மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 10 ஜூலை, 2013

இசையமைப்பாளரானது ஒரு விபத்துதான்: கே.பாக்யராஜ்


அமெரிக்காவில் வசிக்கும் திருமதி கார்த்திகா மகாதேவ் இசையமைத்த 'விலகுது திரை' என்ற திரை தமிழிசை ஆல்பத்தின் வெளியீட்டு விழா சென்னை ஆர்.கே.வி திரையரங்கில் நடைபெற்றது. ஆல்பத்தில் இடம்பெற்ற ஐந்து பாடல்களையும் எழுதியதுடன், அவற்றுக்கான பாடல் காட்சியையும் இயக்கியிருக்கிறார் முருகன் மந்திரம்.

முதல் குறுந்தகட்டை இயக்குனர், நடிகருமான கே.பாக்யராஜ் வெளியிட, இசையமைப்பாளர் பரத்வாஜ், யூடிவி தனஞ்செயன், இயக்குனர்கள் பேரரசு, எஸ்.எஸ்.குமரன், ஒளிப்பதிவாளர் கோபி அமர்நாத், சுபஸ்ரீ தணிகாசலம் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பெற்றுக் கொண்டார்கள்.

விழாவில் கே.பாக்யராஜ் பேசியதாவது- நான் அரசியலுக்கு வந்த மாதிரி இசையமைப்பாளரானதும் ஒரு விபத்துதான். டார்லிங் டார்லிங் டார்லிங் படத்திற்காக சங்கர் கணேஷிடம் படத்தின் சூழ் நிலையை விளக்கி பாடல் இப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்று நானே ஒரு ட்யூனை ஹம் பண்ணிக் காட்டினேன்... 

கணேஷ் உடனே 'இதையே வைச்சுரலாம் நல்லாத்தான் இருக்கு' என்று சொல்ல அதையே பொறுத்தமான வரிகளை போட்டு பாடலாக்கினோம். அந்த பாடல்தான் ஓ நெஞ்சே.


இளையராஜாவிடம் கோபித்துக் கொண்டுதான் நான் இசையமைப்பாளரானேன். கோபம் என்றால் நேரடியாக கோபம் இல்லை. ஒரு பாடலை பற்றி அவர்கள் எல்லாம் விவாதித்துக் கொண்டிருக்கும்போது நான் சங்கீத ஞானம் இல்லாத காரணத்தால் அந்த விவாதத்தில் கலந்து கொள்ள முடியாமல் தவிப்பேன். இதை தவிர்க்க வேண்டும் என்று உடனடியாக சங்கீதம் கற்க போனேன். ஒரு ஆர்மோனியத்தை வாங்கி முறைப்படி அதை இசைக்க கற்றுக் கொண்டேன். காலப்போக்கில் கீயை அழுத்தும்போதே எனக்கு ட்யூன் வர ஆரம்பித்துவிட்டது. 

அதன் பிறகு நான் போடும் டியூன்லாம் நானே தான் போடுகிறேனா என்று பலருக்கும் சந்தேகம் வர ஆரம்பித்துவிட்டது... இளையராஜா உட்பட... அவருக்கு எம்மேல பயங்கர கோபம்... நான் ஆர்மோனியப் பெட்டியை சரஸ்வதி மாதிரி வணங்குகிறவன். ஆனால் நீயெல்லாம் அதை எப்படி தொடலாம் என்று என்னிடம் சண்டைகே வந்துவிட்டார். சரஸ்வதியை நீங்க மட்டும்தான் கும்பிடணுமா என்று நானும் சண்டை போட்டேன். அதன் பிறகு வாலி மூலமாக நானே தான் மெட்டுப் போடுவதாகக் கேள்விப்பட்ட பிறகுதான் என் மீது அவருக்கு இருந்த கோபம் குறைந்தது... அதன் பிறகு மறுபடியும் சேர்ந்து பணியாற்ற ஆரம்பித்தோம் என் இவ்வாறு கூறினார்.

செய்திக்கு நன்றி : தினமணி
படத்துக்கு நன்றி : கூகிள் இணையம்
-'பரிவை' சே.குமார்

1 எண்ணங்கள்:

பால கணேஷ் சொன்னது…

தனக்கு சங்கீதஞானம் குறைவுன்னு சொன்ன பாக்யராச் சாரின் நேர்மை பிடிச்சிருக்கு.