசியல் கட்சிகள் சா'தீ'யை வைத்து தங்கள் பொழப்பை நடத்திக் கொண்டிருக்கின்றன. அதிலும் இன்றைய தமிழக அரசியல்.... அய்யோ... சாக்கடையிலும் கேடுகெட்ட சாக்கடையாகிவிட்டது.... இப்ப அரசியல்வாதிகள் எல்லாருமே எப்படியாவது கட்சி நடத்தணுமின்னு நினைக்கிறானுங்க... செத்த வீட்ல பொணத்தைப் போட்டுக்கிட்டு அரசியல் நடத்துறானுங்க... இதைவிட கேவலம் என்ன இருக்கு..? சாதி ஒரு பக்கம் அழிவைக் கொடுத்தால் தமிழக அரசியல் ஒரு பக்கம் அழிவை நோக்கி பயணிக்க வைத்துக்  கொண்டிருக்கிறது.

சாதி மோதலால் தேரோட்டங்களும், திருவிழாக்களும் நிறைய இடங்களில் நிறுத்தப்பட்டுவிட்டன. இனி இந்த மோதல்கள் குறைந்து எல்லோரும் ஒன்றாகி திருவிழாக்கள் நடப்பது என்பது அரிது. தேரோட்டங்களை எல்லாம் நம் தலைமுறைக்குப் பின்னர் வரும் தலைமுறை காண்பதரிது... வேண்டுமென்றால் வரும் காலங்களில் எல்லா ஊரிலும் சாதித் தேர்களை ஓட்டுவார்கள்... கண்டு ரசிக்கலாம்... ஆனால் அதிலும் ஒரு பிரச்சினை இருக்கு... எந்தச் சாதிக்காரன் நடத்துகிறானோ அவன் சாதியினர் மட்டுமே கலந்துக்க முடியும்... மற்ற சாதிக்காரன் கலந்துக்க முடியாது... அப்படி போனார்கள் என்றால் ரத்தக் களறிதான்... அடிதடிதான்... அங்கே தூண்டி முள்ளில் புழுவை மாட்டி தண்ணிக்குள் போட்டுவிட்டு மீனுக்காக காத்திருக்கும் நிலையில் இருக்கும் அரசியல்வாதிகள் மைக் பிடித்து அரசியல் பண்ண ஒரு சிறந்த களமாகத்தான் அது இருக்கும். இதையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்றால் வீடுகளில் வீடியோ கேமில் தேர் ஓட்டி மகிழலாம்.

என்னைப் பொறுத்தவரை இந்த சாதி, சவக்காரம் எல்லாம் பார்ப்பதில்லை... எனக்கும் சாதி இருக்கு... அதன் மீது பற்றும் இருக்கு... ஆனால் அடுத்தவனை அடித்து மிருக மனம் கொண்டு அலையும் அளவுக்கு பற்றில்லை... என்னைப் பொருத்தவரை எல்லோரும் ஓர் இனம்... எல்லோரும் ஓர் குலம்தான்... படிக்கும் காலத்தில் எங்கப்பா நாம இந்தச் சாமி கும்பிடுறவங்க... அவங்க வீட்ல எல்லாம் சாப்பிடக்கூடாது என்று கத்திக் கொண்டுதான் இருப்பார். ஆனால் நான் மூன்று வேலையும் என் நண்பன் வீட்டில் சாப்பிட்டுவிட்டு வருவேன். அந்தத் தாயின் அன்பின் முன்னால் எனக்கு அவர்களின் சாதி சிறுமையாகவோ என் சாதி பெரிதாகவோ தெரிவதில்லை.  படிப்பறிவில்லை என்றாலும் அந்தப் பாசத்துக்கு முன்னே எல்லாமே பொடிப்பொடியாகிவிடும். என்னைப் பற்றி என் நண்பனுக்குத் தெரியும்... அவனைப் பற்றி எனக்குத் தெரியும்... இந்தப் பாசமும் அன்பும் இன்றும் எங்களுக்குள் தொடர்கிறது. 

திருமணத்திற்குப் பிறகு 'என்னங்க அவங்க வீட்ல சாப்பிட்டுக்கிட்டு... நம்ம சாதி சனம் என்ன சொல்லும்...?' அப்படின்னு சொல்ற மனைவி அமைந்திருந்தால்... ஒருவேளை மனைவி சொல்லே மந்திரம் என்னும் வாக்கைப் பிடித்துக் கொண்டு நானும் மாறியிருக்கலாம்.... 'இல்லை அப்படித்தான் சாப்பிடுவேன் இப்ப என்ன உனக்கு...' என சண்டையும் இட்டிருக்கலாம். எப்படி என்றாலும் தலையணை மந்திரம்தானே ஜெயிக்கும்... ஆனால் என்னவள்... எனக்கு வாய்த்தவள் அப்படி அல்ல... என்னைப் போலவே.... இன்றும் அண்ணன் வீட்டுக்கு போனேன் அங்கயே சாப்பிட்டுட்டு வந்துட்டேன் என்று சொல்வார். இதைவிட வேறென்ன வேண்டும். எங்களுக்கும் சா'தீ'ச் சுவாலை எல்லாம் இல்லை...  உறவுகளின் உன்னதம் மட்டுமே இருக்கிறது.

நண்பர் நாடோடி இலக்கியன், அவரின் நண்பர் ஒருவர் 'எல்லாச் சாதிக்காரர்கள் வீட்டிலும் சாப்பிடுவியா?' எனக் கேட்ட கேள்விக்கு சொன்ன பதிலை முகநூலில் பகிர்ந்திருந்தார்.  'கண்டிப்பா, ஆனா ஒரே ஒரு கண்டிஷன் தான். சாப்பாடு நாக்குக்கு சொரணையா இருக்கணும். இல்லீன்னா நான் சார்ந்த சாதியுமே எனக்கு ஆகாதுன்னேன்' என்று சொல்லியிருந்தார். நானும் இந்தச் சாதிக்காரந்தான்... ஆம் சாப்பாட்டுச் சாதி...  சாதியையும் மதத்தையும் தூக்கிச் சுமந்து என்னைத் அள்ளிக்கிட்டுப் போகப்போறோம். மறைந்த நம் ஐயா கலாம் அவர்கள் மதத்தையோ சாதியையோ தூக்கிக்கிட்டு திரியவில்லை... மாறாக மனிதத்தை அரவணைத்தார்... அவர் இறந்த அன்று சாதி, மதம் எல்லாம் முன்னுக்கு வராமல் பின்னால் நிற்க, மனிதம் மட்டுமே முன்னுக்கு வந்தது... அதுவே கண்ணீர் சிந்தியது... அதுதான்... அதுமட்டும்தானே அய்யா வேணும்... மனுசன் இறந்தப்போ இவன் சாதிமானுய்யா என்று சொல்வதைவிட... மனுசன்யா என்று நாலுபேர் சொல்ல வேண்டும்... சில துளிகள் கண்ணீர் விழ வேண்டும்... அதுதான் வாழ்ந்ததற்கான அடையாளம்.

இன்றைய நிலையில் சாதியை முழுவதுமாக ஒழித்து விடலாம் என்று நம்புவது முட்டாள்தனம்... ஏனென்றால் அது விருட்சமாகி விண்ணைத் தொட்டுவிட்டது. அழிப்பது என்பது ஆகாயத்தில் கோட்டை கட்டுவது போல்தான்.... யாராலும் அழிக்க முடியாது... நம்மளாலே சாராயக்கடையையே மூட முடியலையே... அம்மா... அம்மான்னு கத்துனாலும் அது சும்மா போய்க்கிட்டே இருக்கே... அப்புறம் எப்படி சாதியை ஒழிக்கிறது...இதுல என்ன கூத்துன்னா சாராயக்கடையை ஒழிக்கணுமின்னு கத்துற எந்த அரசியல்வாதியும் சாதியை ஒழிக்கணுமின்னு கத்த மாட்டான். ஏன்னா சாதி ஒழிந்தால் சாதிக்கட்சிகளுக்கு வேலை இல்லையே... அந்த நாதாரிங்க பொழப்பே இதை வச்சித்தானே ஓடுது. 

சாதிக்கட்சி என்றதும் எப்படி நீ எழுதலாம் என்று கேட்க ஆட்கள் இருக்கும் ஏன்னா சாதிக்கட்சிகள்ல சிலது மட்டுமே தனித்து தெரிகின்ற காரணத்தால் எதிர்ப்பதற்கு ஆள் இருக்கும். இங்க ஒண்ணு சொல்லிக்கிறேன் எல்லாச் சாதிக்கும் கட்சியிருக்கு... கொடியும் இருக்கு என்பதை யாரும் மறுக்க முடியாது. ஏன் என்னோட சாதிக்கும் ஒரு கட்சி இருக்கு... ஒரு கொடியிருக்கு... ஏன் தலைவர் கூட இருக்காரு... தேர்தலுக்கு தேர்தல் தவறாம போட்டியும் போடுவாரு... ஆனா சாதிக்காரப்பய எவனும் ஓட்டுமட்டும் போடமாட்டான்... இது எல்லாச் சாதியிலயும் நடக்குறதுதான்... இல்லையின்னாத்தான் இன்னேரம் சாதிக் கட்சி தலைவரெல்லாம் முதல்வராயிருப்பானுங்களே...

இந்த முகநூல்ல நடக்குற கூத்து அதைவிட, தன்னோட சாதி குறித்தான பதிவுகளுக்கும். சாதிக் கட்சி தலைவர் குறித்த தம்பட்டங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க பல நண்பர்கள் இருக்கிறார்கள். சாதி, சாதி என குழு சேர்த்துக் கொண்டு அவர்கள் செய்யும் கூத்து இருக்கே. அப்பப்பா... என்னைக்கு மார்க் கதவை இழுத்து மூடப் போறான்னு தெரியலை.... சாதி பேசியே சில இலக்கியங்கள் எழுதிய சிவக்குமாரை ஓட வைத்ததை நாம் அறிவோம். எழுத்தாளர் பெருமாள் முருகனின் நாவல் பிரச்சினையில் அங்கே சாதி சந்தி சிரித்தது. இப்ப பேருக்கு பின்னால படித்தபடிப்பு போல சாதி வேற... சாதிச் சண்டைகள் நேரும் போதெல்ல்லாம் படிப்பறிவு இல்லாதவனுக சாதியை தூக்கிக்கிட்டு அலையுறானுங்கன்னு சொல்லுவாங்க.... ஆனா இப்ப படிச்சவன்தாய்யா சாதியை தூக்கிக்கிட்டு அலையுறான்...  ஒருத்தன் பிரபலமாயிட்டா அவன் என்ன சாதியின்னு தேடி எடுத்து எங்கள் சிங்கம்ன்னு போடுறானுங்க... இந்த முகநூல் இலக்கியம் வளர்க்குதோ இல்லையோ.... சாதியை சத்தமில்லாமல் வளர்க்கிறது.

அதே போல இப்ப ஊரில் நல்லது கெட்டது எல்லாத்துக்கும் பிளக்ஸ் அடிக்கிறானுங்க... முன்னெல்லாம் சாதாரணமா அடிக்கப்பட்ட பிளக்ஸ், பின்னர் நடிகர், அரசியல் தலைவர்களைத் தாங்கி வந்தது. குறிப்பா நாலு வரியின்னாலும் நல்ல வாசகங்கள் அடங்கியிருக்கும். ஆனா இப்பொழுது அடிக்கும் பிளக்ஸ்களில் சாதித் தலைவர் ஒரு பக்கம் சிரிக்க... சாதி நடிகர் ஒரு பக்கம் சிரிக்கிறார்...இடையில் 'இது .......... கோட்டை' என்று ஆரம்பித்து (புள்ளிகள் வைத்த இடத்தில் சாதி ஜொலிக்கும்)  அடேய்... உடேயின்னு வசனம். அப்புறம் பேருக்கு பின்னால புதிதாய் சாதி வேறு... இதெல்லாம் நல்லதுக்குதானா என்றால் இல்லைவே இல்லை என்று அடித்துச் சொல்லலாம்... சாதியை வளர்க்கும் செயல் இது... இதுதான் அடிதடிகளுக்கும் வெட்டுக் குத்துக்களுக்குமான ஆரம்பப்படி... ஆம் இவன் வைக்க, இதற்கு எதிராக அவன் வைக்க... இவன் தலைவனை அவன் கேவலப்படுத்த... அவன் தலைவனை இவன் கேவலப்படுத்த... அப்புறம் என்ன தலைவர்கள் பிளக்ஸில் சிரிப்பார்கள்... வைத்தவனின் பிள்ளைகள் பிணத்தில் விழுந்து அழுவார்கள்.

எங்க ஊரில் இந்த முறை திருவிழாவிற்கு படிக்கும் பையன்கள் வைத்திருந்த பேனரில் எல்லாம் சாதியும் அது சார்ந்த வசனங்களும்... அதில் வருத்தப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் ஒரு போஸ்டரில் சூப்பர் ஸ்டாராக நினைக்கும் பிரபல நடிகரும் பக்கத்துப் போஸ்டரில் திறமையான இயக்குநராய் அறிமுகமாகி நடிகராய் ஜொலிப்பவரும் சிரித்துக் கொண்டிருந்தார்கள். நாங்களெல்லாம் ஏன்டா சாதி அது இதுன்னு அடிச்சி வச்சிருக்கீங்க... தேவையில்லாத வேலை எதுக்குன்னு பேசிக்கிட்டு இருந்தோம். அப்போ அங்கு வேகமாக வந்த எங்க ஊர்க்காரர் ஒருவர் பிரபலத்தையும் இயக்குநரையும் மாறி மாறிப் பார்த்தார். இயக்குநரைக் கைகாட்டி அவன் நம்மாளு... நம்ம சாதிக்காரன்... அவனைப் போட்டீங்க... ரைட்டு... அப்படின்னு சொல்லிட்டு பிரபலத்தை கைகாட்டி இவன் இந்தச் சாதிக்காரன்... இவனை எதுக்கு இதுல போட்டீங்க... அதும் இது எங்க.... கோட்டையின்னு போட்டு இவன் படமா...? என்றாரே பார்க்கலாம்.  இந்தச் சாதி நடிகர்களைக் கூட சாதியை வைத்துப் பிரித்துப் பார்க்கச் சொல்கிறதே... சாதியை ஒழிப்போம் என்று நினைத்தால் இவர்கள் சாதி விளக்குக்கு சரக்கு ஊற்றுகிறார்களே என்ற வருத்தம்தான் மேலிட்டது.

இதுல இன்னொரு கூத்து, பட்டிமன்றம் பேச வந்த படித்தவர்கள் வரும்போதே கோவிலுக்கு அருகே இருந்த பிளக்ஸ் எல்லாம் பார்த்து படிச்சாச்சு... மேடையில் பேசும்போது கைதட்டலுக்காகவும் சில சில்லூண்டிகளின் விசில் சத்தத்துக்காகவும் இவர் உங்கள் சாதியில் பிறந்தார்... அவர் உங்கள் சாதியில் பிறந்தார்... உங்க சாதிக்காரங்க ரொம்ப நல்லவங்கன்னு பேசினார்கள். என்ன உலகம் இது... படித்தவர்கள் இடத்திற்குத் தகுந்தாற்போல் சாதி பேசுவதால் கிடைக்கும் கைதட்டலுக்கு மயங்கலாமா? அது கொடுக்கும் அற்ப சந்தோசம் மட்டும் போதுமா? சாதியை ஒழிப்போம் என்று சொல்லிக் கொண்டு எல்லா இடத்திலும் வளர்க்கும் விதமாக அதை ஒலிக்கலாமா..? 

சரிங்க... பேசினா பேசிக்கிட்டே போகலாம்... சா'தீ' இன்னும் எரித்துக் கொண்டேதான் இருக்கும்... குப்பை மேடு முதல் கோவில் வரை எரிக்கத்தான் செய்யும்... உயிர்களைக் கொன்று உள்ளம் குளிர அதில் சந்தோஷம் கொண்டு சதிராடும். சா'தீ'யை ஒழிப்போம் என்றெல்லாம் சூளுரைக்க வேண்டாம். எத்தனை பெரியார் வந்தாலும் திருந்த மாட்டீங்கடான்னு நாம வசனம் எல்லாம் பேசவேண்டாம்.  தாமாக திருந்தாத ஜென்மங்களைத் திருத்த பெரியார் எதற்கு வரவேண்டும். அப்படி வந்தால் அவரையும் சாதிக்குள் கொண்டு வந்து வைத்து அழகு பார்ப்பார்கள் இன்றைய சா'தீ'யவாதிகள். ஏனென்றால்  தேவர், அழகு முத்து, அம்பேத்கார் ஏன் கப்பலோட்டிய தமிழன் வ.ஊ.சி, சாதிகள் இல்லையடி பாப்பா என்று சொன்ன பாரதி என எல்லோரையும் ஒவ்வொரு சாதியும் தூக்கி வைத்துக் கொண்டிருக்கும் போது புதிதாக நம் நாட்டாராக இருந்த காமராஜைக் கூட ஒரு சமூகம் தங்கள் தலைவன் என்று கொண்டாட ஆரம்பித்துவிட்டது. எம் மக்கள் என அனைத்து மக்களுக்காகவும் போராடியவர்கள் எல்லாரும் ஏதோ சாதிக்காக சாதிக்க வந்தவர்கள் போன்ற மாயைக்குள் சாமிகளாக ஆக்கப்பட்டு அவரகள் வாழ்ந்த உன்னத வாழ்க்கை சாதிமான்களால் மறைக்கப்பட்டு வருகிறது என்பது வருத்தமான விஷயம்..

நாம் சா'தீ'யை ஒழிக்க வேண்டாம்... அதன் எரியும் நாக்கில் எண்ணெய் வார்க்காது இருப்போம்... அப்படியாவது அதன் ஜ்வாலை கட்டுக்குள் வருகிறதா எனப் பார்ப்போம்.  சாதிகள் இல்லையடி பாப்பா... என்ற பாரதியின் பாட்டை குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுப்போம்... சாதி ஒழிய அல்ல... முண்டாசுக் கவிஞனை நம் சந்ததி மறக்காமல் இருக்க... அதே நேரம் 
'சாதிகள் இருக்குதடி பாப்பா... 
ஆனால் சாதிச் சண்டைகள் இல்லையடி பாப்பா... 
ஆயிரம் சாதிக்குள்ளும் அன்பு நிறைந்திருக்குதடி பாப்பா' 
என்று பாட வைப்போம்.

'எல்லோரும் ஓர் குலம்... எல்லோரும் ஓர் இனம்' என்று வாழப் பழகுவோம். நாளைய உலகமாவது சாதிச் சண்டைகள் இல்லாத உலகமாக மாறட்டும்...


-'பரிவை' சே.குமார்.

21 எண்ணங்கள்:

ஜோதிஜி சொன்னது…

உங்கள் ஊருக்கு அருகே சுற்றிலும் உள்ள 50 க்கும் மேற்பட்ட கிராமங்களில் இப்போது தான் ஆதிக்கம் செலுத்தியவர்களின் கொட்டம் அடங்கி கொஞ்சமாவது மக்கள் சுவாசிக்கத் தொடங்கி உள்ளனர் குமார். இன்னும் (என் கணக்குப்படி) 30 வருடங்கள் சென்றால் பழைய பெருச்சாளிகள் மறைந்து இதற்கு ஒரு விடிவு காலம் பிறக்கும் குமார்.

துரை செல்வராஜூ சொன்னது…

பதிவும் - நெருப்பாகத் தான் தகிக்கின்றது..

KILLERGEE Devakottai சொன்னது…

வணக்கம் நண்பரே
அருமையானதொரு ஆக்கம் முதலில் வாழ்த்துகள்.
சாதியின் கொடுமை அன்று படிக்காதவர்கள் வாழ்ந்த காலத்தைவிட படித்தவர்கள் மட்டுமே இருக்கும் இன்றுதான் அதிகமாக கோலோச்சி இருக்கிறது
இந்த ஜாதீயை அணைப்பது மாணவர்கள் கையில்தான் இருக்கிறது இதை முதலில் மாணவர்கள் உணர வேண்டும் இதனைக்குறித்து நான் கருத்துரை எழுத வேண்டும் என்றுதான் நினைக்கிறேன் ஆனால் நானும் ஜாதியைக்குறித்த பதிவு எழுதி நெடுநாட்களாக கிடக்கிறது
ஆகவே இத்துடன் முடிக்கிறேன் அழகான வினக்கவுரைகளுடன் எழுதியமைக்கு மீண்டும் ஒருமுறை வாழ்த்துகள்

ஒன்றே குலம் ஒருவனே தேவன்
தமிழ் மணம் 1

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
உண்மைதான் அண்ணா... எங்கள் ஏரியா பரவாயில்லை... இன்னும் சில இடங்களில் கூத்தாடிக் கொண்டுதான் இருக்கிறது.
எங்கள் தேரும் (கண்டதேவி) சாதிச் சண்டைக்குள் சிக்கி நிற்கிறது.
சாதிப் பெருச்சாளிகள் மறைந்து சமத்துவம் கண்டால் நல்லதுதான்... ஆனால் சாதிக்கட்சிகளும் சாக வேண்டும் அண்ணா...

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

மிக மிக விரிவான அருமையான ஒரு பதிவு. இந்தச் சாதீ சிறிய ஊர்களிலும், கிராமங்களிலும்தான் இருக்கிறதாகத் தெரிகின்றது குமார். முக்கியமாக ஒரு காலத்தில் உயர்சாதி என்று சொல்லப்பட்டு மற்ற சாதிக்காரர்களைக் கொடுமைப்படுத்தியதாகச் சொல்லப்படுபவர்கள் இப்போது பெரும்பான்மையோர் சாதி பார்ப்பதில்லை என்றுதான் தோன்றுகின்றது. ஏனென்றால் சமீபத்தில் கேள்விப்பட்ட கல்யாணங்கள் போய்வந்த கல்யாணங்களில் 10 ல் 7 கல்யாணங்கள் வேறு வேறு சாதி, மதங்கள் இணைந்த கல்யாணங்கள். இருபாலாரின் பழக்க வழக்கங்களும் மேற்கொள்ளப்பட்டன கல்யாணங்களில்.

நகர வாழ்க்கையும், கல்வியும், சமூக அந்தஸ்து உயர்தலும், அது பணத்திலும், கல்வியிலும் சரி, வெளிநாட்டு வாழ்க்கை என்பவை ...இப்போதெல்லாம் இந்த சாதியை மறக்கடித்துவிட்டது எனலாம். இப்படிக் கல்வியும், நாகரீகமும்,பண்பாடும், வாழ்க்கைத் தரமும் வளர்ந்துவிட்டால் சாதி ஒழிந்துவிட வாய்ப்புகள் அதிகம் குமார்....நீங்கள் சொல்லுவது போல் சாதி இருந்தாலும் ஒருவருக்கொருவர் அன்புடன் வாழ்ந்துவிட்டால் வேதனை இல்லைதான்....

பாடல் அருமை...

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

நாம் வெட்கப்படவேண்டிய தற்போதைய இந்த நிகழ்வைத் தாங்கள் பகிர்ந்துகொண்ட விதம் அருமையாக உள்ளது. ஆழமாக விவாதித்துள்ளீர்கள். சாதியின் பெயரால் குட்டையைக் குழப்ப முயலுபவர்களால்தான் இந்த அளவு பிரச்சனையே.

”தளிர் சுரேஷ்” சொன்னது…

சாதிப்பற்றை விட்டுவிட ஜனங்கள் முயன்றாலும் அந்த சாதித் தலைவர்கள் விடுவதில்லை! தூண்டி விட்டு அதில் லாபம் தேட முயல்கின்றனர்! சிறப்பான பதிவு! நன்றி!

Angel சொன்னது…

//நாம் சா'தீ'யை ஒழிக்க வேண்டாம்... அதன் எரியும் நாக்கில் எண்ணெய் வார்க்காது இருப்போம்... அப்படியாவது அதன் ஜ்வாலை கட்டுக்குள் வருகிறதா எனப் பார்ப்போம்.// சரியாய் சொன்னீங்க .நகரத்தில் வளரந்ததால் நிறைய கொடுமைகள் தெரியாமலே வளர்ந்தேன் ..வேதனையா இருக்கும் fb யில் சில பகிர்வுகள் இவ்ளோ விஷமா மனித மனசு ன்னு :( ..

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

வேதனை நண்பரே
ஒரு காலத்தில் படிப்பறிவில்லாமல் சாதி போற்றினார்கள்
இன்று மெத்தப் படித்தவர்களே சாதியில் ஊறியிருக்கிறார்கள்
என்று மடியும் நம் சாதியின் மோகம்

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க துளசி சார் / கீதா மேடம்....
தாங்கள் சொல்வது உண்மைதான்... இப்போது கலப்புத் திருமணங்கள் அதிகரித்தாலும் சாதி வாங்கும் காவுகள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.... சாதியை வளர்ப்பதில் முகநூல் முக்கிய பங்காற்றுகிறது....

ஒருவருக்கு ஒருவர் அன்புடன் வாழ்ந்துவிட்டால் வேதனை இல்லைதான்... ஆனால் வாழணுமே...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க நண்பரே...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சகோதரி...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

இளமதி சொன்னது…

வருத்தம் மிகும் பதிவு சகோ!
என்று தொலையும் இந்தச் சாதீய சாபம்!

த ம +

துபாய் ராஜா சொன்னது…

என்ன சாதிக்குப் பிறந்தோம் என்பதை விட
என்ன சாதிக்கப் பிறந்தோம் என்று இளைய தலைமுறை எண்ணத் தொடங்கும் காலம் விரைவில் வரும் என நம்புவோம். அதுவரை நமது கருத்துக்களால் இளையோர் மனதை நெம்புவோம்.

மனோ சாமிநாதன் சொன்னது…

அனல் பறக்கிறது உங்கள் பதிவில்! மிக அருமை குமார்! ஆனாலும்
இன்னும் இந்த சாதி வேற்றுமைகள் இருந்து கொண்டு தானிருக்கிறது! முற்றிலுமாய் அழிய பல வருடங்கள் ஆகும்!

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ராஜா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அம்மா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.