மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 10 ஜூலை, 2013

சில சினிமாக்களும் சில்லறை விமர்சனமும்...

ஊருக்குப் பொயிட்டு வந்துட்டு நிறையப் படம் பார்த்தாச்சு... ஆனா ஒண்ணும் மனசுல நிக்கிறமாதிரி படமா அமையலைங்க... இப்படித்தான் படமெடுக்கணுமின்னு நிறைய இயக்குநர்கள் வலம் வரும் தமிழ் சினிமாவில் இப்படியும் எடுக்கலாமென சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். 

நாகராஜ சோழன் எம்.ஏ. எம்.எல்.ஏ : இந்தப் படம் பார்த்தபோது அமைதிப்படையில் இருபது சதவிகிதம் கூட இல்லையே என எண்ணத் தோன்றியது. அதுவும் சத்தியராஜ் மற்றும் மணிவண்ணன் பெண்களைப் பற்றி பேசுவது நாரசம். மணிவண்ணன் என்ற நல்ல இயக்குநர் தோற்றுப் போன படம்... மறைந்த அந்தக் கலைஞனுக்காக படத்தைப் பற்றி அதிகம் பேச எண்ணமில்லை.


அன்னக்கொடி : ஸ்... அப்பா.... இமயம் அறுவதிலும் ஆசை வருங்கிறதை நிரூபிக்க எடுத்த படம். இது குறித்து தனிப்பதிவே போட்டாச்சு. படிக்காதவங்க படிக்க இங்கே போங்க.

ஒருவர் மீது இருவர் சாய்ந்து : ஒருத்தனை இரண்டு நண்பிகள் ஒரு சேர கட்டிக்கொள்ள நினைத்து அதற்காக காய் நகர்த்தி திருமண மேடை வரைக்கும் வள்ளி தெய்வானையாக, பாமா ருக்மணியாக அமர்ந்து கிளைமாக்ஸில் பாக்கியராஜ் மற்றும் விசுவால் திருந்துவதாக கதை. கதை சொன்ன விதம் கொஞ்சம் போரடித்தாலும் பிளாக் பாண்டியின் நகைச்சுவைகள் சில இடங்களில் ரசிக்க வைத்தது. அதிலும் குறிப்பாக சிங்கம்புலி பின்னால் நடந்து சாதனை புரிய நினைப்பவராக வர அவரிடம் பாண்டி கேட்கும் கேள்வி நீண்ட நேரம் சிரிக்க வைத்தது. பார்க்கலாம் ரகமாக அமைந்த படம் என்பதில் மகிழ்ச்சி.

வெட்கத்தைக் கேட்டால் என்ன தருவாய்: படம் ஆரம்பித்து என்னமோ போச்சு போங்க... எங்களால ஒரு கட்டத்துக்கு மேல போக முடியலை...  அவங்க வெட்கத்தை கேட்டாலும் பரவாயில்லை எங்க தூக்கத்தையில்ல கேட்டாங்க... விடுவோமா பாதியோட நிறுத்திட்டு படுத்துட்டமுல்ல.


குட்டிப்புலி : சசிகுமார் படமென்றாலே பார்க்கலாம் என்ற எண்ணம் எழுவதை தடுக்க முடிவதில்லை. அவரது பழைய படங்கள் அளவுக்கு இல்லையென்றாலும் சோடை போகவில்லை. பாடல்கள் சுமார் ரகம்தான். கிளைமேக்ஸ் ரத்தக்களறி... லஷ்மிமேனனுக்கு நடிப்பதற்கு அவ்வளவாக வாய்ப்பு இல்லை. கிடைத்தவரை குறைவில்லாமல் பண்ணியிருக்கிறார். 

நேரம் : ஒரு நாளைக்குள் ஒருத்தன் வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளை அழகாக படம் பிடித்திருந்தார்கள். சின்னச் சின்ன குறைகள் இருந்தாலும் படம் வேகமாக நகர்ந்ததால் குறைகள் கண்ணுக்குத் தெரியவில்லை. 'பிஸ்தா...' பாட்டு கலக்கல் ரகம்.

தில்லு முல்லு : அகில உலக சூப்பர் ஸ்டார் சிவா நடிச்ச படன்னு பேர் போட்டாங்க... ஒரிஜினல் தில்லு முல்லுல அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலிய பெருமாள் சந்திரன்/ இந்திரன் மட்டுமே கண்ணுக்குள் நின்றார்கள். பாவம் சிரிக்க வைக்க நிறைய சிரமப்பட்டார்கள். சிரிப்பு வருவதற்குப் பதில் தூக்கம் வந்துவிட்டது. பாதிப்படத்துக்கு மேல் யாருமே பார்க்காத்தால் நிறுத்திவிட்டோம்.


மாசாணி : பேய் படம் போல் ஒரு பில்டப்பு படம் முழுவதும்... அரைகுறையாக இருக்கும் சிலையை செய்ய வருபவரை ஆவி விரட்டி அடிக்கிறது.  அதற்காக ஆவி செய்யும் லீலைகளையெல்லாம் விட்டாலாச்சாரியா படத்துலயே பார்த்தாச்சு... யார் வந்து எப்படி சிலையை செய்கிறார்கள் என்பதே படம். மாசாணியாக வரும் இனியா, அவரைக் காதலிக்கும் ராம்கிக்கு நல்ல நடிப்பு. செந்தூரப்பூவே பாடலுடன் ராம்கியின் அறிமுகம் அருமை. மீண்டும் வலம் வரலாம். ரோஜா வில்லியாக வந்து போகிறார். சரத்பாபு, ஒய்.ஜி.மகேந்திரன் எல்லாம் இருக்கிறார்கள்.

கரிமேடு : பெண்கள் இருக்கும் வீட்டில் வேவு பார்த்து கொலை செய்து... அதுவும் கழுத்தை அறுத்து... கற்பழித்து... திருடும் கும்பல். அவர்களைத் தேடும் போலீஸ் என நகர்கிறது. பன்றிக்கறி சாப்பிடுவதும், தண்ணி அடிப்பதும் பெண்களுடன் கூத்தடிப்பதும், கழுத்தை அறுப்பதும், உறவு கொள்வதுமாக நகரும் கதை நம்மை மிரள வைத்தாலும் ஆபாசத்தின் உச்சமாக அன்னக்கொடிக்கு போட்டியாகத்தான் இருக்கிறது.

இசக்கி : படம் எடுத்திருப்பது காரைக்குடியில்... கதை நடக்கும் களம் மதுரைக்கு அருகில்... நம்ம ஊர்ல நாம பார்த்த இடங்களெல்லாம் மதுரையின்னு சொல்லும் போது போலீஸ் பீட்டில் இருக்கும் காரைக்குடி SVR சைக்கிள் கடை விளம்பரத்தில் மதுரை என்று ஒட்டியிருப்பது போல் மனசில் ஒட்டாமல் நிற்கிறது. படத்திலும் ஏகப்பட்ட டுவிஸ்ட்டுகள்... முதல் பாடலை மெலோடியாக அழகாக கொடுத்திருந்தார் ஸ்ரீகாந்த் தேவா, மற்ற பாடல்கள் எல்லாம் அவரது ஆர்ப்பட்டமான இசையில்... அவ்வளவாக நல்லாயில்லை. படமும் ஏமாற்றமாய் முடிந்துவிட்டது.


மொத்தத்தில் பார்த்த படங்களில் ஒரு சில படங்கள் தவிர மத்ததெல்லாம் மொக்கைதான். திறமையை நிரூபிக்க வரும் இளம் இயக்குநர்கள் எதோ ஒரு கதையை சில பழைய கதைகளுடன் கலந்து கொடுத்து தங்களைத் தாங்களே அழித்துக் கொள்கிறார்கள். விவசாயம் பண்ண வர்ற இடத்தில் வெளச்சல் நல்லா இருந்தாத்தான் நீடிக்க முடியும்.. வெளையாமல் போனால் பொழைப்பு நாறிப்போயிடும். பெரிய இயக்குநர்களே பெட்டியைக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். புதியவர்கள் புதுமையாய் வந்தால் நீடிக்கலாம் என்பதை புரிந்து செயல்பட்டால் நிலைத்து நிற்கலாம்.

அப்புறம், மறைந்த இயக்குநர் ராசுமதுரவன் அவர்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.அவரை இழந்து வாடும் அவரது குழந்தைகளுக்கு இறைவன் நல்வாழ்வைக் கொடுக்கட்டும். ராசுமதுரவனின் மாயாண்டி குடும்பத்தார் பார்த்தபோது கண்கள் கலங்கியதை மறுக்க முடியாது. நல்ல இயக்குநர் புகையால் உயிரை விட்டிருக்கிறார். புகையும் குடியும் இன்று நன்றாக இருந்தாலும் நாளை உயிருக்கே எமனாகலாம். சிந்திப்போம்.

சரி, சிங்கம் -II கதையே இல்லாமல் கல்லாக் கட்டுதாமே... பாக்காம எதுவும் சொல்லக்கூடாது... பார்த்துட்டுப் பேசுவோம்.

படங்களுக்கு நன்றி : கூகிள் இணையம்.
-'பரிவை' சே.குமார்.

3 எண்ணங்கள்:

ஜோதிஜி சொன்னது…

கடந்த ரெண்டு மூணு வாரங்களில் நிறைய படங்கள் பார்த்தேன். நீங்க குறிப்பிட்ட சில படங்களின் தலைப்புகளை பார்த்து தான் இப்படி ஒரு படம் வந்துள்ளதே எனக்கு தெரிந்தது.

'பரிவை' சே.குமார் சொன்னது…

இன்னும் சில படங்கள் பார்த்தேன்...
எல்லாமே இதே ரகம் அண்ணா...

நல்லவேளை நீங்கள் பார்க்காதது.

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Unknown சொன்னது…

சிங்கம் 2 பார்க்க போறிங்கள மறக்காம சாரிடான் மாத்திரை பக்கத்துல்ல வச்சுகோங்க படம் நல்ல தான் இருக்கு ஆனா இந்த dsp தொல்லை தாங்கல