மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 30 ஜூலை, 2016

கவிதை : பெருமழையின் பேரானந்தம்


பெருமழைக்கு முகாந்திரமாய்
பேரிரைச்சலோடு
ஆரம்பித்தது சிறு மழை...

தென் மேற்காகவோ
வட கிழக்காகவோ
விரைந்து ஓடாமல்
சுழற்றி அடித்தது காற்று...

கண்ணைப் பறிக்கும் மின்னலும்
காதைப் பிளக்கும் இடியும்
இல்லாத போதும்
பயந்து ஒதுங்கியது மின்சாரம்...

பறந்து விழுந்த
தென்னை ஓலை...
கிளைகளைச் சுழற்றி
குதூகலித்த மரங்கள்...

பாய்ந்தோடும் பசுக்கள்...
பாந்தமாய் எருமைகள்...
ஒண்ட இடம் தேடும்
நனைந்த நாய்கள்...

கூடி தேடி விரையும் கோழிகள்...
கூச்சலிடும் குருவிகள்...
சீறிப் பறக்கும் வாகனங்கள்...

சாயங்கால மழை
சட்டுன்னு விடாது
நொந்தபடி மிதிக்கும்
சைக்கிள் மனிதர்கள்...

கொலுசு நனைய...
கெண்டைக்கால் தெரிய...
குடை பிடித்து நடக்கும் குமரிகள்...

நனைந்தபடி கதை பேசி...
அதில் எவளையோ வாசைபாடும்
பால்காரப் பெண்கள்...

ஆனந்தத்தில் பேப்பர்
கிழித்துக் கப்பல்
விடும் குழந்தைகள்...

எல்லாம் ரசித்தபடி
காற்றோடு கொஞ்சிக்
கவிதை எழுதிய
பெருமழையொன்று

இதமான தேநீரின் சுவையோடு
மண்ணின் வாசத்தையும்
மனசுக்குள் இறக்கி
என் சன்னலை மெல்லக்
கடந்து கொண்டிருக்கிறது...

ஒருவேளை அது உங்கள்
ஊர்ப்பக்கம் வரலாம்...
சன்னலோரம் காத்திருங்கள்
ஓரு கோப்பை தேநீரோடு..!
-'பரிவை' சே.குமார்.

வெள்ளி, 29 ஜூலை, 2016

சினிமா : கலி (மலையாளம்)

லியில் 'அவனுக்கு மூக்குக்கு மேல கோபம் வருமப்பா' என்று நம்ம ஊர்ப்பக்கம் சொல்வார்களே அப்படி ஒரு கதாபாத்திரம் துல்கருக்கு... எதற்கெடுத்தாலும் கோபம்... காதலித்து திருமணம் செய்து கொண்ட சாய் பல்லவியுடனும் அடிக்கடி மோதல்... அப்படியிருந்தும் காதலால் இருவரும் விட்டுக் கொடுத்து வாழ்கிறார்கள். ஒருநாள் அலுவலக பார்ட்டிக்குச் செல்லுமிடத்தில் துல்கர் நடந்து கொண்ட விதத்தினால் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட சண்டை பெரிதாகி சாய் வீட்டை விட்டு தமிழ்நாட்டில் இருக்கும் தன் தாய் வீட்டிற்கு கிளம்பிவிட, இந்த இரவில் தனியாக செல்ல வேண்டாம்... நான் கொண்டு வந்து விடுகிறேன் என்று அவரை காரில் ஏற்றிக் கொண்டு பயணிக்கிறார் துல்கர். 


வழியில் லாரிக்காரன் ஒருவன் வேண்டுமென்றே இவர்களது காரை ரோட்டை விட்டு இறங்க வைக்க, துல்கரின் சாமர்த்தியத்தால் மிகப் பெரிய விபத்தில் தப்பிவிடுகிறார்கள். அதன் பின் லாரிக்காரனை அவன் விரட்ட, சாய் பல்லவி வேண்டாமென மன்றாட, ஒரு கட்டத்தில் லாரியை மறித்து டிரைவரை அடிப்பதற்காக காரில் இருந்து இறங்கும் துல்கரை, சாய் கெஞ்சிக் கூத்தாடி தடுத்து அழைத்துச் செல்கிறார். போகும் வழியில் பசி எடுக்க ரோட்டோர மோட்டலில் சாப்பிட போகிறார்கள். அப்போது அங்கு லாரிக்காரனும் வர, மீண்டும் ஆரம்பிக்கும் சின்ன பிரச்சினையில் படம் சூடு பிடிக்கிறது.

ரோட்டோர மோட்டல் பிடிக்காமல் வேண்டா வெறுப்பாக சாய்க்காக சாப்பிடும் துல்கர், காசு கொடுக்கும் போது வேண்டாமென திருப்பிக் கொடுத்த ஜூஸ்க்கும் காசு போட்டிருப்பது குறித்து சண்டையிட்டு ஒருவழியாக பணம் கொடுக்கப் பர்ஸை எடுத்தால் அதில் சல்லிக்காசு இல்லை. அப்போதுதான் வீட்டில் சாயுடனான சண்டைக்குப் பின்னர் வீட்டு ஓனர் வந்து பேச, அவரிடம் பர்ஸில் இருந்த காசை எல்லாம் எடுத்து வாடகை கொடுத்து விட்ட வந்தது நினைவில் வருகிறது, சாயிடம் ஏதாவது பணம் இருக்கிறதா என்று கேட்கிறான். அவளோ தானும் எடுத்துவரவில்லை என்று சொல்லிவிடுகிறாள்.  காசில்லாததால் கிரிடிட் கார்டைக் கொடுக்கிறான். அவர்களோ இங்க கிரிடிட் கார்டு வசதியெல்லாம் இல்லை... எனவே பணமாகக் கொடுங்கள்... என்று கறாராகச் சொல்ல, அந்த நேரத்தில் ஏடிஎம்மைத் தேடித் செல்லும் நிலைமை ஏற்படுகிறது. 

யாராவது ஒருவர்தான் போக வேண்டும் என்ற நிலையில் பாதுகாப்பு கருதி தான் அங்கிருந்து கொண்டு ஓரளவே கார் ஓட்டத் தெரிந்த சாய் பல்லவியை அனுப்பி வைக்கிறார். அவர் சென்ற சிறிது நேரத்தில் அவர் பின்னே லாரிக்காரனும் கிளம்புகிறான். அதிலிருந்து நமக்கும் ஹார்ட் பீட் எகிற ஆரம்பிக்கிறது... அந்த படபடப்பு இறுதிக் காட்சி வரை தொடர்கிறது. சாய் பல்லவியை லாரிக்காரன் என்ன செய்தான்...? மனைவிக்காக தன் கோபத்தை குறைத்துக் கொள்ளும் துல்கருக்கு அந்த மோட்டலில் நடந்தது என்ன..? கணவனும் மனைவியும் மீண்டும் சேர்ந்தார்களா..? என்பதே படத்தின் இறுதிப் பகுதி.


சாய் பல்லவி கோபித்துக் கொண்டு வெளியே போவதில் ஆரம்பிக்கும் அவர்களின் கதையில் கல்லூரி வாழ்க்கை, காதல், கல்யாணம், வேலை என முந்தைய நிகழ்வுகள் அழகாய் விரிகிறது. லாரிக்காரனின் வரவுக்குப் பின்னர் அந்த மோட்டல் காட்சிகள் பரபர... மிரட்டலாய் இருக்கிறது. துல்கர் தனக்கு பொறுத்தமான படங்களை மிகச் சரியாக தேர்வு செய்கிறார். அப்பா மம்முட்டியின் பங்கும் இருக்குமோ என்னவோ...? பொறுத்தமான கதாபாத்திரத்தினாலேயே தொடர்ந்து வெற்றிப் படங்களைக் கொடுக்கிறார். மலர் டீச்சராக பார்த்த சாய் பல்லவிக்கு இதில் கண்ணீரோடு இருக்கும் காட்சிகளே அதிகம்... அதையும் சரியாக செய்திருக்கிறார் என்றாலும் மலர் டீச்சரைவிட இதில் இன்னும் எலும்பாய் தெரிகிறார்... கொஞ்சம் சதைப்பிடிப்பு வேண்டும் பெண்ணே. 

லாரிக்காரனாக செம்பான் வினோத்தும் மோட்டல் நடத்தும் ரவுடியாக விநாயகமும் நடித்திருக்கிறார்கள். இசை : கோபி சுந்தர், கதை : ராஜேஷ் கோபிநந்தன், இயக்கம் : சமீர் தாஹிர். பாடல்களை ரசிக்கலாம்... ஆரம்பத்தில் மெல்ல நகர்ந்து இடைவேளைக்குப் பின்னர் வேகமெடுக்கும் கலி, மொத்தத்தில் படம் சூப்பருங்க...


-'பரிவை' சே.குமார். 

வியாழன், 28 ஜூலை, 2016

மனசு பேசுகிறது : ரோட்ரிகோ டுடேர்தே


பிலிப்பைன்ஸில் 71 வயசுக்காரரான ரோட்ரிகோ டுடேர்தேயை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுத்திருக்காங்க... இதுல என்ன அதிசயம்... நம்ம நாட்டுல இருக்க அரசியல்வாதிங்க பெரும்பாலும் எழுபதுக்கு மேலதானே இருக்காங்க அப்படின்னு நீங்க நினைக்கலாம். பிலிப்பைன்ல இது அதிசயமே... ஏனென்றால் உலகில் கொள்ளையும் கொலையும் மிகுந்த நாடுகளில் ஒன்று பிலிப்பைன்ஸ்... உடமைகளுக்கும் உயிருக்கும் பாதுகாப்பில்லாத ஒரு நாடு. இங்கு பிலிப்பைனிகள் அதிகம் இருக்கிறார்கள். வாங்கும் சம்பளத்தை இங்கே செலவு செய்வார்கள்.  ஒரு சிறிய அறைக்குள் ஸ்கிரீன் போட்டு நாலைந்து குடும்பங்கள் வாழ்வார்கள் ஆனால் வெளியில் வரும்போதும்... பொருட்களை வாங்கும் போதும் மிகவும் ஆடம்பரமாக நடந்து கொள்வார்கள். தங்கள் நாட்டை போதைப் பொருள், கொலை, கொள்ளையில் இருந்து மீட்டெடுக்க இவர்தான் சரிவருவார் என மக்கள் இவரைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். அதற்குக் காரணம் என்ன என்பதை அறிய தொடர்ந்து வாசியுங்கள்.

டுடேர்தே, ஒரு சாதாரணக் குடும்பத்தில் பிறந்தாலும் கஷ்டப்பட்டு வழக்கறிஞர் படிப்பை முடித்தார். அதன் பின்னர் பல்வேறு வேலைகளைப் பார்த்தவருக்கு அரசியல் மீது ஆசை வந்து அதில் இறங்கினார்.  தான் இருந்த மின்டனாவோவில் டாவோ (DAVAO)  என்ற ஊருக்கு மேயரானார். அவரின் நடவடிக்கைகளால் ஈர்க்கப்பட்ட மக்கள் அவரை மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுக்க தொடர்ந்து 22 வருடங்கள் அந்த ஊரின் மேயராக பதவி வகித்தார்.  மக்களுக்கு அவர் மீது ஈர்ப்பு வரக்காரணம்... சூதாட்டக் கிடங்குகளையும் போதை வஸ்துக்களை விற்பவர்களையும் ரவுடிகளையும் குறிபார்த்து சுடக்கூடிய ஷூட்டர்களை தன்னோடு இணைத்துக் கொண்டு வேட்டை ஆட ஆரம்பித்தார். அந்த 22 வருட காலத்தில் 1400 பேரைக் களை எடுத்திருக்கிறார். இதில் இன்னொரு விஷேசம் என்னவென்றால் தானே மோட்டார் சைக்கிளில் இரவு நேரத்தில் ரோந்து செல்வாராம்...  போதைப் பொருள் விற்பவர்களையும் கொள்ளையர்களையும் கொலைகாரர்களையும் சுட்டு வீழ்த்துவாராம். தப்பிக்க நினைத்தவர்கள் பிடிபட்டால் அனுபவிப்பது நரக வேதனையாம்... இதற்கு ஒரே சூட்டில் செத்திருக்கலாமே என்று நினைக்க வைத்துவிடுவாராம். இவரின் இந்த நடவடிக்கைகளால் டாவோவில் குற்றங்கள் குறைந்து ஊர் சுத்தமானதாம்... உலகிலேயே மக்கள் வசிக்க சிறந்த நகரங்களில் இது நாலவது இடத்தைப் பெற, அவரின் புகழ் பிலிப்பைன்ஸ் நாடு முழுவதும் பரவியிருக்கிறது.

பிலிப்பைன்ஸ் மத்திய அரசில் அமைச்சராகச் சேரும்படி அவருக்கு பலமுறை அழைப்பு வந்தபோதும் ஏற்றுக் கொள்ளாமல் தட்டிக்கழித்து வந்திருக்கிறார். திடீரென 2015 ஆம் வரும் ஜனாதிபதி தேர்தலில் நான் களம் இறங்கப் போகிறேன் என அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பு மக்களுக்குச் சந்தோஷத்தைக் கொடுத்தாலும் நம்ம ஊரைப் போல ஊழல் அரசியல்வாதிகளும் அவர்களின் கைக்கூலிகளுமான போதைப் பொருட்கள் கடத்தும் கும்பல், ரவுடிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு சாமரம் வீசும் பத்திரிக்கைகள் டுடேர்தேயின் மறுபக்கத்தை மட்டுமே திரும்பத் திரும்ப மக்களிடம் கொண்டு செல்ல முயற்சித்திருக்கின்றன. அவர் சட்டத்தை மதிக்க மாட்டார் என்றும் சட்ட விரோத கொலைகள் நடத்துவார் என்றும் மனித உரிமையை நசுக்குவார் என்றும் பிரச்சாரங்கள் செய்தார்கள்.  நான் அப்படிப்பட்டவன் இல்லை... அதெல்லாம் செய்யமாட்டேன்... மக்களுக்காக மட்டுமே உழைப்பேன்... ரொம்ப நல்லவனாக்கும் என்றெல்லாம் சொல்லாமல் அவர்கள் சொல்வதை ஒத்துக் கொள்வது போல் நான் ஆட்சிக்கு வந்தால் ஆறு மாதத்திற்குள் குற்றவாளிகளை சுட்டுக் கொல்வேன்... அவர்களின் உடல்களை கடலில் வீசுவேன் என்று மக்களிடம் பேசியிருக்கிறார். டுடேர்தேயால் மட்டுமே பிலிப்பைன் நாட்டை தீய சக்திகளிடம் இருந்து மீட்க முடியும் என ஒரு நாட்டு மக்கள் எல்லாரும் ஒரு மனதாக நினைத்ததன் விளைவு தற்போதைய ஜனாதிபதியை விட இரண்டு மடங்கு ஓட்டு கூடுதல் பெற்று வெற்றி பெற்று ஜனாதிபதி ஆனார்.

ஆடம்பரமாக நடக்கும் பதவியேற்கும் விழாவை இந்த முறை மிக எளிமையாக நடத்தியிருக்கிறார். 600 பேருக்கு மட்டுமே விருந்து ஏற்பாடு செய்யப்படிருக்கிறது அதில் மது பரிமாறப்படவில்லை என்பது ஆச்சர்யமான நிகழ்வு. மிக எளிமையாக உடை அணியும் டுடேர்தே, ஜனாதிபதிக்கான பாரம்பரிய உடை தனக்கு வேண்டாம் என்றும்  புல்லட் புரூப் காரோ, பாதுகாப்போ தனக்கு தேவையில்லை என்று சொன்னதுடன்  சாதாரண பிக்கப் ஒன்று தனக்கு போதுமென்று சொல்லிவிட்டார்.  மேலும் தன் நாடு பொருளாதார ரீதியாக வளர்ச்சி அடைந்து கொண்டிருந்தாலும் அந்த வளர்ச்சியை ஒரு சில செல்வந்தர்கள் மட்டுமே அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். இதை முறியடித்து நாட்டின் வளர்ச்சி மக்கள் அனைவரையும் சென்றடையச் செய்வேன் என்றும் பெண்கள் சுதந்திரமாக நடமாடக்கூடிய பத்திரமாட்டை உருவாக்குவேன் என்றும் சொன்னவரின் எதிர்காலக் கனவு  நாட்டின் செல்வங்கள் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் அதிக வேலை வாய்ப்புக்களை உருவாக்க வேண்டும் என்பதுதானாம். அதற்காக தான் உழைக்கப் போவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

கடந்த ஜூலை ஒன்றாம் தேதி பதவி ஏற்ற அவர், நாட்டு மக்களுக்கு தனது பரிசாக விலையில்லா மதுவையோ... ஆயிரம் ரூபாய் டிக்கெட்டையோ கொடுக்கவில்லை மாறாக 110 போதை மருந்து விற்பனையாளர்களைச் சுட்டுக் கொன்றிருக்கிறார். இதனைத் தொடர்ந்து ஆயிரத்துக்கும் மேலான ரவுடிகளும் முன்னால் குற்றவாளிகளும் போலீசில் சரணடைந்தார்கள்.  

'பொருளாதாரம் பற்றி எனக்குத் தெரியாது... அறிஞர்களும் பொருளாதார நிபுணர்களும் அடங்கிய குழுவின் கையில் அந்தப் பொறுப்பை ஒப்படைத்துவிடுகிறேன்... லஞ்சம். கொலை, கொள்ளை, போதைப் பொருள் விற்பனை ஆகியவற்றை அடியோடு ஒழித்து மக்களை சுதந்திரமாக நடமாட வைப்பதும் குற்றவாளிகள் அனைவருக்கும் எமனாக இருப்பதுமே எனது முக்கியமான பணி... எனது என்கவுண்டருக்கு சட்டமன்றங்களோ, மனித உரிமை அமைப்போ என்ன சொன்னாலும் அதை நான் கண்டு கொள்ளப் போவதில்லை... மக்கள் எனக்கு அளித்திருக்கும் ஆறு வருட காலத்தில் முதல் ஆறு மாதத்திலேயே பிலிப்பைன்ஸ் நாட்டை உலகின் அமைதியான... பத்திரமான நாடாக மாற்றுவேன்...' என்று டுடேர்தே தெரிவித்துள்ளார்.

டுடேர்தேயின் களை எடுப்பு 'நெருப்புடா... நெருங்குடா... பார்ப்போம்...' என அடித்து ஆட ஆரம்பிக்க, உலக நாடுகளின் பார்வை இப்போது அவர் மீது... நமக்கும் இப்படி ஒரு ஆட்சியாளர் கிடைத்தால் நல்லாயிருக்கும் என்று நினைத்தோமேயானால் அது முடியாத ஒன்று. நம் அரசியல்வாதிகள்தானே குற்றவாளிகள்... அதுமட்டுமில்லாமல் இவன் வந்தால் நாடு சுத்தமாகும் என்று நினைக்கும் மக்கள் அங்கே... காசை வாங்கிக் கொண்டு களவாணிகளையே அரியணை ஏற்றும் மக்கள் இங்கே... ம்...  நமக்கும் ஒரு டுடேர்தே கிடைத்தால்....

"மகிழ்ச்சி".
-'பரிவை' சே.குமார்.

செவ்வாய், 26 ஜூலை, 2016

தமிழ்க்குடில் கவிதை மற்றும் கட்டுரைப் போட்டி

வ்வொரு வருடமும் தமிழ்க்குடில் அறக்கட்டளை கவிதை, கட்டுரை மற்றும் பெண்களுக்கான போட்டிகள் நடத்துவது தாங்கள் அறிந்ததே. இந்த வருடத்திற்கான போட்டிகளின் விவரங்கள்  கீழே....


போட்டி எண் 1 – திரு. காமராசர் அவர்களின் 113 வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்க்குடில் அறக்கட்டளை நடத்தும் மூன்றாம் ஆண்டு கட்டுரைப்போட்டி


தலைப்பு : 'இன்றைய நெருக்கடியான கல்விச்சூழலில் காமராசர்'

விதிமுறைகள்:
  1. போட்டியில் கலந்துகொள்பவர்கள் உலகின் எந்த மூலையில் இருப்பவராகவும் இருக்கலாம்.(பள்ளி மாணவர்கள் தவிர)
  2. குறைந்தது 4 பக்கம் முதல் 10 பக்கம் வரை இருக்கவேண்டும்.
  3. படைப்புகள் வேறு எங்கும் பகிர்ந்ததாகவோ, அச்சிடப்பட்டதாகவோ இல்லாமல் தமிழ்க்குடிலின் போட்டிக்கென எழுதி அனுப்பவேண்டும்.
  4. உங்கள் பார்வையில் நீங்கள் திரு.காமராசரை உணர்ந்த விதத்தில், இன்றைய கல்விச்சூழலை அவர் எப்படி கையாண்டு இருப்பார் என கட்டுரைகள் படைக்க வேண்டுகிறோம்.
  5. படைப்பாளிகள் தங்கள் பெயர், தொடர்பு எண், முகவரியுடன் படைப்புகளை  மின்னஞ்சலில் மட்டுமே அனுப்பி வைக்கப்படவேண்டும் குழுமத்திலோ, நிர்வாகியின் தனிச்செய்தியிலோ தனித்த மின்னஞ்சலிலோ அனுப்பப்படும் படைப்புகள் போட்டிக்கு ஏற்கப்படமாட்டாது.
  6. படைப்புகளை லதா, பாமினி ஒருங்குறியில் தட்டச்சு செய்து வேர்டு ஆவணமாக அனுப்பவேண்டுகிறோம். தங்கள் படைப்புகள் எழுதியிருக்கும் பக்கத்தில் தங்கள் பெயர், முகவரி குறிப்பிடாமல் மின்னஞ்சலில் மட்டும் குறிப்பிட்டால் போதுமானது. முடிவுகள் அறிவிக்கப்பட்டபிறகு பதிவுகள் தமிழ்க்குடில் குழுமத்திலும், வலைப்பூவிலும் பகிரப்படும்.
பரிசு விவரம்: 

முதல் மூன்று வெற்றியாளர்களுக்கு, வெற்றி பெற்றவரின் பெயர் மற்றும் தமிழ்க்குடில் அறக்கட்டளையின் இலச்சினை(சின்னம்-Logo) பொறிக்கப்பட்ட நினைவுச்சின்னம் மற்றும் தமிழ்க்குடில் அறக்கட்டளை வழங்கும் சான்றிதழ் வழங்கப்படும்.

*******
போட்டி எண் : 2 - தமிழ்க்கடல் திரு. மறைமலை அடிகளாரின் 140 வது பிறந்தநாளை (15 ஜூலை) முன்னிட்டு கவிதைப்போட்டி

தலைப்பு : பொதுவான தலைப்பு இல்லை - விருப்பமான, பொருத்தமான தலைப்பில்...

விதிமுறைகள் :
  1. போட்டியில் பங்குகொள்பவர்கள் தங்களுக்கு விருப்பமான தலைப்பில் கவிதையைத் தங்கள் சொந்தக்குரலில் ஒலிப்பதிவு செய்து (MP3 Format ) தமிழ்க்குடில் மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டுகிறோம். 
  2. ஒலிப்பதிவு செய்யும்பொழுது தங்களைப்பற்றிய எந்த சுய விவரமும் கொடுக்காமல் கவிதையின் தலைப்பு, கவிதை, கவிதைக்கான களம், கவிதையின் சூழல் மற்றும் கவிதை என்ன சொல்கிறது என்பதையும் குறிப்பிடவும்.
  3. மின்னஞ்சலில் தங்கள் பெயர், தொடர்பு எண், முகவரி இவற்றோடு தாங்கள் பதிவு செய்த கவிதையினை தட்டச்சு செய்து மின்னஞ்சலில் அனுப்பிட வேண்டுகிறோம்.
பரிசு விவரம்:


முதல் பரிசு மற்றும் இரண்டாவது பரிசு: வெற்றி பெற்றவரின் பெயர் மற்றும் தமிழ்க்குடில் அறக்கட்டளையின் இலச்சினை(சின்னம்-Logo) பொறிக்கப்பட்ட நினைவுச்சின்னமும், சான்றிதழும் வழங்கப்படும்.

மூன்றாவது பரிசு : நூலும், சான்றிதழும் வழங்கப்படும்.

அனுப்பவேண்டிய மின்னஞ்சல் - tamilkkudil@gmail.com
அனுப்பவேண்டிய கடைசி நாள் கட்டுரைக்கு.... 15.08.16கவிதைக்கு......10.08.16
தொடர்ந்து தமிழ் தொடர்பான போட்டிகளை அறிவித்து அதை மிகச் சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கும் தமிழ்க்குடில் அறக்கடளையின் இந்தப் போட்டிகளும் சிறப்புற அனைவரும் கலந்து கொள்ளுங்கள். தங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து கொண்டு அவர்களையும் எழுதச் சொல்லுங்கள்.

-'பரிவை' சே.குமார்.

திங்கள், 25 ஜூலை, 2016

சினிமா : மகேஷிண்டே பிரதிகாரம் (மலையாளம்)

ரம்பத்தில் தொடர்ந்து வெற்றிப்படங்களைக் கொடுத்த பஹத், தற்போது தொடர்ந்து தோல்விப் படங்களாக கொடுத்துக் கொண்டிருந்த நேரம், நஸ்ரியா மனைவி ஆன பின் தோல்விப் படங்கள்தான் என்ற பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சிகள் செய்து கொண்டிருந்த நேரம்... கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யா திருமணத்துக்குப் பின்னர் கிரிக்கெட் வாழ்க்கை மோசமாகிப் போனதற்கு காரணம் மனைவி வந்த நேரம்தான் என விவாகரத்து செய்தார் என்பதை நாம் அறிவோம்... மூடர்கள்... அப்படி இடையில் பஹத்துக்கும் நஸ்ரியாவுக்கும் பிரச்சினை என செய்திகள் எல்லாம் வந்தன... அது பொய்யான தகவல் என பஹத்தும் நஸ்ரியாவும் சொல்லிவிட அது காற்றோடு போனது... அவர்கள் காதலோடு வாழ்கிறார்கள்.


ஒரு பக்கம் நிவினும் துல்கரும் அடித்து ஆடிக் கொண்டிருக்க தான் டக் அவுட் ஆகிக் கொண்டிருப்பதை தடுத்து, அதிலிருந்து மீள பஹத்துக்கு ஒரு சதம் அவசியமாக இருந்தது. அதை 'மகேஷிண்ட பிரதிகாரம்' கொடுத்தது. ஒரு சதம் எதிர்பார்த்தவருக்கு இரட்டைச் சதம் கிடைத்தது. மனுசனும் அடித்து ஆடியிருக்கிறார். சாதாரணமான கதை... பழிக்குப் பழி வாங்கியே தீருவேன்... அதுவரை இதைத் தொடமாட்டேன் என சின்னப் பிள்ளைகள் சவால் விடுவார்களே அப்படியான ஒரு கதை. சின்னதா நார் எடுத்து அழகாய் பூக்கட்டியிருக்கிறார்கள்.

போட்டோ ஸ்டுடியோ நடத்தும் பஹத், மிகச் சிறந்த போட்டோக்கிராபர் அல்ல... அவரின் கடை அருகே போட்டோ பிரேம் போட்டுக் கொடுக்கும் கடை வைத்திருக்கும் மாமா, வித்தியாசமான போட்டோ எடுக்க நினைக்கும் வயதான அனுபவம் நிறைந்த  போட்டோகிராபரான அப்பா. இவர்களைச் சுற்றி நடக்கும் கதைக்களம். பஹத்தின் முதல் காதலி குடும்ப நிலையை சுட்டிக்காட்டி வேறோருவனுக்கு மனைவியாக அந்த வேதனையில் வாடினாலும் வெளிக்காட்டாமல் வாழ்கிறார். ஒருநாள் மாமாவை ஒருவன் அடிக்க, தட்டிக்கேட்கப் போய் அவனிடம் அடிவாங்கி, வேட்டி அவிழ்க்கப்பட்டு அவமானப்படுகிறார். அப்போது அவனை திருப்பி அடிக்காமல் தான் தனது எட்டாம் நம்பர் செருப்பை அணிவதில்லை என சபதம் செய்கிறார்.


அதன் பின் அவனை அடிக்க முயற்சி மேற்கொள்ளும் போது துபாய் சென்று விட்டான் என்பதை அறிந்து அவனின் வரவுக்காக காத்திருக்கிறார். இந்த சமயத்தில் பஹத்திடம் ஒரு புத்தகத்தின் அட்டைப் படத்துக்காக போட்டோ எடுக்க வரும் பெண், அவர் எடுத்த போட்டோவைப் பார்த்து உனக்கு போட்டோ எடுக்கத் தெரியாதுல்ல எனத் திட்டிவிட, போட்டோ எடுக்கிறது ஒரு கலை... அது படிச்சா வராது... என்று சொல்லும் முன்னாள் போட்டோ கிராபரான அப்பா, ஒரு மழை நாளில் இருட்டில் எடுத்த ஒரு போட்டோவைப் பஹத் பார்க்க நேரிடும் போது அவரின் அற்புதமான போட்டோத் திறமை தெரிகிறது.

அதன் பின் பஹத்,  மாமா கடையில் இருக்கும் பையனை வைத்துக் கொண்டு வித்தியாசமாய் முயற்சித்து அந்தப் பெண்ணுக்குத் தெரியாமலே அவளை அழகாய் எடுத்து பத்திரிக்கைக்கு அனுப்பி அட்டைப் படத்தில் வரவைத்துவிட, அவளுக்கு பஹத் மீது காதல்... காதலியை கரம்  பிடிக்கலாம் என்று நினைக்கும் போது தன்னை அடித்தவன் துபாயில் இருந்து வருகிறான் என்பதை அறிகிறான்... அவன்தான் தன் காதலியின் அண்ணன் என்பதையும் அறிகிறான். அவனை அடித்து சபதத்தை நிறைவேற்றி எட்டாம் நம்பர் செருப்பை அணிந்தானா..? தன் காதலிக்காக சபதத்தை கிடப்பில் போட்டானா..? என்பதுதான் படத்தின் கிளைமேக்ஸ்.


பஹத் சொல்லவே வேண்டாம்... மனுசன் எப்படிப்பட்ட கதாபாத்திரம் என்றாலும் கலக்கிடுவார். இதிலும் புகுந்து விளையாடியிருக்கிறார். அனுஸ்ரீ , அபர்ணா பாலமுரளி என இரண்டு கதாநாயகிகள். காதலித்து விலகிச் செல்லும் அனுவை விட, கல்லூரி மாணவியாக வந்து காதலிக்கும் அபர்ணா கண்களாலேயே பேசி வசியப்படுத்தி விடுகிறார். இசையும் கேமராவும் விளையாண்டிருக்கின்றன.

சாதாரணக் கதை... சின்னப்புள்ளைத்தனமான சவால்... ஆனால் பார்ப்பவர்களை ரசிக்க வைக்கும் படம்.

மொத்தத்தில் மகேஷிண்டே பிரதிகாரம் நம்மளோட மனதோடு பேசும் படம்.

-'பரிவை' சே.குமார். 

சனி, 23 ஜூலை, 2016

கவிதை : வீணையடி நீ எனக்கு

டைநில்லாப் பேருந்தில்
இரைச்சலில்லா
இரவுநேரப் பயணம்...

தார்ச்சாலை இருட்டைத்
தகர்த்து இலக்கை நோக்கி
விரையும் பேருந்துக்குள்
இசையாய் இசைஞானி...

படியில் தொங்கும்
பயணிகள் இல்லை...
இடித்து நிற்கும்
இம்சையும் இல்லை...

பக்கத்து மனிதனின்
தோள் சாயாது
காலி இருக்கையில்
கால் நீட்டித் தூங்கும்
மனிதர்கள்...

பின்னிரவிலும் விழித்திருக்கும்
காதலிக்கு பேசியபடி வரும்
முன்னிருக்கை காதலன்...

எதிலும் ஒட்டாமல்
சாய்ந்து படுத்தவன்
மெல்ல விலக்கினேன்
சன்னல் கண்ணாடியை...

திறக்காத சன்னலால்
திமிறிய காற்று...
வழி கிடைத்ததும்
கன்னத்தில் அறைந்தது...




கடந்து செல்லும் மரத்தை
ரசிக்க மறுத்த மனசு...
அவளின் நினைவுகளை
மீட்டி எடுத்து வாட்டி வதைத்தது...

நாளை திருமணம்...
வாழ்த்த வரணுமாம்...
மென்று விழுங்கிய
வார்த்தைகளால்
கொன்று வீசினாள்
காதலையும் என்னையும்...

ஏமாற்றுவது ஆண்கள்
மட்டுமல்ல பெண்களும்தான்...
ஏமாறுவது பெண்கள்
மட்டுமல்ல ஆண்களும்தான்...

கொஞ்சம் சன்னலை
அடைங்க தம்பி குளிருது
பின்னிருக்கை குரலால்
அடைத்துச் சாத்தினேன்
சன்னலோடு அவள் நினைவையும்...

வானுயர்ந்த சோலையிலே
நீ நடந்த பாதையெல்லாம்...
பேருந்துப் பாடல்
பெருமழையென
மனதுக்குள் இறங்க

மூடிய விழிக்குள்ளிருந்து
வெளியான கண்ணீர்
கன்னத்தில் இறங்கியது...

வீணையடி நீ எனக்கு
நான் சொல்லும் வரிகள்...
அவள் விரும்பும் வரிகள்...

ஆளில்லாத பக்கத்து
இருக்கையில் சாய்ந்திருந்தது
 திருமணப் பரிசாய்
வாங்கிய  அழகிய வீணை...!
-'பரிவை' சே.குமார்.

வெள்ளி, 22 ஜூலை, 2016

எங்கூரைப் போல வருமா? (அகல் ஜூலை -15 கட்டுரை)

Picture
(மாரியம்மன் கோவில் - கும்பாபிஷேகத்திற்கு முன் எடுத்த போட்டோ)
வ்வொரு கட்டத்திலும் வெவ்வேறு இடத்துத் தண்ணீர் குடித்து வளர்ந்தாலும் முதன்முதலில் குடித்த நம்ம ஊர்த் தண்ணிக்கு ஈடு இணை எதுவுமில்லை... எப்படிப்பட்ட ஆளாய் இருந்தாலும் சொந்த ஊர் பற்றிப் பேச ஆரம்பித்தால் மனசுக்குள் சந்தோஷமாய் காட்சிகள் விரிய ஆரம்பிக்கும். பிறந்த ஊர் என்பது பெற்ற தாயைப் போல அதன் மீதான பாசம் என்றும் குறையாது. 'சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா...?' அப்படின்னு நம்ம ராசா ஒரு பாட்டே போட்டு வச்சிருக்காரு... ஒவ்வொருத்தருக்கும் அவங்க பிறந்த ஊர் என்றைக்கும் சொர்க்கம்தான்.

எங்க ஊர்... பெரிய அளவில் சொல்ல ஒண்ணுமில்லைங்க... ஏன்னா சிவகங்கை மாவட்டத்தில் ஒரு சிறிய கிராமம்... சிவகங்கை மாவட்டம் இராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து பிரிந்ததுதான் என்பதால் அந்த வறட்சி எங்க மாவட்டத்திலும் இருக்கத்தானே செய்யும்... வானம் பார்த்த பூமிதான்... பத்து வருசத்துக்கு முன்னால மழை பெஞ்சா விளைந்த ஊர்... இன்று வயல்களின் வரப்புக்கள் தெரியாத வண்ணம் உருமாறிக் கிடக்கிறது. எங்க தலைமுறையில் பெரும்பாலானோர் வேலை நிமித்தமாகவும், பிள்ளைகளின் படிப்பு காரணமாகவும் நகரத்தை நோக்கி நகர, முந்தைய தலைமுறையில் கொஞ்சமும் இன்றைய தலைமுறையில் சிலருமாக தன்னை நகர்த்திக் கொண்டிருக்கிறது.

எங்க ஊருக்கு போகும் வழியில் பாதிவரை தேவகோட்டை நகராட்சிக்கு உட்பட்டது. மீதிப்பாதி கண்டதேவி பஞ்சாயத்துக்கு உட்பட்டது. கண்டதேவி கேள்விப்பட்டிருப்பீங்களே... பிரசித்திபெற்ற சொர்ண மூர்த்தீஸ்வரர் கோவில்... ஆனித் தேரோட்டம்... பிரச்சினையால் சில காலமாக தேர் ஓடவில்லை... பத்திரிக்கைகளில் பரபரப்பாய் இருந்த ஊர்தான்... சரி விடுங்க அதை இன்னொருநாள் பேசலாம்... எங்க ஊரில் இருந்து கூப்பிட்டால் கண்டதேவியில் நிற்பவருக்குக் கேட்கும்... அம்புட்டுப் பக்கம்.... சின்ன வயதில் தேரோட்டம் என்பது எங்களுக்கெல்லாம் மிகப்பெரிய திருவிழா.... ம்... என்ன சொல்ல... ஜாதி அரசியல்... சரி விடுங்க... இதைப் பேசினால் நம்மூரைப் பற்றி பேசாமல் போய்விடுவேன்.

எங்க ஊரைப் பொறுத்தவரை பொங்கல் மற்றும் மாரியம்மன் கோவில் திருவிழா ரொம்ப விஷேசமா இருக்கும். நாங்கள்லாம் பிறக்கும் முன்னர் எங்க ஊர் கருப்பர் கோவிலில் ஏழெட்டு ஊர்ச் சனங்கள் கூடி கிடா வெட்டிப் பூஜை போடுவார்களாம். அரிவாளை தீட்டிக் கொடுத்துக் கொண்டே இருப்பார்களாம். அரிவாள் மீது ஏறி நின்று ஆடுவாராம். கருப்பனசாமி ஆடும் எங்க ஊர்க்காரர் அரிவாளால் கிடாயை ஒரே வெட்டில் வெட்டுவாராம். தலை தனியாக முண்டம் தனியாக விழாமல் தொங்கிக் கொண்டிருந்தால் (தொங்கு கிடாய்) அந்த வருடம் ஊருக்கு நல்லதில்லையாம்... ஏதாவது பிரச்சினைகள் உருவாகும் என்று நம்பிக்கை என அப்பா சொல்லக் கேள்வி, இப்பல்லாம் அவங்க அவங்க ஊரில் தனித்தனியாக கும்பிட ஆரம்பித்துவிட்டார்கள்... கிடா வெட்டெல்லாம் இல்லை.  சித்ரா பௌர்ணமிக்கு எங்க ஊரில் இருந்து கல்லல் அருகில் இருக்கும் வெற்றியூருக்கு காவடி போகும். எங்க ஊரு கருப்பருக்காகவே அங்கு பூக்குழி வளப்பார்கள், மிகப்பெரிய விஷேசமாக நடக்கும். அதுவும் ஒரு காரணத்தால் நின்று போச்சு. அதன் பிறகு சிலர் முயற்சித்து காவடி எடுக்க அதுவும் சோகத்தில் முடிந்ததால் அதன் பின்னான காலங்களில் காவடி எடுப்பதில்லை.

எங்க ஊருக்கும் கண்டதேவிக்கும் பொதுவாக எங்க கண்மாயின் உள்ளே ஒரு ஐயனார் கோவில் இருக்கிறது. மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம்... அதற்கு விழா எடுத்து எருது கட்டு எல்லாம் நடத்தியிருக்கிறார்கள். அதுவும் முதல்மரியாதை எங்களுக்குத்தான் வேண்டுமென ஒரு சாரார் கேட்டதால் நின்று விட்டது. இப்போது அம்மன் திருவிழாவிற்கு காப்புக் கட்டும் முன் ஐயனாருக்கு பொங்கல் வைத்து சாமி கும்பிட்டு வருவதுடன் சரி.

ஊருக்குள் நுழையும் முன்னர் கண்மாய் இருக்கிறது. அதில் எங்க ஊர் முனீஸ்வரர் இருக்கிறார். எங்களுக்கு காவல் தெய்வம் அவர்தான்... சைவ முனீஸ்வரர்... புரட்டாசி மாதம் கடைசி சனிக்கிழமை ஊரே கூடி பொங்கல் வைத்து சாமி கும்பிடுவோம். கண்மாயில் தண்ணீர் நிறைந்து முனியய்யா கல்லைச் சுற்றி விட்டால் அந்த வருடம் நல்ல விளைச்சல் வரும்.  எங்க ஊருக்கு ரோடு போடும் முன்னர் குளக்கால் ஓரமாக நடந்துதான் வரவேண்டுமாம். தேவகோட்டையில் மளிகைக் கடை வைத்திருந்த எங்கப்பா இரவு பத்துப் பதினோரு மணிக்கு வரும் போது கண்டதேவி செல்லும் பாதையில் சைக்கிளில் வந்து பின்னர் குளக்கால் ஓரமாக சைக்கிளை உருட்டியபடி நடக்க ஆரம்பித்தால் அவருக்கு முன்னே வெள்ளையாய் ஒரு உருவம் நடந்து போவது போல் தெரியுமாம்... சரியாக கோவில் வந்ததும் மறைந்துவிடுமாம்... அப்பாவுக்கு முனியய்யா மீது ரொம்பப் பற்றுதல்... இன்றும் எதைச் செய்தாலும் அங்கு போய் நின்று வேண்டி திருவுளம் சொன்னால் சந்தோஷமாய்ச் செய்ய ஆரம்பிப்பார். எனக்கும் அவர் மீது அதீத பற்றுதல் உண்டு.

எங்க ஊர் மாரியம்மன் ரொம்பக் கோவக்காரி... நாங்க படிக்கும் காலத்தில் கோவிலில் ஊர் கூட்டம் நடந்தால் அடிதடி சண்டையில்தான் முடியும். அவள் மாரியல்ல... மாரியானவள், தேவகோட்டை ஸ்தபதி சிங்கப்பூர் காளியம்மன் கோவிலுக்கு செய்து வைத்திருந்த பீடம் மாறி வந்துவிட்டது என்றும்... மாரிக்கான மருந்து சாத்தியதில் அவள் காளியின் குணத்தோடு இருப்பதாகவும் சொல்வார்கள். பின்னர் நான் கல்லூரி படிக்கும் போது... நடந்த கும்பாபிஷேகத்தின் போது கண்டதேவி இராஜ குருக்கள்.. மருந்தின் அளவைக் குறைத்து வைத்து உக்கிரத்தை குறைத்தார். இன்று எந்தப் பிரச்சினையும் இல்லாமல் வருடாவருடம் சிறப்பாக திருவிழா நடந்து வருகிறது... ஊரும் நன்றாக இருக்கிறது... இப்போது எங்கள் மாரிக்கு அழகிய கோபுரத்துடன் அற்புதமாக கோவிலைக் கட்டிவிட்டோம். திருவிழா நடக்காமல் பிரச்சினை வரக் காரணம் தெய்வம் மட்டுமல்ல ஊரைக் கெடுக்க நினைக்கும் சில மனிதர்களும்தான்.

எங்க ஊரில் மாட்டுப் பொங்கல் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும்... கருப்பர் கோவிலின் முன்பாக ஊரே கூடி பொங்கல் வைத்து... திட்டிக் குழியில் கதப்பச் சோறு வைத்து... 'பட்டி பெருகப் பெருக... பால்பானை பொங்கப் பொங்க' என்று எல்லாரும் சொல்லியபடி திட்டிக்குழி சுற்றி மாடுகளுக்குத் சோறு தீட்டி... சந்தோஷமாய்க் கொண்டாடுவோம்.... ஊரே கூடி நின்று கேலி முறைக்காரர்கள் ஒருவருக்கு ஒருவர் சோறு தீட்டி... அந்தச் சந்தோஷம் இன்றளவும் குறையாமல் வருடா வருடம் கொண்டாடப்படுகிறது. நமக்குத்தான் வாழ்க்கையின் ஓட்டத்தில் வெளிநாட்டு வாழ்க்கையால் கொடுப்பினை இல்லாமல் போச்சு... நம்ம வாரிசு பொங்கல் விழாவில் கலக்கோ கலக்குன்னு கலக்கி 'குமாரு மகனாடா நீயி'ன்னு கேக்க வைச்சிடுறான்.

மாரியம்மன் கோவில் திருவிழா (செவ்வாய்) வைகாசி மாதம் இரண்டாவது செவ்வாய்கிழமை காப்புக்கட்டி மூன்றாம் செவ்வாய்க்கிழமை விமரிசையாகக் கொண்டாடப்படும். ஒரு வாரம் முழுவதும் சாமிக்கு கரகம் எடுத்து இரவு பதினோரு பணிரெண்டு மணி வரை முளக்கொட்டுக் கொட்டி ஊரே கூடி சந்தோஷமாய் களிப்போம். செவ்வாய்க்கிழமை உறவுகளுக்குச் சொல்லி, பால் குடம் எடுத்து... இரவு விருந்து வைத்து... வீட்டுக்கு வீடு வேப்பிலை, தென்னம்பாலை வைத்து கரகம் வைத்து அதை கோவிலுக்கு கொண்டு சென்று  வைப்போம். இரவு கலை நிகழ்ச்சி நடக்கும். மறுநாள் காலை கருப்பரைக் கும்பிட்டு வந்து அம்மன் கோவிலில் இருந்து கரகத்தை எடுத்து மூன்று இடத்தில் வைத்து முளக்கொட்டி கண்மாயில் கொண்டு விட்டு வருவோம். செவ்வாய்க்கு பெரும்பாலும் எல்லாரும் வந்து விடுவார்கள். நானும் மே மாதம் ஊருக்குப் போவதால் இதுவரை செவ்வாய் சந்தோஷத்தை அனுபவிக்கத் தவறியதில்லை.

பள்ளிக்கூடத்தில் படித்த போது மழையில் நனைந்து கொண்டே வீட்டுக்குச் செல்வோம்... புத்தகப் பை பள்ளியில் தலைமை ஆசிரியர் அறையில் இருக்கும்... மதியச் சாப்பாட்டுக்கு  கொண்டு செல்லும் தட்டு மட்டுமே தலையில் இருக்கும்... அதிக மழை என்றால் ஒதுங்கிய ஆட்டுக்கசாலை இப்போது இல்லை. அங்கும் வீடுகள் வந்தாச்சு... எங்க வீடும் இப்போ அதற்கு எதிரேதான்... செம்மண்ணில் விழுந்து ஓடும் நீரில் விளையாண்டதையும்... ஏத்து மீன் பிடித்ததையும்... மாடு மேய்த்ததையும்... கொட்டாங்கிழங்கு பிடுங்கி அவிச்சு சாப்பிட்டதையும்... செட்டிய வீட்டுத் தோட்டத்தில் இளநீர் பறித்துச் சாப்பிட்டதையும்... கண்மாயில் மணிக்கணக்கில் நீச்சலடித்ததையும்... மாட்டின் வாலைப் பிடித்து நீச்சியதையும்... 'அடேய் பாவிபரப்பானுங்களா'ன்னு மரத்தோட உரிமையாளரான கிழவி கத்த, ரோட்டோர மாமரத்தில் மாங்காய் பறித்ததையும்... சைக்கிள் பழகும் போது கண்மாய் மேட்டில் விழுந்ததையும்... அடுத்த ஊர் கண்மாய்க்குச் செல்லும் குளக்காலில் அடைத்து எங்க கம்மாயை நிரப்ப தண்ணீரைத் திருப்பி விட்டதையும்... தண்ணீர் வெளியாகாமல் சறுக்கையில் மணல் மூட்டைகள் போட்டு அடைத்ததையும்... மடையில் அமர்ந்து மணிக்கணக்கில் பேசியதையும்... கண்மாய் மடையில் அமர்ந்து மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருந்ததையும்... ஆடு, மாடு, கோழி, நாய் வளர்த்ததையும்... கிளி, மைனா வளர்த்ததையும்... நித்தம் நினைவுகளாய்ச் சுமந்து திரிந்தாலும் அந்த நாட்கள் கொடுத்த சந்தோஷத்தை... இதை எல்லாம் எமக்கு அளித்த எங்க ஊரை எப்படி மறக்க முடியும்... திரும்பப் பெற முடியாத வசந்த காலம் அல்லவா அவை.

இந்த முறை இருபது நாட்களுக்கு மேல் எங்க ஊரில்தான் இருந்தேன்... ஊருக்குள் நமக்கான ஒரு வீட்டைக் கட்டி குடிபோய் திருவிழாக் கொண்டாடியதால் அங்குதான் அதிக நாள் தங்கினேன்... அந்த மாசில்லாத காற்றும்... 'குமாரு நல்லாயிருக்கியாப்பா...' என்று கேட்கும் வாஞ்சையான உறவுகளும்... குதூகலித்து ஆட்டம் போட்ட எங்க வீட்டு வாண்டுகளுமாய் எனக்குள் அதிக சந்தோஷத்தை விதைத்தது நான் பிறந்த மண்ணு...

எங்க ஊருக்கு நாங்க படிக்கிற காலத்துல பஞ்சாயத்துல போட்ட சரளை ரோடு பாதிவரைதான்... நகராட்சி ரோடு போடாததால் ஆவாரம் செடிகளுக்கு இடையே ஒத்தையடிப் பாதைதான்... இப்போ நகராட்சியும் பஞ்சாயத்தும் தார்ரோடு போட, எங்க பிரசிடெண்ட் கண்டதேவிக்கும் எங்க ஊருக்கும் ரோடு போட்டுக் கொடுத்து தண்ணீர் தொட்டியையும் ஊருக்குள் கட்டிக் கொடுக்க, வீட்டுக்கு வீடு தண்ணீர் பைப் இழுத்து வைத்துக் கொண்டு வீட்டுத் தோட்டமெல்லாம் போட்டு அழகாக வாழ்கிறார்கள்.

விளைச்சல் காலத்தில் பச்சைப் பசேலென்று இருந்த கிராமம்... சிலுசிலுவென பயிர்களைத் தழுவிச் செல்லும் காற்று... இப்படியாக இருந்து இன்று விவசாயத்தின் விதையை இழந்திருந்தாலும் நகரம் தழுவாத எங்கள் கிராமம் இன்னும் அழகியாய்....

எங்களுக்கு பாசத்தையும் நேசத்தையும் ஊற்றி வளர்த்த கிராமமான 'பரியன் வயல்' எப்போதும் எனக்குள் சந்தோஷத்தை கொடுத்துக் கொண்டிருக்கிறது.

சொர்க்கமே என்றாலும் அது எங்கூரைப் போல வருமா...? 

அகலில் கட்டுரையை வாசிக்க :  எங்கூரைப் போல வருமா?

அகல் ஜூலை - 15ம் தேதி இதழை வாசிக்க :  அகல் மின்னிதழ்


-'பரிவை' சே.குமார்.

செவ்வாய், 19 ஜூலை, 2016

ஒரு செகண்ட் கிளாஸ் யாத்ரா (மலையாளம்)


போலீஸ்காரர்கள் இருவர் பயிற்சி காலத்தில் ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாக கீரியும் பாம்புமாக இருக்கிறார்கள். மேலதிகாரியின் உத்தரவின் பேரில் கீரியும் பாம்பும் இரண்டு கைதிகளை கன்னூரில் இருந்து திருவனந்தபுர சிறைக்கு மாற்றுவதற்காக இரயில் இரண்டாம் வகுப்பு பெட்டியில் அழைத்துச் செல்கிறார்கள். மரங்கள் நிறைந்த அழகான பாதையில்... வளைந்து நெளிந்து பயணிக்கும் பாதையில்... ஆறுகள், ஏரிகள் மீதான நீண்ட பாலங்களில்... இரயில் பயணிப்பது போல படமும் அழகாய் பயணிக்கிறது.

இரண்டு கைதிகளில் ஒருவரான செம்பான் வினோத் ஜோஸ், கோவிலில் நகையைத் திருடி, தனது வளர்ப்புத்தாய்... அட நம்ம பரவை முனியம்மா... கையில் கொடுக்க, அவர் அது கோவிலில் திருடியது என்பதை அறியாது கழுத்து... காது... கால் என எல்லா இடத்திலும் போட்டுக் கொண்டு அதே கோவிலுக்குப் போக... அப்புறம் என்ன திருடருக்கு ஜெயில்ல சாப்பாடு.

இரண்டாவது கைதி வினித் சீனிவாசன்... படிப்பு ஏறாததால் டீக்கடையில் வேலை... கூடப்படித்து நல்ல மார்க் எடுத்து வெளியூரில் படிக்கச் சென்ற பெண் மீது காதல்... ஆனால் அது ஓகே ஆனதா என்பதை கடைசி வரை காட்டவில்லை என்பது வேறு விஷயம். அளவில்லா பாசம் கொண்ட அக்கா... அக்காவும் தம்பியும் ஒரு தாய் மக்கள் என்றாலும் அப்பா வேறு... ஆம் முதல் கணவனின் மறைவுக்குப் பின்னர் மேஸ்திரி நெடுமுடி வேணு அவர்களை அழைத்து வந்து குடும்பம் நடத்தி பிறந்தவர்தான் வினீத். வேணுவுக்கோ தன் மனைவியின் மகள் மீது மோகம்... அவளை அடையத் துடிக்கிறார். அதற்கான நேரத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார். அவரின் இந்த கேவலமான எண்ணத்துக்கு மனைவி எதிரியாகிறாள். அக்காவை அந்த காமுகனிடம் இருந்து காப்பாற்ற கொலை செய்யத் திட்டமிடுகிறான் மகன். அந்த திட்டத்தை அறிந்த வேணுவோ அதில் மனைவியை பலி கொடுக்கிறார். அம்மாவைக் கொன்ற குற்றத்திற்காக சிறைக்கு அடைக்கப்படுகிறான்.


இரயிலில் இருந்து தப்பி அப்பாவைத் தேடிச் செல்லும் வினீத்தை தேடி இரண்டு போலீஸ்காரர்களும் முதல் கைதியும் அலைவது சுவராஸ்யம்... அந்த விசாரணையில்தான் நாயகனின் கதை விரிகிறது. அக்காவுடன் வேறு ஊரில் இருக்கும் அப்பாவை கண்டுபிடித்தானா...? அக்காவை காப்பாற்றினானா...? போலீஸ் அவனைப் பிடித்ததா..? இரண்டு போலீஸ்காரர்களுக்குமான பிரச்சினை தீர்ந்ததா...? இரண்டாவது கைதி அவர்களோடு பயணித்தானா இல்லையா...? என்பதுதான் மீதிக்கதை.

படம் வந்து ஒரு வருசத்துக்கு மேலாச்சு... இப்போதுதான் பார்ப்பதற்கு வாய்த்திருக்கிறது. இந்தப் படத்தில் பள்ளி விழாவில் படிக்கும் பாட்டு எனக்கு ரொம்பப் பிடிக்கும். அக்கா நிக்கி கல்ராணிக்கும் தம்பி வினீத் ஸ்ரீனிவாசனுக்கும் இடையிலான வயசு வித்தியாசம் அதிகமில்லை என்பது உறுத்தல், அப்படியிருக்கு நிக்கி சின்ன குழந்தையாக இருக்கும் போதே அவரின் அம்மாவை மனைவியாக்கிக் கொள்ளும்  நெடுமுடி வேணு 'உன்னைய விரும்பிக் கட்டலை... அன்னைக்கே உம்மவ என்னையக் கவர்ந்துட்டா... என்னைக்கா இருந்தாலும் அவளை அடையணும்ன்னுதான் கூட்டியாந்தேன்' என்று சொல்லும் போது  பொறுத்தமில்லாமல் தோன்றுகிறது.


வினித் சீனிவாசன் படங்கள் அதிகம் பார்த்ததில்லை... காமெடிகலந்த திரில்லர் படம் என்பதால் நடிப்பு பரவாயில்லைதான்... அக்காவாக வரும் நிக்கி கல்ராணி அழகு... வினித் விரும்பும் பெண்ணாக வரும்  அபர்ணா பாலமுரளிக்கு அதிக வேலை இல்லை... கொஞ்ச நேரமே வருகிறார். நெடுமுடி வேணுவின் வில்லத்தனம் சூப்பர். போலீஸ்காரர்களின் மோதலும்... அவர்களோடு வினீத்தை தேடி பயணிக்கும் கைதி வினோத்தின் நடிப்பும் கலக்கல். 

செகண்ட் கிளாஸ் யாத்ரா ஒரு சுகமான பயணம்.


-'பரிவை' சே.குமார்.

சனி, 16 ஜூலை, 2016

சிறுகதை : காத்திருந்த உயிர் (ஜூலை-2016 கொலுசு மின்னிதழ்)

 

 பாலாயிக்கு தொண்டைக்கும் நெஞ்சுக்குமாக இழுத்துக் கொண்டிருந்தது. உறவுகள் எல்லாரும் சுற்றி அமர்ந்திருந்தார்கள். அவள் 'கர்...கர்...' என இழுத்துக் கொண்டிருப்பதைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது. பாலாயிக்கு வயது இப்போ எண்பதுக்கு மேலிருக்கும். வாழ்க்கையை அனுபவித்த கட்டைதான் அவள். அறுபது வயதில் ஒரு முறை ரொம்பக் கிடந்தபோது இனி பிழைக்க மாட்டாள் என்று நினைத்தவர்களின் முன்னே எழுந்து வந்தவள் அதன் பின் பெரும் கிடையெல்லாம் கிடக்கவில்லை. இப்பவும்  நாலு நாளைக்கு முன்னால திடீரென உடம்பு முடியலைன்னு விழுந்தவதான், ஆஸ்பத்திரிக்கு கொண்டு போய் பார்க்க, மூணு நாளா முயற்சித்த டாக்டர் இனி காப்பாற்ற முடியாது வீட்டுக்கு தூக்கிட்டுப் போயிடுங்க என்று சொல்லிவிட நேற்று மாலை வீட்டுக்கு கொண்டு வந்து விட்டார்கள்.

பாலாயிக்கு இதுல மூணு அதுல மூணுன்னு மொத்தம் ஆறு பிள்ளைங்க... எல்லாரும் ரொம்ப வசதியா இருக்காங்க... ரெண்டு வருசத்துக்கு முன்னாடிதான் அவளோட புருஷன் சீனி இறந்தார். அதன்பின் பாலாயி மூத்த மக பெரியநாயகி வீட்டுலதான் இருந்துச்சு. முடியாம வர்றதுக்கு முன்னாடியே என்னோட உயிர் எஞ்சாமியும் நானும் வாழ்ந்த வீட்டுலதான் போகணுமின்னு மககிட்ட சொல்லியிருந்ததால டாக்டர் சொன்னதும் இங்க கொண்டாந்துட்டாங்க. ஆறு சம்பந்திகளும் அங்கு கூடியிருந்தார்கள். மகள்களும் மகன்களும் வந்துவிட கனடாவில் இருக்கும் சின்னவன் சிவா மட்டும் இன்னும் வரவில்லை.

"யாருக்கும் எந்தக் கெடுதலும் செய்யாத மனுசி... அதிர்ந்து கூட பேசாது... பாவம்... பொட்டுன்னு போகாம இப்படி இழுத்துக்கிட்டு கிடக்குது... பாக்கவே பாவமா இருக்கு..." அருகில் இருந்த ஒருவரிடம் சொல்லிக் கொண்டிருந்தாள் பாலாயியின்னு தம்பி பொண்டாட்டி காந்தி.

"இப்படி இழுத்துக்கிட்டே கிடந்து என்னைக்கு போகப் போகுதோ... இப்பப் போயிரும்... அப்பறம் போயிரும்ன்னு எல்லா வேலையையும் போட்டுட்டு இங்க வந்து கெடக்க வேண்டியதா இருக்கு...' பெரிய சம்பந்தியிடம் மெதுவாக காதைக்கடித்தாள் சின்ன சம்பந்தி விசாலாட்சி.

"எந்த விஷயமா இருந்தாலும் எங்காத்தா ஒரு முடிவு எடுக்க மாட்டாது... பண்ணுவமா வேண்டாமான்னு போட்டு இழுக்கும்... அதான் உயிரு போறதுல கூட இழுத்துக்கிட்டு இருக்கு போல... பாக்கவே பாவமா இருக்கு..." வாசலில் அருகில் அமர்ந்திருந்த ஊரின் பெரிய தலைக்கட்டும் சித்தப்பனுமாகிய முத்தையாவிடம் சொல்லிக் கொண்டிருந்தான் மூத்தவன் சாமிநாதன்.

"ஆத்தாவுக்கு சுகர் இல்லை... கொலஸ்ட்ரால் இல்லை... ஒரு நா... ஒரு பொழுது உடம்பு முடியலைன்னு தல சாச்சதில்லை... அந்தக் காலத்து மனுசியில்ல... உடம்ப கட்டுக் கோப்பா வச்சிருந்துச்சு... கஞ்சிதான் சாப்பிடும்... அப்பா செத்ததுக்கு அப்புறம் இனிப்பு சுத்தமா சாப்பிடாது... காபியில கூட சீனி போட்டுக்காது... திடீர்ன்னு..." மேலே பேச முடியாமல் கண்ணீரோடு மூக்கையும் சேர்ந்து துடைத்தாள்  பெரியநாயகி.

"நல்லா வாழ்ந்த மனுசி... அது கண்ணோட எல்லாரும் நல்லாயிருக்கதைப் பார்த்துருச்சு... பேரம்பேத்திகளுக்கு எல்லாம் குழந்தை குட்டின்னு குடும்பம் ஆன சந்தோஷத்தைப் பார்த்துருச்சு... இப்ப யாருக்கு இப்படியெல்லாம் வாய்க்குது.... சந்தோஷமாத்தான் போகுது..." ரோட்டில் நின்று போனில் யாரிடமோ சத்தமாகச் சொல்லிக் கொண்டிருந்தார் சின்ன மாப்பிள்ளை விநாயகம் .

இதெல்லாம் பாலாயியின் காதில் விழுந்ததா... இல்லையா... என்று தெரியவில்லை... சாவு என்பது எத்தனை வயதில் வந்தாலும் அதை ஏற்கிற மனம் யாருக்குமே இருப்பதில்லைதானே... இன்னும் கொஞ்ச நாள் இருக்காலாமே என்றும்... பாவம் பெரியவன் ரொம்பக் கஷ்டப்படுறான்... அவன் நல்லாயிருக்கதைப் பார்த்துட்டுப் போனா நல்லது என்றும்... இன்னும் இன்னுமாய் ஏதோ ஒரு ஆசையுடன் இன்னும் கொஞ்ச நாள் வாழும் ஆசைதான் எல்லாருக்குமே இருக்கும். பாலாயி மட்டும் என்ன விதிவிலக்கா..? எல்லாம் அனுபவிச்சாலும் அவளுக்குள்ளும் ஏதேனும் நிறைவேறாத ஆசைகள் இருக்கலாம் அல்லவா...? இழுத்துக் கொண்டிருக்கும் அவளது கண்ணில் இருந்து கண்ணீர் வடிய, சின்னவள் அழுகையோடு துடைத்தாள்.

"இப்படி எவ்வளவு நேரம்தான் இழுத்துக்கிட்டு கிடக்கப் போகுதோ தெரியலையே... எங்க ஊர்ல மாணிக்கண்ணன் மூணு நாள் இழுத்துக்கிட்டு கிடந்தாரு... இதுவும் அப்படித்தான் நம்மளை காக்க வைக்கப் போகுதோ என்னவோ..." இரண்டாவது மகனின் மாமனார் திருஞானம் சத்தமாய்ச் சொன்னார்.

இழுத்துக் கொண்டிருக்கும் பாலாயி, வாய்க்குள் ஏதோ முணங்கினாள். "என்னமோ சொல்லுதுடி... என்னன்னு புரியலை..." என சாமிநாதன் மனைவி செல்வியிடம் சொன்னாள் பெரியநாயகி.

"ஆமா அத்தாச்சி வாய் அசையுது... ஆனா என்ன சொல்றாங்கன்னு புரியலை..."

"என்னத்தை சொல்லப் போகுது... எல்லாரும் இங்க இருக்கீங்க... இங்க  இல்லாதது சின்ன மகன்தானே... அவனைத்தான் தேடும்..." என்றார் திருஞானம்.

"அவுரு குடும்பத்தோட வந்துக்கிட்டு இருக்காராம்... நல்லாத்தான் பிள்ளை குட்டிகளை இழுத்துக்கிட்டு ஓடியாராக... அவரு மட்டும் வந்துட்டு காரியத்தை முடிச்சிட்டு போக வேண்டியதுதானே... எல்லாரையும் இழுத்தாரணுமாக்கும்... இது போகப்போகுதோ... இல்ல எந்திரிச்சு உக்காரப் போகுதோ... யாருக்குத் தெரியும்... போறதுன்னா போக வேண்டியதுதானே... இழுத்துக்கிட்டு கிடந்துக்கிட்டு எல்லாரையும் சாகடிக்குது..." சின்னவன் சிவாவின் மாமியார் விசாலாட்சி விச வார்த்தைகளை நீட்டி முழங்கினாள். அவளுக்கு பணக்காரி என்ற திமிர் அதிகம். ஆணவக்காரியின்னு ஊருக்குள்ள அவளுக்குப் பேர்.

"பெத்த ஆத்தாளுக்கு வராம உம்மாப்பிள்ளையை பணம் சேக்கச் சொல்றியா...? ஏன் நடுவுலான் துபாய்ல இருந்து ஆத்தா விழுந்துருச்சுன்னு சொன்ன உடனே இங்க ஓடியாரலை... இல்ல சின்ன மாப்பிள்ளை மலேசியாவில் இருந்து வரலையா... நல்லாத்தான்... நாளைக்கு நமக்கும் இருக்கு... யோசிச்சுப் பேசு... நம்ம வீட்ல எதுனாலும் எல்லாரும் வரணும்... பெத்த ஆத்தாவுக்கு ஒண்ணுன்னா எதுக்கு வரணும்... எல்லாருமே இப்படித்தான் இருக்கோம்" படக்கென்று சொன்னாள் காந்தி.  இவள் வீட்டில்தான் நடுமகள் பாக்கியத்தைக் கொடுத்திருக்கு. அண்ணன் குடும்பம், அண்ணன் பொண்டாட்டி என்ற பாசம் இவளுக்கு அதிகம். பாலாயியும் இவளை சம்பந்தியாய் பார்ப்பதில்லை. எப்பவும் இவளையும் மக மாதிரித்தான் நினைப்பா... அதனால்தான் காந்திக்கு அவ்வளவு கோபம் வந்தது. 

அதுபோக பாலாயி மேல ரொம்ப பிரியமானவன் சிவாதான்.... ரொம்ப நல்லவன்... அவன் மாட்டின குடும்பம் அப்படி... அவனை அதைச் செய்யாதே... அங்கே போகாதே... என எல்லாவற்றிற்கும் தடை... அப்படியிருந்தும் யாருக்கும் தெரியாமல் உடன் பிறப்புக்கள் எல்லாருக்கும் நல்லாச் செய்வான்... நான் செஞ்சேன்னு வெளிய சொல்லாதீங்கன்னு வேற சொல்லி வைப்பான். அம்மாவுக்கு செய்யிறதுக்கு மட்டும் யாரும் அவனை தடுக்க முடியலை... உங்க வேலையைப் பாருங்க... எங்கம்மா இல்லைன்னா நான் இன்னைக்கு இங்க பெரிய பதவியில் இருக்க மாட்டேன்... அதைத் தெரிஞ்சிக்கங்க என்று வாயை அடைத்துவிடுவான். இருந்தாலும் மாமனார், மாமியார், மனைவி, மச்சினன்கள் என அவர்கள் போட்டிருக்கும் வலைக்குள் இருந்து வெளியில் வரமுடியாமல் தவிப்பவன்தான் அவன். ஊரில் இருந்து வர்றோம்ன்னு அவன் போன் பண்ணினப்போ, இப்ப எதுக்கு அவசரமா எல்லாரையும் இழுத்துக்கிட்டு வாறீங்க... அது என்னைக்கு முடியுமோ தெரியலை... முடிஞ்சதும் சொல்றோம்... அப்ப கிளம்பி வாங்க... என்று மாமனார் சொல்ல, அம்மா மேல் இருந்த பாசம்... சாகக்கிடக்கும் பெத்தவளை கடைசியாய் ஒருமுறை உயிருடன் பார்க்கும் ஆசையைத் தடுக்க  இவர்கள் யார் என்ற கோபம் எல்லாம் கலந்து அவரைக் கட்டி ஏறிவிட்டான். முதன் முதலாய் மாப்பிள்ளையின் கோபத்தைப் பார்த்து மாமனார் மிரண்டுதான் போனார். அந்தக் கடுப்புத்தான் மாமியாரின் பேச்சில் வந்தது.

பாலாயி இழுத்துக் கொண்டு கிடந்தாள்... உயிர் தொண்டைக்கும் நெஞ்சுக்குமாய் ரன்னெடுக்க ஓடும் கிரிக்கெட் வீரனைப் போல ஒடிக்கொண்டிருந்தது. ஏனோ கண்ணீரும் ஓடிக்கொண்டே இருக்க சின்னவள் துடைத்துக் கொண்டே இருந்தாள்... அவள் கன்னத்திலும் கண்ணீர் இறங்கிக் கொண்டிருந்தது. பாலாயியின் வாய் முணுமுணுத்தது. அவளின் வாயருகே காதைக் கொண்டு போய்க் கேட்டாள் பாக்கியம்.

'ச்ச்ச்ச்ச்ச்சி..வ்வ்வ்வ்வா...' இழுவையுனுடே சிவா... சிவா... என்று பாலாயி முணங்குவதைக் கேட்டு "அக்கா... ஆத்தா சின்னவன் பேரச் சொல்லிக்கிட்டு இருக்கு..." கண்ணீரோடு பெரியநாயகியிடம் சொன்னாள்.

"அதுக்கு சின்னவன் மேல பாசம் அதிகம்" என்றாள் பெரியநாயகி. சின்னவன் பேரையே சொல்லுது என்ற பேச்சு வீட்டுக்குள் இருந்து வெளியில் அமர்ந்திருந்த மனிதர்களிடம் வந்து நின்றது.

"அவன் நினைப்புலதாம்பா இன்னும் உசிரை இழுத்துக்கிட்டு கிடக்கு... அவன் எப்ப வர்றது...? பாவம் சிரமப்படுதுப்பா... ஏப்பா சாமிநாதா... நாந்தான் சிவா வந்திருக்கேன்னு சொல்லி நீ பாலை ஊத்துப்பா... உசிரு நிக்கட்டும்..." முத்தையா சத்தமாகச் சொன்னார்.

"எப்படி சித்தப்பா... பொய் சொல்லி அனுப்பச் சொல்றீங்களா... சாகப் போற மனுசி அவனைத் தேடுது... அவன் வந்து கொடுத்தா அதோட உயிர் சமாதானமாப் போகும்... எங்களை எப்படியெல்லாம் வளர்த்துச்சு... எங்களுக்காக எப்படிக் கஷ்டப்பட்டுச்சு... இன்னைக்கு நாங்கள்லாம் ரொம்ப வசதியா இருக்கோம்... இந்த வீடு இருக்க இடத்துல இருந்த கூரை வீட்டுலதானே எங்க ஆறு பேரையும் வளர்த்து... கஷ்டத்துலயும் படிக்க வச்சி... எங்களை ஆளாக்கிப் பார்த்துச்சு... உங்களுக்குத் தெரியாததா... அதுக்கு பொய் சொல்றது பிடிக்காது... பொய் சொல்லி பால் ஊத்தச் சொல்றீங்க... தம்பி வரட்டும் சித்தப்பா... இழுத்துக்கிட்டு கிடந்தாலும் அதோட மூச்சுக்காத்து இன்னும் கொஞ்ச நேரம் எங்க கூட இருக்கட்டுமே..."  தழுதழுத்தான் சாமிநாதன்.

"அதுக்கில்லைப்பா... அவன் எங்க வர்றான்னு தெரியலை... அதான்..."

"வந்துடுவான்... கொஞ்ச நேரம் பார்க்கலாம்..."

"பெரியநாயகி... தம்பி ஏதாச்சும் சொல்லும்... சின்னது எப்ப வருதோ தெரியலை... ஆத்தாவை உசிரோட பாக்கணுமின்னு அதுக்கு கொடுப்பினை இருந்தா சீக்கிரம் வந்திரும்... அத்தாச்சி இழுத்துக்கிட்டு கிடக்கதைப் பார்த்தா பாவமா இருக்கு... இதையெல்லாம் பார்க்கணுமின்னு நம்ம தலையில எழுதியிருக்கு... பேசாம முத்தையாண்ண சொல்ற மாதிரி பாலை எடுத்துக்கிட்டு வந்து பெரிய தம்பி மகனை நாந்தான் சிவா வந்திருக்கேன்னு சொல்லி ஊத்தச் சொல்லுத்தா..." என்றாள் காந்தி.

"அயித்த... என்ன சொல்றே...?"

"ஆமாத்தா... தம்பி எப்ப வர்றது... இப்படி இழுத்துக்கிட்டு கிடக்கு பாரு..." என்றதும் பால் எடுத்து வந்து சாமிநாதன் மகன் சந்தோஷிடம் கொடுத்து ஊற்றச் சொன்னார்கள். 'சிவா வந்திருக்கேன்' அப்படின்னு சத்தமாச் சொல்லிக்கிட்டு அவனும் ஊற்ற, சத்தம் கேட்டு வெளியில் இருந்தவர்கள் வீட்டுக்குள் வந்தார்கள். சாமிநாதன் வேண்டாம் எனச் சொல்ல, மற்றவர்கள் அவனைத் தடுத்துவிட்டார்கள்.

வாய்க்குள் கொஞ்சமும் வெளியில் மிச்சமுமாய் ஊற்ற, பாலாயியின் கண்கள் அவசர கதியில் ஒரு சுற்று சுற்று மூடிக் கொள்ள, இழுவை அடங்காமல் இருக்க... 'நாந்தான் சிவா வந்திருக்கேன்...' என மீண்டு வாயில் பாலை வைக்க, பல்லைக் கடித்துக் கொண்டாள் பாலாயி... வாசலில் 'அம்மா... உன் சிவா வந்திருக்கேம்மா...' என்ற அலறலோடு இறங்கினான் சிவா. பாலாயியின் கண்கள் மீண்டும் விழித்து எதையோ தேட, கண்ணீர் நின்றிருந்தது.

கொலுசு மின்னிதழில் தளத்தில் வாசித்து உங்கள் மதிப்பெண்களையும் வழங்க கீழே இருக்கும் படத்தைக் கிளிக்குங்கள். கொலுசு தளத்திற்குள் போகும்... அங்கு சிறுகதை என்ற இணைப்பைச் சொடுக்கி வாசியுங்கள்.

*****
ஜூலை-15ம் தேதி அகல் மின்னிதழில் வெளியான எனது "எங்கூரைப் போல வருமா?" என்ற கட்டுரையை வாசித்து உங்கள் கருத்தைச் சொல்லுங்க... அந்தக் கட்டுரை அடுத்த பகிர்வாக மனசு தளத்தில்...
-‘பரிவை’ சே.குமார்.

வியாழன், 14 ஜூலை, 2016

மனசின் பக்கம் : கனவே... காற்றே... கற்பனையே...

னவு மெய்ப்பட வேண்டும் என்ற சிறுகதை குறித்து குடந்தையூர் சரவணன் அண்ணன் அவர்கள் என்னிடம் பேசும் போது ஏதாவது உண்மைக்கதையா என்று கேட்டார். உண்மைக் கதை எல்லாம் இல்லை அண்ணா... ஜாலியாக எழுத ஆரம்பித்து எப்பவும் போல் என் பாணியில் பயணித்துவிட்டது என்று சொன்னேன்.  கதை ஆரம்பிக்கும் போது ஒரு உதவி இயக்குநர் கதை சொல்வதாகவும் அதற்கு அந்த நடிகர் இதுதான் கமல் பண்ணுவாரே... இதுதான் ரஜினி பண்ணுவாரே... என்று சொல்ல, கடைசியில் கடுப்பான உதவி 'யோவ்... அப்ப என்னதான்யா பண்ணுவே'ன்னு கோபமாக் கேட்டுட்டு எழுந்து போற மாதிரி எழுத நினைத்து வேற மாதிரி போயிருச்சு. அதில் பாசிலின் அசிஸ்டெண்ட் பற்றி வருவது மட்டும் உண்மை. அவர் என் அண்ணனின் நண்பர். அவரால் ஜெயிக்க முடியாமலேயே போய்விட்டது. சில நாட்களுக்கு முன்னர் நிஷா அக்காவிடம் முகநூல் அரட்டையில் இருந்தபோது ஊரில் இருந்து வந்ததில் இருந்து மரணம் தொடர்பான பதிவுகளாக எழுதியிருக்கேன். கொஞ்சம் ஜாலியா எழுதணும் அக்கா என்று சொன்னேன். அப்படி எழுதிய சிறுகதைதான் அது. 

எனக்கும் சரவணன் அண்ணனுக்குமான பேச்சு தொடர, உங்க கதையை மிகவும் ரசித்து வாசித்தேன் இருந்தாலும் கடைசியில் ஒருவர் கதையைச் சொல்லி முடிப்பதாக வைத்திருப்பதை அவர் ஆரம்பத்தில் பேச ஆரம்பித்து முடிவில் சரவணன் ஜெயிச்சா அதில் எனக்கும் பங்கிருக்கும்ன்னு முடிச்சிருக்கலாம் என்று சொன்னதோடு விட்டுவிடாமல் ஆரம்பத்தில் வரும் பத்தி எப்படி இருக்க வேண்டும் என்று எழுதியும் அனுப்பியிருந்தார். அதுதான் சரவணன் அண்ணன்.  நான் அவரிடம் மாற்றி விடலாம் அண்ணா... புத்தகம் ஆக்கும் போது மாற்றிவிடுவோம் என்று சொல்லிச் சிரித்தேன். கதை பல உதவி இயக்குநர்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கிறது என்பது உண்மை. சரவணனின் கனவு மெய்ப்பட வேண்டும் என்ற ஆசை எனக்கு நிறையவே இருக்கிறது... நான் எழுதிய சரவணன் மட்டுமில்லாமல் சரவணன் அண்ணனும் இயக்குநர் ஆகவேண்டும் என்று முயற்சித்துக் கொண்டிருக்கிறார். அவரின் முயற்சி விரைவில் கைகூடட்டும். அப்புறம் கதை எழுதி பதியும் வரை அவரோட பேர்தான் நாயகன் பேர் என்று யோசிக்கவில்லை. எழுதி பகிர்ந்து அவரிடம் பேசும்போதுதான் எதார்த்தமாக வைத்த பெயர் உங்க பேரோட மேட்ச் ஆயிருச்சு அண்ணா என்றேன்... சிரித்தபடி அதனால என்ன நானும் சரவணன் போலத்தான் என்றார்.. ஜெயிப்பீர்கள் அண்ணா... விரைவில் ஜெயிப்பீர்கள்.

***
சிரித்த முகம்... சிறகடிக்கும் சிந்தனைகள்... கண்ணாடிக்குள்ளே கவி பாடும் கண்கள்... சின்ன உருவம்... இதுதான் கவிஞர் பழனி பாரதி, உள்ளத்தை அள்ளித்தாவுக்கு முன்னால் சினிமாவில் பாடல் எழுதியிருந்தாலும் 'ஐ லவ் யூ... லவ் யூ... லவ் யூ... சொன்னாளே' என நம் உள்ளத்தைக் கொள்ளை கொண்டவர் அவர். இப்போது பிரபல பாடலாசிரியர் என்ற போதிலும் முகநூல் நட்புக்களின் பதிவுகளுக்கு வந்து விருப்பம் தெரிவிப்பதும் சில நேரங்களில் கருத்து இடுவதும் அவரின் நட்பிற்கு ஒரு எடுத்துக்காட்டு. வாலிபக் கவிஞன் வாலியின் அன்பில் நனைந்தவர்... மிகச் சிறந்த பேச்சாளர்... எழுத்தாளர்... கவிஞர்... பத்திரிக்கையாளர் என பன்முகம் கொண்ட சிந்தனையாளர். அவருக்கு இன்று பிறந்தநாள்... இந்த நாளில் இன்னும் சிறப்பான பாடல்களை எழுத வேண்டும் என வாழ்த்தி அவரின் பாடல்களில் பிடித்த பாடலகள் எத்தனையோ இருந்தாலும் 'காற்றே... காற்றே நீ...' என்று ஜெயச்சந்திரனும் மாற்றுத் திறனாளியாக இருந்தாலும் நம்பிக்கை தளராத, அழகான குரலுக்குச் சொந்தக்காரரான வைக்கம் விஜயலெட்சுமியும் காற்றில் இசைக்கும் கீதமே என்னை மிகவும் கவர்ந்த பாடல். கவிஞரின் பிறந்த நாளில் மீண்டும் ஒருமுறை கேட்போமே.


***
நிஷா அக்கா தனது தொழிலில் கவனம் செலுத்திக் கொண்டே எழுதியும் வருகிறார். அவர் பதிவெழுதுவதைவிட பதிவர்களை ஊக்குவிக்கும் விதமாக பதிவு குறித்த அலசலை... அது தொடர்பான தனது அனுபவங்களை பெரிய கருத்தாக இடுவார். மிகச் சிறந்த சிந்தனைவாதி... இவரின் பேட்டி இனிய நந்தவனம் இதழில் வெளிவந்திருக்கிறது. ஒவ்வொரு கேள்விக்கும் மிகச் சிறப்பான பதில்கள்... விரைவில் தனது தளத்தில் பகிர்ந்து கொள்வார் என்று நினைக்கிறேன். அழகான... அறிவான... ஆழமான பதில்களைச் சொன்ன அக்காவுக்கு வாழ்த்துகள். அப்புறம் இன்னொன்னு அந்த பேட்டியில் என்னைப் பற்றியும் சொல்லியிருக்காங்க... அப்படி என்னத்தை நாம செய்துட்டோம்ன்னு நினைக்கத் தோணுது. எப்படி இருந்தாலும் என்னையும் சில நட்புக்களையும் நினைவு கூர்ந்த அக்காவுக்கு நன்றி.


***
பாக்யாவில் தொடர்கதை எழுதும் சரவணன் அண்ணன், குங்குமத்தில் வாழ்க்கைத் தொடர் எழுதும் ஈரோடு கதிர் அண்ணா, குங்குமம் தோழியில் கட்டுரை எழுதும் சகோதரி கிருத்திகா தரண், கல்வி சம்பந்தமான கட்டுரைகளை தொடர்ந்து எழுதிவரும் நண்பர் மதுரை சரவணன் என இன்னும் இன்னுமாய் நிறைய நட்புக்கள் வெகுஜன பத்திரிக்கைகளில் வலம்வர ஆரம்பித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி. அதே சமயம் வலைத்தளத்தில் மிகச் சிறப்பாக எழுதும் நட்புக்கள் அனைவரும் வெகுஜன ஊடகங்களிலும் பிரகாசிக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசை... விரைவில் நிறைவேறட்டும்.
***
தேனக்கா என்றாலே அந்தச் சிரிப்புத்தான்... மிகச் சிறந்த எழுத்தாளினி... எல்லாப் பத்திரிக்கைகளிலும் அவரின் படைப்புக்கள்... நிறைய புத்தகங்கள்... அதனூடே வலைத்தளத்தில் எழுத்து... அவரின் வலைத்தளத்தில் இரண்டு வருடங்களுக்கு முன்னர் எனது பேட்டி கூட வந்திருக்கு. சரி விஷயத்துக்கு வருவோம். அக்காவுக்கு இன்று பிறந்தநாள்... காலையில் வாழ்த்தியாச்சு என்றாலும் மீண்டும் அவருக்கு உங்கள் சார்பாக வாழ்த்துக்கள். அவரின் தளத்தில் நிறைய சிறுகதை போட்டிகள் குறித்தான செய்திகளைப் பகிர்ந்திருக்கிறார் சும்மா அந்தப் பக்கம் பொயிட்டு விரைவாக கதைகளை அனுப்பி வெற்றியை உங்கள் வசமாக்குங்கள்.

***
ன்னைக்கு அலுவலகத்தில் ஆணி பிடுங்கும் வேலை அதிகமில்லை. மொத்தமே இரண்டு மணி நேரம்தான் வேலை. அதுவும் எனக்கும் மட்டுமே. மலையாளிகள் தூங்கினார்கள். மற்ற நேரத்தில் இந்தப் பகிர்வும் இரண்டு கதைகளும் எழுதினேன். பென்டிரைவில் எடுத்து வந்து ஏதோ ஞாபகத்தில் ஒரு சிறுகதையும் இந்த மனசின் பக்கமும் இருந்த பைலை அழித்து விட்டேன். மற்றொரு சிறுகதை இருந்த பைல் மட்டுமே மிச்சம்.  அப்ப இது.. மீண்டும் உட்கார்ந்து டைப்பினேன்... நம்ம நேரம் எப்படி வேலை செய்யுது பாருங்க... 

மனசின் பக்கம் மீண்டும் மலரும்.
-'பரிவை' சே.குமார்.

செவ்வாய், 12 ஜூலை, 2016

சினிமா : ஆக்சன் ஹீரோ பிஜூ (மலையாளம்)

ரிலிருந்து வந்தது முதல் தூக்கமில்லா இரவுகள்... நீண்ட நெடிய இரவாய் பயணிக்க, என்னை வாட்டும் வேதனைகளை விட்டொழிக்க, எழுத்தை ஆயுதமாக்கும் முயற்சி தோல்வியில் முடிந்த நிலையில் கையிலே தவழ்ந்தன சில சினிமாக்கள்.... அந்த வரிசையில் நான் பார்த்த...

1. பஹத் பாசிலின் 'மகேஷிண்டே பிரதிகாரம்'
2. துல்கர் சல்மானின் ''கலி
3. பிருதிவிராஜின் 'டார்விண்டே பரிணாமம்'
4. விஷ்ணு விஷாலின் 'வேலையின்னு வந்துட்டா வெள்ளைக்காரன்'
5. விஜய் சேதுபதியின் 'இறைவி'
6. வினீத் சீனிவாசனின் 'ஒரு செகண்ட் கிளாஸ் யாத்ரா'
7. கலையரசனின் 'ராஜா மந்திரி'
8. நிவின் பாலியின் 'ஆக்சன் ஹீரோ பிஜூ'
9. ரஜினியின் 'தனிக்காட்டு ராஜா'க்
10. ஒரு பழைய ஆங்கிலப்படம்

என்னடா படமா பாத்திருக்கானேன்னு நினைக்கிறீங்கதானே... வேற வழி இல்லைங்க... விடுமுறை தினங்களில் வீட்டுக்குப் பேசின நேரம், சமையல் செய்த நேரம் போக மற்ற நேரத்தைக் கடத்த இப்படித்தான் பயணிக்க வேண்டியிருக்கிறது. வெளியில் சென்றால் வியர்வையில் குளித்து வர வேண்டும் என்பதாலும் உறவுகளின் அறைகளுக்குச் சென்றால் பெரும்பாலும் நீந்திக் கொண்டிருப்பார்கள் என்பதாலும் எங்கும் செல்வதில்லை. வெளிநாட்டு வாழ்க்கையில் என்னைப் போன்ற பலருக்கு கணிப்பொறியே வாழ்க்கையாகிப் போய்விட்டது என்பதுதான் உண்மை... வருத்தங்கள் வாழ்வை நசித்து விடக்கூடாது என்பதால் வருந்தி சினிமா பார்க்க கத்துக் கொண்டு விடுகிறோம் என்பதே உண்மை.

இவ்வளவு படம் பார்த்திருந்தாலும் பார்த்த மலையாளப் படங்கள் எல்லாமே மிகவும் அருமையான படங்கள்தான்... அப்ப தமிழ்..? பார்த்த ரெண்டு புதுப்படமுமே காமெடி இருந்தால் போதும் ஜெயித்து விடலாமென கதையை எடைக்குப் போட்டுவிட்டு எடுத்த படங்கள்தான்... சிரிப்பு உத்ரவாதம்... லாஜிக் எல்லாம் யோசிக்கக் கூடாது... நம்மாளுங்க ஏன் இன்னும் இப்படியே இருக்காங்கன்னு தெரியலை... சின்னக் கதை... அதை அழகாய் நகர்த்தும் விதம் என சேர நன்நாட்டு இளம் இயக்குநர்கள் பயணிக்க ஆரம்பிக்கும் போது நம்மவர்கள்..? சரி விடுங்க... 

ஒவ்வொரு படம் குறித்து எழுதினால் ஒன்பது பதிவு தேத்திடலாம்தானே... ஹி... ஹி... மலையாள இளம் நடிகர்கள் எல்லோரையும் பிடித்தாலும் எனக்கு ரொம்பப் பிடித்தது நிவின் பாலி... 'ஆக்சன் ஹீரோ பிஜூ'. ஒரு போலீஸ்காரனின் வாழ்க்கையை விடுத்து காவல் நிலையத்தையே சுற்றும் கதை...


திருமணம் நிச்சயிக்கப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டரான நிவின் தனது சகாக்களுடன் காவல் நிலையத்தில் கையாளும் வழக்குகளே கதைக்களம்... அதாவது எல்லாக் காய்கறிகளையும் போட்டு அவியல் செய்வது போல் கஞ்சா, தற்கொலை, கள்ளக்காதல், திருட்டு என கலந்து கட்டி கதை அமைத்திருக்கிறார்கள். ஆனால் இந்தக் கதைகள் எல்லாமே காவல் நிலையத்துக்கு வரும் வழக்குகள்தான்... ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாதவை... படம் முழுவதும் நகைச்சுவையையும் வைத்து ரசிக்க வைத்திருக்கிறார்கள்.

பள்ளிக் குழந்தையை நாயை ஏவி விட்டு கடிக்க விட்டவனை பிடித்த உடன் அவனுக்காக எம்.எல்.ஏ பேச ஆரம்பித்ததும் 'ஆஹா... இனி வில்லனுக்கும் நாயகனுக்கும் நடக்கும் மோதல்தான் படம்... போலீஸ் கதை வேற... நம்ம கவுதம் வாசுதேவ் மேனன் மாதிரி விட்டு விளையாடப் போறானுங்கன்னு பார்த்தா... அவனை பதினைந்து நாள் ரிமாண்டில் வைத்ததோடு அடுத்த காட்சி, அடுத்த வழக்கு என பயணிக்க ஆரம்பித்து விடுகிறது... இங்கு வில்லன் கிடையாது.. அடியாட்கள் கிடையாது... சிலரை அடித்து துவம்சம் செய்யும் நிவின், பலரை மிரட்டியதோடு விட்டு விடுகிறார்.

நடுரோட்டில் தண்ணியடித்து விட்டு வேட்டியை அவிழ்த்து ஆட்டம் போடுபவனை செந்தட்டி போன்ற அரிப்பு செடியை பிடிங்கி அவனது இரண்டு தொடைக்கும் இடையில் வைத்து வேட்டியை கோவணம் போல் கட்டிக் கொண்டு வருவதும், காவல் நிலையத்தில் அவனைப் பாடச் சொல்லி ரசிப்பதும்... ஒருவனை மிரட்டி விசாரிக்கும் போது செந்தட்டி ஆள் முந்திக் கொண்டு அவனை அடிப்பதும் ரகளை என்றால் போலீஸ் வாக்கி டாக்கியை சுட்டுச் செல்லும் குடிகாரன், போலீஸார் கொடுக்கும் கட்டளைகளுக்கு நகைச்சுவையாய் பதில் அளிப்பதும் 'சிட்டி அண்டர் கண்ட்ரோல்' என்ற கமிஷனரின் சொல்லுக்கு 'அண்டர் கண்ட்டுரோலா.. இனி சிட்டி மை கண்ட்டுரோல்' என்று சொல்வதும் அவனைப் பிடிக்கத் திணறுவதும் ரகளையோ ரகளை.

இப்படி சுவராஸ்யமான வழக்குகளை சந்திக்கும் நிவின், ரவுடிகளுக்கு அடி கொடுப்பதில் கூட வித்தியாசம் காட்டியிருக்கிறார். துணியில் கட்டப்பட்ட உறிக்கப்படாத தேங்காயை வைத்து, குற்றவாளியை குனிய வைத்து முதுகெலும்பில் அடிப்பார்.. அடி வாங்குபவனுக்கும் அதைப் பார்ப்பவனுக்கும் குற்றம் செய்யவே தோன்றாது. கணவனின் நண்பனோடு சென்றவள் காவல் நிலையத்தில் வந்து குழந்தையும் அவனுக்கு பிறக்கவில்லை... அவனது நண்பனுக்குத்தான் பிறந்தது என்று சொல்லும் வழக்கு சோகமென்றால் ஆட்டோக்காரரின் காதல் ரசிக்க வைக்கும்.


வீட்ல குழந்தைங்க குளிக்கும் போது எதிர்த்த வீட்டுக்காரன் எல்லாத்தைக் காட்டிக் கொண்டு குளிக்கிறான் என்று கேஸ் கொடுக்க வரும் பெண்களிடம் ஏன் அவனைப் பார்க்கிறீர்கள் என்று கேட்க, அவன் ஸ்ஸ்ஸ்... ஸ்ஸ்ன்னு கூப்பிடுறான்னு சொல்லவும், ஆளு பங்கியுண்டோன்னு கேக்க, பங்கி எல்லாம் இல்ல...  என்று அந்தப் பெண் சொல்ல, அப்ப பங்கி இருந்த ஒகேயா என்றதும் அந்தப் பெண் தலையாட்டி சிரிப்பாருங்க பாருங்க சிரிப்பு... அப்போ அந்தப் பெண்ணின் முகபாவம் சூப்பர்.

இப்படி இன்னும் இன்னுமாய் கலந்து கட்டி கடைசி வரை ரசிக்க வைக்கும் படத்தில் முழுக்க முழுக்க காவல் நிலைய நிகழ்வுகளே காட்டப்படுவதால் நாயகிக்கு மூக்குத்தி அழகி அனு இம்மானுவேலுக்கு அதிக வேலை இல்லை. ஒரிரு முறை போனில் பேசுவதோடு இரண்டு பாட்டிலும் இறுதிக் காட்சியிலும் வருகிறார். பின்னணி இசை முருகேசன்.. நம்ம பக்கத்து ஆளு போல அடிச்சி துவம்சம் பண்ணிடுறாரு... நிவினே தயாரிச்சு இருக்காரு... லஞ்சம் வாங்காத, மக்கள் பணிதான் முக்கியம் என்று இரவு பகல் பாராது உழைக்கும் எத்தனையோ காவலர்களின் பிரதிபலிப்புதான் நிவினின் கதாபாத்திரம். 'எம்.எஸ்.ஸி., எம்.பில் படிச்சிட்டு புரபஸர் வேலையை தூக்கி எறிஞ்சிட்டு விரும்பி இந்த வேலைக்கு வந்தவன்டா...' என்று சீறும் போதும்... பள்ளிக் குழந்தைகளிடம் பேசும் போதும்... ரோஹிணிதான் திருடினார் என்பது தெரிந்த போது என்,சி,சியில் கலக்கும் குழந்தையின் அம்மாதான் அவர் என்று தெரிந்து மருகும் போதும் காதலியுடன் போனில் பேசும் போதும்... நிவின் ஜொலிக்கிறார். மலையாள சினிமாவில் அசைக்க முடியாத இடத்தை நிவின் பிடிப்பார்.

இந்தப் படத்தை அவரே தயாரித்திருக்கிறார்... படத்தின் ஆரம்பத்தில் அப்பா, அம்மா, மனைவி, குழந்தை, சகோதரிகள், நட்புக்கள், தன்னை ஏத்திவிட்ட ஏணிகளாம் இயக்குநர் நண்பர்கள் எல்லாருக்கும் நன்றி சொல்லியிருக்கிறார். என்னை அறிந்தால் அஜீத் போன்று சில இடங்களிலும் சாமி விக்ரம் போல் பல இடங்களிலும் தெரிகிறார். இனி போலீஸ் கதாபாத்திரத்தில் பயமின்றி இறங்கலாம்.


படம் சூப்பருங்க... நம்மாளுங்க இன்னும் வில்லனின் பின்னால்தான் திரிகிறார்கள்... இவர்கள் வில்லனே இல்லாமல் படம் எடுத்து வெற்றியும் பெறுகிறார்கள்.

'ஆக்சன் ஹீரோ பிஜூ'வை சிரித்தும்... சீரியஸாகவும் ரசிக்கலாம்.

--------------------------------

ஜூலை மாத கொலுசு மின்னிதழில் எனது "காத்திருந்த உயிர்" என்னும் சிறுகதை வெளிவந்திருக்கிறது. கொலுசில் இது எனது முதல் கதை. அடுத்த பகிர்வாய் கதையை இங்கு பகிர்கிறேன்..

கொலுசு இணையத் தளத்தில் வாசிக்க... "காத்திருந்த உயிர்"

நன்றி.
-'பரிவை' சே.குமார்.