மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 19 ஜூலை, 2013

கோபிநாத்தின் பாஸ்வேர்டு


15 வருஷங்களுக்கு முன்னால் சென்னை சைதாப்பேட்டையில் நண்பர்கள் நாலைந்து பேர் ரூம் எடுத்துத் தங்கியிருந்தோம். வேலை தேடுகிற நண்பர்கள், வீட்டைப் பார்த்துக்கொள் வார்கள். வேலைக்குப் போகிறவர்கள், வீட்டுச் செலவைப் பார்த்துக்கொள்வார்கள். இரவு ஒருவேளை மட்டும் யாராவது ஒருவர் சமைப்போம். வீடே அமளிதுமளிப்படும். ஒருவழியாக நள்ளிரவு சாப்பாடு பரிமாறப்படும். வாயில் வைக்க முடியாது. இருந்தாலும் பட்ஜெட்டுக்குள் செலவு செய்ய, ஒரு வேளையாவது சமைத்துச் சாப்பிடவில்லை என்றால்கட்டுபடியாகாது.
எதிரில் இருந்த சலவைக் கடை அக்காவிடம் 'சமையலுக்கு யாராவது இருந்தா, சொல்லுங்க’ என்று மனுப் போட்டுவைத்திருந்தோம். அவரும் ஆள் தேடி அலுத்துப்போய்விட்டார். தினமும் காலையில் டீ குடித்துவிட்டு, அந்த சலவைக் கடை வாசலில் உட் கார்ந்து ஓசி பேப்பர் படிப்பது என் வாடிக்கை. நான் அங்கு போகிறபோதெல்லாம் ஒரு பாட்டி, சலவைக் கடை அக்காவிடம் ஏதோ சொல்லிப் புலம்பிக்கொண்டு இருப்பார்.
ரேடியோ கேட்டுக்கொண்டே வேலை பார்ப்பதைப் போல் அந்தப் புலம்பலை கேட்டுக்கொண்டே வேலை பார்ப்பார் அக்கா. இடையிடையே, 'விடு... விடு. எல்லாம் சரியாகிடும்’ என்று சமாதானம் சொல்வார். 'அஞ்சு புள்ளைகளைப் பெத்து, இப்புடி அஞ்சுக்கும் பத்துக்கும் அரக்கப் பறக்கவேண்டி யிருக்கு...’ என்று பாட்டி அரற்றும். 'காலை யிலேயே ஒப்பாரிவைக்காதே’ என்று அந்த அக்கா அலுத்துக்கொள்ளும். ஏதோ பழகின பாவத்துக்காக அக்கா, பாட்டியின் கதை யைப் பல்லைக் கடித்துக்கொண்டு கேட்டு வைக்கும். நான் உட்கார்ந்து பேப்பர் படிக் கும் படிக்கட்டுக்கு அடுத்துக் கிடக்கிற பெரிய கல்தான் பாட்டியின் ஸ்பாட்.
'ஏன் தம்பி சமையலுக்கு ஆள் வேணும்னு கேட்டுட்டே இருந்தீங்களே, இந்தக் கெழவிய வேணா வரச் சொல்லட்டுமா... பாவம் அஞ்சு புள்ளைகளைப் பெத்தும், அநாதை மாதிரி நிக்குது. இந்தா இப்படித்தான் அங்கங்க போயி அழுது புலம்பிட்டுத் திரியும். யாராச்சும் பார்த்து, ஏதாச்சும் செஞ்சாதான் உண்டு’ என்று  அக்கா சொன்னது. அடுத்த நாள் அந்தப் பாட்டியை, 'வா... எங்க வீட்ல  அஞ்சு பசங்க இருக்கோம். உன் புள்ளைங்களா நினைச்சுக்கோ’ என்று கூட்டிவந்தேன்.
பத்து நாளில் எங்கள் ஐந்து பேருக்கும் அது சொந்தப் பாட்டி மாதிரியே ஆகிப்போனது.  தினந்தோறும் அரை மணி நேரமாவது ஆற்றாமைத் தாங்காமல் பாட்டி அழும். 'ரெண்டாவது மவன் மூணு தெரு தள்ளித்தான் இருக்கான். வந்து ஒரு எட்டுக்கூடப் பாக்கலை. 'எனக்கு எழுதிக் கொடுக்கிறேன்னு வீட்டுல உட்கார்ந்துகிட்டு ஊரைக் கூட்டி ஒப்பாரி வைக்கிறியா?’னு கடைசி மவன் தினமும் வந்து சண்டை போடுறான்’ என்று ஒவ்வொரு நாளும், பாட்டி ஒவ்வொரு கதை சொல்லும்.
பாட்டிக்கு 45 வயது இருக்கும்போதே வீட்டுக்காரருக்கு ஏதோ வியாதி வந்து இறந்துபோய்விட்டாராம். இருந்த கொஞ்சம் சொத்துக்களை விற்று இரண்டு பிள்ளை களுக்குத் திருமணம் செய்த பாட்டி, இட்லிக் கடைவைத்து ஏனைய பிள்ளைகளைக் கரை சேர்த்திருக்கிறது. அரசாங்கம் கொடுத்த வீடு, வீட்டுக்காரர் கிராமத்தில் வாங்கிப் போட்டகொஞ் சம் நிலம் என ஒவ்வொன்றாகப் பிள்ளைகளுக்கு எழுதிக்கொடுத்த பாட்டி, தன் பிள்ளைகள் கடைசி வரைக்கும் கால் வயிற்றுக் கஞ்சியாவது ஊற்றுவார்கள் என்று நம்பிக்கையோடு இருந்திருக்கிறது.
கடைசியாக இருந்த குடிசை வீடு கடைக்குட்டி பையனுக்கு என்றும், சாகும் வரை பாட்டி அந்த வீட்டில் இருந்துகொள்ளலாம் என்றும் பேச்சு வார்த்தையில் முடிவெடுத்திருக்கிறார்கள்.

அந்தக் கடைசிப் பையன் ஒருநாள் எங்கள் வீட்டுக்கும் வந்தான். பாட்டியை அடிக்காத குறையாக மிரட்டினான். 'ஏன்யா இப்படிப் பண்றே...’ என்று அவன் கன்னம் தடவி அழுத பாட்டியின் கையைத் தட்டிவிட்டு, 'இந்தப் பசப்புற வேலைஎல்லாம் என்கிட்டே வெச்சுக்காத. என்னைய மட்டும் ஓட்டாண்டியா விட்டுட்டு, மத்தப்  புள் ளைங்களுக்கு மட்டும் எல்லாத்தையும் எழுதிக் கொடுத்தேல்ல... நீ நல்லாவே இருக்க மாட்டே’ என்று சபித்தான். நாங்கள் நாலைந்து பேராக இருந்ததால், அதற்கு மேல் கத்த முடியாமல் வெடுக்கென்று வெளியே போய்விட்டான்.  
அன்று முழுவதும் பாட்டி அழுதுகொண்டே இருந்ததாக சாயந்தரம் நாங்கள் வந்தபோது அக்கா சொன்னது. இரவு எங்களுக்குச்சாப்பாடு வைக்கும்போதுகூட பாட்டி அழுதுகொண்டே தான் இருந்தது. 'ஒண்டுறதுக்குனு எனக்கு இருக் கிற ஒரே இடம் அதுதான். அதையும் குடுத்துடுனு என்னைக் கொல்றானுங்களே’ என்று புலம்பியது.
அடிக்கடி இந்தப் பாட்டி இப்படி அழுவது எங்களுக்கு சில நேரம் எரிச்சலாகவும் இருக்கும். மகன்காரன் வேற இங்க வந்து கத்துறான்.நமக்கு எதுக்கு வீண் வம்பு என்று தோன்றும். 'சினிமா ஹீரோ மாதிரி கிழவியக் கூட்டியாந்தல்ல... இப்பப் பாரு, தேவையில்லாத பிரச்னை’ என்று சில நேரம் நண்பர்கள் கடிந்துகொள்வார்கள்.
இருந்தாலும் எங்கள் எல்லாருக்குமே அந்தப் பாட்டியைப் பிடிக்கும். காலையில் அவசரமாக கிளம்பி ஓடுகிற நண்பனின் பின்னால் தட்டில் நாலைந்து இட்டிலியை வைத்துக்கொண்டு, 'சாப்பிட்டுப் போப்பா... சாப்பிட்டுப் போப்பா’ என்று அனத்தும். 'லூஸாட்டம் பேசாத பாட்டி’ என்று திட்டினாலும், பாட்டிக்காகவாவது இட்லியைச் சாப்பிட்டுவிட்டு, வேலைக்கு ஓடுவோம். துவைக்கிறதுக்குப் போடுகிற சட்டை பேன்டில் தவறுதலாக விட்ட காசு, பணத்தை மறக்காமல் எடுத்துவைத்திருக்கும்.
10 மணி வரை தூங்கும்போது, 'எருமை மாடுங்களா...’ என்று கோபமாகத் திட்டும். அறை நண்பர்களும் பாட்டியை ஒரு வேலைக்கார அம்மாவைப் போல பார்த்தது இல்லை. வெளியூர் போய் வரும்போது பாட்டிக்காக ஏதாவது வாங்கிவருவார்கள். புதுச் செருப்பு, சேலை, மாத்திரை மருந்து என ஆளுக்கொன்றாகப் பார்த்துக்கொள்வோம். ஆனாலும் பாட்டி தினமும் அழும். அக்காவிடம் புலம்பும். அவ்வப்போது எங்களுக்கும் எரிச்சலாகத்தான் இருக்கும்.
ஒருநாள் சலவைக் கடையில் உட் கார்ந்திருந்த பாட்டியை, கடைசி மகன் அடித்துவிட்டான். பாட்டிக்கு இடது கண்ணுக்குக் கீழே வீங்கிவிட் டது.  சலவைக் கடை அக்காவின் வீட்டுக்காரர் அவனை அடித்து விரட்டியிருக்கிறார். நாங்கள் வீட் டுக்கு வந்து சேர்ந்தபோது பாட்டி முகம் ரொம்பவும் வீங்கியிருந்தது. மெடிக்கல் ஷாப்பில் இருந்து மருந்து வாங்கிக் கொடுத்தோம்.
'இது நமக்கு சரிப்பட்டு வராது. அந்தப் பையன் ஏரியாக்காரனுங்களைக் கூட்டிட்டுவந்து சண்டைக்கு இழுத்தா, நாம ஒண்ணும் செய்ய முடியாது. ஏதாவது காசு கொடுத்துப் பாட்டியை அனுப்பிடலாம்’ என்று ஒரு நண்பன் சொன் னான். 'ஆமாண்டா... வீட்டு ஓனர் நம்மளைக் காலிபண்ணச் சொன்னா, நமக்குப் பிரச்னையா யிடும்’ என்று இன்னொரு நண்பன் ஆமோதித் தான். 'எல்லாம் உன்னாலதாண்டா’ என்று என் தலையில் ஓங்கித் தட்டினான் ஒருவன். 'ஏண்டா பயப்படணும்? பாவம்டா பாட்டி. நாமபோலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளையின்ட் கொடுக்கலாம்...’ என்று பல மாதிரி எங்களுக்குள் பேச்சுவார்த்தை நடந்தது.

அன்று இரவு சாப்பிடும்போது, 'நான் போயி டுறேம்பா... என்னால உங்களுக்குப் பிரச்னை வேண்டாம்’ என்று பாட்டி தேம்பித் தேம்பி அழுதது. 'வேணாம் பாட்டி, நீ இங்கேயே இரு’ என்று எங்களால் அழுத்தமாக சொல்ல முடிய வில்லை. வீட்டுக்காரர் வீட்டைக் காலிபண்ணச் சொன்னால் என்ன செய்வது என்கிற பயம், பாட்டியின் அழுகையைவிடப் பெரிதாகத் தெரிந்தது. 'ஏன் பாட்டி சொத்துபத்தோடதான இருந்த... எழுதிக் கொடுக்கறப்போ, உனக்கு ஒரு பங்கை எடுத்துவெச்சிருக்கலாம்ல’ என்று ஒரு நண்பன் கேட்டான். 'பெத்த புள்ளைங்ககணக்கு பார்க்கும்னு நான் நினைக்கலேய்யா’ என்று பாட்டி பெருங்குரல் எடுத்து அழுதது. 'இன்னைக்கு வந்து என்னைய அடிச்சுப்போட்டு போனானே... என் கடைசி மவன், அவன வளர்க்க நான் என்னப் பாடுபட்டுருக்கேன் தெரியுமா? என் காலையே சுத்திச் சுத்தி வந்த புள்ள, இன்னைக்கு என்னைய ரோட்டுல போட்டு அடிக்கிறான். அநாதையாட்டம் நிக்கிறனே...’ பாட்டியின் அழுகையில் இயலாமையும், ஏமாற்றமும், விரக்தி யும் மண்டிக்கிடந்தது. 'மூத்தவன் தலையெடுத்து மத்தவங்களைக் காப்பாத்துவான்னு நெனச்சேன். அவன் பொண்டாட்டி ஊரோட போய் இருந்து கிட்டான். மத்தவங்க நல்லது, கெட்டதுக்குக்கூட எட்டிப்பாக்குறது இல்ல. இந்தப் பய, இருக்குற அந்தக் குடிசை வீட்டை குடுத்துறச் சொல்லி என்னைப் போட்டு அடிக்கிறான்... இந்தப் புள்ளைகளை மனுசராக்கிப் பாக்க நான் பட்டபாடு சாமிக்குத் தான் தெரியும்.’
பாட்டி தன் அழுகைக்கு இடையே விட்டு விட்டுப் பேசியது. 'சாமிகளா... பெத்த ஆத்தா, அப்பன் வயிறு எரியுற மாதிரி மாறிப் போயிடாதீக’ என்று எங்களிடம் தேம்பிக்கொண்டே சொன்னது.
அம்மா, அப்பாதான் உலகம் என்று வாழ்கிற பிள்ளைகள் ஒரு காலகட்டத்தில் தங்கள் உலகத்தில் வயதாகிப்போன கிழவனுக்கும் கிழவிக்கும் இடம் இல்லை என்று எப்படி சமாதானம் ஆகிவிடுகிறார்கள்? 'கிழவி கஷ்டப்படுதுதான்... நான் என்ன செய்ய? என் வாழ்க்கையே நோக்காடாக் கிடக்கு’ என்று எப்படி சமரசம் செய்துகொள்கிறார்கள்?
வாழ வழியத்த ஏழை வீடுகள்தான் என்றில்லை... நடுத்தரக் குடும்பங்கள், பணக்காரக் குடும்பங்கள் எனப் பலதரப்பட்ட குடும்ப நிறுவனங்களிலும் அம்மா, அப்பா அதிகாரம் தொலைந்தவர்களாக, அண்டிப் பிழைக்கும் மனிதர்களாக மாறிப்போய்விட்டதை அறிந்தும், அதை ஒரு பொருட்டாக நினைக்காத கல் மனசு நமக்கு எப்படி வருகிறது?
அவரவருக்கு என்று குடும்பம், குட்டி என்று வந்து பொருளாதாரத் தேடல்கள், வாழ்க்கைப் போட்டி என்ற வட்டத்துக்குள் வந்துவிடுவதால், அவர்களின் துயரங்களும் மனவலிகளும் நம்மை துன்புறுத்தாமல் விட்டுவிடுகிறதா? தீபாவளிக்கும் பொங்கலுக்கும்கூட துணிமணி எடுத்துக்கொள் ளாமல், ஒரு நல்ல சாப்பாடு சாப்பிடாமல் பிள் ளைக்கு பொம்மை வாங்கவும், தின்பண்டம் வாங்கவும் அந்தக் காசை ஒதுக்கிவைத்த அந்த மனிதர்கள், சுமையாகத் தெரியக்கூடிய அளவுக்கு காலம் நம்மைக் கொடுங்கோலர்கள் ஆக்கி விடுகிறதா?
நோய், நொடி என்று வந்த பிறகு கன்னியாகுமரிக்குப் போகிற ரயிலில் டிக்கெட் எடுத்துக் கொடுத்து, 'இந்தா வருகிறேன்...’ என்று வீட்டுக்குக் கிளம்பிப் போகிற பிள்ளைகளுக்கு, நாளைக்கு நம் பிள்ளை இதை நமக்குச் செய்தால் என் னாவது என உள் மனசு குடை யாதா? தன் செல்லப் பிள்ளைகளைக் கொஞ்சுகிறபோதாவது, 'இப்படித்தானே நம்ம அப்பா வும் அம்மாவும் நம்மை பாசத்தைக் கொட்டி வளர்த்திருப்பார் கள். அவர்களை பட்டினி கிடக்கவிடுகிறோமே’ என்று மனசு பரிதவிக்காதா?
தன் பிள்ளைக்கு உடம்பு சரியில்லை என் றால் இருப்புகொள்ளாமல் தவிக்கிற மனசுக்கு, 'என் அம்மாவும் இப்படித்தானே துடித்திருக்கும்’ என்று தோன்றாமல்போகுமா? எத்தனைநியாயங் கள் கற்பித்தாலும், 'அஞ்சு புள்ளைங்களைப் பெத்தேன்ய்யா... இன்னிக்கு நான் அநாதையா நிக்கிறேன்’ என்று அழுது அரற்றும் அந்தப் பாட்டிக்கு என்ன பதில் சொல்வது?
60 வயதில், 'பெத்த புள்ளைங்க கிட்ட கணக்கு பார்க்க முடியுமா?’ என்று கேட்ட அந்தப் பாட்டியைப் போலத்தான், பல பெரியவர்களும் தங்களுக்கு என்று எதையும் ஒதுக்கி வைத்துக்கொள்ளாமல், பிள்ளைகளே கதி என்று கிடக்கிறார்கள். தவறுகளை உரிமையோடு சுட்டிக் காட்ட முடியாத அளவுக்கு அவர்களின் அதிகார உலகம் சுருங்கிப்போகிறது. பேரப் பிள்ளைகளைப் பார்த்துக்கொள்ளும் பாது காவலர்களாகப் பணியமர்த்தப்படுகிறார்கள்.
'இந்த மனுசங்க மனசு ரொம்பக் கல்லாயிடுச்சு சார்... இன்னைக்கு ரெண்டு மாதிரி பாட்டி தாத்தாதான். ஒண்ணு, பணம் இருக்குற பாட்டி தாத்தா. இன்னொண்ணு, பணம் இல்லாத பாட்டி தாத்தா. பணம் இருந்தா, வயசானகாலத்து லயும் மரியாதை கிடைக்கும். அவ்வளவுதான்’ பொட்டில் அடித்ததைப் போல் என் நிகழ்ச்சியில் பேசிய பெரியவர் ஒருவர் சொன்னார்.
ஆபீஸில் இருந்தபோது சல வைக் கடை அக்கா போன் செய் தது, 'ஏம்ப்பா... அந்தக் கெழவி செத்துப்போச்சு. சாயந்தரம் எடுக் கிறாங்களாம்’ என்றது. பாட்டி யின் வீட்டைத் தேடிப் பிடித்து அங்கே போனபோது, பாட்டி யின் கடைசி மகன் தன் அண்ணன்களோடு சண்டை போட்டுக்கொண்டு இருந்தான். 'எனக்கு முறையா அந்த வீட்டை எழுதிக் கொடுத்துருங்க’ என்று  கத்தினான். எப்பவுமே அழுதுகொண்டிருக்கும் பாட்டி ரொம்ப அமைதியாக, நிம்மதியாகத் தூங்குவதைப் போல இருந்தது. பெரியவர்கள் சமாதானம்செய்து, பிறகு போலீஸ் வந்து பாட்டியின் சடலத்தை எடுத்தார்கள்.
பொண்டாட்டி ஊரோடு போய்விட்ட மூத்த மகன், 'வீட்டை தனக்கு எழுதித் தா...’ என்று அடித்துப்போட்ட கடைசி மகன், வீட்டு ஓன ருக்கு பயந்து பாட்டியைக் கைவிட்ட நாங்கள், பாட்டி நல்லா இருந்த காலத்தில் ஒட்டி உறவாடிய உறவுகள், இந்தச் சமூகம், இவர்கள்... எல்லாருமே கடைசிக் காலத்தில் பாட்டியைக் காப்பாற்ற முடியாமல் போன சூழ்நிலைக் கைதி களா? இல்லை... சுயநலவாதிகளா? தெரிய வில்லை. அந்தப் பாட்டிக்கு அவர் மகன் கொள்ளிவைத்தபோது, மானுடத்தின் எல்லா விழுமியங்களையும் தீயில் இட்டுக் கொளுத்தியது போல இருந்தது.
நன்றி : எழுத்து - கோபிநாத், படம்- கே.ராஜசேகரன்
நன்றி : ஆனந்த விகடன்
-'பரிவை' சே.குமார்

3 எண்ணங்கள்:

ராஜி சொன்னது…

நீங்க படிச்சு ரசிச்சதை நாங்களும் படிக்க வைத்தமைக்கு நன்றி

சாந்தி மாரியப்பன் சொன்னது…

பகிர்விற்கு நன்றி குமார்.

இறந்த பிறகுதான் அந்தப்பாட்டிக்கு அமைதி கிடைச்சிருக்கு :-(

Unknown சொன்னது…

எப்படி தான் மாறி போராங்களோ? இன்று இவர்களின் நிலை நாளை அவர்களுக்கும் வரும் என்பதை மறந்து