மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 28 நவம்பர், 2015

மனசு பேசுகிறது : கூத்தாடிகளைக் கொண்டாடுவோம்


ன்னடா இவன் எல்லாரும் கூத்தாடிகள் நமக்காக போராட மாட்டார்களாம்... இனி அவர்கள் படங்களை நாம் யாரும் போய் பார்க்க வேண்டாம் என்று முகநூலிலும் டுவிட்டரிலும் செய்திகளைப் பகிர்ந்து வருகிறார்கள். விஷால் பட சூட்டிங்கை கல்லை எறிந்து விரட்டி நிப்பாட்டியிருக்கிறான் மறத்தமிழன். அப்படியிருக்க கூத்தாடிகளைக் கொண்டாடுவோம் அப்படின்னு தலைப்புல எழுதுறானேன்னுதானே பாக்குறீங்க. நாம காலங்காலமா அதைத்தானே பண்ணிக்கிட்டு வாறோம். இன்னைக்கு கூப்பாடு போடுவோம்... நாளைக்கே தெறியோ, வெறியோ வந்தா பால் குடம் எடுத்து, வேல் குத்தி அட்டையில செஞ்ச கூத்தாடியோ படத்துக்கு மேல ஏறி பால் அபிஷேகம் பண்ணுறோம்ன்னு நமக்கு பால் உத்த வச்சிருவோம். உடனே அந்தக் கூத்தாடி நடிகரும் நம்மளோட ஆத்தாவை கட்டிப்பிடிச்சி வராத கண்ணீரை வரவச்சி டயலாக்கெல்லாம் பேசி ஒரு அம்பது ஆயிரத்தை கொடுத்து போட்டோ எடுத்து விளம்பரமும் தேடிக்குவானுங்க... இந்த அம்பதாயிரம் அந்த ஆத்தாவுக்கு போதுமா..? நாம இருந்து 50, 100 கொடுக்கிறதை விட இது பெரிதா என்ன...? படுபாவிக பால் அபிஷேகம் பண்ணுறேன்னு இப்படி பல்லாக்குல பொயிட்டானேன்னு எவனாச்சும் உண்மையாவே வருத்தப்பட்டு இனிமே எவனும் எனக்கு கட் அவுட் வைக்க கூடாது, பால் அபிஷேகம் பண்ணக்கூடாதுன்னு சொல்றானுங்களா இல்லையே... அவனுக தொழில் நடிக்கிறது.... அதை சரியாப் பண்ணுறானுங்க... நாம இன்னமும் பால் அபிஷேகம் பண்ணிக்கிட்டு பால் காவடி எடுத்துக்கிட்டு இருப்போம்.

எனக்கும் சில நடிகர்களைப் பிடிக்கும்... அவர்களின் படங்களை பார்க்கப் பிடிக்கும்... அதற்காக சாகக்கிடக்கிறான்னு மொட்டை அடிக்கவோ, தலைவான்னு கத்திக்கிட்டு ரோட்டுல போறவங்ககிட்ட வம்பு பண்ணவோ, கட் அவுட் வச்சி நீதான் என் குலதெய்வம்ன்னு அபிஷேகம் பண்ணவோ செய்யும் கோமாளி ரசிகனாய் வாழவும் பிடிககது... அப்படி வாழ்பவர்களையும் பிடிக்காது. இவரின் படம் நல்லாயிருக்கும் என்று நினைப்பில் படம் பார்ப்பதுடன் சரி. கூத்தாடிகளைக் கொண்டாடிக் கொண்டு குடும்பத்தை திண்டாடவிடும் சாதரண தமிழ் ரசிகனைப் பார்க்கும் போது பற்றிக் கொண்டுதான் வருகிறது. என்ன செய்வது கூத்தாடிகளுக்கு அரியாசனத்தைக் கொடுத்துவிட்டு நாமெல்லாம் இன்னும் அறியாமை இருளுக்குள்தானே இருக்கிறோம்.

நாட்டுல ஒரு புயல், மழை வந்தால் போதும் நடிகர்கள் எவனும் ஒண்ணும் கொடுக்கலைன்னு நாமெல்லாம் கூப்பாடு போட ஆரம்பிச்சிடுறோம்... நாம் வாக்களித்து வெற்றி பெறச் செய்த எம்.எல்.ஏ., எம்.பி. ஏன் பஞ்சாயத்துப் போர்டு பிரசிடெண்ட், வார்டு கவுன்சிலர்ன்னு எவனையாச்சும் இதைச் செய்யலை... அதைச் செய்யலைன்னு நாம கேட்டிருக்கோமா...? அஞ்சு வருசத்துல அவன் சொத்து சேர்த்துக்கிட்டு பிச்சைக்காசு 1000, 2000த்தைக் கொடுத்ததும் மறுபடியும் நாம அவனுக்கு ஓட்டுப்போட்டு நீ மறுபடியும் சம்பாரிச்சுக்கடான்னு ஏத்தி உக்கார வச்சிடுறோம். ஆனா நடிகர்கள் எதுவும் செய்யலைன்னா குய்யோ முறையோன்னு குதிக்கிறோம். கேட்டால் கோடிகளில் புரள்கிறார்கள் என்று சொல்வோம். கோடிக்கணக்கில் சம்பாரிக்கும் எத்தனையோ பிஸினஸ்மேன்கள் நாட்டில் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் எல்லாம் ஏதாவது செய்கிறார்களா...? இங்கிருக்கும் தெய்வங்களுக்கு கூட கொடுக்காமல் திருப்பதி உண்டியலிலும், சபரிமலையிலும் கொண்டு போய் போடுவார்கள்.  அப்படியிருக்க நாம் நடிகர்களை மட்டுமே தொங்குவது ஏனென்று தெரியவில்லை.


ஒரு நடிகனுக்கு அது தொழில்... அவன் தொழிலில் அவனை வைத்து கோடிக்கோடியாக சம்பாரிக்க முடியும் என்ற தைரியத்தில் தயாரிப்பாளர் பணத்தைக் கொட்டுகிறார்.  நடிகனுக்கும் கோடிகளில் சம்பளம் கொடுக்கிறார். அளவுக்கு மீறிய வருமானம் என்றாலும் அது அவன் உழைப்புக்கான உதியம்தானே... ஒரு படத்துக்காக தன்னை வருத்தி... சாப்பாட்டில் தியாகம் செய்து... அதற்காக உழைத்து... நடித்துக் கொடுக்கிறான். அப்படியிருக்க அவனிடம் நீ அதற்கு உதவவேண்டும்... இதற்கு உதவவேண்டும் என்று எதிர்பார்ப்பதில் என்ன நியாயம் இருக்கு..? ஒருவன் உதவி செய்வது என்பது அவனது தனிப்பட்ட விஷயம்... நான் உதவினேன் என்று தம்பட்டம் அடித்துக்கொண்டு செய்வது உதவியல்ல... ஒரு லட்சம் கொடுத்தேன்... ஐந்து லட்சம் கொடுத்தேன்... என்று சொல்லி போட்டோவுக்கு போஸ் கொடுத்து கொடுப்பது எந்த வகை உதவி.... நாமெல்லாம் அடுத்தவனுக்கு கொடுப்பதென்றால் யோசிப்போம் ஆனால் நடிகன் மட்டும் நமக்கு கொடுக்க வேண்டும் என்று குரல் கொடுப்போம்.

கோடிக்கோடியாக சம்பாரிக்கும் எல்லாரும் ஒழுங்காக வரிக் கட்டட்டும். வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு  கட்ட முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயி ஒருபுறம் இருக்க, அரசாங்கமே பண முதலைகளுக்கு கடனை தள்ளுபடி செய்கிறது.  இது எந்த வகையில் நியாயம் என்று நாமெல்லாம் யோசிப்பது இல்லை. சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடவில்லை என்றால் சீனிவாசனுக்குத்தான் வருத்தம் இருக்கணுமே தவிர, அவரை விட நாம்தான் வருந்துகிறோம்... சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் நமக்கு என்ன லாபம்...? சென்னையில் போட்டி நடந்தால் நம்மிடம் டிக்கெட்டுக்கு பணம் வாங்கிக் கொண்டுதான் பார்க்க விடுவார்கள். இதுபோல் சினிமாவும்... குடும்பத்தைக் கவனிக்காது நடிகனுக்காக பாலபிஷேகம், பீர் அபிஷேகம் எல்லாம் நம் காசில் பண்ணினாலும் தியேட்டருக்குள் டிக்கெட் எடுத்துத்தான் படம் பார்க்கப் போகமுடியும். அப்படி இருக்க எதற்காக அவனுக்கு கொடி பிடிக்கிறோம். நமக்கு வேறு வேலை இல்லையா..? குடும்பம் இல்லையா..? குழந்தை குட்டி இல்லையா..?

நடிகர் சங்க தேர்தலை ஊடகங்கள் மிகப் பெரிய அளவில் மக்களிடம் கொண்டு போய்ச் சேர்த்தன... இதனால் ஊடங்கங்களுக்கு லாபம்... நமக்கு...? நமக்கு அதனால் எள்ளளவும் லாபம் இல்லை... அவனுக கூத்தாடிங்க... அடிச்சிப்பானுங்க...  கூடிப்பானுங்க... அவனுகளுக்கு கொடிப்பிடிச்சு... கொடிப்பிடிச்சே நாம ரோட்டுல கிடக்க வேண்டியதுதான்... அவன் பாரின் கார்ல பறந்துக்கிட்டு.... பஞ்சு மெத்தையில புரண்டுக்கிட்டும் இருப்பான்... முதல்ல நடிகர்கள் அதைத் தரலை... இதைத் தரலைன்னு கேட்டுக்கிட்டு நிக்கிறதை விட்டுட்டு நம்ம வாழ்க்கையைப் பார்ப்போம். அவனுக்கு கொடுக்கும் அந்த மரியாதையை நாம் விலக்கிக் கொண்டாலே அவனும் சாதாரண மனிதன் ஆகிவிடுவான். ஆனால் நாம் செய்வோமா..?

(நயன்தாராவைப் பார்க்க சேலத்தில் கூடிய நம் தமிழர்கள்)
இங்கே அஜீத் வரிசையில் நின்னு ஓட்டுப் போட்டால் அது நியூஸ்... விஜய் இலவச திருமணம் செய்து வைத்தால் அது நியூஸ்... தனுஷ் வேஷ்டி கட்டினால் அது நியூஸ்.... சிம்பு காதலியை மாற்றினால் அது நியூஸ்... கமல் ஊரைவிட்டுப் போறேன்னு சொன்னா நியூஸ்... ரஜினி தமிழ் மக்களுக்கு ஏதாவது செய்யணுமின்னு கதைவிட்டா அது நியூஸ்... இதையெல்லாம் ஒவ்வொரு நாளும் நாமெல்லாம் செய்து கொண்டுதானே இருக்கிறோம். அதெல்லாம் நியூஸ் ஆவதில்லையே... நம் செயல்கள்... நம் வாழ்வின் முன்னேற்றம் இதில் மட்டுமே நாம் கவனம் செலுத்தினால் நாமும் நாளை நியூஸாவோம்... திரு. சகாயம் போல் நெஞ்சை நிமிர்த்தி, கூத்தாடிக்கு கூப்பாடு போடுவதை விடுத்து நம் பாதையில் நாம் பயணித்தாலே போதும்  கூத்தாடிகளும் சாதரண மனிதர்கள் ஆவார்கள்.

கரகாட்டம், ஒயிலாட்டம், நாடகம் என நமது தமிழக கலாச்சாரத்தை பிரதிபலித்துக் கொண்டிருந்த கலைஞர்கள் வாழ்க்கையை ஓட்ட ஆபாசத்தின் பிடிக்குள் போய்விட்டார்கள். அவர்களில் எத்தனையோ பேர் வாழ வசதியின்றி... நலிந்து போய் இருக்கிறார்கள். அவர்களுக்கு நம்மாலான உதவிகளைச் செய்யலாம்... நமது கலைகளை அழியாமல் பாதுகாக்கலாம். அதை விடுத்து நயன்தாரா வந்தால் நாளெல்லாம் வெயிலில் கிடந்து அவரைப் பார்த்ததை சாதனையாகச் சொல்லிக் கொண்டு திரிகிறோம். இந்த நிலை எப்போது மாறும்..? மாற்றம் வரும். எப்போது என்றால் இதெல்லாம் விடுத்து... நடிகனின் பின்னால் போவதை நிறுத்தி... அவன் செய்ய வேண்டும் என்று பிச்சை கேட்பதை விடுத்து நம் பாதையில் நாம் பயணிக்க கற்றுக் கொள்வோம்.

இன்னொன்னு சொல்ல மறந்துட்டேன்... தமிழ் மக்களுக்கு ஏதாவது செய்யணும் செய்யணுமின்னு சொல்லியே தன்னோட படங்களை ஓட வைக்க நினைக்கும் நடிகர்கள் மத்தியில் எதுவுமே செய்யாமல் நான் சம்பாதிக்கிறேன்... எனக்கும் குடும்பம் இருக்குன்னு சொல்லுற நடிகர்கள் மேல் என்பதே என் எண்ணம். இனிமேலாவது 'தலைவா...','நாளைய தமிழகமே...','வாழ்வின் விடிவெள்ளியே...' என்றெல்லாம் கூச்சல் போடாமல் ஒதுங்கி வாழப்பழகுவோம். நாம் ஒதுங்கினால் அவர்களும் அடங்குவார்கள்.  நம் தமிழினத்தை ஆள இந்தக் கூத்தாடிகளுக்கு கொம்பு சீவுவதை நிறுத்துவோம்... நல்லதொரு தமிழனை விரைவில் நம்மால் அரியாசனத்தில் அமர வைக்க முடியும்... அதைச் செய்து நடிகனின் அரியாசன ஆசைக்கு முற்றுப்புள்லி வைப்போம்... இதையெல்லாம் நாம் செய்வோமா...? செய்வோமா...?

நண்பர்களே இது எனது கருத்துத்தான்... இதில் தங்களுக்கு மாற்றுக் கருத்து இருக்கலாம்... எதுவாக இருந்தாலும் கருத்துக்களாய் சொல்லுங்கள்... நாம் கலந்துரையாடலாம்.
-'பரிவை' சே.குமார். 

வெள்ளி, 27 நவம்பர், 2015

மனசின் பக்கம் : பாகிஸ்தானி சூடானி சேம்... சேம்...

சந்தோஷம்

ர்மவீரர் காமராஜர் அவர்களின் பிறந்ததினத்தை முன்னிட்டு தமிழ்க்குடில் நடத்திய கட்டுரைப்போட்டியில் நான் எழுதிய 'அரசியல்வாதியாய் காமராஜர்' என்ற கட்டுரைக்கு மூன்றாம் பரிசு கிடைத்திருக்கிறது. கட்டுரைப் போட்டியை சிறப்பாக நடத்திய தமிழ்க்குடில் நிர்வாகத்தினருக்கும்,  கட்டுரைகளை வாசித்து பரிசுக்குரியவர்களைத் தேர்ந்தெடுத்த மறைமலை அடிகளாரின் பேரன் திருமிகு. மறை. திரு. தாயுமானவன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி. மேலும் முதல் இரண்டாம் இடம் பெற்ற சேலம் கி.மகாலட்சுமி, சென்னை ச.பொன்முத்து இருவருக்கும் எனது வாழ்த்துக்கள்.


இந்த 2015-ஆம் வருடம் எனது எழுத்துக்கு மிகச் சிறந்த ஆண்டாக அமைந்திருக்கிறது. இந்த வருடம் கலந்து கொண்ட பெரும்பாலான போட்டிகளில் ஏதாவது ஒரு பரிசு கிடைத்திருக்கிறது. பரிசு கிடைக்கிறது என்று பெருமைப்படுவதைவிட எனது எழுத்துக்களும் நடுவர்களைக் கவர்கிறது என்பதுதான் உண்மையான சந்தோஷம்.  இன்னும் எழுத்தில் சாதிக்க வேண்டும் என்பதே ஆசை... இறையருள் இருந்தால் எல்லாம் நடக்கும்.

குட்டிக் கதை

ரு வீட்டில் அப்பா,அம்மா, மகன்,மகள் என நால்வர்... நால்வருமே வேலைக்குப் போகிறார்கள். அதனால் வீட்டில் வேலைக்கு ஒரு பெண்ணை வைத்திருந்தார்கள். மாதாமாதம் போன் பில் கூடிக் கொண்டே போகவும் குடும்பத் தலைவருக்கு கோபம் தலைக்கேறியது. எல்லாரிடமும் மொபைல் இருக்கு... அப்புறம் எப்படி லேண்ட் லைன் போனுக்கு இவ்வளவு பில் வருதுன்னு குடும்பத்தில் உள்ளவர்களை உட்கார வைத்துப் பேசியிருக்கிறார். 

அப்போது நான் யார் யாருக்கு போன் செய்யணுமோ அதையெல்லாம் என் அலுவலக போனில் செய்து விட்டுத்தான் வீட்டுக்கு வருவேன் . நீங்கள் மூவரும்தான் போன் பில் கூடக் காரணம் என்றார். உடனே மனைவி நான் எங்க பள்ளியில் இருந்து சொந்தங்களுக்கு மட்டுமின்றி, மளிகை, பால் என எல்லாருக்கும் பேசிவிடுவேன் என்று சொல்லியிருக்கிறார். மகனோ நான் வீட்டில் போன் பண்ணுவதே இல்லை... நானும் அலுவலகப் போனில் பண்ணி விடுவேன் என்றானாம். 


எல்லாருக்கும் மகள் மீது சந்தேகம்... அவள்தான் வாய் ஓயாமல் பேசக்கூடியவள்... ஆனால் அவளோ நானும் ஆபீசில் இருந்துதான் பேசுவோம்... என் மொபைலுக்குக்கூட என் பிரண்ட் காசு போட்டு விட்டுருவான் என்று சொல்லிவிட்டாளாம். உடனே நாம் நால்வரும் செய்யாமல் எப்படி இவ்வளவு பில் வரும் என யோசித்து ஒரு முடிவுக்கு வந்தவர்களாய் வேலைக்காரியை கூப்பிட்டு விசாரிக்க, 'ஐயா நீங்கள்லாம் வேலை பாக்கிற இடங்களில் இருந்து போன் பண்ணிட்டு வந்துடுறீங்க...  அது மாதிரி நானும் வேலை பார்க்கிற இடத்தில் போன் செய்தேன்...' என்றாளாம்.

இந்தக் கதையை என் அலுவலக மலையாளி நண்பன் சொன்னான்... கொஞ்சம் பட்டி பார்த்து பகிர்ந்திருக்கிறேன்.

நகைச்சுவை

ங்க எகிப்து இஞ்சினியர் (இவனைப் பற்றி முன்பே சொல்லியிருக்கிறேன்) சில தினங்களுக்கு முன்னர் ஒரு பாகிஸ்தானியின் டாக்ஸியில் ஏறியிருக்கிறான். இங்கு டாக்ஸி டிரைவர்கள் பயணிகளுடன் நன்றாக பேசிக்கொண்டு வருவார்கள் என்பதால் எங்க ஆளுடன் டிரைவர் பேசியபடி வர, இவனும் சந்தோஷமாகப் பேச ஆரம்பித்திருக்கிறான்.

பேச்சின் இடையே 'இப்ப பிலிப்பைனி நிறைய வந்துட்டானுங்க... இவனுகதான் இந்த நாட்டைக் கெடுக்கிறானுங்க... அதிலும் குறிப்பா பிலிப்பைனி பொண்ணுங்க ரொம்ப மோசம்'ன்னு சொல்லியிருக்கிறான். உடனே எங்காளும் 'ஆமா... ஆமா... நீங்க சொல்றது சரிதான்... கச்சடா பீப்பிள்ஸ்' அப்படின்னு சொல்லவும் டிரைவருக்கு நம்ம சொல்றதுக்கு ஆமா போட ஒரு ஆடு சிக்கிருச்சுன்னு சந்தோஷமாயிருச்சாம். 

அடுத்த தாக்குதலாய் 'எனக்கு இந்த எகிப்துக்காரனுங்களைக் கண்டாலே பிடிக்காது' என்று சொல்லியிருக்கிறான். நம்மாளுக்கு டர்ர்ர்ரு.... ஆனாலும் தானும் எகிப்துக்காரந்தான் என்பதைக் காட்டிக்காமல் 'ஏன் பிடிக்காது..?' என்று கேட்டிருக்கிறான். 'அவனுக வேலையே பாக்கமாட்டானுங்க... ஆனா நம்மளை அதைச் செய்யி இதைச் செய்யின்னு கத்திக்கிட்டே இருப்பானுங்க... எனக்கு மேனேஜர் எகிப்துக்காரந்தான்... ஒரு வேலையும் தெரியாது... ஆனா தெரிஞ்சமாதிரி கத்திக்கிட்டே இருப்பான்... எனக்கு சுத்தமாவே பிடிக்காது' என்றானாம். நம்மாளு ஒண்ணுமே பேசலையாம். அவன் சொன்னது உண்மைதான்... அவனுக கத்துவானுங்களே தவிர வேலை பாக்க மாட்டானுங்க... இவன் எங்கிட்டுப் பேசுறது. 

இவன் ஒண்ணும் பேசாமல் இருக்கவும் பாகிஸ்தானி 'சார் நீங்க எந்த நாடு..?' அப்படின்னு கேட்டிருக்கான். நம்மாளு சுதாரிச்சிக்கிட்டு 'நான் சூடானி' என்றதும் 'பாகிஸ்தானியும் சூடானியும் உழைப்பாளிங்க... ரெண்டு பேரும் சேம்... சேம்...' என்றானாம். இவனும் 'ஆமா... ஆமா'ன்னு ஆமோதிச்சிட்டு வந்துட்டான். ஆபிசுக்கு வந்ததும் வராததுமாய் சொல்லிச் சொல்லிச் சிரித்தான். 'உன்னையப் பாக்கும் போது சூடானி மாதிரித்தான் இருக்கே' என்று நான் சொல்ல, எல்லோரும் ரொம்ப நேரம் சிரித்தோம். அதன்பின் அடிக்கடி 'குமார்... பாகிஸ்தானி சூடானி சேம்.. சேம்...' என்று அடிக்கடி சொல்லிச் சிரித்தான்.

குடிகாரன்

ங்கு மலையாள நண்பர் ஒருவரின் அறைக்கு முஸ்ஸாபாவில் (அபுதாபியில் இருந்து சற்றே தள்ளியிருக்கு ஒரு தொழில்துறைகள் நிறைந்த இடம்) இருந்து ஒருவர் வாராவாரம் தொடர்ந்து வருவார்.  இங்கு விடுமுறை தினங்களில் குடி... குடி... என குடித்துக் கொண்டே இருப்பார்கள்.  அதுவும் மலையாளிகள் சொல்லவே வேண்டாம்.. குடிக்கும் வரை மச்சான்... மச்சான்... போதை ஏறிட்டா இடுப்பு வேட்டியை அவிழ்த்துப் போட்டுட்டு கட்டிப் புரளுவானுங்க... மறுநாள் காலையில மீண்டும் மச்சான்... மச்சான்னு பாட்டிலை எடுத்திருவானுங்க... 


சரி கதைக்கு வருவோம்... வாராவாரம் வருபவரை தண்ணியிலயே குளிப்பாட்டியிருப்பானுங்க போல... ஆளுக்கு அந்த் அறையும் குடியும் ரொம்ப பிடிச்சிப் போச்சாம். எனக்கும் இங்கயே ஒரு இடம் பாருங்கள்... நானும் உங்க கூட இருக்கேன் என்று சொல்ல, எங்க அறையில் இடமில்லை... பக்கத்தில் பார்க்கலாம்... என்று சொல்லிவிட்டாராம். பின்னர் அடிக்கடி போனில் கேட்க, சொல்லி வைத்திருக்கிறேன் வரட்டும் பார்க்கலாம் என்று சொல்லியிருக்கிறார். உங்க ரூம்லயே தங்கிக்கிறேன்... கீழ படுத்தாலும் பரவாயில்லை என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறார். முஸ்ஸாபாவில் வேலை பார்க்கும் இடத்துக்கு அருகே தங்கியிருக்கிறாராம். அபுதாபியில் இருந்து போனால்  காலை, மாலை டிராபிக்கில் ஒரு மணி நேரத்துக்கு மேல் பயணம் செய்யணும் அப்படியிருந்தும் நாவில் குடியின் ருசி... கீழே படுக்கிறேன் என்று சொல்ல வைத்திருக்கிறது. 

அவர் தினமும் போன் பண்ண நண்பருக்கு எரிச்சலாகிவிட்டதாம். அதுவும் இரவு பத்து மணிக்கு மேல் கொஞ்சம் பெக்கை உள்ளே விட்டதும் ஞாபகம் வந்து போனில் அழைத்து விடுவார் போல. நண்பர் செம கடுப்பில் இருந்திருக்கிறார். ஒருநாள் இரவு பதினோரு மணிக்கு மேல் நல்ல போதையில் 'எனக்கு உங்க அறையில் இடம் கிடைக்குமா?' என்று கேட்டதும்தான் தாமதம், 'டேய்... இனிமே ராத்திரியில போன் பண்ணி ரூம் கேட்டு தொந்தரவு பண்ணினே மவனே இங்கயிருந்து டாக்ஸி பிடிச்சு வந்து தூக்கிப் போட்டு மிதிச்சே கொன்னுருவேன்' என்று கத்தியிருக்கிறார். அறை நண்பர்கள் எல்லாரும் பயங்கர சிரிப்பு, அந்தாளு அப்புறம் போனே பண்ணலை என்று என்னிடம் சொன்னபோது நான் என்ன செய்திருப்பேன்... அதுதான் ... அதேதான்... நானும் சிரித்தேன். தண்ணி ஊத்தி வளர்த்துட்டு மிதிச்சிக் கொன்னுருவேன்னு சொல்லியிருக்கியே என்று சிரித்துக் கொண்டே சொன்னேன்... 

மழை
ரில் உலுக்கி எடுக்கிறது மழை... வெள்ளக்காடாய் நிறைந்து நிற்கிறது மழை நீர்... இங்கும் பருவநிலை மாற்றம் ஆரம்பமாகிவிட்டது. கடந்த சில தினங்களாக மழை மேகம் சூழ்ந்திருக்கிறது. புதன் கிழமை லேசான தூறல் இருந்தது. துபாயில் கொஞ்சம் அழுத்தமான மழை பெய்திருக்கிறது. சென்ற முறை எல்லா இடத்திலும் நல்ல மழை பெய்தபோதும் அபுதாபியில் மட்டும் மழை இல்லை... இந்த முறை கொஞ்சமாவது மழை பெய்யலாம் என்றே தோன்றுகிறது இருந்தும் முதல் மழை சுற்றுவட்டாரத்தில் அழுத்தமாக விழ, இங்கு தூறலாய் சென்றிருப்பதால் இந்த முறையும் அபுதாபியில் மழை இருக்காதோ என்றுதான் தோன்றுகிறது.

ஹை ஹீல்ஸ்

துவும் எங்க எகிப்துக்காரன் சொன்னதுதான்... நேற்று புதிய ஷூ அணிந்து வந்தான். அது குறித்து 'இட்ஸ் வெரிகுட்' என்று சிலாகித்தான். மேலும் ஷூவின் அடிப்பாகம்  சற்று பெரிதாக வைக்கப்பட்டிருந்தால் அது 'நாட் குட்' என்றும் சொன்னான். அப்போது 'நம்ம போடுற ஷூவுல ஒரு இஞ்ச் பெரிசா இருந்தா சரியில்லைன்னு சொல்றே... பொண்ணுங்க போடுற ஹை ஹீல்ஸ் எத்தனை இஞ்ச் பெரியது' என்று மலையாளி அவனிடம் கேட்க, அவன் பொண்ணுங்க எல்லாம் ஸ்டூல் உயரம் தூக்கிப் போடுதுங்க, அது தவறு... முதுகுவலி வந்திரும் என்றான். பின்னர் என்னிடம் 'குமார்... நான் இங்க முதன் முதலில் வரும்போது எங்க கூட ஒரு பொண்ணும் வந்துச்சுல்ல நீ பாத்திருக்கிறாய்தானே...' என்றான். 'ஆமா அதுக்கு என்ன..?' என்றேன். 'அந்தப் பொண்ணு 12 இஞ்ச்ல ஹை ஹீல்ஸ் வச்ச செருப்புதான் போட்டிருக்கும்.' என்றான். 'என்னது 12 இஞ்சா..? எதுக்கு இத்தனை உயரம்'ன்னு கேட்டதும் அவன் சிரிக்காமல் 'நானும் அதுக்கிட்ட கேட்டேன்... அதுக்கு என்னோட கணவன் ரொம்ப உயரம்ன்னு சொல்லும்' என்றானே பார்க்கலாம். எங்களிடம் சிரிப்பொலி அடங்க நேரம் ஆனது.

சினிமா

ம்முட்டி நடித்த ஒரு மலையாளப்படம் பார்த்தேன்... படம் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை... ரொம்ப மோசம். அதே மாதிரி நேற்றிரவு தூக்கம் வராமல் பரஞ்சோதியின்னு ஒரு தமிழ்ப்படம் பார்த்தேன். இசைத்தட்டு வைத்து கிராமபோன் பெட்டியில் பாட்டுக் கேட்கும் அப்பா, சாதி சாதியின்னு சொல்லிக்கிட்டு அருவாளை எடுத்துக்கிட்டு அலையும் கூட்டம். செல்போனே பயன்படுத்தாத மக்கள் எனப் படம் பார்த்தபோது எதுவுமே ஒட்டவில்லை. இருபது வருசத்து முன்னாடி எடுத்திருக்க வேண்டிய படம் போலும்... முடியலை. மோகன்லால் - மஞ்சு வாரியர் நடித்த என்னும் எப்போழும் ஒரு பத்திரிக்கையாளன் வக்கீலை பேட்டி எடுக்க அலைவதும்... வக்கீலுக்கான வாழ்க்கைப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதுமான கதை... பரவாயில்லை... பார்க்கலாம்.

கொண்டாட்டம்

டிசம்பர்-02 ஆம் தேதி அமீரகத்தின் தேசிய தினம்... அதற்கான கொண்டாட்டங்கள் ஆரம்பமாகிவிட்டன. நேற்று நாங்கள் வேலை செய்யும் அபுதாபி தண்ணீர் மற்றும் மின்சாரத் துறை (ADWEA) அலுவலகத்தில் சிறப்பான விழா நடைபெற்றது. மதியம் ஆடு, மாடு, ஓட்டகம், மீன் என கலக்கலான விருந்து.... நமக்கு மீன் மட்டுமே நாட்டம் என்பதால் அதனோடு பலவகை சாலட்டுக்களை நிறைவாய் சாப்பிட்டேன். பின்னர் இனிப்பு வகைகள் அடங்கிய ஒரு பெரிய பெட்டியும் எங்களது கேபினுக்கு வந்தது. மதிய சாப்பாடு தூக்கல் என்பதால் இதற்கு மேல் தாங்காது  என்று வயிறும் மனதும் சொல்லிவிட அப்படியே அறைக்கு எடுத்து வந்து கொடுத்தாச்சு.

****
ன்று காலை கொலையாளி யார்? தொடரைப் பதிந்தாச்சு... பின்னர் மனசின் பக்கம் வெள்ளியன்று தொடர்ந்து பதிந்து வருகிறோமே... இப்படி கதையை போட்டுட்டோமே என்று யோசித்து யோசனையின் முடிவில் அவசரமாய் தொகுத்தது இந்த வார மனசின் பக்கம்... ரசித்தீர்கள்தானே நட்புக்களே....

மீண்டும் அடுத்த வெள்ளியன்று...
-'பரிவை' சே.குமார்.

குறுந்தொடர்: பகுதி - 12. கொலையாளி யார்?

முன்கதை


தொழிலதிபர் தணிகாசலம் ஊட்டியில் வைத்து கொடூரமான முறையில் கொலை செய்யப்படுகிறார். அவரை யார் கொலை செய்தார் என்பதைக் கண்டுபிடிக்க தனது விசாரணையைத் தொடங்கும் இன்ஸ்பெக்டர் சுகுமாரன், வேலைக்காரி முதல் அவரது வாரிசுகள் வரை விசாரிக்க எந்தத் தகவலும் கிடைக்காமல் திணறுகிறார்.  லதாவிடம் மீண்டும் விசாரணை நடத்திய பொன்னம்பலத்தின் வற்புறுத்தலால் மதுரைக்கு செல்கிறார்கள்.
இனி...

ஹோட்டல் பாண்டியன்...

அறை எண் : 144

சுகுமாரன், பொன்னம்பலம், வருண் தவிர வேறு யாரும் இல்லை.

"சொல்லுங்க வருண்... தர்ஷிகாக்கிட்ட இருக்க மாதிரி வேற ஒருத்தர்க்கிட்டயும் வைரமோதிரம் இருக்குன்னு சொன்னீங்க... யார்க்கிட்ட இருக்கு..."

"சொல்றேன் சார்... அதுக்கு முன்னாடி கொஞ்சம் பேசலாமா..?"

"உங்க அப்பா கொலை சம்பந்தமாவா... இல்லை..."

“அது தொடர்பாத்தான்... விவரமாப் பேசினாத்தானே எங்கப்பாவோட மறுபக்கம் உங்களுக்குத் தெரியும்...”

“மறுபக்கமா..?”

"ஆமா... இருங்க ஆரம்பத்துல இருந்து சொல்றேன்...” என்றவன் மெதுவாகப் பேச ஆரம்பித்தான். “நாங்க சின்ன வயசுல அம்மாவை விட்டுப் பிரிஞ்சோம்..." என்று வருண் ஆரம்பிக்க, தணிகாசலம் இறந்த அன்று காவல் நிலையம் வந்த போது அவன் ‘அம்மா’ என்ற வார்த்தையை பயன்படுத்தவேயில்லை. ஆனால் இப்போது அம்மா என்று சொல்கிறானே என்று சுகுமாரனுக்கும் பொன்னம்பலத்துக்கும் ஆச்சர்யமாக இருந்தது.

"என்ன இன்ஸ்பெக்டர்.... அன்னைக்கு அம்மான்னு சொல்லாதவன் இப்பச் சொல்றானேன்னு பாக்குறீங்களா... அது என் தர்ஷூக்காக... ஆமா அவளுக்கு அம்மா பிடிக்காது... சின்ன வயசுலயே விட்டுட்டு பொயிட்டாங்கன்னு அவளுக்கு அவங்க மேல ரொம்பக் கோபம்... அப்பாதான் தெய்வம்... காலையில கூட சொன்னாளே அவர் ஜெம்ன்னு.... ம்.... அப்பா... அப்பா... அப்பா... அவளுக்கு எல்லாமே அவருதான். அவருக்கும் அவதான் எல்லாமே... அதே மாதிரி அவள்ன்னா எனக்கு உயிர்... சோ அவளுக்குப் பிடிக்காத அம்மாவை எனக்கும் பிடிக்காத மாதிரி நடிச்சேன். ஆனா எனக்கு அம்மா ரொம்பப் பிடிக்கும். யாருக்கும் தெரியாம அம்மாவைப் போய் பார்ப்பேன். அவங்க மடியில படுத்து அழுவேன். அவங்களுக்கு கல்யாணம் ஆகி பசங்க இருக்காங்க... ஆனா அவங்களுக்கு எல்லாம் நானும் அம்மாவும் சந்திக்கிறது தெரியாது". என்று நிறுத்தியவன் தண்ணீரை எடுத்துக் குடித்தான்.

இருவரும் பேசாமல் அமர்ந்திருக்க, அவனே மீண்டும் பேச ஆரம்பித்தான் “அம்மா அப்பாவைப் பிரியக்காரணம் பணம் பணம்ன்னு ஓடுனதால மட்டும் இல்லை. அவரோட இன்னொரு பக்கத்தால..."

"இன்னொரு பக்கமா..? உங்கப்பா ஜென்டில்மேன்னு சொன்னீங்க...?" பொன்னம்பலம் இடை புகுந்தார்.

வருண் சிரித்தபடி "அது தர்ஷ்க்கு தெரிஞ்ச அப்பா... நான் அவளுக்காக சொன்ன பொய் அது... எனக்குத் தெரிஞ்ச அப்பாவுக்கு இன்னொரு பக்கம் இருக்கு. அது தன்னோட வளர்ச்சிக்காக பொண்டாட்டியைக்கூட இன்னொருத்தனுக்கிட்ட படுக்கச் சொல்ற ஈனத்தனமான புத்தி... அதனால பிரச்சினை... அதன் பின்னாலதான் அம்மா விவாகரத்து வரைக்கும் போனாங்க... இதை அம்மா எனக்கிட்ட கொஞ்ச நாளைக்கு முன்னாலதான் சொன்னாங்க... என்னால நம்ப முடியலை... ஏன்னா எங்க அப்பா அம்மா பிரிஞ்சி போன பின்னால வேற கல்யாணம் பண்ணிக்காம, எங்களை எந்தக் குறையுமில்லாம ரொம்ப அன்போடு வளர்த்தார்." பேச்சை நிறுத்தினான்.

"ரொம்பக் குழப்பமா இருக்கு.... தொழில் வளர்ச்சிக்காக மனைவியை.. சினிமாவுலதான் பார்த்திருக்கிறேன்... நிஜ வாழ்க்கையிலுமா? ஏன் உங்கப்பா மேல நீங்க வச்சிருக்கிற பாசத்தை கெடுக்கிறதுக்காக உங்கம்மா இப்படி ஒரு பொய்யைச் சொல்லியிருக்கக் கூடாது..."

"அம்மா சொன்னது சத்தியமான உண்மை... அம்மா சொன்னப்போ எனக்கு அப்பா மேல கோபம் வந்த்து... ஆனா இத்தனை வருசமா எங்களுக்கு தாய்க்கு தாயா... தந்தைக்கு தந்தையா... அர்த்தநாரீஸ்வரரா இருந்தவரு அவரு... எங்களுக்கு ஒண்ணுன்னா துடிச்சவரு அவரு... எங்க ரெண்டு பேர்ல ஒருத்தருக்கு உடம்பு சுகமில்லைன்னாலும் சாப்பிடாம எங்ககிட்ட கெடந்தவரு அவரு... யாருக்காகவும் எதுக்காகவும் எங்களை விட்டுக் கொடுக்காதவரு அவரு... அதனால எனக்கு வந்த கோபமெல்லாம் மறைஞ்சிருச்சு..."

"இவ்வளவு பாசமாக இருக்கிற அப்பா, எப்படி தன்னோட தொழில் வளர்ச்சிக்காக... என்னால ஏத்துக்க முடியலை வருண்... உங்களை உங்க அப்பாவுக்கு எதிராத் திருப்ப நடந்த சதியில நீங்க சிக்கி அப்பாவைக் கொல்ற அளவுக்குப் பொயிட்டீங்க...” என்றார் சுகுமாரன்.

“சார்... சார்.... போலீஸ் புத்தியை கொஞ்ச நேரம் கழட்டி வையுங்க... எங்கப்பாவை நான் அர்த்தநாரீஸ்வரர்ன்னுதானே சொல்றேன்... நான் கொன்னேன்னு சொல்றீங்களே...?”

“அப்ப உங்க அம்மா..?”

"அம்மா கொல்லணுமின்னு நினைச்சிருந்தா எவனோ ஒருத்தன் கூட படுக்கச் சொல்லும் போதே கொன்னுட்டு ஜெயிலுக்குப் போயிருக்கமாட்டாங்களா...?"
“ம்... உங்கப்பா தொழில்ல முன்னேறனுமின்னு இப்படிச் செஞ்சாருன்னே வச்சுக்குவோம்.... நீங்க பிறந்து... உங்களுக்குப் பிறகு சில ஆண்டுகள் கழித்து தர்ஷிகா பிறந்த பின்னாடித்தான் விவாகரத்துப் பண்ணியிருக்காங்க... உங்க தங்கை பிறந்த பிறகு இது நடந்ததுன்னா... அவ பிறக்கும் வரை உங்கப்பா தொழில்ல முன்னேறனுமின்னு நினைக்கலையா...? அது ஏன் கல்யாணம் ஆகி இரண்டு குழந்தைகள் பிறந்த பிறகு மனைவியை வைத்து முன்னேற நினைக்கனும்...”

“இதையே நானும் அம்மாக்கிட்ட கேட்டப்போ அவங்க சரியான பதிலைச் சொல்லலை... ஆனா வேறொரு சந்தர்ப்பத்தில் இன்னொருத்தர் சொன்னதால எனக்கு நம்பிக்கை வந்தது.

"ரொம்பக் குழப்புறீங்க வருண்... நீங்க சொல்ற காரணத்துக்கு அடியும் இல்லை முடியும் இல்லை... உங்களை யாரோ மூளைச் சலவை பண்ணியிருக்காங்க... ஆமா அந்த இன்னொரு நபர் யாரு..?"

“சொல்றேன்.... சொல்றேன்... என்னை யாரும் குழப்ப வேண்டியதில்லை சார்... எனக்கு எல்லாம் புரியிற வயசுலதான் இந்த விஷயம் தெரிய வந்துச்சு...”

“தன்னோட தொழில் வளர்ச்சிக்கு உங்கம்மாவை பயன்படுத்தணுமின்னு நினைச்சிருந்தா நீங்க பிறக்கும் முன்பே உங்கப்பா பயன்படுத்தியிருக்கலாம்... சந்தோஷமாக் குடும்பம் நடத்தி ரெண்டு பிள்ளைக்கு தகப்பானான பின்னால எவனும் இப்படி ஒரு ஈனச் செயலைச் செய்யமாட்டான்... எனக்கென்னவோ உங்கம்மா மேலதான் தப்பு இருக்க மாதிரி தெரியுது...”

“ஆமா சார்... நானும் அதைத்தான் சொல்லணுமின்னு நினைச்சேன்... உங்கம்மா செய்த ஏதோ ஒரு செயலாலதான் அவர் திருமணமே வேண்டான்னு உங்களை வளர்த்திருக்கிறார்... “ என்றார் பொன்னம்பலம்.

“என்ன சார்... எங்கப்பாவை கொன்னவங்களை கண்டு பிடிக்கணும் அப்படின்னுதான் அவரோட மறுபக்கதை சொல்றேன்... நீங்க என்னடான்னா எங்கம்மாவை தப்பாப் பேசுறீங்க...”

“வருண்... உங்க ரெண்டு பேரையும் கஷ்டப்பட்டு வளர்த்து உங்களை எம்.ஏஸ் படிக்க வைக்கிறாரு... தர்ஷிகாவும் இப்ப எம்.பி,பி.எஸ் பண்ணிக்கிட்டு இருக்காங்க... உங்களை உதறிட்டுப் போன அம்மா சொன்னதை நம்பிக்கிட்டு பாசமா வளர்த்த அப்பா இறந்த பின்னே தப்பாப் பேசுறீங்களே... உங்ககிட்ட சொன்னவங்கக்கிட்ட எங்கப்பாவை பற்றி எனக்குத் தெரியும்ன்னு சொல்லி அவங்க வாயை அடச்சிருந்தீங்கன்னா உங்க அப்பா பட்ட கஷ்டத்துக்கு ஒரு அர்த்தம் கிடைச்சிருக்கும்... அது அவருக்கு நீங்க செய்யிற மரியாதை... அதைவிட்டுட்டு...”

“அப்ப நீங்க நம்பலை...”

“நோ மிஸ்டர் வருண்... இந்தக் கதை கேசுக்கு எந்த விதத்திலும் உதவாது... எனக்கு ரெண்டே ரெண்டு கேள்விக்கான பதில் வேணும்...”

“என்ன இன்ஸ்பெக்டர்...?”

“ஒண்ணு... உங்க அம்மா சொன்ன இந்தக் கதையை சொன்ன மற்றொரு ஆள் யாரு..? அவருக்கும் உங்கம்மாவுக்கும் என்ன சம்பந்தம்..? ரெண்டாவது வைரமோதிரம் வேற ஒரு ஆள்க்கிட்ட இருக்குன்னு சொன்னீங்க அவங்க யாரு...? எங்க இருக்காங்க...? இதுக்கு பதில் சொன்னீங்கன்னா நான் கொலையாளியை நெருங்க வசதியா இருக்கும்...”

“சொல்றேன்... ஆனா அப்பாவோட மறுபக்கம் உண்மை சார்...”

“எதுக்கு அதுக்குத் திரும்பத் திரும்ப வாறீங்க... எனக்கு அவரோட மறுபக்கம் தேவையில்லை... எனக்கு வேண்டியது நான் கேட்ட கேள்விக்குப் பதில்...” என்றபோது சுகுமாரனின் முகத்தில் அதுவரை இருந்த சாந்தம் போய் கடுமை ஏறியிருந்தது.

“சொல்றேன்... சொல்றேன்னு எதுக்கு இழுக்குறீங்க வருண்... சொல்லுங்க... இந்தக் கொலையில உங்க கூட எத்தனை பேர் இருந்தாங்க... எதுக்காக பண்ணுனீங்க... அதை மட்டும் சொல்லுங்க... எங்களுக்கு இந்தக் கதை வேண்டாம்... ஏன்னா...” என்றபடி வருணை ஊடுருவிப் பார்த்தார் பொன்னம்பலம்.

“ ஏய்... இருய்யா... தம்பி சொல்வாப்ல... தானா வந்து மாட்டிக்கிட்டாரு... இனி சொல்லாமலா இங்கயிருந்து போக முடியும்... வருண்... நான் கேட்ட கேள்விக்கு பதில்...” என்றார் சுகுமாரன். அவரின் பேச்சில் போலீஸ் விசாரணைக்கான தோரணை இருந்தது.

“சா... சார்.... என்ன சார் என்னைய கொலைகாரன்னு சொல்லிட்டீங்க... அப்படிப் பண்ணியிருந்தா நான் எதுக்கு உங்ககிட்ட வந்து பேசப்போறேன்... இப்ப என்ன உங்களுக்கு விவரந்தானே வேணும்... சொல்றேன்... அப்பாவைப் பற்றி அம்மா சொன்ன அதே விஷயத்தை எங்கிட்ட சொன்னவர் டாக்டர் சிவராமன்.... அந்த வைர மோதிரம் அவரு பொண்டாட்டி திலகவதிக்கிட்ட இருக்கு...” படபடவென சொல்லிவிட்டு தண்ணீரை எடுத்து மடக்... மடக்கென்று குடித்தான் வருண்.

சுகுமாரன் சத்தமாகச் சிரித்தார்... பயத்துடன் அவரைப் பார்த்தான் வருண்.

 (தொடரும்)

-'பரிவை' சே.குமார்.

புதன், 25 நவம்பர், 2015

அடித்துப் பெய்...!

டித்துப் பெய்ய
ஆரம்பிக்கிறது மழை...
நனைந்து கொண்டே
நடக்கிறேன்...

விண்ணில் இருந்து
விழும் துளிகளெல்லாம்
என்னில் புதைந்திருக்கும்
காதல் நினைவுகளைப்
பூக்க வைக்கின்றன...

எனக்கோ மழை
மண்ணில் விழுமுன்
என்மேல் விழப்பிடிக்கும்
உனக்கோ மண்மீது
விழும் மழைத்துளி
உன் மீது விழப்பிடிக்காது...

பலமுறை
மழையே நம்
ஊடலின் காரணியாய்
இருந்திருக்கிறது..
சிலமுறை அதுவே
கூடலின் காரணியாகவும்...

என்னைப் போல்
பலர் நனைகிறார்கள்...
உன்னைப் போல்
சிலர் ஒதுங்குகிறார்கள்...

நனையாதேவென
எனக்குள் நீ
கத்திக் கொண்டே
இருக்கிறாய்...

நான் மனிதர்களை
மழையோடு  கடக்கிறேன்...
மழை என்னை
மனிதர்களோடு  கடக்கிறது...

மழையில் பூத்த
நினைவுச் சாரலோடு
சிரித்துக் கொண்டே
நனைகிறேன்...
ரசித்துக் கொண்டே
நடக்கிறேன்...

சில்லென்ற மழைநீர்
முகத்தில் பட்டு
தெறிக்கும் போது
நம்மின் காதல் காலச்
சந்தோஷங்களும்
சேர்ந்தே தெறிக்கின்றன...

நின்று நனைய ஆசை
நிறைய இருக்கிறது...
நீ விரும்பமாட்டாய்
என்பதால்...
நனைந்தபடி விரைகிறேன்
ஓட்டமும் நடையுமாய்...

எப்படியும் நனைந்து
வருவானென எனக்காய்
செல்லக் கோபத்தோடும்...
துப்பட்டாவோடும்
நனைந்தும் நனையாமலும்
வாசலில் காத்திருப்பாள்
என் காதல் மனைவி...
நினைப்பின் சிலிர்ப்போடு
மழையைக் கடக்கிறேன்...
-'பரிவை' சே.குமார்.

திங்கள், 23 நவம்பர், 2015

குறுந்தொடர்: பகுதி - 11. கொலையாளி யார்?

முன்கதை


தொழிலதிபர் தணிகாசலம் ஊட்டியில் வைத்து கொடூரமான முறையில் கொலை செய்யப்படுகிறார். அவரை யார் கொலை செய்தார் என்பதைக் கண்டுபிடிக்க தனது விசாரணையைத் தொடங்கும் இன்ஸ்பெக்டர் சுகுமாரன், வேலைக்காரி முதல் அவரது வாரிசுகள் வரை விசாரிக்க எந்தத் தகவலும் கிடைக்காமல் திணறுகிறார்.  லதாவிடம் மீண்டும் விசாரணை நடத்திய பொன்னம்பலத்தின் வற்புறுத்தலால் மதுரைக்கு செல்கிறார்கள்.
இனி...


ர்ஷிகாவின் கையில் மோதிரம் இல்லாததைப் பார்த்த பொன்னம்பலம் குற்றவாளியை நெருங்கிவிட்ட சந்தோசத்தில் மெதுவாக சுகுமாரனின் காதைக் கடித்தார். அவரும் ஏதேச்சையாக திரும்புவது போல்  தர்ஷிகாவைப் பார்த்து விரலை நோட்டமிட்டார். மோதிர விரலில் மோதிரம் அணிந்த தடம் இருக்க மோதிரம் இல்லை.

"வாங்க இன்ஸ்பெக்டர்... வாங்க சார்..." என்றபடி வருணுக்கு அருகே அமர்ந்தாள். அப்போதுதான் குளித்திருப்பால் போல சந்தன சோப்பின் வாசமும் ஷாம்பின் வாசமும் சேர்ந்து வந்தது.

“என்ன சார்... நான் வரும்போது சார் என்னமோ உங்ககிட்ட குசுகுசுன்னு சொன்னாரே... என்னவாம்...?” என சுகுமாரனைப் பார்த்துக் கேட்டாள் தர்ஷிகா.

 "அதெல்லாம் ஒண்ணுமில்ல... நீங்க அன்னைக்கு இருந்ததுக்கு இன்னைக்கு நிறைய மாறிட்டீங்கன்னு சொன்னார்... ஆமா கையில மோதிரம் போட்ட தடம் இருக்கு, ஆனா மோதிரத்தைக் காணோம்? எங்கயாவது மிஸ் ஆயிடுச்சா..?" அவளைப் பார்த்து எதேச்சையாகக் கேட்பது போல் கேட்டார்.

தர்ஷிகா சிரித்துக் கொண்டே, "ஏன் எங்கப்பா கொலையான அறையில் மோதிரம் எதுவும் கிடந்ததா?" எதிர்க்கேள்வி கேட்டு சிரித்தாள். 
தணிகாசலம் இறந்த அன்று பார்த்த தர்ஷிகாவா இவள் என்று அவரை யோசிக்க வைத்தது.

"இல்ல தடம் இருக்கு... சமீபத்துல மிஸ் ஆன மாதிரி தெரியுதேன்னு கேட்டேன்..."

"எம்மேல சந்தேகம்... ஓ இவரு அதைப் பார்த்துத்தான் உங்க காதைக் கடித்தாரோ...?. குளிக்கும் போது கழட்டி வச்சேன்... மேல ரூம்லதான் இருக்கு... இருங்க எடுத்துக்கிட்டு வாறேன்... உங்க சந்தேகம் போகணுமில்ல..." என்றபடி எழுந்து சென்றாள்.

“இல்லங்க பரவாயில்லை...”

“இந்தா வாரேன் சார்... எம்மேல சந்தேகம் வந்தாச்சுல்ல...” என்றபடி மீண்டும் மாடிப்படி ஏறினாள்.

அவளைப் பின்புறமாக பார்த்த சுகுமாரனுக்கு ஏனோ 'இடையில் பின்னழகில் இரண்டு குடத்தைக் கொண்ட இனிய தம்புராவை மீட்டிச் சென்றாள்' என்ற பாட்டு ஞாபகத்தில் வந்தது. மெதுவாக பொன்னம்பலத்திடம் திரும்பி, "என்னய்யா... இந்தக் கதை ஓர்க் அவுட் ஆகலையே..?" என்றார். 

"சே... நம்பிக்கையோட வந்தேன்... ஏமாற்றம் ஆயிருச்சு சார்..."

"என்ன இன்ஸ்பெக்டர் தர்ஷ்... மேல அப்படி ஒரு சந்தேகம்... அவ எதுக்காக கொல்லணும்... அதுவும் அப்பாவை கொல்லணுமின்னா அவ இங்கயே பண்ணியிருக்கலாமே ஏன் ஊட்டிக்குப் போகணும்... அப்பா கொலை நடந்த அந்த வாரம் புல்லாவே அவளுக்கு எக்ஸாம்... படிக்கிறதுக்காகவே வீட்டைவிட்டு அவ வெளிய கூட போகலை... ஆமா ஏதாவது தடயம் கிடைச்சதா..?" என்று வருண் கேட்டுக் கொண்டிருக்கும் போதே, திரும்பி வந்த தர்ஷிகா சிரித்துக் கொண்டே தனது மோதிரத்தைக் காட்டினாள். அச்சு அசலாய் பொன்னம்பலத்திடம் இருக்கும் மோதிரம். 'அப்படின்னா அது யாரோடது?' குழம்பினார் பொன்னம்பலம்.

"சாரிங்க... ஒரு சந்தேகம்... இதே மாதிரி மோதிரம் ஒண்ணு கிடைச்சது...அதான்... நாங்க வரும்போது நீங்களும் மோதிரம் இல்லாம இருக்க... மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சிப் போட்டுட்டோம்..."

"போலீஸ் புத்தி அது.." என்று சிரித்தாள்.

"என்னங்க... அப்பா செத்த கவலை அதுக்குள்ள உங்களை விட்டுப் போயிருச்சா...?"

"கவலை... ம்... அது இருக்கத்தான் செய்யுது... அதுக்காக அழுதுக்கிட்டு கிடந்து என்னாகப் போகுது... அப்பா திரும்பி வரப்போறாரா...? அம்மா உயிரோட இருக்கும் போதே இழந்துட்டு நிக்கிறோம்... நிறைய இழப்புக்களை பார்த்துப் பழகிட்டோம். அதனால இழப்புகளை ஈசியா எடுத்துக்கப் பழகிட்டோம்... இல்லேண்ணா... " என்று வருணைப் பார்த்ததும் அவர் ஆமோதிப்பதுபோல் தலையாட்டினான்.

"அடேயப்பா அன்னைக்கு அழுதுக்கிட்டு மூக்கைச் சிந்திக்கிட்டு இருந்த பொண்ணா நீங்க... இப்படியெல்லாம் பேசுவீங்களா...?" பொன்னம்பலம் ஆச்சர்யப்பட்டார்.

"நான் நல்லாப் பேசுவேன் இன்ஸ்பெக்டர்... அன்னைக்கு அப்பாவோட இழப்பு... ரொம்ப வலி தெரியுமா..? எம்மேல எம்புட்டு பாசம் தெரியுமா...? நான் செத்தா நீ அழுதுக்கிட்டு கிடக்கக் கூடாது... எதையும் துணிஞ்சு சந்திக்கிற திறமை உங்கிட்ட இருக்கு... எப்பவும் போல்டா இருக்கணுமின்னு சொல்வார்... ஹி ஈஸ் ஜெம் சார்... அவர் பணம் பணம்ன்னு போனதால அம்மா போனதாச் சொல்லுவாங்க... ஆனா அவரோட பாசத்தை அனுபவிக்கத் தெரியாம பொயிட்டாங்க சார்... அன்னைக்கி பணம் பணம்ன்னு இருந்திருக்கலாம்... ஆனா அவரோட பாசத்துக்கு முன்னால அவர் பெரிய மில்லினியர்.. உக்கார நேரமில்லாதவர்ன்னு எல்லாம் சொல்ல முடியாது... ராத்திரி எத்தனை மணிக்கு வந்தாலும் என்னோட அறைக்கு வந்து பாத்துட்டு... எனக்கு போர்த்திவிட்டு... உடம்புக்கு முடியாத நேரத்துல மருந்து தேய்ச்சி விட்டு... அதெல்லாம் போச்சு சார்.... எல்லாத்தையும் இழந்துட்டேன்..." இதுவரை சிரித்தவள் அழுக ஆரம்பித்தாள்.

"சாரிங்க... உங்க வேதனை புரியாம..."

"ஏய் தர்ஷ்... என்ன இது... விடு... நமக்கு அவ்வளவுதான் கொடுப்பினை... விடு...."

"அழுகாதீங்க..." என்றபோது வருணின் செல்போன் அடித்தது. எடுத்துப் பார்த்தவன் கட் பண்ணிவிட்டான். மீண்டும் அடிக்க... கட் பண்ணினான். மூன்றாவது முறை வந்த போது "ஏதோ அர்ஜெண்ட் போல... உங்களுக்கு தெரிஞ்சவங்களாத்தானே இருக்கும்... சும்மா பேசுங்க..." என்றார்.

சிரித்தவன், "இல்ல இன்ஸ்பெக்டர்... இது வாழ்க்கைத் தொந்தரவு... நான் கட்டிக்கப் போறவ... என்னைய வரச்சொல்லியிருந்தா... நீங்க வந்ததால போக முடியலை... அப்பா இறந்ததால ஒரு வாரமா எங்கிட்டும் போகலை... அதான்... அடிச்சிக்கிட்டேதான் இருப்பா..."

"ஓ... அண்ணியா... இங்க வரச்சொல்லு..." என்றாள் தர்ஷிகா.

"சும்மா இரு... காத்திருந்துட்டு போகட்டும்..."

"ஆமா அப்புறம் நீதான் அவளைத் தொங்கிக்கிட்டுக் கிடக்கணும்..." என்று சிரித்தாள்.

"சரி வருண்... எதாவது துப்புக் கிடைத்தால் சொல்றோம்... அபீசியலா வரலை... நாங்க கிளம்புறோம்..." என்றார் சுகுமாரன்.

"ஓகே சார்...." என்று எழுந்த வருண், அவர்கள் பின்னாலே வந்து காரில் ஏறப்போன சுகுமாரனிடம் மெதுவாக "சார் நீங்க எதுவோ குளூ கெடச்சித்தான் வந்திருக்கீங்க... தர்ஷோட மோதிரம் பற்றி கேட்டீங்க... மோதிரம் எதுவும் கிடைச்சதா..?”

“அப்படியெல்லாம் இல்லைங்க... அவங்க கையில தடம் கிடந்ததைப் பார்த்துக் கேட்டேன்... அவ்வளவுதான்...”

“எது எப்படியோ... மோதிரம்தான் அப்பா கொலையோட முக்கியமான தடயமா இருந்தா இதே மாதிரி மோதிரம் இன்னொருத்தர்க்கிட்டயும் இருக்கு...  நாம கொஞ்சம் பிரியா பேசினா நல்லாயிருக்கும்... நீங்க ஹோட்டல் பாண்டியன் போங்க... உங்களுக்காக அங்க ஒரு அறை புக் பண்ணச் சொல்லிடுறேன்... போயி குளிச்சிட்டு ரெஸ்ட் எடுங்க... தர்ஷ்க்கு எதுவும் தெரியவேண்டாம்... ஈவினிங் நான் வர்றேன்... பேசலாம்...” என்றான்.

(என்ன படத்தைப் பார்த்து ஏமாந்துட்டீங்களா...? இதுவும் ஒரு சஸ்பென்ஸ்தான்... இன்னும் இரண்டே இரண்டு பகுதிகளில் முடித்து விடுவோம்... அதாவது வரும் வெள்ளி / சனிக்குள்... அதுவரை... தர்ஷிகாவா / வருணா/ சிவராமனா / வேலையாட்களா/ வேறு யாருமான்னு எல்லாருமாச் சேர்ந்து யோசிப்போம்... நன்றி)

(தொடரும்)
-'பரிவை' சே.குமார்.

சனி, 21 நவம்பர், 2015

இறந்தவன் மீண்டும் இறந்தேன்...


சுற்றிலும் உறவுகள்...
கதறியழும் மனைவி...
காலருகே மகள்கள்...
தலையருகே மருமகள்கள்...
சோகமாய் மகன்கள்...
துக்கத்தோடு மருமகன்கள்...

பச்சை கொண்டு
பரபரப்பாய்
திரியும் சம்பந்திகள்...
நட்பும்... சுற்றமும்...
நாலா பக்கமும்...

சாரயம் கொடுத்த
ஊக்கத்தில்
துள்ளி அடிக்கும்
தப்பாட்டக்காரர்கள்...

வெட்டி வந்த 
கம்பில் பாடை
கட்டும் சோனையன்...

சுடுகாட்டில்
குழி வெட்டப்
போனவர்களோடு
கூடப் போன
நாகப்பன்...

எட்டி நின்று
எல்லா பார்க்கிறேன்...
அவர்களின் வலி
கஷ்டப்படுத்தியது...

பாடி எப்ப எடுக்கிறது
கேள்விக்கான பதிலாய்..

ராத்திரி ஆனது...
வாசம் வந்திரும்...
பாடியை சீக்கிரம்
எடுத்திடலாம்...
பெரியவன் 
சொன்னபோது...

நீர்மாலைக்கு 
ஏற்பாடு பண்ணச்
சொல்லுங்கப்பா...
யாரோ சொல்ல...

நேற்று வரை
அப்பாவாய் 
இதோ இப்போது
பாடி ஆகிவிட்டேன்... 

ஆம்...
இறந்த பின்
சொந்தங்களைத் தேடிய
என் ஆன்மா
வலியோடு இறந்தது....
-'பரிவை' சே.குமார்.

வெள்ளி, 20 நவம்பர், 2015

மனசின் பக்கம் : பொய்யின்றி மெய்யோடு

கார்த்திகை பிறந்து விட்டது... இனி பழனி, ஐயப்பன் என மலைகளுக்குச் செல்லும் சாமிகள் எங்கு பார்த்தாலும் காவி வேஷ்டிகளில் காட்சி தர ஆரம்பித்து விடுவார்கள். நானும்  ஆறு வருடம் பழனிக்கும் நாலு முறை சபரி மலைக்கும் ஒரு முறை திருப்பரங்குன்றத்துக்கும் நடந்திருக்கிறேன். அந்த நாட்கள் மிகவும் சந்தோஷமான சுவராஸ்யமான நாட்கள்... அதையெல்லாம் பதிவாக்கணும்... பார்க்கலாம்.  இப்ப மனசுல ஒரு ஆசை மீண்டும் சபரிமலை செல்ல வேண்டும்... அந்த ஐந்து மலைக்குள் காட்சி தரும் ஐயப்பனை தரிசித்து பஸ்மக் குளத்தில் ஆசை தீர குளித்து வரவேண்டும். மீண்டும் அந்த வாய்ப்பை ஐயன் தருகிறானா என்று  பார்க்கலாம். ஐயப்ப பக்தர்களுக்காக இந்தப்பாடல்... இதே பாடலை யேசுதாஸ் அவர்கள் பாடியிருப்பார்... அது வெண்கலக்குரல்... கேட்டுக்கேட்டு மனதில் பதித்த குரல்... இங்கே ஓரு சிறுமி... எங்க ஸ்ருதி போல... என்ன அழகாப் பாடியிருக்கு பாருங்க... அப்படியே நாமும் ஐயனின் முன்னால் மனம் உருகி நிற்பதைப் போல் இருக்கிறது... அழகான குரல்... அருமையான பாடல்... நீங்களும் கேளுங்கள்... 


***
சென்னை மழை நீரில் மிதக்கிறது... மக்களின் நிலை வருத்தப்பட வைத்தாலும் இதற்கு யார் காரணம்...? கண்மாய்களையும் குளங்களையும் பட்டாப் போட்டு வித்த அரசும்... நம்ம வீட்டை ஓட்டிப் போற சாக்கடையில குப்பைகளைப் போட்டு அடைச்ச நாமளும்தான்... சரியான சாக்கடைக் கால்வாய்கள் இருந்து முறையாக பராமரிக்கப்பட்டிருந்தால் இவ்வளவு பாதிப்பு வந்திருக்காதுதானே... மக்களைக் குறை சொல்லும் அரசு அலுவலர்கள் அந்த இடத்துக்கு பட்டா கொடுத்து வீட்டு வரி வசூலித்துத்தானே வந்திருக்கிறார்கள். அம்மாவை ஐயாவும்... ஐயாவை அம்மாவும் மாறி மாறி வசைபாடுவதை விடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்ன செய்யலாம்... இனிமேல் இதுபோன்ற பாதிப்பு வராமல் இருக்க எடுக்க வேண்டிய நடவடிக்கை என்ன என்பதைப் பற்றி யோசித்தால் நல்லாயிருக்கும். 

***
விஜயகாந்த் காமெடியன் ஆக்கப்பட்டாலும்... அவரும் அரசியல் ஆதாயம் தேட நினைத்தாலும் நமக்கு நாமேன்னு சொல்லிக்கிட்டும் மாற்றம் முன்னேற்றமுன்னு சொல்லிக்கிட்டும் தண்ணீர் கிடக்கும் இடங்களுக்குள் போகாமல் ரோட்டில் பாதுகாப்பாய் செல்லும் அரசியல்வாதிகளைப் போலில்லாமல் மடித்துக்கட்டி வேஷ்டியில் முழங்கால் தண்ணீருக்குள் நடந்து சென்று விசாரித்து பொருட்களைக் கொடுக்கிறார். அதிலும் எகத்தாளமாய்... நாங்க நிவாரணத்துக்கு ஐந்து லெட்சம் கொடுத்திருக்கிறோம்... எல்லா மாவட்டத்துலயும் கட்சிகாரங்க முடிந்ததை செய்யிறாங்க... நாங்க கொடுக்கிறதெல்லாம் எங்க சொந்தக்காசு... உழைத்த காசு... மத்தவங்க மாதிரி நோட்டைத் தூக்கிக்கிட்டு போகலை... என்றாரே பார்க்கலாம். காமெடியனாக இருந்தாலும் விஜயகாந்த்... கிரேட்தான் போங்க... என்ன சின்னச் சின்ன வீடியோ கிளிப்பிங்கா போட்டு 'வாராரு வாராரு அழகர் வாராரு'ன்னு அவரோட கட்சிக்கான முகநூல் பக்கத்தில் போடுறதுதான் முகம் சுழிக்க வைக்கிறது.
***

த்துக்குட்டி படம் விவசாயிகளின் பிரச்சினையைப் பேசியிருக்கிறது. மீத்தேன் திட்டத்தால் என்ன பாதிப்பு என்பதை விவரமாக பேசுகிறார்கள். விவசாயம், விவசாயியின் சாவு போன்றவற்றை கேவலப்படுத்தி செய்தி வெளியிடுவது குறித்தும் பேசுகிறார்கள். நரேன், சூரி மற்றும் அவர்களின் நண்பர்களின் நகைச்சுவையும் படம் முழுக்க பரவிக் கிடப்பதால் ரசித்துக் கொண்டே விவசாயியின் பிரச்சினையை பார்க்க முடிகிறது. சில லாஜிக் மீறல்கள் இருந்தாலும் மீத்தேன் குறித்து அரசியல் பயமின்றி விரிவாகப் பேசிய இயக்குநருக்கு வாழ்த்துக்கள். மாஸ் ஹீரோக்களுக்கான இயக்குநர்கள் மக்கள் பிரச்சினைகளை கையில் எடுப்பதில்லை... புதியவர்களே எடுக்கிறார்கள்... அதில் வெற்றியும் பெறுகிறார்கள்... அனைவரும் பார்க்க வேண்டிய படம்.

***
ருத்தரை வேண்டாம் என்று ஒதுங்கி கிட்டத்தட்ட ஒரு வருடங்களுக்கு மேலாகிவிட்டது. அவரும் இங்குதான் இருக்கிறார் என்றாலும் அவரை சந்திக்க விரும்புவதுமில்லை... சந்திக்கவும் இல்லை. சில வாரங்களுக்கு முன்னர் அவரைச் சந்திக்கும் வாய்ப்பு இருந்தும் ஒருவர் என்னைக் கூப்பிட்டு அவர் வந்திருக்காரு... நீ இப்ப அறைக்கு வராதே என்றார். அவர் எங்கள் அறைக்கு வருவதில்லை... இப்போது வர ஆரம்பித்திருக்கிறான்... எல்லாம் பிரச்சினைக்கு விதை போடலாம் என்ற எண்ணத்தோடுதான். தீபாவளிக்கு முதல்நாள் நானும் மச்சானும் டிரஸ் எடுக்கலாம் என கடைக்கு போய்விட்டு வந்தால் அவுக எங்க அறையில் இருந்தாக. என்னமோ நம்மளை எடுத்துப்புடுற மாதிரி பார்த்தாக... நான் கண்டுக்கவே இல்லை... நான் பாட்டுக்கு உட்கார்ந்து மனைவியுடன் சாட் பண்ணிக் கொண்டிருந்தேன். அம்புட்டுப் பேரையும் கூட்டியாந்து ஆளாக்குனேன்... இன்னைக்கு எதுத்துக்கிட்டு நிக்கிறானுங்க... நாந்தான் நடுத்தெருவுல நிக்கிறேன்னு சொல்லிக்கிட்டு இருந்தாக... எனக்குச் சிரிப்பு... ஆனா அந்த இடத்தில் சிரிக்கத்தான் முடியலை... கூட்டியாந்தாய்... உதவி செய்தாய்... அதை மறக்கவில்லை... மறப்பவன் மனிதனும் அல்ல... கூட்டியாந்தவர்களிடம் எல்லாம் செய்த செலவைவிட கூடுதலாகத்தானே பெற்றுக் கொண்டாய்... அப்புறம் எதுக்கு நடுத்தெருவுல நிக்கிறேன்னு கேக்க நினைத்து அடக்கிக் கொண்டேன். 

என் மனைவியின் தங்கை கணவர் போன வாரம் ஊருக்குப் போனார். அவர் சொல்லவில்லையாம்... உடனே அந்தச் சின்ன நாய் சொல்லாமப் போயிருச்சுன்னாங்க... அப்ப பெரிய நாய்... அட நாந்தானுங்க அது... நாய் நன்றியுள்ளதுதான்... அதுக்கிட்ட எப்படி நடந்துக்கிறோமோ அப்படித்தான் கடிக்கிறதும்... விளையாடுறதும்... நாங்க நாயாவே இருக்கோம்... நீ நரியில்ல... அதுவும் குள்ளநரியில்லன்னு மனசுல தோணுச்சு... ஆனா சொல்லத்தான் நினைக்கலை... சாட்டிங்கில் மனைவி நீங்க எதுவும் பேச வேண்டாம் என்று அனுப்பிக் கொண்டிருந்தார்... மேலும் நரியோட நாய்க்கு என்ன பேச்சுன்னு பேசாம இருந்தா... வீடு வாசலைக் கட்டி நல்லா இருங்கடான்னு வேற சொல்லிட்டுப் போனார்... அவர் போனதும் அடக்கி வச்சதை எல்லாம் சிரிப்பா சிரிச்சிக்கிட்டேன். உத்தமன் வர்றான் செம்பை எடுத்து உள்ள வையிங்கிற கதைதான் அவனைப் பார்த்தால் ஞாபகம் வரும். அப்படிப்பட்ட உத்தமன் ஊருக்குள்ளே நான் ஒருத்தன்தான் உத்தமன்னு கத்திக்கிட்டு கிடக்கார். என்ன செய்யிறது... நரிகள் எல்லாம் கூப்பாடு போடுது... நாமதான் ஒதுங்கிப் போக வேண்டியிருக்கு.

***

ருத்ரமாதேவி மிகப்பிரமாண்டமாய் வந்திருக்கும் வரலாற்றுப் படம். அனுஷ்காவின் நடிப்பு செம... அதுவும் பெண்ணாய் பிறந்து தான் பெண் என்பதே அறியாமல் ருத்ரதேவனாய் வாழும் காட்சிகளிலும் பெண் என்று அறிந்ததும் துவண்டு போவதும்... பின்னர் நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் ஆணாய் தொடரும் காட்சிகளிலும்  கலக்கியிருக்கிறார். பாகுபலி அளவுக்கு கிராபிக்ஸில் மிரட்டலைன்னாலும் படம் பாகுபலியைவிட சிறப்பாகவே இருக்கிறது. ராணா, அல்லு அர்ஜூன், பிரகாஷ்ராஜ், நித்யா மேனன் என எல்லாரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். படம் போரடிக்கவில்லை.

***
சென்ற வாரம் நண்பனிடம் பேசும் போது சில்க் சாரீஸ் எக்ஸ்போர்ட் பண்ணும்வோம்டா... அங்க விசாரி என்றான். உடனே நான்  என்னது சில்க் சாரியா..? என்றேன். அதற்கு அவர் விளக்கம் சொல்றாராமாம்... அடேய் சில்க் சாரியின்னா பட்டுச் சேலைடா என்று உலகமகா விளக்கம் கொடுத்தார். அட நாதரிப்பயலே... சில்க் சாரியின்னா பட்டுச் சேலையின்னு தெரியாத கூமுட்டையா நானு... இங்க அதெல்லாம் போகுமான்னு கேட்டா... இப்பத்தான் புதுமையா விளக்கம் கொடுக்கிறே என்றதும் ஹி.. ஹி... யின்னு சிரிப்பு வேற. அப்புறம் அவன் ஏதோ கேட்க, நான் அவன் சொன்னது போல் பதில் சொன்னதும் அப்பா ஆரம்பிச்சிட்டியா...? முதல்ல வையின்னு சொல்லிச் சிரித்தான்.
***
வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் தனது வெற்றிக்கொடியை நட்ட தேவா, கானாப்பாடல்களுக்கு  பிரபலம் என்பதை எல்லாரும் அறிவோம். 'வந்தேன்டா பால்காரன்...' என்று ரஜினியின் மனதில் இடம் பிடித்து பல படங்களுக்கு தொடர்ந்து இசையமைத்தவர். சூப்பர் ஸ்டார் என்று வரும் அந்த ஒற்றை ஒற்றை எழுத்தையும் அதற்கான அதிரும் பின்னணியையும் அண்ணாமலையில் தேவாதான் அறிமுகம் செய்தார் என்று நினைக்கிறேன்.  இன்று அவரின் பிறந்தநாள்...  எனக்கு ரொம்ப நாளா சோலையம்மா படத்துக்கு தேவாதான் இசையமைத்தார் என்று தெரியாது. இந்தப்படப் பாடல்கள் எல்லாம் இளையராஜாவின் இசையை ஒத்தே இருக்கும்... அருமையான பாடல்கள்... 'கூவுற குயிலு' என்ன சொல்லுதுன்னு நீங்களும் கேளுங்கள்.


மனசின் பக்கம் புதிய செய்திகளுடன் அடுத்த வெள்ளி வரும்...
-'பரிவை' சே.குமார்.

வியாழன், 19 நவம்பர், 2015

குறுந்தொடர்: பகுதி - 10. கொலையாளி யார்?

முன்கதை


தொழிலதிபர் தணிகாசலம் ஊட்டியில் வைத்து கொடூரமான முறையில் கொலை செய்யப்படுகிறார். அவரை யார் கொலை செய்தார் என்பதைக் கண்டுபிடிக்க தனது விசாரணையைத் தொடங்கும் இன்ஸ்பெக்டர் சுகுமாரன், வேலைக்காரி முதல் அவரது வாரிசுகள் வரை விசாரிக்க எந்தத் தகவலும் கிடைக்காமல் திணறுகிறார்.  லதாவிடம் மீண்டும் விசாரிக்கச் செல்லும் பொன்னம்பலம் வைர மோதிரம் குறித்து விசாரிக்கிறார்.

பொன்னம்பலம் அந்த மோதிரத்தைப் பார்க்கவும் "சார் இதுவா சார்...?" என்றாள் லதா.

"ஆமா... இதே மோதிரம்தான்... எனக்கு அந்த போட்டோ வேணும்" என்றபடி அதை தனக்கு அனுப்பிக் கொண்டார்.

"ஆனா எங்க தர்ஷிகா அம்மா அன்னைக்கு இங்க வரலியே சார்... யாராச்சும் அவங்க மேல பலி போட மோதிரத்தை களவாண்டு கொண்டாந்து போட்டிருக்கலாம்..."

"இங்க வந்தாங்களா... வரலையா... களவாண்டு போட்டாங்களான்னு நாங்க பாத்துக்கிறோம்... ஆமா உங்க தர்ஷிகா அம்மா இங்க அடிக்கடி வருவாங்களா?"

"ஐயாவோட எப்பவாச்சும் வருவாங்க... பிரண்ட்ஸ்ங்க கூட ஊர் சுத்திப்பாக்க வந்தா இங்க தங்குவாங்க..."

"ஓ... ஆமா... கொலை நடந்தன்னைக்கு கேட்டதுக்கு ஐயா மாசத்துல மூணு நாள்தான் வருவாரு... அப்பத்தான் வேலையின்னு எல்லாரும் சொன்னீங்க... இப்ப அவரு பொண்ணு வரும்ன்னு சொல்றே... எதையோ மறைக்கிறே போல..."

"சத்தியமா இல்லை சார்... எனக்கு ஐயா வரும்போதுதான் வேலை.... தர்ஷிகா அம்மா ஐயாவோட வந்தப்போ நான் பாத்திருக்கேன்... மற்றபடி ஊரு சுத்திப்பாக்க வந்தா அங்க தங்குவாங்க... சாப்பாடெல்லாம் வெளியதான்... ரெத்தினண்ணந்தான் அவங்க வந்திருக்காங்கன்னு சொல்லும்..."

"ம்... சரி நான் வந்து மோதிரம் பற்றி விசாரிச்சதை யாருக்கிட்டயும் சொல்லக்கூடாது... குறிப்பாக உங்க தர்ஷிகா அம்மாக்கிட்ட... சரியா..?"

"பெத்த அப்பாவை அது கொல்லுமா சார்.. பாவம் சார்... யாரோ பழி போட்டிருக்காங்க.."

"பாக்கலாம்... இன்னும் ரெண்டு நாள்ல யாருன்னு தெரிஞ்சிரும்ல்ல..." என்று எழுந்தவர், "இங்கரு... கீச்சு மூச்சின்னு கத்துனேன்னு வச்சிக்க... நீதான் அவளுக்கு உதவுனேன்னு சொல்லி ஸ்டேசன்ல அம்மணமா உக்கார வச்சிருவேன்... ஜாக்கிரதை..." என்று அவளின் கணவனிடம் கர்ஜிக்க, அவன் பேசாமல் அமர்ந்திருந்தான்.

"அய்யே... சார்... அது அப்புராணி... எங்கிட்ட நீங்க வேகமாப் பேசவும் கோவத்துல அப்புடிக் கேட்டுருச்சு... அதை எதுவும் பண்ணிடாதீங்க சார்..." கையெடுத்துக் கும்பிட்டாள் லதா.

சுகுமாரனுக்கு போன் பண்ணி "சார்... அவரு ஏதோ நாட்டு மருந்து ஸ்பெஷலா தயார்ப்பண்ணி சாப்பிடுவாராம்... அது நல்லா தூக்கம் வருமாம்... சோ ஆழ்ந்த தூக்கத்துக்கு அதுகூட காரணமாக இருக்கலாம்." என்றார்.

"என்னய்யா... வேற ஒண்ணும் தேறலையாக்கும்... அதான் தெரிஞ்சதுதானே..." எதிர்முனையில் சுகுமாரன் சிரித்தார்.

"கிடைச்சிருக்கு சார்... "

"என்ன கிடைச்சிருக்கா... என்னய்யா.. சொல்லுய்யா... சொல்லு... " சுகுமாரன் பரபரத்தார்.

"இப்பத்தான் சிரிச்சீங்க... அதுக்குள்ள பதர்றீங்க..." என்றவர் "சார்... ஒரு வைர மோதிரம் கிடந்ததுன்னு பிட்டைப் போட்டுப் பார்த்தேன்... நான் லேசா ஆரம்பிக்க அவளே உள்ளே வந்தாள்.. அந்த மோதிரம் தர்ஷிகாவோடதுன்னு சொன்னா, நானும் போட்டோ பார்த்தேன்."

"அட ஏன்ய்யா... இதுல என்ன சிக்கியிருக்கு...? வைரமோதிரம் நம்மக்கிட்ட சிக்கலை... அப்புறம் பொய் சொல்லி என்னாகப் போகுது..."

'மோதிரம் எங்கிட்ட இருக்கே' அப்படின்னு சொல்ல நினைத்து அதை அப்படியே விழுங்கிவிட்டு "சார்... அந்த தர்ஷிகா இங்க வந்தபோது கையில மோதிரம் பாத்தீங்களா?" என்று கேட்டார்.

"அவ போட்டாந்தாளா இல்லையான்னு தெரியலை... அதுபோக வைர மோதிரம்ன்னா விட்டுட்டுப் போயிருப்பாங்களா... வீட்டையே தொடச்சி தேடியிருக்க மாட்டாங்க... அட ஏய்யா நீ வேற..." என்றதும் 'அதுசரி அப்ப இது வைரம்தானா...?' என்ற யோசனை அவருக்குள் எழுந்தது.

"நல்லா யோசிங்க சார்..."

"அட என்னத்தையா யோசிக்க... மோதிரம்...?" என கொஞ்ச நேரம் பேசாமல் இருந்தவர், "அட என்னய்யா நீ வேற... மோதிரம் ஞாபகம் வரலைய்யா... என்னென்னமோ ஞாபகத்துல வருது... அவளுந்தான் கையி காலையா பாக்குற மாதிரியா இருந்தா... அவளைப் பார்த்தாலே கண்ணு....." பேச்சை நிறுத்தினார்.

"உங்க கண்ணு போனதைத்தான் நானும் பார்த்தேனே... என்ன பேச்சு பாதியில நின்னுருச்சி... பக்கத்துல திருமதி.சுகுமாரனா...? அதான்... பொட்டிப் பாம்பாயிட்டீங்க... உங்களுக்கு ஞாபகம் இல்லைதானே..."

"ம்... ஆமா... சரி சொல்லுய்யா...?"

"எனக்கென்னவோ அவ கையில மோதிரம் இருந்த மாதிரித் தெரியலை..."

"உண்மையாவா...?"

"ஷ்யூர்ன்னு சொல்ல முடியாது... ஆனா கையில மோதிரம் இல்லைன்னு மனசு சொல்லுது..."

"மனசு சொல்லுது... ம...." வார்த்தையை  முடிக்குமுன் பொன்னம்பலம் "சார்" என்று கத்தினார்.

"அட மத்தவன் சொல்றான்னு சொல்ல வந்தேன்யா..."

"நீங்க என்ன சொல்ல வந்தீங்கன்னு தெரியும்... அதை விடுங்க... நம்ம டார்க்கெட் இப்ப தர்ஷிகா..."

“என்னய்யா நீ வயல்ல மாடு மேஞ்சுச்சுன்னா மாட்டுக்காரனோட சண்டைக்குப் போகலாம்... மாடே மேயாம சண்டைக்குப் போகணுங்கிறே... ரெண்டு நாளைக்கு முன்னாடி மேஞ்சிச்சான்னு யோசிக்கச் சொல்றே... அதையும் வயல்ல போயி பாத்துட்டு வரலாங்கிறே... அட போய்யா....”

“சார்... நீங்க மதுரை போகணுமின்னு சொன்னீங்கதானே...?”

“ஆமா... போயி அங்க ஏதாவது தேறுதான்னு பாப்போம்ன்னு சொன்னேன்...”

“நாளைக்கே அந்த வேலையாப் போறோம்... அப்படியே மோதிர மேட்டர் விசாரிக்கிறோம்...”

"நாளைக்கா....? நாமளா...?"

“ஏன் சார் அலருறீங்க... நாமதான் போறோம்...”

“போவலாம்ய்யா... அதுக்கு பேசாம லோக்கல் போலீசுக்கிட்ட சொல்லி விசாரிக்கலமே... ஏதாவது சிக்கல்ன்னா...”

"ஒரு சிக்கலும் இல்லை... அபீசியலா போக வேண்டாம்... அன் அபீசியலா போய் விசாரிச்சுட்டு வருவோம்... அவதான்னு கன்பார்ம் ஆனா அதுக்கு அப்புறம் லோக்கல் போலீசைக் கூப்பிட்டுக்கலாம்...."

"ம்... ஆனா நாளைக்கு வேண்டாம்... சொந்த பந்தமின்னு எல்லாம் இருக்கும்... அழுகையும் ஒப்பாரியுமா இருக்கும்... இந்த வார சனி, ஞாயிறுல போகலாம்ய்யா."

"ஓகே... அதுவும் சரிதான்... ஆனா கொலையாளி சுதாரிக்கும் முன்னே நாம அங்கிருக்கணும்..."

"இப்ப இங்க யாருய்யா கொலையாளி... சும்மா போறோம்... சரியா... நீயே பில்டப் பண்ணுறே... ஏய்யா... மோதிரம் கீதிரம் எடுத்தியாய்யா...”

“அட போங்க சார்... நீங்க வேற.... சரி சார்... நாளைக்குப் பார்ப்போம்...”

ணிகாசலம் வீட்டில்...

"வாங்க சார்... என்ன திடீர்ன்னு... ஏதாவது விவரம் கிடைச்சதா?"

"அதான் இங்க வந்திருக்கோம்... சீக்கிரம் பிடிச்சிடலாம்..."

"என்ன சொல்றீங்க...? எனக்குப் புரியலை..." என்று வருண் சொன்னபோது மாடியில் இருந்து இறங்கி வந்தாள் தர்ஷிகா. அவளைப் பார்த்ததும் பொன்னம்பலம்  கண்கள் அவளின் விரலைத் தேடின மோதிரம் பார்க்க... வலது கையால் முன் விழுந்த முடியை பின்னால் தள்ளினாள். கண்களை லென்ஸ் ஆக்கி விரலில் பார்த்தார்.

அங்கே....

மோதிரம் இல்லை.

(படம் பிரியா அக்கா வரைந்தது... முன்பே வேறொரு பதிவிற்கு சுட்டுப் போட்டிருக்கிறேன்... இப்ப மீண்டும்.... நன்றி அக்கா)

(தொடரும்)
-'பரிவை' சே.குமார்.

திங்கள், 16 நவம்பர், 2015

குறுந்தொடர்: பகுதி - 9. கொலையாளி யார்?

முன்கதை


தொழிலதிபர் தணிகாசலம் ஊட்டியில் வைத்து கொடூரமான முறையில் கொலை செய்யப்படுகிறார். அவரை யார் கொலை செய்தார் என்பதைக் கண்டுபிடிக்க தனது விசாரணையைத் தொடங்கும் இன்ஸ்பெக்டர் சுகுமாரன், வேலைக்காரி முதல் அவரது வாரிசுகள் வரை விசாரிக்க எந்தத் தகவலும் கிடைக்காமல் திணறுகிறார்.

இனி...
(அன்னப்பட்சி எங்கேன்னு கேக்கக்கூடாது... வைர மோதிரத்தை தேடினால் அன்னப்பட்சியைக் காணோம்...)

கையிலிருந்த மோதிரத்தை பார்த்துச் சிரித்தார் பொன்னம்பலம், அது பெண்கள் அணியும் விலை உயர்ந்த வைர மோதிரம்... தணிகாசலத்தின் கொலை விவரம் அறிந்து முதலில் சென்ற பொன்னம்பலம் இஞ்ச் பை இஞ்சாத் தேடித்தான் இதைக் கண்டுபிடித்தார். மனைவியிடம் கொடுத்து விட ஆசைதான்... இருந்தாலும் ஏனோ மனசு யோசித்தது... அதனாலேயே இரண்டு நாட்களாக பேண்ட் பாக்கெட்டில் வைத்து கொண்டு அலைகிறார். 'இனி தடயம் கிடைக்குதா..? அதான் இருந்த ஒண்ணையும் நான் வச்சிருக்கேனே...’ என்று வாய்க்குள் முணுமுணுத்தார். ‘இதைக் கொடுத்தா கேசு முடியும்ன்னா கொடுக்கலாம்... ஆனா இது வெளியவே தெரியாமப் போயிருமே...’ என்று நினைத்தவரின்  செல்போன் கூப்பிட்டது. அதை எடுத்துப் பார்த்தவர் சுகுமாரன் அழைக்கவும், வேகமாக பட்டனைப் பிரஸ் பண்ணி "என்ன சார்... சொல்லுங்க..." என்றார்.

"எங்கய்யா இருக்கே... வீட்டுக்குப் பொயிட்டியா என்ன...?"

"இல்ல சார்... ஸ்டேசன்லதான்... சொல்லுங்க..."

"நீ என்ன பண்றே...? அந்த லதாக்கிட்ட இப்பவே போயி விசாரிச்சிட்டு எனக்கு என்னன்னு சொல்லிட்டு வீட்டுக்குப் போ..."

"அப்படி என்ன சார் அவசரம்...? நாளைக்குப் போகலாமே..."

"இல்ல நாளைக்குத்தான் எனக்கு கொஞ்சம் பெர்சனல் வேலை இருக்குன்னு சொன்னேனுல்ல....விசாரிச்சி முடிச்சிட்டா நாளைக்கு வேற வேலை பாக்கலாம்ல்ல... அதான் இன்னைக்கே முடிச்சிடு... இது தேவையில்லாத்துதான்... பட்... உன்னோட கருத்துக்கும் மதிப்பளிக்கணுமில்ல... ஏதாவது அவகிட்ட கிடைக்கிதான்னு பார்க்கலாம்.... என்ன சரியா?"

"சரிதான் சார்... காலையில இருந்து அலையிறேன்... எனக்கும் கொஞ்சம் ரெஸ்ட் வேண்டாமா? இங்கயும் கொஞ்சம் வேலை இருக்கு... நாளைக்குப் போறேன் சார்..." என்றபடி அவனின் பதிலைக் கேட்காமல் போனைக் கட் பண்ணினார்.

"வாங்க சார்... என்ன சார்...?" பயத்தோடு கேட்டாள் லதா, அவள் கணவனும் இருந்தான்.

"சும்மாதான்... உங்க ஐயா கொலையில சில தடயம் கிடைச்சிருக்கு அதான் உங்கிட்ட விசாரிச்சிட்டுப் போகலாம்ன்னு வந்தேன்..."

"எ... என்ன... தடயம் சா... சா....ர்.... அதுதான்.... எ...ல்லாம் சொ...ல்...லிட்டேனே..." பயம் கலந்த பதட்டத்தோடு கேட்டாள்.

"எதுக்கு பயப்படுறே..? ஆமா உங்க ஐயாவுக்கு அன்னைக்கு ராத்திரி நீதானே சாப்பாடு கொடுத்தே...?"

"ஆ...ஆமா..."

"என்ன மருந்து கலந்து கொடுத்தே...?"

"மருந்தா... நானா... என்ன சார் சொல்றீங்க... நா எதுக்கு கொடுக்கணும்...?"

"எதுக்கு கொடுத்தேன்னு நீதான் சொல்லணும்..."

"என்ன சார் மிரட்டுறீங்க... பெரிய இடத்து கொலையில எங்களை பலிகடா ஆக்கப் பாக்குறீங்களா?" அவளின் கணவன் வேகமாகக் கேட்டான்.

"என்னடா குரலை உயர்த்துறே... பொத்திக்கிட்டு உக்காரு... ஸ்டேசனுக்கு இழுத்துக்கிட்டுப் போனா விசாரிக்கிற விதமே வேற தெரியுமா... உம்பொண்டாட்டி உடம்புல ஒட்டுத்துணி இல்லாம விசாரிப்போம்... கூட்டிக்கிட்டு போகவா..."

"சா....சார்..."

"பேசாம உக்காரடா..." என்று உறுமிவிட்டு "நீ கேக்குறதுக்கு சரியான பதிலைச் சொல்லு... என்ன இல்லேன்னா ஸ்டேசனுக்குத்தான் வர்ற மாதிரி இருக்கும்..." என்றார் லதாவிடம்.

"சொ... சொல்...றேன்... சார்..." என்ற லதா, உலர்ந்த உதடுகளை நாக்கால் ஈரப்படுத்திக் கொண்டாள். அதற்குள் பக்கத்து வீட்டு ஆட்கள் எல்லாம் கூடிவிட "இங்க ஒண்ணும் யாரும் அவுத்துப் போட்டுக்கிட்ட ஆடலை... வாயத் தொறந்துக்கிட்டு வந்து நிக்க... இவ மொதலாளியை யாரோ கொலை பண்ணியிருக்காக அதான் விசாரிக்க வந்திருக்கேன்... எல்லாரும் போயி அவுக அவுக வேலையைப் பாருங்க..." என்று கத்திவிட்டு, "இங்க பாரு லதா... உனக்கு விவரம் தெரிஞ்சா சொல்லு... நீ பண்ணுனேன்னு சொல்ல வரலை... ஆனா யாருக்கோ உதவியிருக்கேன்னு சந்தேகம் இருக்கு..." என்றார் சற்றே கடுமையுடன்.

"சார்... சத்தியமா எனக்கு ஒண்ணுந் தெரியாது..."

"அப்ப எப்படி சாப்பாட்டுல மயக்க மருந்து கலந்துச்சு..."

"அதான் எனக்கும் புரியலை... ஆனா..."

"என்ன ஆனா... சொல்லு..."

"ஐயா படுக்கப் போகுமுன்னால ஒரு டானிக் சாப்பிடுவாங்க... அது அவருக்குன்னே ஸ்பெஷலா மதுரையில நாட்டு மருந்துக்கடையில தயார்ப்பண்றதுன்னு ரெத்தினண்ணன் சொல்லியிருக்கு... அதைச் சாப்பிட்டா தூக்கம் நல்லா வரும்ன்னு ஐயா சொல்லுவாங்கன்னு அண்ணன் சொல்லியிருக்கு..."

"ம்..." என்றவர் 'அட என்னடா இது புஸ்ஸூன்னு போச்சு' என்று நினைத்துக் கொண்டே, "அப்ப அதுல யாரோ மருந்து கலந்திருக்காக... நீ இல்லை அப்படித்தானே...?"

"சத்தியமா... ஏம் புள்ள மேல சத்தியமா எனக்குத் தெரியாது..." பதட்டம் குறைந்து தெளிவாய்ப் பேசினாள்.

"ம்... சரி அங்க ஒரு வைர மோதிரம் கிடைச்சிருக்கு... சார்க்கிட்ட இருக்கு... உனக்கு ஏதாவது அதைப் பற்றி தெரியுமா..?" மெதுவாக பிட்டைப் போட்டார்.

"ம்... வைர மோதிரம்....? ஐயா கையில கூட ஒண்ணு இருக்குமே...?"

"அதான் இருந்துச்சே... அது இல்ல... இது லேடீஸ் மோதிரம்... வித்தியாசமாய் வைரக்கல் பதிச்சி... பாக்க.... அதை எப்படி சொல்றது...? ம்..." சொல்ல வராதது போல் நடித்தார்.

"அன்னப்பட்சி மாதிரியா சார்...?" லதா கண்கள் விரியக் கேட்டாள்.

"எஸ்... அதே... அதேதான்... நீ பாத்திருக்கியா..?"

"ஆமா சார்... அது எங்க தர்ஷிகா அம்மா போட்டிருப்பாங்க... இங்க வர்றப்போ நான் பாத்திருக்கேன்... நானும் அவுகளும் போன்ல போட்டோ எடுத்திருக்கோம்... அதுல கூட இருக்கும்... இருங்க காட்டுறேன்..." என்றபடி தனது மொபைலில் போட்டோவைத் தேடி எடுத்துக் காட்டினாள்.

அதில் லதாவின் தோளில் தனது வலது கையைப் போட்டபடி சிரித்துக் கொண்டு நின்றாள் தர்ஷிகா. அவளது விரல்களைப் பெரிதுபடுத்திப் பார்த்த பொன்னம்பலம் அதிர்ந்தார். அவளின் கையில் அதே மோதிரம்... 

(தொடரும்)
-'பரிவை' சே.குமார்.