மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 20 ஜனவரி, 2018மனசு பேசுகிறது : மாமல்லனும் பரஞ்சோதியும்

ந்தப் பதிவு 'சிவகாமி ஏமாற்றப்பட்டாளா?' என்ற கட்டுரை அகலுக்கு எழுதுவதற்கு முன்னர் எழுதியது. சில நாட்களாகவே எதிலும் ஒட்டுதல் இல்லை... வலைப்பக்கம் அதிகம் வரவில்லை... யாருக்கும் கருத்து இடவில்லை... எதுவும் எழுதவில்லை... சில கதைகள் எழுத நினைத்து எதிலும் நாட்டமின்றி... என்னவென்று சொல்ல முடியாத ஒரு மனநிலையில்தான் மனசு இருந்தது.

இன்னும் அப்படித்தான் நகர்கிறது... இந்த வெளிநாட்டு வாழ்க்கை மீதான காதல் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வெறுப்பை உமிழ்ந்து கொண்டிருக்கிறது வாழ்க்கை.

இன்று காலை கணிப்பொறியில் பலவற்றை அழித்தபோது இந்தக் கட்டுரையும் அதில் வர, வாசித்துப் பார்த்து 'அட... எழுதியதை மறந்து விட்டோமோ' என்று நினைத்த போது சரி வலைப்பூவில் பதியலாமே... நாமும் இருக்கிறோம் என்பதை அவ்வப்போது பதியும் பதிவு மூலமாவது வலை உறவுகளுக்குச் சொல்வேமே என இங்கு பகிர்ந்தாச்சு.

அப்புறம் விஷால் பிறந்த தினத்துக்கு வாழ்த்துச் சொன்ன அனைவருக்கும் நன்றி. அவன் சார்பாகவும் நன்றி. உங்கள் வாழ்த்து அவனை நல்லவனாய் வளர்க்கட்டும்.

இனி கட்டுரைக்குள்....

Image result for சிவகாமியின் சபதம்

சிவகாமியின் சபதத்தில் எத்தனையோ கதாபாத்திரங்கள் இருந்தாலும் மனசுக்குள் ஒட்டிக் கொள்ளும் கதாபாத்திரங்களில் என் மனதில் முன்னணியில் நிற்பவர்கள் பரஞ்சோதியும் மாமல்லன் என்ற நரசிம்மவர்மப் பல்லவனும்தான்.

முரடனாக இருப்பதாலும் கல்வி அறிவு இல்லாததாலும் தன் மகளைக் கட்டிக் கொடுக்க மாமன் ஒத்துக்கொள்ளமாட்டான் என்பதால் கல்வி பயில சோழ தேசத்தின் திருச்செங்காட்டாங்குடியில் இருந்து காஞ்சிக்கு வரும் பரஞ்சோதி, காலத்தின் கோலத்தால் மகேந்திரவர்ம பல்லவரின் அன்புக்குப் பாத்திரமாகி அவரின் நேசத்துக்குரிய படைத்தலைவனாகி, பின்னாளில் பல்லவ இளவரசனான மாமல்லனின் நண்பனாகவும் சேனாதிபதியுமாகி  இரண்டாம் புலிகேசியை வென்ற போரில் முக்கியமானவராகிறார்.

மாமல்லனோ அப்பாவின் மீது அதீத பாசம் கொண்ட இளவரசனாய் இருந்து... தன்னை அப்பா போர்க்களத்துக்குப் போக விடமாட்டேங்கிறாரே... அரண்மனையில் பெண்களுடன் இருக்கச் சொல்லிவிட்டாரே என்று மனசுக்குள் குமைந்து கிடப்பவர், சேனாதிபதியாய் பரஞ்சோதி வந்த பின்னர் துர்வநீசனை எதிர்த்து படையுடன் போகச் சொல்லி மன்னரின் ஆணை வந்த பின் வெறி கொண்ட வேங்கையாய் பயணித்து...  தன் தந்தையின் சாவுக்கு காரணமான... சிவகாமியை தூக்கிச் சென்ற இரண்டாம் புலிகேசியை வாதாபியில் போய் வென்று வாதாபி கொண்டான் என்ற பட்டப் பெயர் பெறுகிறார்.

பரஞ்சோதி தன்னந்தனியாக கிளம்பி வரும்போது அவர் பின்னே பயணித்த மனசு, அவர் சிறையில் அடைபட்ட போது அவரோடு அடைபட்டு... விந்தியமலைக்கு குதிரையில் புறப்படும் போது அவருடன் பயணப்பட்டு... புலிகேசியிடம் ஓலையுடன் மாட்டிக் கொள்ளும் போது மாட்டி... பின்னர் மகேந்திரவர்மரிடம் படைத் தலைவனாகும் போது அந்த படைத் தலைவனோடு பயணப்பட்ட மனசு...  போரை வெறுத்து சிவபக்தராய் அவர் மாறும் வரை அவர் பின்னே தொடர்கிறதா..? என்ற கேள்வி எழும்போது என்னைப் பொறுத்தவரை இல்லை என்றுதான் சொல்ல முடிகிறது.

ஏன் தொடரவில்லை... தம்பி கலியுகம் தினேஷ் கூட பரஞ்சோதி பின்னே பயணித்தேன் என்று சொன்னானே... பின் ஏன் நம் மனம் பயணிக்கவில்லை...?

பொன்னியின் செல்வனில் வந்தியத் தேவன் பின்னால் பயணித்த மனசு... உடையாரில் இராஜராஜசோழன் பின்னால் பயணித்த மனசு... சாண்டில்யனின் நாவல்களில் பெரும்பாலும் கதை நாயகர்களுடன் பயணித்த மனசு... இதில் மட்டும் ஏன் நாயகனான பரஞ்சோதி பின்னே பயணிக்கவில்லை... என்று யோசித்தால்... அந்த யோசனையின் பின்னே மாமல்லன். ஆம் மாமல்லனேதான்.

சிவகாமியைக் காதலிக்கிற... அப்பாவின் பேச்சுக்கு மறு பேச்சுப் பேசாத... இளவரசன் மாமல்லன்... ஒரு சாதாரண காதலனாக, அப்பாவின் மீது நேசம் கொண்டவராக இருக்கும் வரை தமிழ்ப்பட நாயகன் போலத்தான் தெரிகிறார். ஆதர்ஷ நாயகனாக இல்லை.  எப்போது துர்விநீசனை புறமுதுகிட்டு ஓடச் செய்கிறாரோ... காஞ்சிக் கோட்டை பாதுகாப்பில் அவரின் திறமையை இரண்டாம் புலிகேசி வியந்து நோக்குகிறானோ அப்போது அதுவரை பரஞ்சோதி பின்னே பயணித்த மனசு மெல்ல மெல்ல மாமல்லன் பின்னே பயணிக்க ஆரம்பிக்கிறது.

ஒருவர் காதலியின் சபதத்துக்காக ஒரு அரசனை வெற்றி கொள்ள ஒன்பதாண்டுகள் படை பலத்தை திரட்டி, இங்கிருந்து வாதாபி நோக்கிச் சென்று தன் தோழனும் சேனாதிபதியுமான பரஞ்சோதியின் திறமையைப் பயன்படுத்தி வெற்றி பெறுகிறான் என்றால் எப்படிப்பட்ட வைராக்கியமான மனசு அவருக்கு இருந்திருக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்குகிறது. 

அப்படி நினைத்தாலும்... தன் தந்தை சொன்னார் என்பதற்காக காதலியைக் காப்பாற்ற படையெடுத்துச் செல்வதாக கதையின் போக்கில் இருந்தாலும் தன் தந்தையின் மரணத்துக்கு காரணமாய் இருந்தவனை வெல்ல வேண்டும் என்ற வெறியே அவருக்குள் உண்மையில் இருந்திருக்க வேண்டும். அந்த வெறி கொடுத்த வேகம்தான் வாதாபி வரை செல்லச் சொல்லியிருக்கிறது. காதல் இரண்டாம்பட்சம்தான் என்பதே என் எண்ணம். அதுவும் சிவகாமி கதாபாத்திரம் என்பது நாவலின் சுவை கூட்டத்தான் இல்லையா...

மல்லர்களை வென்று மாமல்லன் என்ற பட்டப்பெயர் பெற்றிருந்த போதிலும் தன் தந்தையின் ஆணைப்படி துர்விநீசனை வென்று தன் வெற்றித் தீபத்தை ஏற்றி வைத்த மாமல்லர் வாதாபியை தீக்கிரையிட்டு அங்கு தன் சிங்கக் கொடியை பறக்க விட்டதில் தீபத்தை மேலும் அழகாக எறிய வைத்து தன் வாழ்நாளில் தோல்வியே காணாத இந்திய மன்னர்கள் 12 பேரில் ஒருவராய் திகழ்ந்திருக்கிறார். நரசிம்மவர்ம பல்லவனைப் பற்றி செய்திகள் அறியும் விதமாக தேடியபோது கிடைத்த விபரம் இது. இராஜராஜன், ராஜேந்திரன் போல் இவரின் வீரமும்தான் எத்தகையது என்ற வியப்பு நமக்குள் ஏற்படுகிறது.

தான் கட்டிக் கொள்ள நினைத்த திருவெண்காடு நங்கையை மகேந்திரரின் ஆசியுடன் திருமணம் செய்து கொள்கிறார் பரஞ்சோதி, ஆனால் மாமல்லனோ உயிருக்கு உயிராய் காதலித்த நாட்டிய மங்கை... ஆயனச் சிற்பியின் மகள் சிவகாமி, வாதாபிச் சிறையில்  இருக்கும் போது தந்தையின் சொல்லைத் தட்ட முடியாமல் பாண்டிய இளவரசி வனமாதேவியை மணமுடிக்கிறார். இந்த இடத்தில் மாமல்லனைவிட பரஞ்சோதி உயர்ந்து நிற்கிறார்.

வாதாபி நோக்கிச் செல்லும் போது மாமல்லருடன் பலர் இருந்தாலும் மாமல்லரின் புத்தி சாதூர்யமும் பரஞ்சோதியின் திறமையும் சேர்ந்தே வாதாபி கொண்டான் என்ற பட்டத்தை மாமல்லருக்குப் பெற்றுத் தருகிறது. இந்த வெற்றி வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியாகும். தமிழர்கள் வீரத்திலும் தீரத்திலும் நிகரில்லாதவர்கள் என்பதை பறைசாற்றும் வெற்றியாகும். காஞ்சிக்கு தேடி வந்து வெல்ல முடியாமல் நட்பு போற்றி, கேவலமாக நடந்து கொண்ட புலிகேசியை அவன் தலைநகரில் வைத்துச் சாய்த்து வெற்றி கொள்ள எவ்வளவு தைரியம் இருந்திருக்க வேண்டும்.

ஆரம்பத்தில் பரஞ்சோதியுடன் பயணிக்கும் மனசு பின்னர் மாமல்லருடன் பயணித்து வாதாபி நோக்கிச் செல்லும் போது இருவருடனும் பயணிக்கிறது,

வாதாபி போருடன் சிவனடியாராகிவிடும் பரஞ்சோதி பின்னாளில் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராக, சிறுதொண்டராக மாறும் போது நம் மனதில் நிறைந்து நிற்கிறார் என்றாலும் மாமல்லர் தன் வீரத்தாலும் திறமையாலும் அவரோடு இணைந்தே நம்முள் நிற்கிறார்.

மொத்தத்தில் மாமல்லர் பாதி, பரஞ்சோதி பாதியாய் பயணித்து இருவரோடும் கதையின் முடிவில் இணைய வைக்கிறது கல்கியின் எழுத்து.

****

பிரதிலிபி போட்டியில் இருக்கும் கட்டுரை வாசிக்க 'இங்கு' சொடுக்குங்கள்.

-'பரிவை' சே.குமார்.

செவ்வாய், 16 ஜனவரி, 2018வாழ்வின் வசந்தம் விஷால்


வாழ்க்கையில் சில நிகழ்வுகள் நம்மை மகிழ்ச்சியில் திளைக்க வைப்பதுடன் வாழ்வின் மற்றொரு கட்டத்துக்கு நகர்த்திச் செல்லும். அப்படியான நிகழ்வுகளின் பின்னே நாம் வாழ்வில் சாதித்து விட்டோம் என்ற எண்ணத்தைப் பெருமையுடன் எழச் செய்து சாதித்த மகிழ்வை புன்னகையாய் பூக்க வைக்கும்.

படிக்கும் காலத்தில் எந்தக் கவலையும் இன்றி வாழ்க்கை நகரும். என்ன நடந்தா என்ன... அது நல்லதா...கெட்டதா... என்பதெல்லாம் குறித்து ஆராய்வதில்லை... திருவிழாக்கள் எல்லாம் ஒரே ஆட்டம்... ஏதாவது ஒரு இறப்பு என்றால் சோகம் சுமந்து பதறி வரும் முகங்களை வேடிக்கை பார்ப்பதற்காகவே இழவு வீட்டின் முன்னே காத்திருக்கச் சொல்லும் அவ்வளவே... மற்றபடி எந்த மகிழ்வையும் எந்தக் கவலையையும் அதிக நேரம் சுமப்பதில்லை... அடுத்தடுத்து கடந்து போய்க் கொண்டே இருப்பதிலேயே மனசு குறியாக இருக்கும். 

வெட்கமா அப்படின்னா என்ன என்று கேட்ட வைத்த வயதில் எதை நோக்கி நாம் பயணிக்கப் போகிறோம் என்பதைக் குறித்தெல்லாம் சிந்தனை வருவதில்லை. பள்ளியில் மழை வருவது போல் இருந்தால் கிராமத்துப் பிள்ளைகள் போகலாம் என்றதும் புத்தகப் பையை தலைமை ஆசிரியரின் அறையில் வைத்து விட்டு மறக்காமல் சத்துணவுத் தட்டை எடுத்து தலையில் கவிழ்த்துக் கொண்டு நடந்த நாட்களில் இந்தப் பத்தியின் ஆரம்பத்தில் சொன்ன வெட்கம் என்பது இல்லவே இல்லை.

வெட்கம், வேதனை, வருத்தம், மகிழ்ச்சி, வாழ்வு குறித்தான அடுத்த கட்ட நகர்வுகள், பயம் என எல்லாமே குடும்பஸ்தனாய் மாறிய பின்னர்தான் அதிகமாகின்றன இல்லையா...? தனிக்காட்டு ராஜாவாகத் திரிந்தவனை மனைவி என்ற ஒருத்தி வந்த பின் தன்னை நம்பி ஒரு ஜீவன் வந்திருக்கு... இதுவரை எப்படியோ நகர்ந்த வாழ்வில்... அப்பாவின் சம்பாத்தியத்தில் நகர்ந்த வாழ்வில்... செலவுக்கு அப்பாவிடமோ அம்மாவிடமோ நைச்சியமாகப் பேசி வாங்கி செலவு செய்த நிலையில் மனைவிக்குப் பூ வாங்க அம்மாவிடமா பணம் கேட்க முடியும் என்ற யோசனை தோன்ற வாழ்வில் முதல் முதலாய் தன்னை நம்பி வந்தவள் மனம் கோணாது நடக்க வேண்டும் என்ற எண்ணம் தலை தூக்க ஆரம்பிக்கும் இல்லையா... அதுதான் வாழ்வின் அடுத்தடுத்த நிகழ்வுகளுக்கான ஆரம்பம்.

இப்ப எதுக்கு வேதாந்தம் அப்படின்னு நினைக்கிறீங்களா...? வேதாந்தம் இல்லைங்க... எல்லாம் காரணமாத்தான்... எப்படி ஆரம்பிப்பது என்பதாய் எழுந்த எண்ணத்தின் முடிவில் வாழ்க்கையில் சில நிகழ்வுகள் என இப்படியாய் ஆரம்பித்தேன் அவ்வளவே.

வெளிநாட்டு வாழ்க்கையில் ஊருக்குப் பேசும் அந்த சில மணித்துளிகளே சந்தோஷத்தைத் தரும் என்பதை அனுபவித்தவர்கள் கண்டிப்பாக உணர்ந்திருப்பார்கள். இன்றைய நிலையில் வீடியோவாய் பார்த்துப் பேசுவது என்பது வரப்பிரசாதமே. ஸ்கைப்பில் மணிக்கணக்கில் பேசி... மகிழ்வாய்... கோபமாய்... என எல்லா அவதாரமும் எடுத்து பேசி.. மனைவி, குழந்தைகளுடன் அளவளாவி முடித்து வைத்து சாப்பிட்டுப் படுக்கும் போது மனசுக்கு ஒரு நிம்மதி.

அப்படியான நிம்மதிக்கும் இங்கு ஆப்பு வைத்து விட்டார்கள். ஸ்கைப்பையும் முடக்கி விட்டார்கள். இவர்கள் ஒரு ஆப் தருகிறார்கள். மாதம் 50 திர்ஹாமுக்கு ரீசார்ஜ் பண்ணிக் கொள்ள வேண்டும். இந்த ஆப்பை ஊரிலும் தரவிறக்கிக் கொள்ள வேண்டுமாம். சிலர் அது நல்லாயிருக்கு என்கிறார்கள்... பலர் சரியில்லை என்கிறார்கள். 2018 பிறந்த உடனே வரியும் இது போன்ற முடக்கமும் மொத்தமாய் எல்லாரையும் முடக்கி வைத்து விட்டது. 

தினமும் விஷாலுடன் எதாவது பேசுவது மனசுக்கு நிம்மதியாய் இருக்கும். அவனைப் பொறுத்தவரை அடுத்தடுத்து வார்த்தைகளில் விளையாடுவதில் கில்லாடி. அது எங்க குடும்பத்துக்கே உரியது. எங்கம்மா சிரிக்காமல் படக்கென பதில் சொல்வார். அதேபோல்தான் இவனும்... தரித்திரமில்லாமல் பேசுது பாருங்க என்று சொல்லும் மனைவி,  உங்க வாரிசு எப்படியிருக்கும் என்று சேர்த்தும் சொல்வார்.

பாப்பா வயிற்றில் இருக்கும் போது நாங்கள் ஒரு சிறு வீட்டில் வாடகைக்கு இருந்தோம். தேவகோட்டை கல்லூரியில் வேலை. மற்றவர்கள் வந்து பார்த்துச் சென்றாலும் ஒன்பதாவது மாதம் வரை நான்தான் பார்த்துக் கொண்டேன். பாப்பா பிறந்தது மதுரையில்... மனைவிக்கு ஆபரேசன் என்ற போது ஏற்பட்ட படபடப்பின் பின்னே கண்ணீர் பெருக்கெடுத்தது.

விஷாலைப் பொறுத்தவரை, அவன் வயிற்றில் இருக்கும் போது என்னை அபுதாபிக்கு விரட்டி விட்டுட்டான். காரைக்குடியில் வாடகை வீட்டில் வாழ்க்கை. பாப்பாவும் மனைவியுமாய் தனியாய்... பக்கத்தில் மனைவியின் சித்தி வீடு என்பதால் அவர்கள் பார்த்துக் கொண்டார்கள். மனைவியின் ஆயாதான் அதிகம் எங்கள் குடும்பத்தைப் பார்த்துக் கொண்டவர்கள். 

காரைக்குடியில்தான் பிறந்தான் விஷால்... என்ன நேரத்துல பிறந்தியோ என்று திட்டினால் ஜனவரி-17 என்று சொல்லுவான். ஆம் இன்று அவனின் பிறந்தநாள். அவன் பிறந்த அன்று  செய்தி போன் வழியாக வந்த போது அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அருகிருக்க முடியவில்லையே என்ற வலியும் கூடவே இருந்தது. மனைவிக்கு இரண்டாவதாய் ஆபரேஷன்... ரொம்பக் கஷ்டமாக இருந்தது.

ஆச்சு 9 வருடங்கள்... வெளிநாட்டு வாழ்க்கை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. எப்போது ஊரில் போய் செட்டிலாவது என்ற எண்ணத்தைச் சில நாட்களாக மனசுக்குள் இன்னும் தீவிரமாக்கி  நகர்கிறது. இன்று கூட உங்களைப் பொங்கலுக்கு வரச் சொன்னேனுல்ல ஏன் வரலை என்று சண்டை போட்டான்.

சில நாட்கள் முன்னர் விழுந்ததில் காலில் சின்னதாய் ஒரு கிராக் என்றாலும் மிகப்பெரிய கட்டிட்டு நடக்காமல் இருந்தவன், பொங்கலுக்காக கட்டை சிறியதாகப் போட்டதால் கொஞ்சம் நடந்து திரிந்திருக்கிறான். நடக்காதடா என்று சொல்லும் போது அலோ... அலோ.... கேக்கலையே... என்று சொல்லி போனை அவங்க அம்மாவிடம் கொடுத்துவிட்டு எஸ்கேப் ஆனான். இது இன்றும் நேற்றும் பல முறை நிகழ்ந்தது.

சுறுசுறுப்பானவன்... துறுதுறுப்பானவன்... வேகமானவன்... எல்லா வேலைகளையும் நான் செய்கிறேன் என முன் நின்று செய்ய நினைப்பவன்... ஒன்பது வயது கடந்து பத்தாவது வயதில் அடியெடுத்து வைக்கிறான். ஆண் பிள்ளைகள் அம்மா பிள்ளை என்பார்கள்... இவனோ அப்பா பிள்ளை... தினமும் அவனிடம் ஒரு சில வார்த்தைகள் பேசாவிட்டால் அந்த நாள் வெறுமையாய் நகரும்.

எம்.ஜி.ஆர். பிறந்தநாளில் பிறந்தவன் என்பதால் தகதன்னு இருப்பான்னுல்லாம் சொல்லலை ஆனால் எங்களை விட அவன் கலர் சற்று தூக்கல்தான்... அடிக்கிற சிவப்பில்லை என்றாலும் அழகான சிவப்புத்தான் அவன். எல்லாருக்கும் பிடித்தவனாய் இருப்பது கடினம்... இப்போது அவன் எல்லாருக்கும் பிடித்தவனாய் இருக்கிறான். இப்போது போல் எப்போதும் இருக்க வேண்டும்... அதற்கு இறையருள் வேண்டும்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் செல்லம்...

எங்க அன்பு மகனுக்கு உங்களின் வாழ்த்துக்களையும் ஆசிகளையும் வேண்டி...
-'பரிவை' சே.குமார்.

ஞாயிறு, 14 ஜனவரி, 2018கிராமத்து நினைவுகள் : பொங்கல் நினைவுகள்

பொங்கல்...

பள்ளிக் காலத்திலும் கல்லூரிக் காலத்திலும் ஏன் திருமணத்துக்கு முன்னும் அதன் பின்னான சில காலங்களும் கொடுத்த இனிப்பின் சுவையை மனதில் சுமந்து உதட்டில் வடுவாய் ஊறும் ஆசையை மெல்லத் தள்ளி பொங்கலா அப்படின்னா என்று கேட்பவர்களிடம் ஒரு வெற்றுச் சிரிப்பை உதிர்த்து மனம் நிறைந்த வேதனையுடனே இன்றைய காலை நகர்ந்தது.

எதற்காக இந்த வாழ்க்கை...? இதில் சாதித்தது என்ன...? கடன் இல்லாமல் இருக்கிறோமா...? கவலை இல்லாமல் இருக்கிறோமா..? என்றெல்லாம் எண்ணிப் பார்த்தால் இதுவரை கடந்து வந்த ஒன்பது ஆண்டுகள் என்னைப் பார்த்து ஏளனமாய்ச் சிரிக்கிறது. 


காலையில் எங்க முனியய்யா கோவிலில் பொங்கல் வைத்த பின் மாலைகளில் சிரிக்கும் அவரை மனைவி செல்போனில் விழுங்கி வாட்ஸ் அப் மூலமாக எனக்கு அனுப்பிய போது அதைப் பார்த்ததும் அங்கிருக்க முடியாத நிலை நினைத்து... இந்த வாழ்க்கையை நினைத்து... கண்ணீர்தான் வந்தது. 

இன்று முழுவதுமே மனதில் நிம்மதி என்பதே இல்லாமல் அலைந்து கொண்டே இருந்தது. இந்த வாழ்க்கையை தூக்கி எறிந்து விட்டு விருமாண்டியில் 'போய் புள்ள குட்டியை படிக்க வையுங்கடா' என கமல் சொல்வதைப் போல் போய் புள்ளைகளோட, குடும்பத்தோட வாழும் வரை சந்தோஷமாக வாழ்வோமே... எத்தனை காலம் இங்கிருந்தாலும் கடன் நம்மை விட்டு விலகப் போவதில்லை ஆனால் வாழ்க்கையில் நிறைய இழப்புக்கள் நம்மைப் பார்த்து பரிதாபமாகச் சிரித்துக் கொண்டுதான் இருக்கும் என்றே தோன்றியது.

எங்க ஊரில் மார்கழி மாதத்தில் மாரியம்மனுக்கு காலையில் பொங்கல் வைத்து சாமி கும்பிடும் வழக்கத்தை நாங்கள்தான் கொண்டு வந்தோம். முதல் வருடம் மைக் செட் கட்டியபோது எத்தனை பிரச்சினைகள்... போலீஸ் ஸ்டேசன் வரை சென்று வந்தோம் என்றாலும் அன்று ஆரம்பித்து வைத்து மழையில் குடை பிடித்தபடி நாங்கள் செய்த பொங்கலின் தொடர்ச்சியாய் இன்று வரை அது தொடர்வதில் மகிழ்ச்சி. மார்கழி மாதம் முடிந்து தை முதல்நாள் முதல் பொங்கல் மாரியம்மனுக்கே.

அடுத்ததாக எங்கள் ஊர் கண்மாயில் காவல் தெய்வமாய் நிற்கும் எங்க முனீஸ்வரனுக்கு ஊரில் பாதிப் பேர் பொங்கல் வைப்போம். கோவில் பொங்கல்களில் எல்லாருடைய பொங்கப் பானைகளிலும் கொஞ்சம் கொஞ்சம் எடுத்து சாமிக்குப் படைத்து அதில் நெய், வெல்லக்கட்டி எல்லாம் போட்டு வைத்திருந்து தீபம் பார்த்த பின் அந்த பள்ளையச் சோறை வாங்கிச் சாப்பிட்டால் ஆஹா என்ன சுவை... என்ன சுவை... பள்ளையச் சோற்றுக்கு தனி சுவைதான்... அதுவும் கோவில் பொங்கல்கள் எப்போதும் சுவை அதிகம்.

அதன் பின் வீட்டுப் பொங்கல்... முன்னெல்லாம் வயலில் இருந்து கதிர், அருகம்புல் எல்லாம் பிடிங்கி வந்து பொங்கல் வைப்போம். இப்போது வயல்களில் கருவை மரங்களின் ஆட்சியாகிவிட்டது. தண்ணீர் ஓடிப் பாய்ந்த வாய்க்கால்கள் இருந்த இடம் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து சில இடங்களில் வயலில் கட்டிய வீடுகளுக்கு பாதை ஆகிவிட்டது. இன்னும் சில காலம்தான் எல்லா வயல்களும் ஒன்றாகிவிடும். ஊடு வரப்புக்கள் எல்லாம் உயிரை இழந்து கொண்டிருக்கின்றன.

வீட்டுப் பொங்கல் என்பது இப்போது எங்களுக்கு இரண்டாய்.... தேவகோட்டையில் அதிகாலையில் மனைவி பொங்கல் வைத்து விட்டுத்தான் ஊருக்குப் போனார். அங்கு முனியய்யா கோவில் பொங்கல் முடித்ததும் மாலைதான் வீட்டுப் பொங்கல் வைத்தார்கள்... இரவு நாச்சியம்மத்தா கோவில் பொங்கலுடன் முதல்நாள் பொங்கல் முடிவுக்கு வந்துவிடும்.

மறுநாள் மாட்டுப் பொங்கல்....

அப்பல்லாம் வீட்டுக்கு நாலஞ்சி மாடு நிக்கும்... ஆடுகள் இருக்கும்... எல்லாமே மாறிப் போச்சு... மாடுகளும் இல்லை... ஆடுகளும் இல்லை... பல வீடுகளில் மனிதர்களும் இல்லை.

காலையில் எழுந்ததும் மாடுகளுக்கு புது மூக்கணாங்கயிறு இட்டு புது பிடி கயிறு போட்டு... குளிப்பாட்டி... அதுவும் கம்மாய் நிறைந்து கிடக்கும் காலத்தில் எல்லாரும் ஒன்றாய் மாடுகளை நீச்சி... வைக்கோல் வைத்து தேய்த்து அழுக்கைத் தண்ணீரில் கரைத்துவிட்டு முனியய்யா கோவில் குங்குமத்தை எடுத்து அழகழகாய் பொட்டிட்டு வீட்டில் கட்டி வைப்பதுண்டு. பலர் மாட்டின் கழுத்தில் துண்டுடன் கரும்பையும் கிழங்கையும் பொங்கத் தாலிச் செடியையும் கட்டி வைப்பார்கள்... சிலரோ வீட்டுச் சுவற்றில் அடித்த காவியின் மீதத்தை மாட்டின் கொம்பிலும் உடம்பிலும் பூசிவிடுவார்கள்.

'ஏப்பா... ஏய்... எப்ப பொங்க வச்சி திரும்பி வர்றது... பத்தரை மணி வரைக்கும் ராகு காலம்ப்பா... வெயில்லயா போயி வச்சிக்கிட்டு நிக்கிறது... எளவரசுக  வாங்கப்பா போயி  பொங்கக் குழி சுத்தம் பண்ணிட்டு வருவோம்' என்றபடி சித்தப்பா மம்பட்டியுடன் வருவார். அவர் பின்னே அரிவாள், மம்பட்டி என ஆளாளுக்கு ஒன்றுடன் பாதையை சரி செய்தபடி கருப்பர் கோவிலை அடைவோம்.

கருப்பர் கோவிலின் முன்னே 'இன்னைக்கு எங்கிட்டுப்பா சூலம்' எனக் கேட்டு நீண்ட அடுப்பு வெட்டிவிட்டு... முள்களை எல்லாம் சுத்தம் செய்து படையல் போட வீடு போல் கட்டங்கள் இட்டு... 'ஏப்பா நீ நாலு பக்கமும் வாசப்படி வெட்டுப்பா... நீ உள்ள வெட்டிக்கிட்டு வாப்பா நிக்காம... ஏம்ப்பா கொஞ்சப் பேரு வைக்கப் பிரி போட்டு போட்டு மாவிலை வேப்பலை கொண்டாந்து தோரணம் கட்டுங்க... ரெண்டு பேரு தோரணத்துக்கு கம்பு ஊனுங்கப்பா... புள்ளக நிக்க கொஞ்சம் நெலல்ல சுத்தம் பண்ணி வைங்கப்பா... இங்க முடிச்சிட்டு கருப்பர் கோவிலச் சுத்தி நெருஞ்சி முள்ளா இருக்கு... கொஞ்சம் சுத்தம் பண்ணுங்கப்பா என்ற குரல்களின் ஓசைக்கேற்ப வேலைகள் நடக்கும்.

எல்லாம் தயார் செய்து வந்த உடன் 'ஏம்பா... பொங்க வைக்க கிளம்புங்கப்பா என்றதும் பொருட்கள் நிறைந்த கூடை, தண்ணீர்க்குடம், முள்ளுக்கட்டு என ஆளுக்கு ஒன்றாய் தூக்கிச் சென்று வரிசையாய் வைத்து எல்லாரும் வைத்ததும் பொங்கல் வைக்க ஆரம்பித்து எல்லாருடைய பானையும் பொங்கியதும் சங்கு ஊதி, மாடுகளைப் பிடித்துக் கொண்டு போய் கருப்பர் கோவில் முன்னே கட்டி, கருப்பர் கோவில் முன்னே இருக்கும் தூபக்காலில் தேங்காய் நாறு, பூவரசம் பட்டை என இட்டு தீவைத்து சாம்பிராணி போட ரெடி பண்ணி, பெரிய கருப்பர் சின்னக் கருப்பருக்கு தண்ணீர் வைத்து கழுவி பொட்டிட்டு... துண்டு கட்டி... பூமாலைகள் போட்டு ஐயாக்கள் பூஜைக்கான வேலையில் இறங்க, அர்ச்சனைக் கூடைகள் வரிசையாய் வந்தமரும்.

புறமடைத்தண்ணி... இப்பல்லாம் இல்லை... புறமடைத் தண்ணியெல்லாம் அப்போ எடுத்தாந்து அதை மந்திரித்து பொங்கலோ பொங்கலெனச் சொல்லி, மாடுகளுக்கும் மனிதர்களுக்கும் அந்த நீரைத் தெளித்து... தீச்சட்டி எடுத்து... திட்டி சுற்றி அதில் போட்டு... மூன்று சுற்றுகளுக்குப் பின் பொங்கல் வைத்த பொங்கக் குழி தாண்டி உடைத்து எல்லாரும் விழுந்து கும்பிட்டு...  படையல் சோற்றைப் பிசைந்து எல்லாருக்கும் கொடுக்க, அதை மாடுகளுக்கு தின்னக் கொடுத்து.. கேலிக்காரர்களின் முகத்தில் மிளகாயுடன் தேய்த்து மகிழ்ந்து மாடுகளை வீட்டுக்குக் கொண்டு சென்று உலக்கையைப் போட்டு தாண்ட வைத்து கசாலையில் கட்டிவிட்டு மீண்டும் கருப்பர் கோவில் வந்து சாமி கும்பிட்டு எல்லாருமாக கிளம்பிப் போய் வீட்டில் பொங்கலுடன் மதிய விருந்தையும் ஒரு கட்டுக் கட்டிட்டு கரும்புடன் மாரியம்மன் கோவிலுக்கோ அல்லது சிராவயல் மஞ்சுவிரட்டுக்கோ கிளம்பி விடுவார்கள்.

அன்று மாலை மீண்டும் மாரியம்மன் கோவிலில் கொப்பிப் பொங்கல்... பெரும்பாலான வீடுகள் கலந்து கொள்ள, மீண்டும் ஒரு மாட்டுப் பொங்கல் தோரணையுடன்... குழந்தைகளின் ஆட்டம்... பெரியவர்களின் அரசியல் பேச்சுக்கள்... இளைஞர்களின் கேலி கிண்டல்கள்... இளவட்டக் கல் தூக்குதல்... என மகிழ்வாய்... சில வருடமாக விளையாட்டுப் போட்டிகளும் இவற்றுடன் இணைய குதூகலமாய் பொங்கல் தினம் நகரும்.

இதை எல்லாம் அனுபவிக்காமல் ஆறு மணிக்கு எந்திரிச்சி... நம்ம டயத்தில் குளித்து... அவசரமாக அலுவலகம் சென்று... வேலை... வேலை என சாப்பாடு மறந்து... மாலை திரும்பி... என்ன சமையல் செய்வதென யோசித்து... சமைத்து... ஊருக்குப் பேசி... சாப்பிட்டு... கணிப்பொறியில் ஏதோ ஒன்றைப் பார்த்து.... படுத்து... மீண்டும் ஆறு மணி... குளியல்.... என நகரும் வாழ்க்கை வெறுப்பையே தருகிறது.


பொங்கல் நினைவுகளுடன் பொங்கும் மனதை தேற்றியபடி படுக்கையை விரிக்கிறேன்... அடுத்த வருடமேனும் குடும்பத்துடன் குதூகலப் பொங்கல் வைக்க வேண்டும் என்ற ஆவலுடன்....

ஆசைகள் எப்போது நிராசைகள் ஆவதில்லை... எப்போதேனும் ஆகலாம்... அந்த எப்போதேனும் நம்மிடம் வராமல் இருக்கட்டும். 
-'பரிவை' சே.குமார்.