மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 23 டிசம்பர், 2016

மனசின் பக்கம் : பாகிஸ்தான் வண்ணச் சிநேகிதி

Image result for abu dhabi transport
லுவலகத்திற்கு பேருந்தில் செல்வதில் சில சுவராஸ்யமான சம்பவங்களைப் பார்க்க முடிகிறது. சில நேரங்களில் நாம் மனபாரத்துடன் வரும்போது அதைக் குறைக்கும் விதமாக சிரிக்க வைக்கும் நிகழ்வுகளும் பல நேரங்களில் வேதனையைக் கூட்டும் நிகழ்வுகளும் நடந்தாலும் எல்லாம் சுவராஸ்யமானவைதான்... கடந்த வாரத்தில் ஒருநாள் ஐந்தாம் நம்பர் பேருந்தில் ஏறி கடைசி இருக்கையில் அமர்ந்திருந்தேன். பேருந்துக்குள் இருக்கைகள் நிறைந்து சிலர் நின்று கொண்டிருக்க, அடுத்த நிறுத்தத்தில் போனில் பேசியபடி ஒரு வயதான பாகிஸ்தானி ஏறினார். வேண்டுமென்றே மிகவும் சப்தமாக பேச ஆரம்பிக்க, அங்கிருந்த மலையாளிகள், ஆந்திராக்காரன் என சிலர் சப்தத்தைக் குறை இது பேருந்து என்று சொல்ல, உடனே நான் அப்படித்தான் பேசுவேன்... பேருந்துக்குள்ள பேசக்கூடாதுன்னு சொல்ல நீ யாருன்னு கேட்டதும் இல்லாம போலீசுக்கு போன் பண்ணுறேன்... அவங்க வரட்டும் கேட்போம் எனச் சொல்லியபடி போனில் சில நம்பர்களை அழுத்தி, இன்னும் சப்தமாக 'என்னைப் பேசக்கூடாதுன்னு சொல்றானுங்க... எனக்கு பேச உரிமையில்லையா... போன் வந்தா என்ன செய்யிறது...' அப்படி இப்படின்னு கோபமில்லாமல் உரக்க பேசியபடி, அந்த நபர்களுடன் அவ்வப்போது முட்டியபடி ஒரு அரைமணி நேரம் பேசிக் கொண்டே வந்தார். ஒரு நிறுத்தத்தில் மலையாளி இருவர் இறங்க, 'ஏய் எங்க போறே... போலீசைக் கூப்பிட்டிருக்கேன்... வா...வா அடுத்த நிறுத்தத்தில் இறங்குவோம்' என்று சொல்லி விரட்ட, அவர்கள் சிரித்துக் கொண்டே சென்று விட, தலைவர் அடுத்த நிறுத்தத்தில் இறங்கும் போது 'போலீசுக்கிட்ட சொல்லிட்டேன்... யாரும் இறங்கக்கூடாது... வந்து பேசுவாங்க... என்ன சரியா.. எனக்கு வேலை இருக்கு வரட்டா' அப்படின்னு சொல்லிட்டு சிரிச்சிக்கிட்டே பொயிட்டார். அந்த அரைமணி நேரத்துக்கு மேல மனுசன் கோபமே இல்லாம விவாதம் பண்ணிக் கொண்டு, சும்மா போனை காதில் வைத்துக் கொண்டு 'இங்க பாரு... என்னை பேச வேண்டான்னு சொல்றாங்க', 'பொது கழிப்பிடத்துக்குப் போனாக்கூட என்னைய சிறுநீர் கழிக்காதேன்னு சொல்வாங்க போல' அப்படி இப்படின்னு ரொம்பச் ஜாலியா பேசி எல்லாரையும் சிரிக்க வச்சிக்கிட்டே வந்தார்.

Image result for புத்தகம்

ன்பின் அண்ணன் கனவுப்பிரியன் அவர்கள் இரண்டு புத்தகங்கள் கொடுத்து வாசிக்கச் சொன்னார். அவர் எதுவும் புத்தகம் குறித்துச் சொல்லவில்லை... நமக்கு கோபம் எவ்வளவுக்கு எவ்வளவு வருதோ அதே மாதிரி ஒரு சில விசயங்களில் பொறுமையும் ரொம்ப அதிகம் என்பதை இங்கு சொல்லி விட வேண்டும்... அதுவும் வாசிப்பு என்றால் ரொம்பப் பொறுமை... இரண்டு புத்தகத்தையும் வாசித்தேன். ஒரு புத்தகம் பொள்ளாச்சியில இருந்து புளியம்பட்டி போயி மறுபடிக்கும் பொள்ள்ச்சிக்கு சூரிய வம்சத்துல டிக்கெட் கேக்குற கதைதான்... எங்கே பயணிக்குது... எப்படி நகருதுன்னு கடைசி வரை புரியலை... பின் நவீனத்துவமாம்... என்னமோ போடா மாதவான்னு வாசிச்சி முடிச்சிட்டு அடுத்ததை எடுத்தேன்... தலைப்பெல்லாம் சூப்பர்... ஒரு நாவல்ல மூணு நாலு கதை பயணிக்குது... எல்லாக் கதையிலும் போதை மட்டுமே ஒன்றாய்.... மற்றபடி எந்தக் கதையும் எதோடும் இறுதிவரை சேரலை...இது பின் நவீனத்துவமான்னு தெரியலை... ஆனா எப்படியும் எழுதலாம் என்பதற்கு உதாரணம் இது... ரெண்டு புத்தகத்துக்குமான தொடர்பு 'காமம்'. இவ்வளவு மோசமா இளம் எழுத்தாளர்கள் அதைக் கையாள வேண்டிய அவசியம் என்னன்னு தெரியலை... காமம் கலந்து எழுதலாம் தப்பில்லை... ஆனால் காமமே எழுத்தாய் பக்கமெல்லாம் விரவிக் கிடக்கு... அதிலும் ஒருத்தர் சில மதங்களை வைத்து எழுதியிருக்கிறார்.... ஆனாலும் ஒண்ணே ஒண்ணு மட்டும் புரிஞ்சது... பிரபல எழுத்தாளர்களின் ஆதரவிருந்தால் இது போன்ற கதைகள் உலக எழுத்து என்று சிலாகிக்கப்படும். 


விஞர் கல்யாண்ஜி என்ற எழுத்தாளர் வண்ணதாசன் அவர்களின் சிறுகதை நூலுக்கு சாகித்ய அகாதெமி விருது கிடைத்திருப்பதில் மிகுந்த சந்தோஷம். ஒரு மண் சார்ந்த எழுத்தை, அந்த வழக்கில் இருந்து வெளியில் வராது எழுதி, அதற்குள் நம்மை இழுக்கும் சூட்சமத்தை வைத்து எழுதும் மிகச் சிறந்த எழுத்தாளர்... அவரின் முகநூல் பக்கத்தில் பூக்களின் வாசத்தை அழகாய் பகிர்வார் தினம் தினமும்... சாகித்ய அகாதெமி வென்ற அவருக்கு வாழ்த்துக்கள்.

ம்ம சிறுகதை ஒன்று 'பிரதிலிபி - ஒரே ஒரு ஊர்ல' சிறுகதைப் போட்டியில் இருக்கு. சில பல காரணங்களால் போட்டிகளில் கலந்து கொள்ளக் கூடாதென முடிவு செய்திருந்தாலும் சம்பந்தப்பட்டவர்கள் மின்னஞ்சல் அனுப்பியதும் நம்மளையும் நம்பி(!?) கூப்பிடுறாங்களேன்னு எழுதி அனுப்பிடுவேன்... இப்பவும் அங்கு வரிசைப் படுத்தியிருப்பதை வைத்துப் பார்க்கும் போது முதலில் தெரியும் மூன்று வரிசையில் இருக்கும் கதைகள் மட்டுமே அதிகம் பார்க்கப்பட்டிருக்கிறது. பின்னால் செல்லச் செல்ல கழுதை தேய்ந்து கட்டெரும்பு ஆன கதைதான்... ராஜா இதுவரைக்கும் சாப்பிடாத பழம் கொண்டு வரச் சொல்லி அன்னாசிப் பழம் கொண்டாந்தவன் வாயில் வைத்து திணித்து வாய் கிழிந்த போதும் சிரிக்க, ஏன்டான்னு கேட்டா எனக்கே இந்த நிலைன்னா பின்னால ஒருத்தன் பலாப்பழத்தோட நிக்கிறானே அவனை நினைச்சி சிரிச்சேன்னு சொல்வானே அந்தக் கதைதான் என்னோட கதைக்கு ஏதோ சில பார்வைன்னா கடைசி கடைசியா இருக்கவங்களை எல்லாம் யாருமே சீண்டலை.... வாசகர் பார்வையின் அடிப்படையில் தேர்வு என்பது சரியான முறை அல்ல... அதை 'நேசம் சுமந்த வானம்பாடி'-யில் உணர்ந்தேன். இருந்தாலும் நமக்கு ஒரு கதை எழுத சந்தர்ப்பம் அவ்வளவே... வாசிங்க... பிடிச்சிருந்தா மதிப்பெண்ணும் முடிந்தால் கருத்தும் இடுங்க.... அது பரிசுக்காக எழுதப்பட்ட கதை அல்ல.... தனிப்பட்ட முறையில் எனக்கு அது குறித்தான கருத்துக்கள் வந்தது அதுதான் சந்தோஷம்... அதற்கான இணைப்பு கீழே...


ன் மனைவி மிக அழகாக படம் வரைவார்... அவர் போடும் கோலங்கள் கண்ணைக் கவரும்... அதுவும் மார்கழி மாதம் என்றால் இரவு மூன்று மணிக்கே எழுந்து கோலம் போட்டுக் கலர் கொடுத்து வாசலை அலங்கரித்து விடுவார். ஊரில் நான் இருக்கும் போது இரவு மூணு மணிக்கு எழுந்திருக்கக் கூடாது எனக் கத்துவேன். இப்ப விஷால் கத்துவான்... அப்படியும் கோலம் போடுவதை விடுவதில்லை... அதில் ஒரு தனிப்பட்ட ஆர்வம்.... அவங்க சென்ற ஆண்டு போட்ட கோலங்களை எல்லாம் பதிவாக்கினேன்... அதை பலர் பதிவாக்கி புள்ளிக் கோலங்கள் என்னும் இணையதளத்திலும் போட்டுட்டாங்க... ஆஹா நாம சுட்ட வடையை எவனோ சுட்டுட்டானேன்னு எனக்கு ஒரு வலைப்பூ வேண்டும் என்று கேட்க, தயார் செய்து  கொடுக்க, தான் போட்ட கோலங்களைப் பதிகிறார். நீங்களும் பாருங்க... உங்க கருத்தைச் சொல்லுங்க...

மனசின் பக்கத்தில் நிறைய எழுத ஆசைதான்... இருப்பினும் பதிவின் நீளம் கருதி....  மற்றொரு பதிவில் தொடர்வோம்...
-'பரிவை' சே.குமார்.

10 எண்ணங்கள்:

துரை செல்வராஜூ சொன்னது…

பதிவு நன்று..
வாழ்க நலம்..

ஸ்ரீராம். சொன்னது…

மனசின் பக்கம் வந்து அனைத்தையும் படித்து, ரசித்துச் செல்கிறேன்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அழகான கோலம்... பாராட்டுகள்...

அட...! புதிய தளம் வலைத்தளம்...!

KILLERGEE Devakottai சொன்னது…

Super

balaamagi சொன்னது…

அங்கு சென்று கோலம் பார்த்து வர இவ்வளவு நேரம்,, அனைத்தும் சூப்பர் சகோ,,
தங்களின் சிறுகதை அனுபவம் எனக்கும்,, அருமை அருமை,,
தொடருங்கள் சகோ,,

Anuprem சொன்னது…

சிநேகிதியின் தளம் அருமை...

வெங்கட் நாகராஜ் சொன்னது…

சிறப்பாக பகிர்ந்த உங்களுக்கு வாழ்த்துகள். சிநேகிதி தளம் அருமை. உங்கள் இல்லத்தரசிக்கும் பாராட்டுகள்.

Giantshadow சொன்னது…

அந்த இரண்டு புத்தகங்களின் பெயர் தர முடியுமா?

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

அனைத்தையும் ரசித்தோம். சினேகிதி தளத்தையும் விசிட் பண்ணியாச்சு! அழகான கோலங்கள்! தங்கள் இல்லத்தை அலங்கரிக்கும் அரசிக்கு வாழ்த்துக்கள்!

இராய செல்லப்பா சொன்னது…

அழகாக எழுதுகிறீர்கள்! இனி தொடர்ந்து படிப்பேன். - இராய செல்லப்பா நியுஜெர்சியில் இருந்து.