மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

செவ்வாய், 30 ஆகஸ்ட், 2016

எழுத்தை ஆயுதமாக்கு... நண்பனின் கடிதம்

ன் அன்புத் தோழன் கவிஞர்... பேச்சாளர்... முற்போக்கு சிந்தனைவாதி... தமிழ்க்காதலன் முகநூலில் எழுதிய கடிதம்... இது எனக்கானது மட்டுமல்ல... எழுதும் நம் அனைவருக்குமான கடிதம்... வாசியுங்கள்... எழுத்தின் வலிமையை உணர்வீர்கள்...

தயம்நிறை அன்பில் நெகிழும் அன்புத் தோழனே, இனிய பரிவை.சே.குமார், அன்பானவற்றை பண்பான எழுத்தில் தரும் படைப்பாளியே, நல்ல எழுத்தை இரசமாக்கித்தரும் வலிமை கொண்டவன் தான் சிறந்த படைப்பாளியாகிறான். எழுதுவது கலை, எழுத்து சாகா வரம் பெற்ற சாதனம். உலகம் இன்று அதனை அனுபவித்துக் கொண்டிருக்கிறது. உயிர்களை ஆளும் வலிமையும் எழுத்துக்கு உண்டு. எண்ணங்களை ஓவியமாக்கும் அழகு எழுத்து. உயிரின் உயில் வடிவம் எழுத்து. நன்மைக்கும், தீமைக்கும் பொதுவானவற்றில் எழுத்தும் ஒன்று.
அத்தனை வலிமையான எழுத்தை இன்று நாம் எதற்கு பயன்படுத்துகிறோம்? எப்படி பயன்படுத்துகிறோம் என்பதில்தான் எழுத்தின் தன்மை தீர்மானிக்கப்படுகிறது. பேச்சுக்கும் எழுத்துக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. பேசுகிற எல்லாவற்றையும் நாம் எழுதுவதில்லை. எழுதுகிற அல்லது இதுவரை எழுதப்பட்டிருக்கிற எல்லாவற்றையும் நாம் பேசுகிறோமா என்றால் அதுவும் இல்லை. ஆனால் எதை எழுத வேண்டும் என்பதில், என்ன எழுத வேண்டும் என்பதில், ஏன் எழுத வேண்டும் என்பதில் ஒரு தெளிவு அவசியமாகிறது. அதனால்தான் எழுத தொடங்கும் முன்பு எல்லோரிடமும் ஒரு சின்ன தயக்கமும், தடுமாற்றமும் வருகிறது.
அறிவை ஆயுதமாக்கும் குணத்தைப் போலவே, மனிதனுக்கு எழுத்தையும் ஆயுதமாக்க தெரிந்திருக்கிறது. ஆயுதங்கள் எப்போதும் ஏதோ ஒன்றை காப்பாற்ற அல்லது காப்பாற்றிக்கொள்ள ஏதேனும் ஒன்றை தடுப்பது அல்லது அழிப்பது என்பதற்கான படைப்புகள். எனவே, எழுத்தும் ஓர் ஆயுதமாகிறது. இதை நீ நன்கு கவனிக்க வேண்டும். பயன்படுத்துபவன் யார் என்பதை பொறுத்து, கருவிகளின் விளைவுகள் அமைகிறது. அதனால்தான் எழுத்தில் பல விடயங்களை மறைமுகமாகவும், பல சமயம் எழுதியதை மறைத்தும் வைத்தார்கள் நம் முன்னோர்கள்.
அடுத்த தலைமுறைக்கு தெரியவும் வேண்டும், அதே சமயம் தகுதியற்ற, தீமைகளை விளைவிக்க கூடியவர்களின் கைகளில் சிக்கிவிடக் கூடாது என்பதில் மிகுந்த கவனமும் வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார்கள். இன்றைய சமூகம் இந்த நிலைகளில் இருந்து நிறைய மாற்றங்களை கண்டுள்ளது. யாரும், எதையும் எழுதுவதற்கான களமும், வாய்ப்பும் கிடைத்திருக்கிறது. எண்ணிப்பார். பனை ஓலைகள், சில தாவர இலைகள், கரும்பாறைகள் இவைகள்தான் எழுதும் பொருட்கள் என்றிருந்தால் நாமெல்லாம் இப்போது எப்படி எழுதி இருப்போம்..? நம்மில் எத்தனைப் பேர் எழுத்தாளர்களாக பரிணமித்திருப்பார்கள்..? யோசித்துப்பார். நீ எழுதும் நிலையை எட்டியது எப்படி..? காலம் நம்மை எப்படிப்பட்ட இடத்தில் நிறுத்தி இருக்கிறது. இத்தனை வசதிகளும், வாய்ப்பும் இன்றைக்கு மனித அனுபவத்தாலும், முயற்சியாலும் கிடைத்திருக்கிறது. அதை எப்படி, எதற்கு பயன்படுத்துகிறோம்..? அதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். வாழுகிற ஒவ்வொரு தலைமுறையும், நமக்கு முன் வாழ்ந்து போன முன்னோர்களுக்கு கடன்பட்டவர்கள் என்பதை மறந்துவிட வேண்டாம்.
நமக்கும் நமக்குப்பின் வரும் தலைமுறைக்கும் நாம் எதை விட்டுச்செல்ல வேண்டும் என்பதில் ஒரு தெளிவு வேண்டும். அதை எழுத்தாக்கித்தர வேண்டும். தலைமுறைகளை கடந்து நிற்கும்படியான எழுத்தைப் படைத்திருக்கிறோமா என்கிற கேள்வி எழ வேண்டும். படைக்கும்போதே அந்த எழுத்தின் காலம் தீர்மானிக்கப்படுவதில்லை என்பது சரி. ஆனால் நிற்கும் எழுத்துக்களை கவனி. எத்தன்மையுடையவை சிறந்தது என்பது எளிதில் விளங்கும். எந்த வடிவத்தில் கொடுக்கிறோம் என்பதல்ல விடயம், என்ன கொடுக்கிறோம் என்பதுதான் முக்கியம். உனக்கே தெரியும். பல நல்ல பழக்கமும், ஒழுக்கமும் கூட சொல்லிகொடுக்கப்படாததாலும், சொன்ன விதம் அடுத்த தலைமுறைகளுக்கு புரியாததாலும், இன்றைக்கு நாம் இழந்து நிற்கும் உன்னதங்கள் ஏராளம். நமக்கு அதுபற்றியே எதுவும் தெரியாது என்பது மிகப்பெரிய கொடுமை. நமது அறியாமையும், மூடநம்பிக்கையும் எல்லாவற்றுக்கும் காரணமாகிறது.
மனித இனம் மற்ற உயிரினங்களில் இருந்து பன்மடங்கு உயர்நிலை உடையதாய் இருக்கிறது. உடலியல் சார்ந்தும், உளவியல் சார்ந்தும், அறிவியல் சார்ந்தும், அனுபவத்தாலும் சிறந்த உயிரினமான மனித இனத்துக்கு நாம் விட்டுப்போகும் அடையாளம் என்ன…? அனுபவ பாடம் என்ன..? அதை செய்திருக்கிறோமா..? அது பற்றி எழுத யோசித்திருக்கிறோமா..? சிந்தித்துப் பார்.
எத்தனை ஆயிரம் விலங்குகள், தாவரங்கள் அழிந்துபோய் விட்டன. அவற்றை பற்றிய அறிவு நமக்கு இன்று இல்லை. ஒரு சிறு இலையை கூட உருவாக்க முடியாத நம்மால், எத்தனை உயிரினங்கள் தொடர்ந்து அழிந்துக்கொண்டிருக்கிறது இந்த பூமியில். ஒரு செடி அழிந்தால், மருத்துவ குணம் கொண்ட ஒரு மூலிகையை நாம் அழிக்கிறோம் என்று பொருள். இப்படி அவை அழிய அழிய, மனிதனுக்கு வரும் நோய்களின் எண்ணிக்கைப் பெருகும் என்பது எத்தனை பேருக்கு சிந்திக்க தோன்றும்.
ஒரு விலங்கினம் அழிய, அதன் தொடர்ச்சியாய் எத்தனை உயிரினம் தானே அழியும் என்கிற விடயத்தை நம்மவர்களுக்கு புரியும்படி யார் சொல்வது…? உயிரியல் அடிப்படை அறிவை படித்தவர்கள் பின்பற்றுவதில்லை. அதன் விளைவை இன்று நாம் சந்தித்துக்கொண்டிருக்கிறோம். மனிதனின் தவறான செயல்பாடுகளால், ஏற்படும் பின்விளைவுகளை தொடர்ந்து கவனித்து, எது சரி, எது தவறு என்கிற உண்மையை சொல்லுவது யார் என்ற கேள்வி முன் நிற்கிறது.
பொழுதுபோக்குக்கு எழுத்தில் இடம் கொடுக்கலாம். தொடர்ந்து அதையே செய்வதற்கு இந்த பிறவி எதற்கு என்று யோசிக்கத் தோன்றுகிறது. எழுத்தாற்றல் உடையவர்கள் இந்த பூமிக்கும், அதன் மேல் உயிர்வாழும் உயிரினங்களுக்கும் செய்ய வேண்டியது ஏராளம் உண்டு. நீ அதை நோக்கித் திரும்புவாய் என நம்புகிறேன்.
என்றும் அன்புடன்,
உண்மையைத் தேடும் தமிழ்க்காதலன். 

கடிதத்தை இங்கு பகிர்ந்து கொள்ள அனுமதித்த நட்புக்கு நன்றி.

நண்பனின் வலைப்பூ : இதயச்சாரல்..!

முகநூல் முகவரி : தமிழ்க்காதலன்
-'பரிவை' சே.குமார்.

ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2016

சினிமா : 'மக்கா கலக்கலப்பா' தர்மதுரை

ருத்துவம் படித்து கிராமத்து ஜனங்களுக்குத்தான் வைத்தியம் பார்ப்பேன் என்ற கொள்கை உடைய தர்மதுரை (விஜய் சேதுபதி), அரசு மருத்துவமனையில் பணி புரியும் போது தமிழ்ச்செல்வியை (ஐஸ்வர்யா) சந்தித்து, பிறருக்கும் உதவி செய்யும் குணமும் வெள்ளந்தியான பேச்சும் கவர, அவள் மீது காதலாகி, வீட்டில் சொல்லி பெண் பார்த்து நிச்சயம் பண்ணிய பிறகு, அவள் ஏழைக்குடும்பம் என்பதாலேயே வட்டிக்கு கொடுத்து... ஏலச்சீட்டு நடத்தி ஊருக்குள் பொழப்பு நடத்தும் விஜய் சேதுபதியின் சகோதரர்கள் ஐம்பது பவுனும் அஞ்சு லெட்சமும் வரதட்சணையாக கேட்டு மிரட்ட, அது ஐஸ்வர்யாவின் தற்கொலையில் முடிகிறது. அவர்களைப் பலி வாங்குவேன்... விஷத்தைக் குடித்து சாகும் வரைக்கும் விடமாட்டேன் என்று சொல்லிக் கொண்டு மருத்துவத் தொழிலை மறந்து குடிகாரனாகி... உடன்பிறப்புக்களுக்கு எதிராகி... அடிவாங்கி... அறைக்குள் அடைத்து வைக்கப்படும் வி.சே அங்கிருந்து தப்பும் போது காட்சிகள் விரிகின்றன. 

Image result for தர்மதுரை

படம் ஆரம்பிப்பது குடிகார வி.சேயின் அடாவடி காட்சிகளில்தான்... அதைத் தொடர்ந்து சீயானின் இறப்பில் ஒரு குத்துப் பாட்டு... மக்க கலங்குதப்பா... குத்துன்னா குத்து செம குத்து... வி.சேக்கு சொல்லவா வேண்டும்... சிக்ஸர் அடித்திருக்கிறார்.

வீட்டிலிருந்து தப்பிச் செல்லும் வி.சே... தவறுதலாக ஏலச்சீட்டு பணம் வைத்திருந்த பையை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட, ஊரில் பூகம்பம் வெடிக்கிறது. அதன் பின் அவரின் சகோதரர்கள் போலீஸில் இருந்து சஸ்பெண்ட் ஆன சித்தப்பாவுடன் சேர்ந்து கஞ்சாக் கருப்பையும் பிடித்து வைத்துக் கொண்டு தேடுதல் வேட்டை நடத்துகிறார்கள். ஆனால் கல்லூரி வரை தேடிச் செல்லும் அதன்பின்  தேடுதலை விட்டுவிட்டு போலீசுக்கு போகிறார்கள்.

கல்லூரி வாழ்க்கை, கிராமத்துக் காதல், தமன்னாவுடனான வாழ்க்கை என்று மூன்று கட்டமாக நகரும் கதையின் ஆரம்பம் இரண்டாவது கட்டத்தின் இறுதி என்றாலும் ஊரை விட்டு ஓடும் வி.சே,  பேருந்தில் பயணிக்கும் போது சொல்வதாய் விரிகிறது மதுரை மருத்துவக் கல்லூரி வாழ்க்கை... அவர் செல்லமாக அழைக்கும் பக்கிகளாக தமன்னா, சிருஷ்டி டாங்கே... மாணவர்கள் விரும்பும் பேராசிரியர் காமராஜாக ராஜேஸ்... எதிர்த்துக் கொண்டு நிற்கும் சக மாணவன் அன்வர்,.. அவர்களுக்குள் அடிதடி.. வி.சேயை விரும்பும் சிருஷ்டி... தன் காதலை மறைத்து வைத்திருக்கும் தமன்னா... என கதை விரிகிறது... இது இடைவேளை நீள்கிறது.

கல்லூரிக்கு வந்து அங்கு தோழியரின் முகவரி வாங்கி அவர்களைத் தேடிச் செல்ல, சிருஷ்டியின் வீட்டில் ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது. அதிலிருந்து மீண்டு அங்கிருந்து தமன்னாவைத் தேடிச் செல்ல, குடிகாரனாய் வி.சேயைப் பார்த்து வருந்தி யாருமில்லாத தன்னுடன் தங்க வைத்திருக்கிறார்.

தமன்னாவிடம் சொல்வதாய் நகர்கிறது கிராமத்து வாழ்வும்... ஐஸ்வர்யாவுடனான காதலும்... நிச்சயிக்கப்பட்ட திருமணம்... சகோதரர்களின் வரதட்சணை ஆசை... காதலியின் மறைவு... என எல்லாம் சொல்கிறார்.

Image result for தர்மதுரை ஐஸ்வர்யா

குடியில் இருந்து அவரை மீட்டெடுத்து மீண்டும் மனிதராக்கும் தமன்னாவுடனான வாழ்க்கை கதையின் இறுதிப் பகுதியாக நகர்கிறது. பெங்களூரில் இருக்கிறான் என்று சொன்ன கணவன், உண்மையில் அவளுடன் சேர்ந்து வாழவில்லை என்பதும் இருவரும் விவாகரத்துக்காக காத்திருக்கிறார்கள் என்பதும்  விவாகரத்து கிடைத்த அன்று தமன்னாவுடன் நீதிமன்றத்துக்குச் செல்லும் போதுதான் தெரிகிறது. அங்கு தன் முன்னாள் கணவரிடம் தாங்கள் இருவரும் சேர்ந்து வாழ்வதாகச் சொல்வதுடன், விவாகரத்துக்கான காரணத்தையும் வி.சேயிடம் சொல்கிறார். அவனின் கேடுகெட்ட செயலை அறிந்து துடிக்கும் வி.சே நீதிமன்ற வளாகத்தில் வைத்து முன்னாள் கணவனை அடித்து உதைக்கிறார்.

'காலேஜ்ல படிக்கும் போது என்னை விரும்பினாய்தானே..?' என்று கேட்கும் போது ஒரு புன்னகையில் மறைத்து நகர்ந்தாலும்... 'உன்னை நான் தமிழ்ச்செல்வியாக பார்க்கிறேன்' என்று சொன்னபோது அங்கிருந்து ஒரு பதட்டத்துடன் நகரும் தமன்னா, அன்று இரவு படுக்கையை பகிர்ந்து கொண்ட பின்னர் 'இப்பத்தான்டா ரொம்ப பாதுகாப்பா உணர்றேன்' என்று சொல்லுமிடத்தில் அவர்களின் காதல் வாழ்கிறது. இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து கொண்டே சின்ன கிளினிக் ஆரம்பித்து சந்தோஷமாக நாட்களை நகர்த்த, அவர்களைத் தேடி வரும் கண் தெரியாத காமராஜ் ஆசிரியர், சேர்ந்து வாழ்வதென்பது நம் கலாச்சாரத்துக்கு சரியானது அல்ல என்று சொல்லி, விரைவில் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்கிறார். 

அவர்களுடன் படித்த ஒருவன் புரபஸர் காமராஜ் நம்பர் கொடுத்தார் என போன் செய்து, திருமணம் செய்து கொள்ள இருப்பதற்கு வாழ்த்து தெரிவித்து, வி.சே பணத்தை எடுத்துக் கொண்டு வந்ததையும்... அவரின் சகோதரர்கள் தேடி அலைவதையும் சொல்ல, தமன்னா அது குறித்துக் கேட்க, அப்போதுதான் வி.சே விவரம் தெரிய வருகிறது. யாரிடமாவது கொடுத்து விடலாம் என்று சொல்லுபவரிடம் நீதான் போகணும்... நான் நல்லாயிருக்கேன்னு அவங்களுக்கு காட்டணும்... உன் அம்மாவை இங்க கூட்டியாரணும்... நம்ம குழந்தையை அவங்க கையில கொடுக்கணுமின்னு நினைக்கிறேன் என்று அனுப்பி வைக்கிறார்... அங்கு சென்ற வி.சேக்கு நடந்தது என்ன..? மீண்டும் திரும்பி தமன்னாவிடம் வந்தாரா...? என்பதே படத்தின் முடிவு.

கன்னங்குழி விழ சிரிக்கும் சிருஷ்டியும்... கண்களாலேயே பேசும் ஐஸ்வர்யாவும் அடித்து ஆடியிருக்கிறார்கள் என்று சந்தோஷம் படும் நேரத்தில் அனாயாசமான நடிப்பால் அவர்களை பின் தள்ளி முன்னே நிற்பவர் தமன்னா... பாந்தமான பண்பட்ட நடிப்பு... அவரின் கதாபாத்திரம் எல்லாருக்கும் நிச்சயம் பிடித்துப் போகும்.

மகனுக்காக வருந்தும் தாய் ராதிகா, எங்கே பசும்பொன் ராதிகா ஆகிடுவாரோன்னு பயப்பட வைத்தாலும் மகனை கொல்வதற்காக ஏற்பாடு செய்கிறார்கள் என்பதை அறிந்து அவன் தப்பிச் செல்ல இட்லிக்குள் சிறிய ரம்பத்தை வைத்துக் கொடுத்து தப்ப வைக்கும் போதும்... பணத்தை எடுத்தது தர்மதுரைதான் அவன் மீது எப்ப.ஐ.ஆர். போடுங்க என்று மகன்கள் சொல்லுமிடத்தில் போலீஸ் ஸ்டேசனில் சும்மா அடிச்சி ஆடும்போதும் அருமையான ஆத்தாதான்னு நிரூபிச்சிட்டாரு.

கம்பவுண்டராக கஞ்சா கருப்பு, வி.சேயுடன் அவருக்கு முதல் படம்ன்னு நினைக்கிறேன். வி.சேயுடன் அவர் அடிக்கும் லூட்டியை விட, அவரைத் தேடிச் செல்லும் சகோதரர்களிடம் மாட்டிக் கொண்டு அவஸ்தைப்படும் காட்சிகள் செம... மக்கா கலங்குதப்பா பாட்டில் சார் அது கரண்ட் பில் கட்ட வச்சிருந்த காசு என பாவாடையைக் கட்டிக்கொண்டு சொல்லியபடி வந்து நிறைவாய் செய்திருக்கிறார். அக்காவின் கணவராக வீட்டோட மாப்பிள்ளையாக வரும் அந்த கட்டை மனிதர் நல்லா நடித்திருக்கிறார். அக்கா, அண்ணன், தம்பிகள் கதாபாத்திரத்தில் நடித்தவர்கள் கொடுத்த வேலையைச் சரியாகச் செய்திருக்கிறார்கள். மந்திரம் போடுகிறேன் என்று சொல்லி ஜீபூம்பா பண்ணும் அக்கா மகள் கலக்கல்.

பாடல்கள் வைரமுத்து... இசை யுவன் சங்கர் ராஜா... பாடல்களும் பின்னணி இசையும் கலக்கல். ஆண்டிப்பட்டி கணவாய்... கிராமத்து மெலோடி. பாடலும் காட்சிப்படுத்தப்பட்ட இடங்களும் அழகு. கேமரா தேனியின் அழகை உள்வாங்கி இருப்பதுடன் ஊட்டியிலும் அழகாய் பயணித்திருக்கிறது.

விஜய் சேதுபதியின் ஆஸ்தான இயக்குநர் சீனு இராமசாமி இயக்கியிருக்கிறார். தாரை தப்பட்டையில் வில்லான வந்து கலக்கிய சுரேஷ் தயாரித்திருக்கிறார். குத்துப்பாட்டில் ஒரு குத்தும் போட்டுப் போகிறார்.

Image result for தர்மதுரை


ஐஸ்வர்யாவைக் கொன்றார்கள் ஓகே... ஏற்றுக் கொள்ளலாம்... கதையை நகர்த்த ஒரு முடிச்சு வேண்டுமல்லாவா... ஆனால் சிருஷ்டியை எதற்காக...? வி.சேயை சிருஷ்டி காதலிப்பது எதற்காக...? என் வீட்டில் வந்து பேசுன்னு சொல்றதோட போவதற்குப் பெயர் காதலா...? அப்புறம் எதற்காக தண்ணி போட்டு விட்டு அந்த அலம்பல் எல்லாம்...? தான் காதலிக்கும் ஒருவனின் தொடர்பு எண் இல்லாமல் போகுமா..? சிருஷ்டியை தோழியாகவே காட்டியிருக்கலாமே...ஏன் காதல் போர்வை..? சாதாரண கல்லூரிகளிலேயே ஆட்டோகிராப் எல்லாம் இருக்கும் போது... மருத்துவக் கல்லூரியில் அப்படியெல்லாம் இல்லையா என்ன...?  சிருஷ்டி காதலிப்பதாய்ச் சொன்னதால்தான் தமன்னா சொல்லாமல் நெஞ்சுக்குள் பூட்டி வைக்கிறாரோ...? மனதில் நினைத்தவனுடன் வாழத்தான் கணவனை கெட்டவன் ஆக்கிவிட்டார்களோ...? இந்தக் காலத்தில் அதுவும் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போன், இணையம் என எதிலும் தொடர்பில் இல்லாமலா இருப்பார்கள்..? எட்டு லட்சத்தை பேக்கில் வைத்துக் கொண்டு போனவன் அதை எடுத்துப் பார்க்கவே இல்லையா...? மெடிக்கல் புத்தகம் என்றல்லவா நினைத்தேன் என்று இறுதியில் சொல்வதாய் ஒரு வசனம்... சரிதான்... கொண்டு வந்த மெடிக்கல் புத்தகத்தையும் எடுத்துப் பார்க்கவே இல்லையா...? என ஆயிரத்தெட்டு கேள்விகளை எழுப்பாமல் இல்லை... அது எல்லாத்தையும் பின்னுக்குத் தள்ளி வி.சே - தமன்னா இணைந்து வாழ ஆரம்பிக்கும் இடைவேளைக்குப் பின்னர் விரியும் காட்சிகளால் அதுவரை தத்தளித்த படகு... கவிழாமல் ஆழ் கடலுக்குள் அழகாய் பயணித்திருக்கிறது.

மெடிக்கல் கல்லூரி காட்சிகள் அதிக நீளமாக இருந்தாலும்... சின்னச் சின்ன சொதப்பல்கள் இருந்தாலும்... இடைவேளை பின்னான காட்சிகளால் தர்மதுரை ஜெயித்திருக்கிறது.  அன்வர் எதிரியாய் வருவானோ என்று பயம் இருந்தது என்னவோ உண்மை... காரணம் கதாபாத்திரத்தின் பெயர்தான்... கண்டிப்பாக வில்லனாக்கி வேடிக்கை பார்ப்பார்கள்தானே... ஆனால் இதில் அவன் வி.சேக்கு உதவி செய்கிறான்... அதுவும் மிகவும் முக்கியமான உதவி... அதேபோல் முனியாண்டி காமராஜ்மேல் உள்ள பற்றுதலால் பேரை காமராஜ் என்று வைத்துக் கொண்டது... தண்டட்டி போட்ட கிழவிகள் ஆட்டெழும்பை கடித்து இழுப்பது... சேர்ந்து வாழ்தல் நம் பண்பாடு இல்லை என்பதைச் சொன்னது என பல இடங்களில் இயக்குநரைப் பாராட்டலாம். மதுரையை மையமாகக் கொண்ட கதை அடி தடி வெட்டுக்குத்து என்றில்லாமல் மதுரையின் மணத்தோடு ஊட்டிக் குளிரில் இதமாய்ப் பயணிக்கிறது.

சீனு ராமசாமியும் வி.சேயும் இணையும் மூணாவது படம்... மிக அருமையாக செய்திருக்கிறார்கள்... வைரமுத்துவின் பாடல்களுக்கு யுவன் சங்கர் ராஜாவின் இசை கலக்கல்.  சுகுமாரின் கேமரா கவிதையாய் நகர்கிறது.

மக்க கலங்குதப்பா செம குத்து என்றால் ஆண்டிப்பட்டி கணவாய் சோ சுவீட் மெலோடி... செம... தினமும் நாலைந்து முறை ஓடிக் கொண்டிருக்கிறது செல்பேசி திரையில்... நீங்களும் கேளுங்க...


-'பரிவை' சே.குமார்.

சனி, 27 ஆகஸ்ட், 2016

அரசனின் 'இண்ட முள்ளு'


ண்ட முள்ளு...

சகோதரர் சே.அரசன் அவர்களின் முதல் சிறுகதைத் தொகுப்பு இது. காராமுள்ளு, சூறாமுள்ளு, கருவமுள்ளு, இலந்தமுள்ளு, காக்காமுள்ளு இப்படி நிறைய முள்ளைப் பார்த்து குத்துவாங்கி வளர்ந்திருக்கிறோம்... இது இண்டமுள்ளு... புது வார்த்தை... 'தான் படர்ந்திருக்கும் பரப்பினைக் கடக்கும் எவரையும் கொத்தாக பிடித்திழுக்கும் இயல்பினைக் கொண்டது.' அப்படின்னு தன்னோட அணிந்துரையில் கவிஞர் சி.கருணாகரசு சொல்லியிருப்பதை வைத்துப் பார்க்கும் போது இது இலந்தை முள்ளோ அல்லது சூறா முள்ளோதான் என்று நினைத்திருந்தேன்... அவைதான் கடந்து செல்வோரை கொத்தாக பிடித்துக் கொள்ளும். ஆனால் நேற்று அரசன் முகநூலில் பகிர்ந்த படத்தைப் பார்த்தபோது அதுபோன்ற ஒரு முள்ளை பார்த்த ஞாபகம்... அதன் கிளைகளில் எல்லாம் சூறா முள்ளைப் போல் கொக்கி கொக்கியாக இருக்கும்... ஆனா எங்க பக்கம் அதற்கு என்ன பேருன்னுதான் ஞாபகத்தில் வரவில்லை... சரி இப்ப முள் ஆராய்ச்சி எதற்கு இண்டமுள்ளின் பின்னே பயணிப்போம்.

கதைக்களமாய் தான் பிறந்த 'உகந்த நாயகன் குடிக்காடு' மற்றும் அதன் சுற்றுப்புற ஊர்களையே பயன்படுத்தியிருக்கிறார். ஒவ்வொரு கதையும் அங்கு வாழ்ந்த, வாழும் மக்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கிறது. அந்த மக்களின் சந்தோசம், துக்கம், வலி, வேதனை,ஏமாற்றம். சூழ்ச்சி, வஞ்சகம், காமம் என எல்லாம் சுமந்து நிற்கிறது.

பெருஞ்சொம, தூவானம், சாந்தி, வெள்ளாம, கெடாவெட்டி, தாய்மடி, காயடிப்பு, நலுவன், எதிர்க்காற்று என மொத்தம் ஒன்பது கதைகள்... ஒவ்வொன்றும் ஒவ்வொரு களத்தில்... கதைகள் நவரசம்... பெரும்பாலான கதைகள் சோகம் சுமந்து நிற்கின்றன. மண்ணின் மணத்தோடு மண்ணின் மாந்தர்களைக் கதையின் நாயக, நாயகிகளாக ஆக்கும் போது சுகத்தைவிட துக்கமே தூக்கலாக இருக்கும் என்பதே உண்மை. 

நான் எழுதும் கதைகள் கூட பெரும்பாலும் சோகம் சுமந்தே காணப்படும். 'நீங்க எப்பவுமே நெகட்டிவாத்தான் சிந்திக்கிறீங்க... பாஸிட்டிவ்வா சிந்திங்க...' அப்படின்னு ஒரு வலைத்தள நட்பு என்னுடன் நீண்ட விவாதமே... ஏன் சண்டையே போட்டார்... சண்டையின் இறுதியில் 'உன்னோட சிந்தனையில் துருப் பிடித்திருக்கிறது' என்றும் அன்பாய்ச் சொன்னார். எப்படித்தான் சிந்தித்தாலும் விவசாயத்தின் வேர் அறுந்து போன ஊரில் விழுதுகள் நகரங்களில் கிளைவிட்ட பின்னர் அந்த விழுதுகளைச் சுமந்த வேர்கள் மட்டும் அந்த வீணாகிப் போன பூமியை விட்டு வெளியே வரப்பிடிக்காமல்... அந்த மண்ணின் மீதான தீராக்காதலை சுமந்து தவிப்பதை கதையாக்கும் போது சுகங்களைவிட சோகமே தொக்கி நிற்கும்... அந்த வகைக் கதைகளை அரசன் மிகச் சிறப்பாக கையாண்டிருக்கிறார்.

'இந்த இண்டமுள் கொஞ்சமேனும் உங்களை தைத்தால் அதுவே நான் கொண்ட முயற்சிக்கு வெற்றி' என்று ஆசிரியர் தனது உரையில் சொல்லியிருக்கிறார். கொஞ்சமேனும் அல்ல ஒவ்வொரு கதைகளும் ஒவ்வொரு விதமாக தைக்கின்றன. இதுவே எழுத்தாளரின் எழுத்துக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய வெற்றி. நடைமுறை வாழ்க்கையை அவர்களின் பேச்சு வழக்கில் சொல்வதென்பது எளிதன்று... அப்படியிருக்க மிகச் சரளமாக பேச்சுவழக்கை கையாண்டிருக்கிறார். எவன் ஒருவன் தன் மண் மீதும் மனிதர்கள் மீதும் என்றென்றும் மாறாத காதல் கொண்டிருக்கிறானோ அவனால் மட்டுமே அந்த மண்ணின் மைந்தர்களை கதை மாந்தர்களாக மட்டுமின்றி அந்த மண்ணின் வாசத்தையும் வாசிப்பவர் மீது இறக்கி தான் பிறந்த மண்ணை எல்லார் மனதிலும் வாழ வைக்க முடியும். அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கை அரசனுக்கு கிடைத்திருப்பது தவம்... அவரின் எழுத்துக்கள் நமக்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம்.

ஒன்பது கதைகளில் ஒன்றிரண்டு கதைகள் தவிர, எல்லாமே சாவைப் பேசுகிறது... பல கதைகள் காமத்தை மையப்படுத்துகிறது... பெரும்பாலும் உடல்சார்ந்த எல்லை மீறல்கள்... அவை சர்வசாதாரணமாக... அதுவும் இருவரும் விரும்பியே நடக்கின்றன... இதில் ஆண் பெண் வேற்றுமை எல்லாம் இல்லை... சாந்தி, மருதன், பார்வதி, நாராயணன், சங்கர், ராமன், லதா என எல்லாருமே இதில் திளைக்கிறார்கள். காமம் சார்ந்து எழுதுவது என்பது மிகவும் கவனமாக கையாள வேண்டிய விஷயம்... அதை மிகச் சரியாக ஆசிரியர் கையாண்டிருந்தாலும் அந்த மண்ணில் அவர் சொல்வது போல 'புழங்குவது' என்பது சர்வ சாதாரணம் போல என்று தோன்ற வைத்து விடுகிறது. மனிதர்கள் மீது இரக்கம் வர வேண்டிய இடத்தில் இப்படி இருக்கிறார்களே என்ற ஆதங்கமே மிஞ்சுகிறது. 

திரு.பெருமாள் முருகன் தன்னோட மாதொரு பாகனில் முழுக்க முழுக்க காமத்தையே மையப்படுத்தியிருப்பார்... பேசக் கூசும் வார்த்தைகளையெல்லாம் அள்ளி விதைத்திருப்பார்... அது உண்மை பேசும் கதை... அப்படித்தான் எழுத முடியும் இதிலென்ன தப்பு என்று அவருக்கு வக்காலத்து வாங்க சிலரும்... இதை அவர் வீட்டு பெண்கள் படித்திருப்பார்களா..? எனச் சிலரும் மோதிக்கொள்ள நேர்ந்ததை நாம் அறிவோம்... நல்ல எழுத்தாளர்.... மாதொருபாகன் பிரச்சினையால் எழுத்துக்கு தடா போட்டு விலகியிருந்து தற்போது மீண்டும் எழுந்து வந்திருக்கிறார். அவர் வளர்ந்த எழுத்தாளர்.. நம் அரசனோ வளரும் எழுத்தாளர்... காமம் கலந்து எல்லாராலும் எழுத முடியாது... எதார்த்தம் பேசும் கதைகளில் இதெல்லாம் சகஜம் என்றாலும் அது இல்லாத வாழ்க்கை எதார்த்தத்தை இன்னும் நிறையப் பேசலாமே என்பது என் எண்ணம். இது அரசனுக்குத்  தவறாகத் தெரிந்தால் மன்னிக்கவும்.

மேலும் நம் நட்பில் ஒரு சிலருக்கு நான் சொல்வது தவறாகத் தெரியலாம்... எழுத்தாளன் காதலையும் காமத்தையும் எழுத வேண்டும்... இதில் என்ன தவறிருக்கிறது என்றும் வாதிடலாம். இந்தக் கதைகளின் போக்கில் இவை தவறில்லை என்பது உண்மைதான்... சரியான கதைக்களம்தான்...  சமீபத்தில் ஒரு போட்டிக்காக சிறுகதை எழுதினேன்... அந்தக் கதையை அந்தத்தளத்தில் படித்த, என் எழுத்துக்களை நேசிக்கும் சகோதரி ஒருத்தர் 'நல்லாயில்லைப்பா' என்று ஆரம்பித்து 'நீங்க சொல்லியிருக்கும் உறவுமுறை... வேண்டாம்ப்பா... இப்படி எழுதாதீங்க' என்றார். எங்க பகுதியில் நான் பார்த்த ஒரு நிகழ்வுதான் என்று சொன்ன போதும் 'உங்ககிட்ட இதை எதிர்பார்க்கலை... இப்படியெல்லாம் எழுதாதீங்க' என்றவர் 'அந்த உறவுமுறை எப்படிப்பட்டது தெரியுமா..? அது தப்புச் செய்யுமா..?' என்றெல்லாம் பேசினார். இதை ஏன் சொல்றேன்னா... ஆஹா... அருமை... சூப்பர்.... அப்படியே கிராமத்து வாழ்க்கையை கண் முன்னே காட்டிட்டார் என்று சொல்லிக் கொண்டு போவதில் எனக்கு உடன்பாடில்லை.... சில உண்மைகளையும் சுட்டிக்காட்ட வேண்டும் என்று நினைப்பதாலேயே இங்கு எழுதியிருக்கிறேன்... அரசன் என் சகோதரன் என்ற முறையில் இன்னும் சிறப்பான கதைகளைக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்திலான கருத்துத்தான் இது. நல்ல எழுத்தாளனுக்கு எல்லாத் தரப்பிலும் வாசகர்கள் அமைய வேண்டும் என்பதே என் எண்ணம்.

கிராமத்து வாழ்க்கையில் காமம் தவிர்த்து எத்தனையோ இருக்கின்றன. அவர்களின் வாழ்க்கைக் கதையை நட்பு, நேசம், பாசம், காதல், வன்மம் என எத்தனையோ விதத்தில் பேசலாம்... இதிலிருக்கும் கதைகளில் காமம் நிரம்பியிருப்பதால் கிராமம் என்றாலே இப்படித்தானோ என எண்ண வைத்துவிடும் என்பதே என் பயம். இருப்பினும் மிக அழகாக, மிகவும் யோசித்துச் செதுக்கப்பட்ட கதைகளுக்காக அரசனை கட்டிப்பிடித்து வாழ்த்தலாம்... அதில் தவறொன்றும் இல்லை. சொல்ல வந்த வாழ்க்கையை கண் முன்னே காட்டிச் செல்லும் எழுத்து எல்லாருக்கும் அமைவதில்லை... அது அரசனுக்கு கை வந்திருக்கிறது... அதற்காகவே அவரின் கரங்களை இறுகப்பற்றி வாழ்த்தலாம்.

கிராமத்து பேச்சு வழக்கு என்பதை கதையில் மிகச் சரியாக கையாண்டிருக்கும் அரசன்... அந்த மனிதர்கள் பேசும் போது மட்டுமல்லாமல் தான் அவர்கள் குறித்துச் சொல்லும் போதும் அப்படியே எழுதியிருப்பது மற்றவர்களின் எழுத்துக்களில் இருந்து வித்தியாசப்படுத்திக் காட்டுகிறது. குறிப்பாக பெயர்களை கிராமத்து மனிதர்கள் அழைக்கும் போது பாஞ்சால, அஞ்சல என்று அழைத்தாளும் கதையில் அவர்கள் பேசுவதாகவோ, அவர்கள் குறித்து நாம் சொல்வதாகவோ எழுதும் போது பாஞ்சாலி, அஞ்சலை என்றுதான் பெரும்பாலும் எழுதுவது  வழக்கம். ஆனால் இண்டமுள்ளில் முழுக்க முழுக்க வட்டார பேச்சு வழக்கு... இதுவும் வித்தியாசமாய்... அருமையாய்... வாசிக்கும் போது நாம் வாழ்ந்த வாழ்க்கையை கண் முன்னே நிறுத்திச் செல்கிறது... நல்லாத்தானிருக்கு அரசன்... வாழ்த்துக்கள்.

புத்தகத்தை வாங்கி வாசியுங்கள்... கண்டிப்பாக வட தமிழகத்தின் கிராமத்து வாழ்க்கைக்குள் நீந்திச் சுகம் பெறுவீர்கள்... வாழ்வியல் பேசும் அருமையான கதைகள்... மனம் கனக்கச் செய்யும் கதைகள்... இப்படியான வாழ்க்கையைத்தானே தினம் தினம் கிராமங்கள் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கின்றன என்பதை உணர வைக்கும் கதைகள்...

வாழ்த்துக்கள் அரசன்... மிகச் சிறந்த எழுத்தாளருக்கான சிம்மாசனம் உங்களுக்காக காத்திருக்கிறது. அடுத்த தொகுப்பை விரைவில் கொண்டு வாங்க. உங்கள் தந்தை சேகர் அவர்களும் தாய் வளர்மதி அவர்களும் உங்கள் துணைவியார் சகோதரி கலையரசி அவர்களும் உங்கள் வளர்ச்சி கண்டு சந்தோஷம் அடையும் நாள் வெகு தூரத்தில் இல்லை. வாழ்த்துக்கள். 

புத்தக வடிவமைப்பு : பால கணேஷ் அண்ணா... அருமையாகச் செய்திருக்கிறார். அரசன் வளர்மதி பதிப்பகத்தின் மூலமாக சொந்தமாக வெளியிட்டிருக்கிறார். 160 பக்கங்கள்... விலையோ 100 ரூபாய்தான்.

ஒரே ஒரு குறைதான்... பொருளடக்கம் என்ற பக்கத்தை மறந்துவிட்டார்கள்.

(இதுதான் இண்டமுள்ளு... அரசனின் முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்...  உங்கள் பார்வைக்காக)
கதைகளைக் குறித்து ஒன்றுமே சொல்லலையின்னு நினைக்காதீங்க... எல்லாக் கதைதளும் அருமையான கதைகள்... வாசிக்கும் போது அதை நீங்களே உணர்வீர்கள். நேரம் கிடைத்தால் மற்றொரு பகிர்வில் கதைகள் குறித்துப் பேசுவோம்...  இல்லை கதைகளைப் பற்றி கொஞ்சமேனும் அறிந்துதான் படிப்போம் என்றால் கொஞ்சமல்ல... பல எழுத்தாளர்களின் பார்வையில் இண்டமுள்ளுவைப் பற்றிநிறைவாய்த் தெரிந்து கொள்ள 'இண்டமுள்ளு' முகநூல் பக்கத்திற்குச் செல்லுங்கள்.

அரசனோட வலைப்பூ : கரைசேரா அலை
-'பரிவை' சே.குமார்.

வியாழன், 25 ஆகஸ்ட், 2016

மனசு பேசுகிறது : சின்னக்கண்ணன் அழைக்கிறான்

கிருஷ்ணன்...

கோபாலன்...

கோபால கிருஷ்ணன்...

கண்ணன்...

மாயக்கண்ணன்...

மாயவன்...

கோவிந்தன்... இப்படி எத்தனை பெயர்கள் அவனுக்கு... அத்தனை பெயரிலும் அவன் அழகுதான்...

சிறு குழந்தையாக... வெண்ணெய் திருடித் தின்று ஆயர் குலப் பெண்களின் அன்பில் வளர்ந்தவன் கண்ணன்... கோபியர்களின் செல்லப்பிள்ளை அல்லவா அவன்... வெண்ணெய் திருடித் தின்பதில் கண்ணன் மட்டுமா கெட்டிக்காரன்... நாமும்தானே... அப்படிப்பட்ட ஒரு சந்தோஷத்தை நம் தலைமுறை வரை அனுபவித்திருக்கிறோம் என்பதை சொல்லிக் கொள்வதில் பெருமைதானே.

இன்றைய குழந்தைகளுக்கு கடையில் விற்கப்படும் பாக்கெட் தயிர் மட்டுமே தெரியும். ஆனால் அன்று...? இந்த பாக்கெட் தயிரெல்லாம் இல்லையே... வீட்டில் உறை ஊற்றி வைக்கப்படும் தயிர்தானே... அதிலிருந்த சுவை இப்போது வரும் பாக்கெட் தயிர்களில் இல்லையே... சிலகாலம் முன்னர் வரை எங்கள் ஊரில் எல்லாருடைய வீட்டிலும் மாடு இருக்கும்.... அது பசுவோ... எருமையோ... வீட்டுக்கு வீடு இருக்கும்.

பசுவின் பாலை விட எருமையின் பால் கெட்டியாக இருக்கும். எங்கள் வீட்டில் எங்களது பள்ளிக் காலங்களில் எருமை மாடுகள்தான்... அதன் பிறகுதான் எருமை மாடுகளை விற்று விட்டு பசு மாடுகள் வாங்கினோம். ஒரு மாடு பால் வற்றும் போது இன்னொரு மாடு கன்று போட்டு விடும். அதனால் பாலுக்கு குறைவிருக்காது. அம்மா தயிர் விற்க மாட்டார்கள்... டீக்கடைக்கு மொத்தமாக கொடுத்துவிடுவோம். வீட்டில் காபிக்கும் தயிருக்கும் பால் எடுத்து வைத்துக் கொள்வார்கள். இரவு பாலைக்காய்ச்சி சூடு ஆறவைத்து, அதில் கொஞ்சம் தயிரை விட்டு மூடி வைத்து விடுவார்கள். காலையில் எடுத்துப் பார்க்கும் போது அல்வாபோல் கட்டியாக இருக்கும். சோற்றில் கட்டித் தயிரைப் போட்டு பிசைந்து சாப்பிடுவதுதான் சுகம். அதுவும் கஞ்சியில் தயிர் விட்டு... உப்பில் ஊறவைத்த எலுமிச்சை ஊறுகாயும் போட்டுப் பிசைந்து,  சின்ன வெங்காயத்தைக் கடித்துக் கொண்டு சாப்பிட்டால்...  ஆஹா... என்ன ருசி.. என்ன ருசி.

வீட்டில் தயிர் கடைவதற்கு என்று மத்து வைத்திருப்பார்கள். காலையில் தயிரை கடைந்து வெண்ணெய் எடுக்க வேண்டும். அம்மா ஆரம்பித்து வைக்க யாராவது ஒரு ஆள் தொடர்ந்து மத்தால் கடைய வேண்டும்... நேரம் ஆக ஆக... மத்தின் நெள்வாக இடங்களிலும் சட்டியின் ஓரங்களிலும் வெண்ணெய் திரண்டு ஒட்டிக் கொள்ளும். ஒரு பழமொழி இருக்குமே வெண்ணெய் திரண்டு வரும்போது தாழி உடைந்த கதையான்னு... அதனாலதானோ என்னவோ மீன் குழம்புக்கு மண்சட்டி பயன்படுத்தும் அம்மா, தயிர் வைப்பது அலுமினியப் பாத்திரத்தில்தான்... திரண்டு வரும் வெண்ணெய்யை சுடச்சுட தின்பதற்காகவே தயிர் கடைவதுண்டு... மத்தியில் இருக்கும் வெண்ணெய் எல்லாம் வாய்க்குள் போய்க் கொண்டே இருக்கும்.

திரண்டு வந்த வெண்ணெய்யை லாவகமாக எடுத்து ஒரு சிறிய கிண்ணத்தில் சேர்த்து வைப்பார்கள்... வாய்ப்புண்ணா...  உதட்டில் வெடிவு வெடிவாக இருக்கிறதா... வெண்ணெய்யை எடுத்துத் தேய்த்துக் கொள்ளும் போது ஒரு உருண்டை வாய்க்குள் ஓடிவிடும்... பொங்கல், தீபாவளி, திருவிழாக்களின் போது தினமும் எடுத்துச் சேர்த்து வைத்த வெண்ணெய்யை இருப்புச் சட்டியில் போட்டு அடுப்பில் வைத்து உருக்கி நெய் எடுப்பார்கள்... அதில் கொஞ்சம் சீரகமும் கருவேப்பிலையும் போட்டு கொதிக்க வைக்கும் போது ஆஹா... அந்த வாசம்... இப்ப வர்ற பாட்டில் நெய்களில் சத்தியமாக இல்லை என்று அடித்துச் சொல்லலாம்... நெய்யை ஊற்றிவிட்டு இருப்புச் சட்டியில் சாதத்தை எடுத்துப் போட்டு பிசைந்து ஆளுக்கு ஒரு உருண்டை அம்மா கொடுக்கும் போது வாங்கிச் சாப்பிட்டால்தானே தெரியும் அந்தச் சுவை... அதை அறியாத இன்றைய தலைமுறை நிறைய விஷயங்களில் கொடுப்பினை இழந்து விட்டார்கள் என்பதே உண்மை.

சின்னக் கண்ணனை பேச ஆரம்பித்து வெண்ணெய் திருடித் தின்ன நம்ம கதைக்கு போயாச்சு பாருங்கள்... நேற்று ஸ்கைப்பில் மகளுடன் நடந்த  உரையாடல் அப்படியே... 

'என்ன பாப்பா கிருஷ்ண ஜெயந்தி வருது... வீட்டில் என்ன விஷேசம்..?'  

'என்ன விஷேசம்... அம்மா சூப்பரா வெஜிடபிள்ஸ் சமைப்பாங்க... இனிப்பு பணியாரம் எல்லாம் செய்வாங்க... அவ்வளவுதான்'. 

'ம்...சரி... வீட்டுக்குள்ள கண்ணன் வந்த மாதிரி கால்தடம் போடுவீங்கதானே... கையால போடாமா சின்னக் கண்ணனோட காலால போடுங்க...' மெல்ல வம்புக்கு வலை வீசினேன்.

'சின்னக்கண்ணனா...? இங்க யாரு இருக்கா... அம்மா கையால சூப்பரா கால்தடம் போடுவாங்க தெரியுமா..?' 

'அது தெரியும்... அதான் நம்ம சின்னக் கண்ணன்... நம்ம தம்பி இருக்கானுல்ல...' தூபம் போட்டாச்சு... இனி புகையும் பாருங்க.

'யாரு... விஷாலா... அப்ப்ப்ப்பா... அவன் கால் தடம் வச்சா வீடே நிறைஞ்சிரும்... தேர்ட் ஸ்டாண்டர்ட் படிக்கிறான் சின்னக் கண்ணனாம்.... சின்னக்கண்ணன்....' பேச்சில் கோப ஜ்வாலை அடித்தது... காதுகளில் புகை வந்தது.

நானும் விடாமல் 'அவந்தானே நம்ம வீட்டு செல்லக் கண்ணன்... பின்னே இதுக்காக கண்ணப்பாவையா கூட்டியார முடியும்..?' என்றேன். 

'எந்தக் கண்ணப்பாவை...? எதிர்கேள்வி வந்தது. 

Image result for கிருஷ்ணர்
கேட்டது சரிதான் அதுலயும் சிக்கல் இருக்குல்ல... எங்க பெரியண்ணன் கண்ணன்... அங்கிட்டு அவங்க சித்தி வீட்டுக்காரர் கண்ணன்... யாரைக் கூப்பிடுவது என்று ஸ்ருதி கேட்டது சரிதான் என்றாலும் நாம விடாக் கண்டனுல்ல.. இதை இன்னும் இழுக்காம விடுறதில்லையின்னு ஆட்டத்தைத் தொடர்ந்தேன்.

'இங்கேரு பாப்பா... உங்க சித்தப்பா இங்க இருக்காரு... உடனே கூப்பிடமுடியாது.... நம்ம கண்ணப்பா அங்கதானே இருக்கார்... வரச்சொல்லி மாவைக் கலக்கிக் கொடுத்தியன்னா... மிதிச்சி வீடெல்லாம் நடந்துட்டு போவாருல்ல...' என்றேன் சிரிக்காமல்.

 'அப்ப்ப்ப்ப்பா.... யாரு நம்ம கண்ணப்பா..? அவருக்கு வயசு 50... தெரியுமா...?' 

'இருக்கட்டுமே... விஷால் செல்லக் கண்ணன் இல்லைன்னா... அவரு எங்கம்மாவுக்கு செல்லக் கண்ணன்தானே... பாரு பேர்லயும் கண்ணன் வச்சிருக்காரு..' 

'ஐயோ அப்பா முடியல... இதுக்கு பேசாம நானே கால்தடம் போட்டிருவேன்...' 

'நீயா... அதெப்படி போட முடியும்... நீ அழகு மீனாட்சியில்ல... கிருஷ்ண ஜெயந்திதானே... மீனாட்சி ஜெயந்தி இல்லையே..?' விடாமல் வம்பிழுத்தேன்.

'ஓ... அப்ப உங்க செல்லமகனும் கிருஷ்ணன் இல்லையே... பெரிய கருப்பன்தானே... எப்பூடி...' என்னை மடக்கிய சந்தோஷம்.

'என்ன இருந்தாலும் அவன் கோகுலத்துல கண்ணன்தானே... பெரிய கருப்பன்னு உங்க ஐயா கோவில்ல கூப்பிடச் சொல்லிட்டாங்க சரியின்னு எல்லாரும் ஏத்துக்கிட்டோம்... ஆனா நாங்க மாயக்கண்ணன்னு யோசிச்சி வச்சிருந்தோம் தெரியுமா?' வேண்டுமென்றே வம்பைத் தொடர்ந்தேன்.

'வக்கலயில்ல... வக்கலயில்லை...' என்றவர், 'அப்பா... நாங்க அம்மா கையால காலடி வச்சி சாமி கும்பிட்டுக்கிறோம்... நீங்களா வரப்போறீங்க... இல்லயில்ல... பின்ன என்ன... ஆனா அவனை மட்டும் வைக்கவே விடமாட்டேன்...' என்றார் கோபமாக. 

'பொறாமை... எங்க அவன் அழகா வச்சிருவானோன்னு பொறாமை..' எரியும் தீயில் எண்ணெய் வார்த்தேன்.

'ஆமா அவுக அழகா வச்சிக் கிழிச்சிட்டாலும்... வீடு பூராம் மிதிச்சி நாறடிச்சிடும்... போங்கப்பா நான் போறேன்... அம்மா வந்து பேசுவாங்க...' என்றபடி எழுந்தார்.

சின்னக் கண்ணனைப் பேச ஆரம்பித்து வெண்ணெய் திருடித் தின்று மகளிடம் வம்பளந்தது வரைக்கும் பேசியாச்சு.... இனி... என்ன பேசுறது..?

இன்று கிருஷ்ண ஜெயந்தி... ஊரில் விஷேசமான நாள்... இங்க... எப்பவும் போல எழுந்து குளித்து... சாமி கும்பிட்டு... வேலைக்குப் போய் வந்தாச்சு.... நமக்கு எங்கே கிருஷ்ண ஜெயந்தியும், தீபாவளியும், பொங்கலும்... எல்லா நாளும் வேலை நாள்தானே...

'சின்னக் கண்ணன் அழைக்கிறான்...
ராதையை... பூங்கோதையை...
அவள் மனம் கொண்ட ராகத்தைப் பாடி...
சின்னக் கண்ணன் அழைக்கிறான்...' 
என்ற பாடல் மனசுக்குள் ஓடிக்கொண்டிருக்கிறது....

கண்ணன் மட்டும் தீராத விளையாட்டுப் பிள்ளை அல்ல... நம் வீட்டுச் செல்லங்களும்தான்... அவர்களுடன் வம்பிழுத்து உரையாடுவதில் கிடைக்கும் சுகமே தனிதான்... அந்தச் சுவைக்கு முன்னால் கண்ணனும் நாமும் திருடித் தின்ற வெண்ணெய் சுவை கூட குறைவுதான்...



அனைவருக்கும் கோகுலாஷ்டமி வாழ்த்துக்கள்.

படங்களும் பாடலும் இணையத்திலிருந்து.... நன்றி.
-'பரிவை' சே.குமார்.

புதன், 24 ஆகஸ்ட், 2016

'அப்பா' - அம்மாக்களுக்கான சினிமா

து அப்பா படத்துக்கான விமர்சனம் இல்லை... படம் பிடித்திருப்பதால் முன்னர் எழுதிய பகிர்வை பதிவிடுவோமா... வேண்டாமா... என்ற எண்ணத் தோன்றலில் பதிவிடுவோம் என்பது முன்னே நிற்க ஒரு பகிர்வாக பகிர்ந்திருக்கிறேன்.


நூறு கோடிகளை மூலதனமாக்கி ஆயிரங்கோடிகளை ஆறே நாளில் சம்பாரித்து விட்டோம் என்று கொக்கரிப்போம் மத்தியில் போட்ட காசு வந்ததா வரலையா என்பதல்ல எங்கள் கவலை... நாங்கள் சொல்ல நினைத்ததைச் சரியாகச் சொன்னோமா...? நாங்கள் சொல்லியதை சரியாக உள்வாங்கிக் கொண்டார்களா...? நாங்கள் சொன்னதால் சமுதாயத்தில் சிறிதளவேனும் மாற்றம் நிகழ்ந்ததா...? என கண்டிப்பாக நினைத்திருப்பார்கள் அம்மா கணக்கு, அப்பா போன்ற படங்களில் தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும்....

அப்பா... எல்லாருக்குமே அப்பாவைப் பிடிக்கும் என்றாலும் பெண் குழந்தைகள் கூடுதல் ஒட்டுதலோடு இருப்பார்கள்... அதனால்தான் இயக்குநர் ராம் 'மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்குத்தான் தெரியும் முத்தம் காமத்தில் சேர்ந்ததில்லை என்று' என தங்க மீன்களைக் கொடுத்தார். அப்பாக்கள் நம் மீது வைக்கும் பாசம் அலாதியானது... ஆனால் அம்மாக்களைப் போல் அதை வெளிக்காட்டிக் கொள்வதில்லை என்பதே உண்மை.

பசங்க ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் அப்பாக்களிடம் இருந்து விலக ஆரம்பிக்கிறார்கள். பதின்ம வயது என்பது பசங்களின் நடை,உடை, பாவனைகளில் மாற்றம் தரும் வயது. அந்த வயதில் அப்பா எது கேட்டாலும் 'இவரு என்ன எதுக்கெடுத்தாலும் கேள்வி கேட்கிறார்' என்ற எண்ணம் தோன்ற ஆரம்பிக்கும் போது அப்பா மகனின் உறவில் விரிசல் விழுகிறது. இது நாளடையில் மிகப்பெரிய இடைவெளியைக் கொடுத்து விடுகிறது. என்ன வேண்டுமென்றாலும் அம்மாவிடம் சொல்லி பெற ஆரம்பிக்கும் போது அப்பாவின் பாசம் தாமரை இலை தண்ணீர் போல ஒட்டாமலேயே போய் விடுகிறது.

இயக்குநர் சமுத்திரகனி கையில் எடுத்திருக்கும் 'அப்பா', மூன்று வித்தியாசமான களங்களில் பயணித்து இன்றைய கல்வி முறையை, பணம் ஒன்றே குறிக்கோளாகத் திகழும் கல்வி நிலையங்களை நம் கண் முன்னே காட்சிகளாய் விரிக்கிறது. சமூகச் சாடல்கள் நிறைந்த இந்தப் படத்தை கபாலியை விரும்பிய அளவுக்கோ... கொண்டாடிய அளவுக்கோ... நாமும் அரசும் கண்டு கொள்ளாதது வேதனையான விஷயம்.

கல்வி மட்டுமே வாழ்க்கை அல்ல... உலகைப் புரிந்து வாழக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைக்கும் அப்பாவாக சமுத்திரகனி... குடிப்பது கூழாக இருந்தாலும் மற்றவர்களுக்கு முன்னால் பன்னீரில் வாய் கொப்பளிக்க வேண்டும் என்று நினைக்கும் மனைவி... 'நீயெல்லாம் நாட்டுக்கோழிடா' என்று சொல்லி வளர்க்கும் அப்பாவின் அன்பில் வளரும் மகன் (விக்னேஷ்).

தன்னோட கனவுகளை தன் மகன் மீது இறக்கி வைக்க ஆசைப்பட்டு அதற்காக அவனை தொந்தரவு செய்யும் அப்பாவாக தம்பி இராமையா... கணவன் செய்வது தவறுதான் என்றாலும் சொல்லப் பயந்து கொண்டு வாழும் மனைவி, அப்பாவின் கனவுகளைச் சுமக்கும் மகன் (ராகவ்).


'ஊரோடு ஒத்து வாழாதே... எதையுமே சந்தேகக் கண்ணோடு பாரு...' என்று சொல்லி மகனை வளர்க்கும் அப்பாவாக நமோ நாராயணன்... கணவனை எதிர்க்க நினைக்காத, விரும்பாத மனைவி, வீட்டில் அம்மா தவிர மற்றவர்கள் வெறுக்கும்  உருவத்தில் கூட வளர்ச்சி கிடைக்காத குட்டையன் (நசத்)

இவர்கள் மூவரின் கல்விப் பயணம் ஒரே பள்ளியில் ஒரே வகுப்பில் ஆரம்பிக்கிறது... மனைவியின் தொல்லை தாங்காமல் தனியார் பள்ளியில் அதிக பணம் கட்டி தன் பையனைச் சேர்க்கும் சமுத்திரகனி, பள்ளியில் தாஜ்மஹால் செய்து கொண்டு வர வேண்டும் என்று சொல்லும் போது மற்றவர்கள் பாய் கடையில் வாங்கிச் செல்ல, இது உனக்கான பணி... இதை நீயே செய்ய வேண்டும்... என்று சொல்லி அதற்கான பொருட்களை மட்டும் வாங்கி இரவெல்லாம் மகனை கண்விழித்து செய்ய வைத்து அனுப்புகிறார். ஆசிரியையோ ரொம்ப மோசம் என்று எழுதி அனுப்புகிறார். பெற்றோர் கலந்துரையாடலுக்கு வரும் சமுத்திரக்கனியிடம் பையனைப் பற்றி குறை கூற, அவர்கள் செய்யும் செயல்களை வெளுத்து வாங்கிவிட பையனுக்கு அங்கு இடமில்லை என மாற்றுச் சான்றிதழை கையில் கொடுத்து அனுப்பிவிடுகிறார்கள். இதன் காரணமான சண்டையில் மனைவி கோபித்துக் கொண்டு அம்மா வீடு செல்பவள் ஒரு கட்டத்தில் வக்கீல் நோட்டீசும் அனுப்புகிறாள். தன் வாழ்க்கை பிரச்சினைகள் ஒருபுறம் இருந்தாலும் தன் மகனுக்கு படிப்புடன் உலக அறிவையும் சேர்த்து வழங்கி அவனை நீச்சலில் கின்னஸ் சாதனை படைக்க வைத்து படிப்பில் வெற்றி பெற வைக்கிறார். அவனது அகராதியில் 'முடியாது' என்ற வார்த்தையே இல்லை என்பதாய் வளர்கிறான்.

நல்லாப் படிக்கும் மகனை தன் வெளிநாட்டுக் கனவினால் துரத்தும் தம்பி இராமையா.... பத்தாம் வகுப்பில் 599 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் முதல் மாணவனாக வந்த போதும் ஒரு மார்க்குக்காக மறுகூட்டல் போடப் போறேன் என்று சொல்வதும், பதினொன்றாம் வகுப்பில் மிகச் சிறந்தபள்ளியில் இடம் வாங்குவதுமாய் அவனை மிரட்டியே படிக்க வைப்பதால் எல்லாவற்றிக்கும் பயந்து பயந்து வளர்கிறான்.... கடைசியில் அவனது  முடிவும் நாம் பயந்த மாதிரியே ஆகிவிடுகிறது.

யாருக்கும் எதுவும் செய்யாதே... தனித்து இருக்கப் பழகிக் கொள் என்று சொல்லும் நமோ நாராயணனின் மகனோ வளராமல் குட்டையாகவே இருக்கிறான். வீட்டில் அக்கா கூட அவனை தம்பி என்று சொல்லத் தயங்குகிறாள். படிப்பில் ரொம்ப மோசம், பத்தாவது எழுத முடியாது என பள்ளித் தலைமை சொல்லிவிட, சமுத்திரக்கனி உதவியோடு தனது தனித்திறமையான எழுத்தாற்றலால் உயர்ந்து நிற்கிறான், மேலும் டுட்டோரியல் மூலமாகப் படித்து பத்தாவதும் பாஸாகி விடுகிறான்.

ஒரு பெண்ணைப் (கேபரில்லா) பார்த்ததும் தனக்கு வயிற்றுக்குள் என்னமோ பண்ணுது ஒண்ணுக்கு வருதுப்பா என்று சொல்லும் மகனுடன் பேருந்தில் பயணித்து அவளை வீட்டுக்கு அழைத்து வந்து காபி கொடுத்து இருவரையும் நண்பர்களாக்கும் சமுத்திரகனியும், தன் மகன் ரம்யாவுக்கு (யுவலெட்சுமி) லவ் லெட்டர் கொடுக்கப் போகும் போது பார்த்து அந்தப் பழியை அந்தப் பெண் மீது போட்டு நடு ரோட்டில் அவளை அடித்தது மட்டுமில்லாமல் அவள் வீட்டுக்கே சென்று பிரச்சினை செய்யும் தம்பி இராமையாயும் மாறுபட்ட அப்பாக்களை பிரதிபலித்திருக்கிறார்கள்.

அந்தப் பெண்களுடன் மூன்று பசங்களையும் நட்ப்பாகி தன் வீட்டில் படிக்க வைத்து அவர்களுக்கெல்லாம் அப்பாவாக உயர்ந்து நிற்கும் சமுத்திரகனி, தன் மாமனாருக்காக மனைவியின் செய்கைகளை பொறுத்துக் கொண்டு வாழப் பழகிவிடுகிறார். அப்பா வீட்டில் தனக்கான அதிகாரம் குறைந்து ஒரு ஜடமாக வாழும் மலர், தன்னைப் பார்க்க வரும் மகனுடன் மீண்டும் புகுந்த வீடு வருகிறார். அவரின் வருகையால் மீண்டும் பூகம்பங்கள் வெடிக்க நேரிடும் என்பதால் தன் தோழர் வீட்டில் போய் தங்க, அங்கும் பசங்களின் அட்டாகாசம் தொடர்கிறது. திருமணம் ஆகாமல் வாழும் அவரின் தோழருக்கு ரம்யாவின் அக்காவை கோர்த்து விடுகிறார்கள். தன் கணவன் மிகவும் நல்ல மனிதன் என்பதை உணர்ந்து சமுத்திரகனியை வீட்டுக்கு அழைக்கிறாள் மலர்.


தனியார் பள்ளிகள் மதிப்பெண்களை மட்டுமே குறிக்கோளாக வைத்து செயல்படுவதை படம் முழுக்கச் சாடியிருக்கிறார் இயக்குநர் சமுத்திரகனி. படத்தில் இந்த மூன்று குடும்பங்களுடன் அந்தப் பெண்களின் குடும்பம், 'கல்யாணத்தப்போ என்ன சொன்னாங்க' என்று அடிக்கடி வந்து செல்லும் குடும்பம் என கதையை மிக அழகாக நகர்த்தியிருக்கிறார். சமூகச் சாடல் அதிகம் இருந்தாலும் அதை பசங்களின் நகைச்சுவையுடன் சொல்லியிருப்பது சிறப்பு... படத்தில் எத்தனையோ வலி மிகுந்த காட்சிகள் இருந்தாலும் குட்டிப்பையன் புத்தக வெளியீட்டில் பேசும் இடத்திலும், சிங்கபெருமாள் இறந்ததை அறிந்து ரம்யா கதறும் இடத்திலும் நம்மை அறியாமல் நாம் அழுது கொண்டிருப்போம்... இதுவே இயக்குநரின் வெற்றி.

சொல்ல மறந்துட்டேனே சமுத்திரக்கனியின் நண்பர் இயக்குநர் சசிகுமார் , டாக்டராக வந்து தன் பங்குக்கு தனியார் பள்ளிகள் செய்யும் அட்டூழியங்களை பட்டியலிடுகிறார்...

சாதியை வைத்து படமெடுக்கும் இயக்குநர்கள் மத்தியில் இன்றைய சமூக பிரச்சினையை மையமாக்கி படமெடுக்க சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். அந்த வகையில் கல்வி வியாபாரத்தை காவியமாக்கிய இயக்குநர் சமுத்திரகனி போற்றுதலுக்கு உரியவர்.

சமுத்திரக்கனியின் மகனாக வரும் விக்னேஷின் வயசுக்கு மீறிய செயல்பாடுகள், சில சினிமாத்தனமான காட்சிகள் இருந்தாலும் நச்சென்ற வசனங்களாலும் சமுத்திரக்கனியின் நடிப்பாலும் தூக்கி நிறுத்தியிருக்கிறார்கள் அப்பாவை....

மொத்தத்தில் அப்பா - அப்பாக்களுக்கான படம் அல்ல... அம்மாக்கள் அனைவரும் பார்க்க வேண்டிய படம்.


-'பரிவை' சே.குமார்.

திங்கள், 22 ஆகஸ்ட், 2016

கவிதை : வாலிப நேசம்...


'என்ன பண்றே..?'
என்பதிலிருக்கிறது அன்பு...
'எப்படி இருக்கே..?'
என்பதிலிருக்கிறது நேசம்...

ஆண்டுகள் பல
கடந்த போதிலும்
கேட்கும் வார்த்தையில்
குளிர்ந்து கிடக்கிறது செவி...

எத்தனையோ ஆசைகள்
அத்தனையும் மூட்டைகட்டி...
தனித்தனியே குடும்ப
பாரத்தைச் சுமந்து கடந்தோம்...

எத்தனை திருவிழாக்கள்...
எத்தனை திருமணங்கள்...
எத்தனை இறப்புக்கள்...
எத்தனை பிறப்புக்கள்...

காணும் போதெல்லாம்...
சின்னப் புன்னகையும்
சிதறாத வார்த்தையுமாய்
கடந்து போனது காலம்...

கிழப் பருவமெய்தி... 
நடை தளர்ந்து...
கம்பூன்றி... 
கடக்கும் போதும்...

நேசமாய் சிரித்து
வாஞ்சையாய் கேட்டுக்
கடக்கிறேன்... கடக்கிறாய்...
கடக்கிறோம்...
ஆரம்ப வரிகளை....

அதில் தெறிக்கும்
அன்பில் தொக்கி நிற்கிறது
வாலிப நேசம் இன்னும்
வயதாகாமல்...
-'பரிவை' சே.குமார்.

(குறிப்பு :  மன்னிக்க வேண்டும் நண்பர்களே... தொடர்கதை ஒரு சில காரணங்களால் மீண்டும்  நிறுத்தப்படுகிறது.... ஒரு வேளை புத்தகமாக்கும் பட்சத்தில்(!) மீண்டும் வாசிக்கலாம்... இனி கதைகள் தவிர்த்து மற்றவை மட்டுமே  இங்கு பகிரப்படும் - நன்றி. )

சனி, 20 ஆகஸ்ட், 2016

தொடர்கதை : நெருஞ்சியும் குறிஞ்சியும் (பகுதி-17)

முந்தைய பகுதிகள்:
           பகுதி-1       பகுதி-2         பகுதி-3            பகுதி-4        பகுதி-5          பகுதி-6           பகுதி-7    


“என்னப்பா... ஏதோ முக்கியமான வெசயம் பேசணுன்னு சொன்னே... காலயிலயிருந்து நீ பேசுவே... பேசுவேன்னு பாக்குறேன்... ஒண்ணுமே பேசல... என்னப்பா... என்ன வெசயம்...?” வாசலில் அமர்ந்திருந்த மகனிடம் கேட்டபடியே எதிரே கிடந்த கட்டிலில் அமர்ந்து வெற்றிலையை கையில் எடுத்தார் வேலாயுதம்.

“அதுப்பா... முதல்ல வெத்தலை போடுங்க... சொல்றேன்...  கோழி ரசம் அம்மா நல்லா சுள்ளுன்னு வச்சிருக்கு... ரொம்ப நாளாச்சு இப்படி ரசம் குடிச்சி....  அந்த வெத்தலையை இங்கிட்டு கொடுங்க... ”

“ஒங்கம்மா சமையல் ருசியே தனிதானே... ஏம்ப்பா என்னமோ பேசணுமின்னே.... பேசாம இருக்கே... வேலயில எதுனாச்சும் பிரச்சினையா... இல்ல குடும்பத்துல...”

“அதெல்லாம் இல்லப்பா... அது வந்து... அது வந்து...” மெல்ல இழுத்தான் சரவணன்.

“இங்க பாருப்பா... நீ சின்னப்பிள்ள இல்ல... தோளுக்கு மேல வளந்துட்டா பிள்ளயக்கூட  தோழனாத்தான் பாக்கணும்பாங்க... எதுக்கு தயங்குறே... எதுவாயிருந்தாலும் சொல்லு...”

“அப்பா... நான் உங்ககிட்ட அண்ணனைப் பார்த்தேன்... ஆனா அவனுக்கிட்ட பேசலைன்னு சொன்னேனே ஞாபகமிருக்கா...?”

“ம்....” என்று யோசித்தவர் “ஆமா... சொன்னே... நாங்கூட புள்ளக நம்ம ஜாடையில இருக்கான்னு கேட்டுத் தொலைச்சேனே.... அதுக்கென்ன இப்போ...”

“இல்லப்பா.... அன்னைக்கி நான் அவனுக்கிட்ட பேசினேன்...”

“பேசுனியா...? அவன் நம்ம குடும்பத்தை கேவலப்படுத்திட்டுப் போனவன்... பேசிட்டு எங்கிட்ட பேசலைன்னு வேற சொன்னேயில்ல... எம்புட்டு நாளாத் தொடருது இது... அப்பனை விட... நாம பட்ட அவமானத்தைவிட… அவன் ஒனக்கு பெரிசாப் பொயிட்டானா... அவனுக்கு தம்பிதானே நீ...” கையிலிருந்த சுண்ணாம்பு டப்பாவை தூக்கி எறிந்தபடி கத்திப் பேசினார்.

அவர் கத்தவும் சவுந்தரமும் சாரதாவும் வேகமாக வாசலுக்கு வந்தார்கள். ப்ரீத்தி ‘என்னமோ சண்டை’ என்று நினைத்தபடி அங்கு வர பயந்து கொண்டு டிவி முன்னால் படுத்திருந்தாள்.

“இந்தாங்க... இப்ப எதுக்கு கத்துறிய... ஊரே அடங்கிருச்சு... அப்பனுக்கும் மகனுக்கும் பேச நேரங் கிடைக்கலையாக்கும்... ஏன்டா நீ என்னடா சொன்னே.... வாயை வச்சிக்கிட்டு சும்மா இருக்கமாட்டியடா.... உங்கக்கா வந்தாலும் எதாச்சும் சொல்லி வாங்கிக் கட்டிப்பா... நீயும் அதையே பண்ணு...”

“என்னம்மா பெரிசாச் சொல்லிட்டேன்... அண்ணனைப் பார்த்தேன்... பேசுனேன்னு சொன்னேன்... அதுக்குத்தான் தூக்கிப் போட்டு உதைக்கிறாரு...” அவனும் பதிலுக்குக்  கத்தினான்.

“கத்தாம பேசுங்கடா... ஏன்டா... ஏங்க கொஞ்சம் பொறுமையாக் கேளுங்க... வாள் வாள்ன்னு கத்துறதை நிப்பாட்டுங்க... பாத்தேன்... பேசுனேன்னுதானே சொன்னான்... இங்க கூட்டியாறேன்னு சொல்லலையே..?”

“அன்னைக்கு மறைச்சிட்டு இன்னைக்கி பேச வாராண்டி... அடுத்து கூட்டியாறேம்பான்...” மீண்டும் கத்தினார்.

“நீங்களா முடிவு பண்ணாதீங்க... அவன் முதல்ல என்ன சொல்ல வர்றான்னு கேளுங்க... கத்துறதால என்ன லாபம்... மூத்தவனை நீ பாத்துப் பேசினியா...?”

“அம்மா... அவனைப் பாக்கணுமின்னு போகலை... ஒரு கல்யாணத்துல பாத்தேன்... அண்ணி, குழந்தைகளையும் பாத்தேன்...”

“நொண்ணி... ஓடுகாலி முண்ட... நொண்ணியாம் நொண்ணி...” வேலாயுதம் குமுறினார்.

“சத்த இருங்களேன்...”

“அம்மா அவனுக்கு நம்ம கூட சேரணும்ன்னு ஆசைம்மா... பிள்ளைங்க தங்க விக்கிரகம் மாதிரி இருக்குக... அண்ணிக்கு என்னம்மா குறைச்சல்.... அந்த லட்சுமியே நேர்ல வந்த மாதிரி இருக்காங்க... என்னம்மா ஊருல உலகத்துல இல்லாத்தை அவன் செஞ்சிட்டான்.... சும்மா கத்துறாரு... எங்க பாட்டையா பாட்டிய சிறை எடுத்தாந்து கட்டிக்கிட்டாராம்ன்னு பெருமை பேசுவாரு....”

“அவரு வேற சாதிக்காரியைச் செற எடுக்கல.... நம்மள்ல விளஞ்சவளைத்தான் செற எடுத்தாரு... இப்ப அவன் பேச்சை இங்க யாரும் பேசிக்கிட்டு இருக்க வேண்டாம்... அவன் வேணுமின்னா எங்கயோ போயி  நல்லாப் போசிக்கங்க.... ஆனா இங்க வராதீக...” என்று வேலாயுதம் எழுந்தார்.

“அப்பா... இந்த விஷயத்துக்கு ஒரு முடிவு தெரியாம நான் விடப்போறதில்லை... எந்திரிச்சிப் போறதால இது இத்தோட முடியாது... உக்காருங்க... நான் உங்ககிட்ட பேசணும்... இப்பத்தானே சொன்னீங்க... வளந்த பிள்ளை தோழன்னு... அப்புறம் என்ன... உக்காருங்க...” சரவணன் கோபமாகப் பேச வேலாயுதம் வேண்டாவெறுப்பாக உட்கார்ந்தார்.... ‘ஏப்பா... அண்ணன் நல்லாயிருக்கானா?” என்று சாரதா கேட்க, வேலாயுதத்தின் கண்கள் அக்னியை கக்கின.

'தன்னைக்கான கண்ணண்ணன் எதற்காக வாறேன்னு சொன்னுச்சு... அதுவும் முக்கியமாப் பேசணும்ன்னு வேற சொல்லியிருக்கு' என்று நினைத்துக் குழம்பிய அபி, தன் தோழிகளிடம் ‘கண்ணண்ணா அப்படி என்ன முக்கியமான விஷயம் எங்கிட்ட பேசணும்...? அதுவும் ஸ்கூல் முடிஞ்சதும் பாக்கணுமாம்...’ என்று புலம்ப, ‘போச்சுடி... நீங்க அண்ணா... அண்ணான்னு அத்தானைத்தானே கூப்பிடுவீங்க... ஒருவேளை உனக்கு பிராக்கெட் போடுறாரோ... என்னவோ...’ என்று தோழிகள் கிண்டல் பண்ண, ‘சீ... வாயைக் கழுவுங்கடி... எங்க சாரதியை விட எம்மேல அதிகம் பாசம் வச்சிருக்கது கண்ணண்ணன்... அதுக்கு வேற ஏதோ பிரச்சினை... எங்கண்ணனை தப்பாப் பேசாதீங்க...’ என்று அவர்களின் வாயை அடைத்தாலும் ‘என்னவா இருக்கும்?’ என்ற சிந்தனையே அவளுக்கு மேலோங்கியிருந்தது.

மாலை பள்ளி விட்டு வெளியில் வரும்போது கண்ணன் அவளுக்காக காத்திருந்தான்.

“சாரதி... உங்கிட்ட நான் கொஞ்சம் பேசணும்...?” என சாரதிக்கு முன்னால் வந்து அமர்ந்தாள் சுபஸ்ரீ.

“என்னடி... புதுசா எங்கிட்ட பேசணுன்னு வர்றே...? என்ன எனக்கு ஆத்துக்காரி ஆக சம்மதமா?” கிண்டலாகக் கேட்டான் சாரதி.

“விளையாட்டு வேண்டாம்... உங்கிட்ட தனியாப் பேசணும்... என்னோட வாழ்க்கையைப் பற்றிப் பேசணும்... “

“சரி பேசு...”

“இங்க வேண்டாம்... தனியா வெளிய போயிறலாமே...”

“என்னடி... உன்னோட நடவடிக்கை வித்தியாசமா இருக்கு...  தனியாப் பேச என்ன இருக்கு... “

“இருக்கு... நாம கோயில் பிரகாரத்துல உக்காந்து பேசலாமா...? இந்த நேரத்துல கூட்டம் அதிகமிருக்காது... டிஸ்டர்பன்ஸ் இருக்காது... யாரும் தப்பா நினைக்கமாட்டா..”

“எங்க வேணான்னும் உக்காந்து பேசலாம்... பாக்குறவாளுக்கு என்ன சந்தேகமா வரப்போகுது... என்னைக்கு இருந்தாலும் உன்னைத்தான் எனக்கு கட்டி வைக்கப் போறான்னு ஊருக்கே தெரியும்... பின்ன என்ன...”

“ம்... ஆமா... ஆமா... அந்த பெருமாள் கூட அப்படித்தான் நினைச்சிண்டிருக்காராம்... மூஞ்சைப் பாரு... ஊருக்குத் தெரியுறது அப்புறம்... உனக்கு தெரிய வேண்டியது இருக்கு... வா...” என்றபடி அவள் முன்னே போக, ‘இவ அப்படி என்ன முக்கியமாப் பேசப் போறாள்?’ என்ற எண்ணத்தோடு சாரதி அவள் பின்னே நடந்தான்.

படம் இணையத்திலிருந்து - ஓவியருக்கு நன்றி.
                                                                                                           
 (அடுத்த சனிக்கிழமை தொடரும்...) 
-‘பரிவை’ சே..குமார்.

வெள்ளி, 19 ஆகஸ்ட், 2016

நெருஞ்சியும் குறிஞ்சியும் - ஞாபகப் பார்வை

லையாத கனவுகளில் ஆரம்பித்து வேரும் விழுதுகளும்... கொலையாளி யார்? என்ற தொடர்களை எழுதி நெருஞ்சியும் குறிஞ்சியும் ஆரம்பித்து (அட நானும் நாலு தொடர்கதை எழுதிட்டேனா... என்னமோ கிறுக்கி... எப்படியோ நகர்த்தி... ஆச்சர்யம்தான்) 16 பகுதிகள் வரை நகர்த்திய போது விடுமுறையில் ஊருக்குச் சென்றதால் அதை அதற்கு மேல் தொடர வாய்ப்பில்லாமல் போனது... ஊரிலிருந்து வந்த பின்னும் அதனைத் தொடர்ந்து எழுதும் எண்ணம் ஏனோ எழவில்லை. ஒரு வழியாக எண்ணத்துக்கு எண்ணெய் இட்டு அதில் திரி போட்டு மெல்ல எரிய விட்டு... நாளை முதல் மீண்டும் தொடரலாம் என்ற எண்ணம் சுடர் விட ஆரம்பித்துவிட்டது.

கதையை நானே மறந்துட்டேன்... அப்ப படித்த நீங்களும் மறந்திருப்பீங்கதானே... கொஞ்சம் ஞாபகப்படுத்திகலாமே என்றுதான் இந்த ஞாபகப் பார்வை... 


ஆரம்பம் முதலே கதை இரு வேறு களத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது... 

நெருஞ்சியாக கிராமத்து மனிதர் வேலாயுதம்... முழுக்க முழுக்க சாதிக்குள் ஐக்கியமாக்கிக் கொண்ட மனிதர்... சாதி... சாதி... என்று ஊருக்குள் வம்பை கூட்டிக் கொண்டு வருபவர்... தன்னை மீறி திருமணம் செய்து கொண்ட மகனை வெட்டிப் போட்டாலும் போடுவேனே ஒழிய குடும்பத்தோடு சேர்க்கமாட்டேன் என்ற பிடிவாதக் கொள்கை உடையவர்.மைத்துனர் முறையான பக்கத்து வீட்டு பஞ்சநாதன் மூத்தவனை சேர்ப்பதில் என்ன பிடிவாதம் என்று அடிக்கடி கேட்பதுண்டு.. அவருக்கான பதிலாக அவர் சொல்வது நாஞ் செத்தாலும் அவன் இங்க வரக்கூடாது என்றும் என்னோட சாவுக்கு அப்புறம் வேணுமின்னா அவனோட எல்லாரும் சேர்ந்துக்கட்டும் என்று சொல்வார்... சாதி வெறி பிடித்த வைராக்கியமான மனிதர்.

குறிஞ்சியாக கண்ணன்.... கல்லூரியில் படிக்கும் கண்ணன் தனது நண்பன் பார்த்த சாரதி வீட்டுக்கு மற்ற நண்பர்களுடன் போகிறான். அங்கு அவனின் அத்தை மகளும், அவனுக்குத்தான் கட்ட வேண்டும் என்று முடிவு செய்து வைத்திருப்பவளுமான சுபஸ்ரீயை சந்திக்க நேரிடுகிறது. இருவருக்குமான நட்பு தொடர்ந்து ஒரு கட்டத்தில் காதலாக மாறுகிறது. கண்ணனின் நண்பன் அம்பேத்கார் இது நட்புக்குச் செய்யும் துரோகம் என்று எடுத்துச் சொன்னாலும்... வீட்டில் முடிவு பண்ணி வைத்திருந்தால் போதுமா... என்னோட மனசுல என்ன இருக்குன்னு கேட்பாங்கதானே... பார்த்தாவை எனக்கு ரொம்பப் பிடிக்கும்... ஆனா அவனை மேரேஜ் எல்லாம் பண்ணிக்க முடியாது... எனக்கு உன்னைத்தான் பிடிச்சிருக்கு என்று அவனைத் துரத்த, கண்ணன் அவள் மீது காதலாகிறான்.

இப்படிப் பயணிக்கும் கதையில் வீட்டில் மூத்தவனை சேர்க்க வேண்டும் என இளையவன் தனது அக்கா கணவரிடம் பேச, அவரோ உங்கப்பா சாதி.. சாதியின்னு பேசுவாரு... நான் எதாவது பேசப்போயி ரெண்டு பேரும் சண்டை போட்டுக்கிற சூழல் வரும். நீயே பேசு மாப்ள... அவரு இறங்கி வந்தால் நான் வர்றேன் என்று சொல்லிவிட, அப்பாவிடம் பேசுவதற்காக வார விடுமுறையில் கிராமத்துக்கு குடும்பத்துடன் போகலாம் என்று முடிவு செய்கிறான்.

சுபஸ்ரீக்கும் சாரதிக்கும் திருமணம் பற்றி வீட்டில் பேச்சு எழ,  தங்கள் காதலை சாரதி வீட்டில் சொல்லி முதலில் சம்மதம் வாங்குவதென்றும் அதன் பின்னர் கண்ணன் வீட்டில் பேசலாம் என்றும் முடிவு செய்து கண்ணனும் சுபஸ்ரீயும் தனித்தனியாக ஒரு நம்பிக்கையான ஆளிடம் பேச நினைத்து அதற்கான சந்தர்ப்பத்துக்காக காத்திருக்கிறார்கள்.

குறிஞ்சியில் கடைசியாக....

சில மாதங்களுப்பிறகு... சாரதிக்கும் சுபஸ்ரீக்கும் திருமணத்தை முடித்து விடலாம் என்றும் அதன் பின் அவள் தன் படிப்பைத் தொடரட்டும் என்றும் வீட்டில் முடிவு செய்த விவரத்தை கண்ணனிடம் சொல்லி, இனி பேசாமல் இருந்தால் சரி வராது என்று சொன்ன சுபஸ்ரீயிடம் யாரிடம் பேசுவது..? எப்படிப் பேசுவது..? என்றெல்லாம் பேசி முடிவு செய்தான் கண்ணன்.

அந்த நாளும் வந்தது.

நெருஞ்சியில் கடைசியாக....

கட்டிலில் வந்து அமர்ந்தவர் ‘முக்கியமான விஷயமா..? என்னவா இருக்கும்...? வயவரப்பை அவன் பேர்ல எழுதச் சொல்லப் போறானா...? இல்ல ரோட்டோரமாக் கெடக்க மேட்டு நாத்தங்கால்ல வீடு கட்டலாமான்னு கேக்கப் போறானா...?  என்னவா இருக்கும்...’ என்று யோசித்தவர் மனைவியிடம் “ஏலா உங்கிட்ட எதுவும் சொன்னானா...” எனக் கேட்டார்

“ஆமா... அப்பன் புள்ளைக்கிட்ட ஆயிரம் இருக்கும்... எல்லாத்தையும் எங்கிட்டயா சொல்றீங்க...? அதான் வந்து பேசுறேன்னு சொல்லியிருக்கானுல்ல... வரட்டும்...” என்றபடி வெற்றிலையை மெல்ல ஆரம்பித்தாள்.

இதுவரைக்கும் கதை 16 பகுதிகளாக வளர்ந்து வந்திருந்தது... நாளை முதல் மீண்டும் தொடர்கிறேன்.... நீங்களும் தொடருங்கள் நண்பரே... கதை குறித்த தங்கள் கருத்துக்களைத் தெரிவியுங்கள்...

நன்றி.
-'பரிவை' சே.குமார்.

வியாழன், 18 ஆகஸ்ட், 2016

பொன்னியின் செல்வன் ஆனந்தம்...

டந்த பத்து நாளாக பெரும்பாலான நேரத்தை பொன்னியின் செல்வனில் புதைக்க நேர்ந்தது. அலுவலகத்திலும் பணி இல்லாத சூழல் இதற்கு அதிக நேரத்தை ஒதுக்கிக் கொடுத்தது. வலைத்தளத்திலோ முகநூலிலோ அதிக நேரம் மூழ்க்கிக் கிடப்பதை ஒரு வாசிப்பனுபவம் தன்னுள்ளே ஈர்த்துக் கொண்டது. வாசிக்க வாசிக்க அந்தக் காதாபாத்திரங்களின் பின்னே பயணிக்க வைத்தது.

படிக்கும் காலத்தில் க்ரைம் நாவல், பாக்கெட் நாவல், குமுதம், ஆனந்த விகடன், ராணி என புத்தகங்களின் பின்னால அலைந்தவன் நான். இதில் ராணி மட்டுமே எங்கள் வீட்டில் வாங்குவதுண்டு... மற்ற புத்தகங்களை அள்ளி வர அடிக்கடி எங்க சின்னம்மா வீட்டுக்குச் செல்வதுண்டு. அங்கு எல்லாப் புத்தகமும் வாங்குவார்கள். பை நிறைய அள்ளி வந்து இடைவெளி விடாது வாசிப்பதுண்டு.

கல்லூரியில் படிக்கும் போது கதைகள், கவிதைகள் பத்திரிக்கைகளில் வர ஆரம்பித்த சமயம் உதயம், சுபமங்களா, தாமரை, செம்மலர், பாக்யா என வாசிக்க ஆரம்பித்திருந்தோம்... முதல் கவிதை தாமரையில் வெளிவந்து பொன்னீலன் ஐயாவின் தனிப்பட்ட கடிதத்தையும் அவரின் நேரடியான பெருமையும் உண்டு. அப்போதுதான் எங்கள் ஐயா. முனைவர் மு.பழனி இராகுலதாசன் அவர்கள் மார்க்ஸையும் எங்கெல்ஸையும் வாசிக்க வைத்தார். சுஜாதாவும் கி.ராஜநாரயணனும் கவிஞர் மீராவும் ஜெயகாந்தனும் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிக்க ஆரம்பித்த காலம் அது. ஐயா வீட்டில் நிறைந்து கிடக்கும் புத்தகங்களில் எதை வேண்டுமானாலும் எடுத்துப் படிக்கலாம். எந்தப் புத்தகத்தையும் தொடுவதற்கு தடை இல்லை... இன்றும் அப்படித்தான்... இன்னும் அந்த வீட்டில் மகனாய் தொடர்வதும் ஒரு சந்தோஷமே.

சென்னையில் இருக்கும் போது பத்திரிக்கைப் பணி என்பதால் வாசிப்பு கைகூடி இருந்தது... இங்கு வந்த பின்னர் வாசிப்பிற்கு பூட்டுப் போடும்படி ஆகிவிட்டது. பெரும்பாலான நேரத்தை இணையம் எடுத்துக் கொண்டது... ஊருக்குப் பேசிய நேரம் போக மற்ற நேரத்தில் எல்லாம் எழுத்தும் இணையமுமே என்னோடு இணைந்திருந்தது. நிறையக் கதைகள் எழுதும் வாய்ப்பும் அமைந்தது. தொடர்கதைகள் எழுதவும் முடிந்தது... கவிதைகளும் கிறுக்க முடிந்தது.... கல்லூரியில் படிக்கும் போது 2000க்கும் மேல் கிறுக்கிய ஹைக்கூக்களை இந்த எட்டு வருடத்தில் என்னால் அதிகம் எழுத முடியவில்லை... அது ஏனென்றே தெரியவில்லை... இங்கு வந்தபின் எழுதிய ஹைக்கூக்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். வாசிப்பு என்பதும் அடியோடு போச்சு. அதை நானும் மறந்தாச்சு.

அப்படியான சூழலில் குடந்தை சரவண அண்ணன் 'இளமை எழுதும் கவிதை நீ' என்ற அவரின் முதல் நாவலை எனக்கு அனுப்பித்தந்தார். அதுதான் நீண்ட நாளைக்குப் பிறகு எனது வாசிப்பாய்... அதன் பின்னர் கில்லர்ஜி அண்ணா கொடுத்த முத்துநிலவன் ஐயாவின் புத்தகங்கள், ஜியெம்பி ஐயாவின் புத்தகம், கோவை ஆவியின் கவிதை, திரு. இறையன்பு அவர்களின் கட்டுரைகள், அன்பின் கனவுப்பிரியன் அவர்கள் கொடுத்த அவரின் முதல் சிறுகதைத் தொகுப்பு,  அதன் பின்னர் அகல் சிறுகதைப் போட்டியில் பெற்ற பரிசுக்காக நண்பர் சத்யா அவர்கள் அனுப்பிய அ.முத்துலிங்கம் அவர்களின் நாவலும் சிறுகதையும் என கொஞ்சம் கொஞ்சம் வாசிக்கும் சந்தர்ப்பம் வாய்த்தது.

சில நாட்களுக்கு முன்னர் நண்பர் தமிழ்வாசி 'பொன்னியின் செல்வன்' வாசிப்பதைக் குறித்தும் அதற்கான இணைப்பையும் முகநூலில் பதிந்திருந்தார். பொன்னியின் செல்வன் வாசிக்க வேண்டும் என்பது நீண்டகால ஆவல்... ஆனால் அதற்கான நேரமும் காலமும் அமையவில்லை என்பதைவிட முயற்சி எதுவும் எடுக்கவில்லை என்பதே உண்மை. சரி முதல் பகுதியைத் தரவிறக்கம் செய்து வாசித்துப் பார்க்கலாம் என்று நினைத்து தரவிறக்கி செல்போனில் ஏற்றிக் கொண்டேன்.

வரலாறுகளைப் படிப்பதில் எப்பவும் கொஞ்சம் அதிகமான ஆர்வம் உண்டு... வரலாற்றுப் புதினம் என்றதும் மனசும் அதை ரசித்து வாசிக்க ஆவலாய் இருந்தது. வாசிக்க ஆரம்பித்த போது தொடர்ந்து வாசிப்போமா என்ற எண்ணமே எழுந்தது. வீரநாராயணன் ஏரிக்கரையில் வந்தியத்தேவன் குதிரையில் வரும் போது அவனின் பின்னே பயணிக்க ஆரம்பித்த மனசு, கொஞ்சம் கொஞ்சமாய் பொன்னியின் செல்வனுக்கு அடிமையாகிவிட்டது.

திரு.கல்கி அவர்கள் தனது பேனாவில் மை ஊற்றுவதற்குப் பதில் இலக்கியத்தை ஊற்றி எழுதியிருப்பாரோ என்று நினைக்கும் அளவுக்கு கதை நெடுகிலும் வர்ணனைகளில் திகட்டத் திகட்ட இலக்கிய ரசம்... வாசிக்க வாசிக்க மனசுக்குள் ஒரு பேரானந்தம்... தொடர்ந்து வாசித்து முடிக்கும் ஆவல் மனசுக்குள் ஆர்ப்பரித்தது. வந்தியத்தேவன் ஒவ்வொருவராய் சந்திக்கும் போதும் வரும் பிரச்சினைகளும் அதற்கான தீர்வுகளுமாய் பயணப்படும் கதை நம்மையும் அவர்களோடு இழுத்துச் செல்கிறது.

மிகச் சிறந்த வாசிப்பு அனுபவம்... நீண்டநாள் ஆசை நிறைவேறிய சந்தோஷம்... இனித் தொடர்ந்து ஏதேனும் ஒரு நாவலை தரவிறக்கம் செய்து வாசிக்க வேண்டும் என்ற எண்ணத்தை விதைத்ததொரு வாசிப்பு... நேரம் கிடைக்கும் போதெல்லாம் செல்போனைத் தூக்கச் செய்தது ஆசிரியர் அமரர் கல்கியின் எழுத்து. இவ்வளவு பெரிய வரலாற்றுப் புதினத்தை (அவரின் முடிவுரையில் மூன்றரை வருடங்கள் தொடராய் வந்ததாய்ச் சொல்லியிருக்கிறார்) சற்றும் தொய்வில்லாமல்... கதாபாத்திரங்களை அதிகரிக்கவோ குறைக்கவோ செய்யாமல்... பொன்னி நதியோடும் காவிரியோடும் பயணிக்க வைத்து இன்னும் தொடராதா என ஏங்க வைக்க எப்படி முடிந்தது என்ற ஆச்சர்யம் என்னுள்ளே பரவிக்கிடக்கிறது. ஒரு சிறுகதையைக் கூட மிகச் சிறப்பாக எழுத முடியாத நம் முன்னே ஒரு சமுத்திரத்தையே மிக அழகாக கையாண்டிருக்கிறாரே என்ற சந்தோஷமும் கூடி நிற்கிறது... எழுத்து ஒரு வரம்... அது எல்லாருக்கும் வாய்ப்பதில்லை... அந்த வரம் திரு.கல்கி அவர்களுக்கு அதிகமாகவே கிடைத்திருக்கிறது... அதனாலேயே மிக அழகான எழுத்தை வாசிக்கும் சந்தர்ப்பம் நமக்கும் அமைந்திருக்கிறது.

பொன்னியின் செல்வனோ, இளைய பிராட்டி குந்தவை நாச்சியாரோ, வானதியோ, பூங்குழலியோ, ஆழ்வார்க்கடியானோ, கரிகாலனோ, நந்தினியோ, பழுவேட்டையர்களோ, மதுராந்தகனோ, சேந்தன் அமுதனோ, ரவிதாசனோ, பல்லவ பார்த்திபேந்திரனோ, கந்தமாறனோ, அநிருத்த பிரம்மராயரோ, சுந்தரச்சோழரோ, ஊமைராணியோ, செம்பியன் மாதேவியோ என் எண்ணத்தை ஆக்கிரமிக்கவில்லை... கதை முழுவதும் முரடனாய்... பொய் பேசுபவனாய்... அடுத்தவருக்கு உதவுபவனாய்... விளையாட்டுப் பிள்ளையாய் வரும் வந்தியத்தேவனே என்னுள்ளே குடி கொண்டிருந்தான்... அவன் பின்னேதான் கதை முழுவதும் நான் பயணித்துக் கொண்டிருந்தேன்... முழுக்க முழுக்க அந்த முரட்டு வீரனே நிரம்பியிருந்தான். ஆனால்...?

கதையின் இறுதிப் பகுதியில் பயணிக்கும் போது ரொம்ப அதிகம் பயணப்படாவிட்டாலும் கொஞ்ச நேரமே கதையில் பயணித்து சித்தம் கலங்கிப் போனவள் காணாமாலே போய்விட்டாளே ஒருவேளை ஆசிரியர் அவள் தேவையில்லை என்று விட்டு விட்டாரா என்ற சிந்தனையோடு கதையின் முடிவுக்கு வந்தபோது... மீண்டும் அவளைக் கொண்டு வந்து அவளோடு முடித்திருக்கிறார் ஆசிரியர்... முடிவு கஷ்டமாக இருந்தாலும் இப்படித்தான் நடக்க வேண்டும் என்று இருக்கும் போது அப்படித்தானே முடிக்க வேண்டும்... ஆம்...என்னுள்ளே வந்தியத்தேவனையும் பின்னுக்குத் தள்ளி முன்னே நின்றவள்.... சம்புவராயரின் செல்லப்புதல்வியும்... கந்தமாறனின் அன்புத் தங்கையுமான... வந்தியத்தேவனை மனதில் நிறைத்து வைத்திருந்த...  மணிமேகலை.

கதை வாசித்தவர்களில் பலருக்கு இவளைப் பிடித்திருக்கலாம்... இனி வாசிப்போரும் கதையை வாசித்து முடிக்கும் போது இவள் பிடித்துப் போகலாம். 

சொல்ல மறந்துட்டேனே... பொன்னியின் செல்வனை வாசிக்கும் போது இளையராஜாவின் கானங்களை கேட்டுக் கொண்டே வாசிப்பதில் கூட ஒரு ஏகாந்தம் இருக்கத்தான் செய்கிறது. எனக்கு ஒரு கெட்டபழக்கம்... படிக்கும் காலத்தில் இருந்தே இது உண்டு... படிக்கும் போதோ எழுதும் போதே ரேடியோவோ... டேப்ரெக்கார்டரோ... டிவியோ ஓடிக் கொண்டிருக்க வேண்டும்... அது இப்போது அப்படியே.. எழுதும் போதும்.... படிக்கும் போதும்... ஏன் அலுவலகத்தில் வேலை செய்யும் போதும் என் கணிப்பொறியில் சேமித்து வைத்திருக்கும் இளையராஜாவின் பாடல்களை கேட்டுக் கொண்டுத்தான் செய்வேன். இப்போது ஸ்ருதியும் அப்படியே... டிவி ஓடிக்கொண்டிருந்தால்தான் எழுதவும் படிக்கவும் செய்கிறார்.... :) 

பொன்னியின் செல்வன் வாசிப்பும் பாடல்கள் கேட்டபடியே.... ரொம்ப நிறைவாய் இருந்தது. புத்தகமாய் கிடைக்கும் சந்தர்ப்பத்தில் மீண்டும் ஒருமுறை வாசிக்க வேண்டும், ஒவ்வொரு காட்சியையும் மெல்ல மெல்ல உள்வாங்கிக் கொண்டு இன்னும் நிதானமாக... 
-'பரிவை' சே.குமார்.

செவ்வாய், 16 ஆகஸ்ட், 2016

மனசு பேசுகிறது : எங்கே போகிறோம்..?

நாம் எப்படிப்பட்ட பாதையில் பயணிக்க ஆரம்பித்திருக்கிறோம் என்று நினைக்கும்போது வெட்கக்கேடாகவும் வேதனையாகவும் இருக்கிறது. சில வருடங்களுக்கு முன்பு வரை ஒருவருக்கு ஒருவர் உதவி மனப்பான்மையோடு மட்டுமில்லாமல் ஆபத்தில் கை கொடுத்தும்... சந்தோஷத்தில் பங்கெடுத்தும் வாழ்ந்தோம், ஆனால் தற்போது எல்லாம் மாறிவிட்டது... இன்றைய நிலையில் நம் கையிலிருக்கும் அந்தச் சிறிய சாதனமே உலகமாகிவிட்டது... மனிதனின் மனதை அடியோடு மாறச் செய்த அந்த சாதனம் - செல்போன்.

இறந்து கிடப்பவன் 41 வயதுக்காரன்...

உலகம் அறியாத இரண்டு குழந்தைகளின் தந்தை...

ஒன்பது மாதக் குழந்தையை பார்க்கும் போதெல்லாம் கண்கள் தழும்புகிறது...

அப்படிப்பட்டவனின் இறப்பில் எத்தனையோ குறைகளைச் சொல்கிறோம்... இறந்தவனின் ஆத்ம சாந்திக்காகவும் அவனின் இளம் மனைவி, குழந்தைகளின் வாழ்க்கைகாகவும் பிரார்த்திக்க வேண்டிய மனது அவன் குடியால் இறந்தான் என்றும் தன்னைப் பற்றி கவலைப்படாததால் இறந்தான் எனவும் சொல்கிறது... அதைப் பற்றி முகநூல் என்னும் கொலைக்களத்தில் பக்கம் பக்கமாய் எழுதுகிறார்கள்... ஏதோ இவர்கள் பக்கத்தில் இருந்து பார்த்ததைப் போல... ஆனந்த யாழை அவனுக்காக மீட்ட வேண்டாம்... அவன் இறந்து கிடந்த அந்த நாளில் அதை உடைத்து அடுப்பில் வைப்பதில் அப்படி என்ன ஒரு ஆனந்தம்..? இது ஆனந்தமல்ல... மனக் கொடூரம்... ஏதோ உலகுக்கு உண்மையைச் சொன்னதாய் ஒரு இறுமாப்பு... இங்கு எவனும் வாழ்ந்து கொண்டிருக்கப் போவதில்லை... பிறக்கும் போதே எல்லாருக்கும் இறப்பையும் எழுதித்தான் வைத்திருக்கிறான்... அது எப்படி வரும் என்பதை அறிந்து கொள்ள முடியாத நிலையில்தான் வைத்திருக்கிறான் என்பதை நாம் மறந்துவிட்டு ஒருவனின் இறப்பைக் குறித்து எழுதித் தள்ளுகிறோம்.

சரி எங்கே போகிறோம்...? என்ற தலைப்பிற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்று நினைக்கலாம்... செல்பேசியில் ஆரம்பித்து கோபத்தீயில் நுழையவது ஏன் என்று நினைக்கலாம். இறந்தவரைப் பற்றி வாய்க்கு வந்தபடி அள்ளிவிடும் நம் செயல்கள் மீது கோபம் கோபமாக வருகிறது...  எதற்காக இந்த செய்கை... அபரீதமாக விழும் லைக்குகளுக்காகத்தானே.. வெட்கக்கேடு.

இறந்தவன் பிரபலம் என்னும் போது அவனை விடுத்து அவனின் மறைவுக்கு துக்கம் விசாரிக்க வரும் பிரபலங்கள்... குறிப்பாக, நடிகர்கள்... சோகமே உருவாக வரும் போது இந்த ஊடகத்துறையினர் செய்யும் அட்டகாசங்களைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை... மனிதம் மறந்த மனிதர்கள் இவர்கள்.... சார் இப்படி நில்லுங்க... இங்க பாருங்க... அந்த மாலை தொட்டுக் கொண்டு நில்லுங்கள் என ஏதோ திருமண வீட்டிற்கு வந்தது போல் அவர்களை நிறுத்தி போட்டோவும் வீடியோவும் எடுத்துக் கொள்கிறார்கள்... இதெல்லாம் எதற்காக தங்கள் பத்திரிக்கைகள் மற்றும் தொலைக்காட்சிகளின் வருமானத்துக்காகவே என்பதை நாம் அறிவோம்.

திருமணம் என்றதும்தான் ஞாபகத்து வருகிறது... திருமணங்களில் இந்த வீடியோக்காரர்களும் போட்டோ எடுப்பவர்களும் பண்ணும் கூத்துக்கு அளவே இல்லை. தாலி கட்டும் நேரத்தில் சுத்தமாக மறைத்து விடுவார்கள்... தாலி கட்டுவதைக் காணக் கூடியிருக்கும் கூட்டம் அதைக் காணவும் முடியாது... மணமக்களுக்கு அட்சதை போடவும் முடியாது. போடும் அட்சதை எல்லாம் இவர்கள் தலையில்தான் விழும்... என் திருமணத்தில் கூட முதல் நாள் இரவு தாய்மாமன் காப்புக்கட்டி மாலை இடும் போது போட்டோ, வீடியோக்காரர்கள் அதை பதிவாக்கிக் கொண்டிருந்தார்கள். அப்போது வீடியோ எடுத்தவன் 'சார்... மாலையைத் தொட்டுக்கிட்டு இங்க பாருங்க...' என்றதும் மாமாவுக்கு வந்த கோபத்தைப் பார்க்கணுமே... 'மாலை போடும் போது எடுத்தியல்ல.... அங்க தொடு... இங்க தொடுன்னு சொல்லி அப்படி நில்லு இப்படி நில்லுன்னு சொல்ல நீ யாருய்யா...? மாலை போட்டாச்சு... அதை போட்டோவும் எடுத்துட்டே... அது போதும்... நல்ல காரியத்துக்கு போட்ட மாலையை மறுபடியும் போட்டு எடுக்கச் சொல்றே...?' என்று கத்த, வீடியோக்காரனும் போட்டோகிராபரும் அங்கிருந்து எஸ்கேப்.

ஒரு துக்க நிகழ்வுக்கு ரஜினியோ, கமலோ, அஜீத்தோ, விஜய்யோ... மற்றவர்களோ வரும்போது ஊடகத்துறையினர் மட்டுமின்றி அவர்கள் பின்னே வரும் அல்லக்கைகள்... அதாங்க ரசிகர்கள்ன்னு சொல்லிக்கிட்டு குடும்பத்தைப் பற்றி கவலையின்றி பின்னால் திரியுமே அந்தக் கூட்டம் செய்யும் அலப்பறைக்கு அளவே இல்லாமல் போய்விட்டது. கவிஞனின் மறைவில் இது போன்ற மானங்கெட்ட நிகழ்வுகளை வீடியோக்களில் பார்க்க நேர்ந்தது. விஜய் வருகிறார்... மாலை போடுகிறார்... அவர் பின்னே ஒரு பெரிய கூட்டம் சத்தமிட்டபடியே வருகிறது... ஊடகத்துறையினரின் வேண்டுகோளுக்கு செவி சாய்க்கிறார். அந்த நேரத்தில் அங்கு நின்ற பெரும்பாலானவர்களின் செல்போன் விஜய்யை படம் பிடிக்கிறது.... இது எவ்வளவு கேவலமான செயல்... துக்க வீடு... ஒருவன் இறந்து கிடக்கிறான்... அவனுக்கு அஞ்சலி செலுத்த வந்திருக்கிறான் மற்றொருவன்... இங்கே அவனை விடாமல் துரத்தி வீடியோவும் போட்டோவும் எடுப்பது எதற்காக..? முகநூலில் போட்டு லைக் வாங்கத்தானே...? அதற்காக எந்த இடத்தில் செய்ய வேண்டும் என்பதில்லையா..? மனிதத்தை விற்று விட்டு மரணத்துக்கு ஏன் வருகிறார்கள்..? இது ஒரு சினிமா விழாவோ... திருமண விழாவோ... கடை திறப்பு விழாவோ அல்ல... ஒரு மனிதனின் இறுதி யாத்திரை... சோகம் சூழ்ந்த அந்த இல்லத்துக்குள் செல்போன்களின் அணிவகுப்பும் அல்லக்கைகளில் அடாவடிகளும் தேவையில்லையே...

நான் மேலே சொன்னது விஜய் வரும்போது மட்டுமல்ல... ஒவ்வொரு நடிகனும் வரும்போதும் நிகழ்ந்தது... அவர்களேனும் தங்கள் பின்னால் வரும் மற்றவர்கள் உள்ளே வர வேண்டாம் என்று தங்களைத் தனிமைப்படுத்தி வந்திருக்கலாம் என்றே தோன்றியது... துக்க வீடுதானே.... அவர்களுக்கு எதுக்கு இந்த பூனைப்படைகள்... செல்போனில் வீடியோ எடுப்பது மகா கேவலம்.. நம்ம வீட்டு துக்க நிகழ்வில் செல்போனை தூக்கிக் கொண்டு வீடியோ எடுப்போமா என்பதை யாரும் சிந்திப்பதே இல்லை... சிந்திக்கும் அறிவும் தற்போது நமக்கு இல்லை... நம் மூளை செல்பேசிக்குள் போய்விட்டது... நம் எண்ணமெல்லாம் முகநூல், வாட்ஸ்அப், டுவிட்டர் என குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டிக் கொண்டிருக்கிறது.

ஒருவன் வெட்டுப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டு கிடந்தாலும் நாம் உதவ நினைப்பதில்லை... செல்போனில் வீடியோ எடுக்கத்தான் நினைக்கிறோம். சமீபத்தில் தில்லியில் நடந்த நிகழ்வு எவ்வளவு கேவலமானது... அடிபட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருப்பவனை பார்த்துக் கொண்டே பயணிக்கிறோம்... அதில் ஒரு போலீஸ் வண்டியும் செல்வதுதான் வேதனை... இதைவிடக் கொடுமை என்னவென்றால் அடிபட்டவனின் செல்போனை எடுத்துக் கொண்டு ஒரு மனிதன் போவதுதான்... நாம் எங்கே போய்க் கொண்டிருக்கிறோம்...?

ஒரு துக்க வீடு... கேதம் கேக்க வந்தவரின் கையில் ஆண்ட்ராய்டு போன்... என்னைப் பொறுத்தவரை துக்க வீடுகளுக்கு செல்போன் கொண்டு போகக்கூடாது என்று நினைப்பேன்... அப்படியே கொண்டு செல்லும் சூழல் வந்தால் அதை சைலண்ட் பண்ணி வைத்து விடுவேன்... ஏனென்றால் நாம் ரிங்க்டோனாக ஏதாவது பாடலை வைத்திருப்போம்... அது அந்தச் சூழலில் யாருடைய அழைப்பின் பேரிலாவது பாட ஆரம்பித்தால்.... சொல்ல வந்ததைச் சொல்லாம விட்டுட்டேன் பாருங்க... அந்த ஆண்ட்ராய்டு செல்போன்காரர் துக்கம் விசாரித்துவிட்டு சேரில் அமர்ந்து எப்படி இறந்தார்...? என அருகிலிருந்தவரிடம் விசாரித்துக் கொண்டிருந்தார்... அப்போது அவருக்கு போன் வர... 'இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே... இன்பத்தில் ஆடுது என் மனமே...' அப்படின்னு கூவ ஆரம்பிச்சிருச்சு... சாவகாசமா எடுத்து 'என்ன மச்சான்.... ம்... கேதத்துக்கு வந்திருக்கேன்... இப்ப வந்திருவேன்...' அப்படின்னு பேசிக்கொண்டே வெளியில் போனார். எப்படிப்பாடல் பாருங்க... ஒருத்தனை சாகக் கொடுத்துட்டு குடும்பமே சோகத்துல கிடக்குற நேரத்தில இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமேயாம்.... அந்தாளு செத்தது இவனுக்கு ஆனந்தம் போல... என்னத்தைச் சொல்ல... சிலர் துக்க வீட்டில் வந்திருந்து கொண்டுதான் போனில் பேச ஆரம்பிப்பார்கள்... இவர்கள் எல்லாம் எதற்காக துக்க வீட்டிற்க்கு வருகிறார்கள்.

அந்த 41 வயதுக்காரனின் மரணம் மட்டுமின்றி... அடிபட்டு உயிருக்குப் போராடி மரித்துப்போன தில்லிக்காரனின் மரணம் மட்டுமின்றி... பெரும்பாலான துக்கங்களிலும் துயரங்களிலும் நாம் நடந்து கொள்ளும் முறை இதுதான்... மனிதாபிமானத்தை இறக்கி வைத்துவிட்டு செல்போன்களைச் சுமக்க ஆரம்பித்து விட்டோம்... எந்த ஒரு நிகழ்வு என்றாலும் உதவி செய்வதைவிட வீடியோ எடுப்பதிலும் அதைப் பகிர்வதிலுமே நம் எண்ணத்தைச் செலுத்துகிறோம். இன்று மனிதாபிமானம் அற்ற மனிதர்களாக வாழ ஆரம்பித்திருக்கும் நாம் இனிமேலாவாது நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும்... செல்போன்களின் பிடியில் இருந்து விடுவித்துக் கொண்டு வாழ்வை ரசித்து... பிறருக்கு உதவி வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்... இதெல்லாம் நடக்குமா தெரியவில்லை... மாற்றம் வருமா தெரியவில்லை... நம் மூளையையும் உணர்வுகளையும் அடகு வைத்துவிட்டு எங்கே போய்க் கொண்டிருக்கிறோம் என்பதை அறியாமல் நாம் எங்கோ போய்க் கொண்டிருக்கிறோம்.... 

-'பரிவை' சே.குமார்.