மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

செவ்வாய், 1 ஏப்ரல், 2014

மனசு பேசுகிறது : கௌரவக் கொலைகள்

''நான் தான் கொன்றேன்''... பெண் சாப்ட்வேர் என்ஜினியரை கவுரவக் கொலை செய்த தந்தை ஒப்புதல்

காதலை ஏற்காத பெற்றோர் பெண்ணையோ பையனையோ கொலை செய்தால் அதைக் கௌரவக் கொலை என்று அழைக்கிறார்கள். எது கௌரவக் கொலை? ஒரு உயிரை எடுப்பது என்பது கௌரவமா? தன் மகனோ மகளோ வேற்றுச் சாதியினரையோ மதத்தினரையோ காதலித்து மணம் புரிந்தால் அவர்களைத் தந்திரமாக கூட்டி வந்து கொல்வதில் எந்தக் கௌரவம் காக்கப்படுகிறது? காதலிப்பது என்பது தாங்கள் வளர்த்த வாரிசைக் கொல்லும் அளவுக்கு பாவச் செயலா?

இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியில் வைதேகி என்ற பெண் தனது பக்கத்து வீட்டில் குடியிருந்த சுரேஷ் குமார் என்பவருடன் சிறுவயது முதலே பழகியிருக்கிறார். இந்தப் பழக்கம் காதலாக மாற இருவரும் மதுரையில் பதிவுத் திருமணம் செய்து கொண்டு கேரளாவுக்கு சென்று வாழ்க்கை நடத்தியிருக்கிறார்கள். கபட நாடகம் ஆடி ஐந்து மாதக் கர்ப்பிணியாக இருந்த வைதேகியையும் சுரேஷையும் தேனிக்கு வரவழைத்து பெண்ணை மட்டும் வீட்டுக்குக் கூட்டிச் சென்று கர்ப்பத்தைக் கலைக்கச் சொல்லி மிரட்ட, அதற்கு அடிபணியாததால் கொலை செய்திருக்கிறார்கள். மனைவியைக் கூட்டிப் போனார்கள் காணவில்லை என கணவன் நீதிமன்றத்துக்குப் போக இந்தக் கொலை வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

ஹைதராபாத்தில் பெற்ற தகப்பனே மகளைக் கொலை செய்திருக்கிறார். இதுவும் காதல் திருமணத்தினை ஏற்க்காமல் கபட நாடகத்தால் நடந்த கொலைதான். பெண்ணின் காலில் இட்ட மருதாணி அழியும் முன்னரே உயிரை எடுத்திருக்கிறார். மேலே போட்டிருக்கும் படத்தைப் பார்க்கும் போது மனசு வலிக்கிறது. இதைக் நாந்தான் கௌரவத்தைக் காக்க கொலை செய்தேன் என்று பெருமையாகச் சொல்லியிருக்கிறார். இதே போல் பத்திரிக்கைச் செய்திகளில் தினம் ஒரு செய்தி வந்து கொண்டுதான் இருக்கிறது. தனது பெண்ணோ பையனோ காதலித்ததால் தங்களது சாதிக்கும் மதத்துக்கும் கௌரவக் குறைச்சல் வந்து விட்டது என்று தரங்கெட்ட மனிதர்கள் செய்யும் மகாபாதகக் கொலைகளை பத்திரிக்கைகள் கௌரவக் கொலைகள் என்று அழைப்பது எந்த விதத்தில் நியாயம்?

ஒரு உயிரை எடுப்பதால் தங்களது கௌரவம் காக்கப்பட்டுவிட்டது என்று கொண்டாடும் இந்த வெறியர்களின் கௌரவம் எந்த விதத்தில் காக்கப்பட்டது என்பதை இந்தக் கொலையாளிகள் சொல்வார்களா? இல்லை இதன் பின் இந்தச் சாதியிலோ அல்லது மதத்திலோ கௌரவம் காக்கப்பட வேண்டும் என்பதால் காதல் முளைவிடாமல் இருக்குமா? இந்த வெறி பிடித்த மிருகங்களுக்கு குலக் கௌரவத்தைக் காத்துவிட்டாய் என அவர்கள் சார்ந்த சாதியும் மக்களும் வெண்சாமரம் வீசலாம்... நீ வீரன்டா என வசனம் பேசலாம்... பார்த்துப் பார்த்து வளர்த்த உயிர் போனதால் கிடைக்கும் இதெல்லாம் ஒரு வெற்றியா... இல்லைவே இல்லை இது இரத்தத்தில் ஊறிய சாதி வெறி.

தனது இரத்தத்தை பாலாக்கி மாரில் போட்டுத் தாலாட்டிப் பாலூட்டிய தாய்... தனக்கு இல்லை என்றாலும் இருப்பதை எல்லாம் பிள்ளைக்கு வைத்து பட்டினி கிடக்கும் தாய்... இப்படி பிள்ளையின் வளர்ச்சியில் சந்தோஷம் காணும் தாய்க்கு தன் பிள்ளை காதலித்து திருமணம் செய்து கொண்டு வாழப் பொறுக்காமல் கொலைக்கு உடன்படும் மனம் எங்கிருந்து வருகிறது..? கௌரவம் என்பது பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்த பிள்ளையை விட பெரியதாகத் தெரிவது எப்படி? கொலைக்கு உடன்படும் தைரியத்தைத் தருவது அவர்களின் குலக் கௌரவமா?

தோளில் தூக்கி வளர்த்த பிள்ளை... மாரில் மிதித்த பிள்ளை... விளையாட்டாய் செய்வதில் எல்லாம் சந்தோஷிக்கும் அப்பா... படிக்கும் காலத்தில் அம்மாவுக்குத் தெரியாமல் பணம் கொடுக்கும் அப்பா... பிள்ளையின் ஒவ்வொரு வளர்ச்சியிலும் சந்தோஷப்பட்டு தனது மீசையை முறுக்கிக் கொள்ளும் அப்பா... தனது பிள்ளைக்குப் பிடிக்கும் என்பதால் கையில் காசிருந்தாலும் இல்லாவிட்டாலும் வாங்கி வரும் அப்பா.... வேற்று சாதியினரை காதலிக்கும் போது மட்டும் பாசத்தை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு கௌரவத்தை அணிந்து கொள்வது ஏன்? தான் பெற்ற பிள்ளையை தானே கொலை செய்யும் அளவுக்குப் போவது ஏன்? தனது உயிரான பிள்ளையின் உயிரைவிட குலக் கௌரவம் பெரிதாகப் போவது எப்படி?

காதல் என்பது இன்று நகரத்தில் மட்டுமல்ல கிராமங்களிலும் வேர்விட ஆரம்பித்து விட்டது. எத்தனையோ காதல்கள் ஜெயித்திருக்கின்றன. நிறைய இளவரசன்களும் காதல் என்னும் வலையில் சிக்கி சாதி என்னும் பிடிக்குள் சிக்கி சின்னாபின்னமாகி இருக்கிறார்கள். நாம் எப்பவும் பிரபலங்கள் காதலி ஜெயித்தால் போற்றுகிறோம்... வாழ்த்துக்கிறோம்... அதே நம் குடும்பத்தில் என்றால் கொலை செய்யும் அளவுக்குப் போகிறோம். நயன்தாரா- சிம்பு காதல் விவகாரமா வாய் கிழியப் பேசுவோம். சிம்பு ஏமாத்திவிட்டான்... அவன் அப்படித்தான் என்று எள்ளி நகையாடுவோம். இதே நம் சாதிப் பெண் என்றால் ஏமாற்றாமல் காதலித்தவன் கைபிடித்தாலும் அவர்களைத் தேடிக் கண்டுபிடித்து வீட்டிற்கு அழைத்து வந்து காதும் காதும் வைத்தது போல் கமுக்கமாக வேலையை முடித்துவிட்டு விடிந்ததும் எப்பவும் போல் வேலை பார்க்க ஆரம்பித்து விடுகிறோம். 

சினிமாக்களிலும் கௌரவக் கொலைகளை... மன்னிக்கவும் இந்தப் பாதகக் கொலைகளை காட்டுகிறார்கள். குறிப்பாக தென்மாவட்டம் சார்ந்த கதைக் களங்கள் அமைந்த படங்களில் இப்படிப்பட்ட கொலைகளை வைத்திருக்கிறார்கள். அவர்கள் விழிப்புணர்வுக்காகச் செய்கிறார்களா இல்லை ஊக்குவிக்கிறார்களா என்பது தெரியாமல் நாமும் உச் கொட்டி ரசிக்கிறோம். முதலில் பத்திரிக்கை உலகம் இது போன்ற கொலைகளை கௌரவக் கொலைகள் என அச்சில் ஏற்றுவதை முதலில் நிறுத்த வேண்டும். ஒரு உயிரை எடுப்பதில் என்ன கௌரவம் வேண்டிக் கிடக்கிறது. கௌரவத்திற்காக சாக வேண்டும் என்றால் பெற்ற பிள்ளை இப்படி ஓடிப்போயிருச்சேன்னு குலக் கௌரவத்தைக் காக்க நீ செத்துப் போ... ஒரு உயிரை துடிக்கத்துடிக்க கொலை செய்யும் உரிமையை உனக்கு யார் கொடுத்தா? அந்தளவுக்கு சாதியும் மதமும் உன்னை ஆட்கொள்கிறதா?

சாதி இல்லாத சமுதாயமும் மதம் இல்லாத மனிதமும் மலர வேண்டும் என்றால் இந்தக் கௌரவக் கொலைகளை ஒழிக்க வேண்டும். இந்தப் புற்று ஒன்று இரண்டென எங்கும் பரவ ஆரம்பித்துவிட்டது. மொத்தமாக புற்றையே அழிக்க வேண்டும் என்றால்  எங்கள் குலக் கௌரவம் காக்க நாந்தான் கொலை செய்தேன் என்று பெற்ற தாயோ, தந்தையோ, உடன்பிறப்புக்களோ, மாமனோ, மச்சானோ, சித்தப்பனோ, பெரியப்பனோ சொல்லும் போது அவர்களது குரல்வளையை அறுக்க வேண்டும். அப்போதுதான் கௌரவம் காக்க கொலை செய்தேன் என்று எவனும்/எவளும் மார்தட்டிக் கொள்ளமாட்டார்கள்.

தங்கள் பிள்ளைகள் காதலித்தால் அது பிடித்திருந்தால் அவர்களை வாழ்த்தி வாழ வையுங்கள்... இல்லையா அவர்கள் கண்கானாத இடத்தில் உயிருடன் வாழவாவது விடுங்கள்... இந்த மண்ணில் காதல் வாழ வேண்டும் என்பதற்காக அல்ல... உங்களின் ரத்தம்... உங்களின் செல்லம்... உங்களின் வாரிசு வாழட்டும் என்பதற்காக...

மனசு தொடர்ந்து பேசும்.
-'பரிவை' சே.குமார்.

20 எண்ணங்கள்:

நா.முத்துநிலவன், புதுக்கோட்டை சொன்னது…

தர்மபுரி இளவரசன் திவ்யா கதைகள் இந்த மண்ணில் அங்கும் இங்குமாக ஏராளம் நடந்துகொண்டுதான் இருக்கிறது அய்யா... முகத்தில் அறையும் உண்மைகளை நெஞ்சம் கனக்கும் வகையில் எழுதிவிட்டீர்கள். இதற்கெல்லாம் முடிவு? சொந்தச் சாதியில் திருமணம் செய்யத் தடை என்பதாக முடியுமோ என்று தோன்றுகிறது. சரியான தீர்வா என்று எனக்கே தெரியவில்லை. ஆனாலும் இந்தப் பிஞ்சுகளை பெற்றோரே கொல்லும் கொடுமைதான் உச்சம்! இவர்களுக்குக் கடுமையான தண்டனை தரவேண்டும் அய்யா.

தனிமரம் சொன்னது…

உங்கள் ஆதங்கம் புரிகின்றது அண்ணாச்சி!ஊடகம் திருந்துமா!

நா.முத்துநிலவன், புதுக்கோட்டை சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
நா.முத்துநிலவன், புதுக்கோட்டை சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
நா.முத்துநிலவன், புதுக்கோட்டை சொன்னது…

தங்கள் பதிவை மீண்டும் மீண்டும் படித்ததில் வெடித்த என் கவிதை ஒன்றினைத் தங்களுக்கு நன்றி கூறி என் வலையில் பதிவிட்டிருக்கிறேன் - http://valarumkavithai.blogspot.in/2014/04/blog-post.html
நன்றி குமார்.

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

என்ன உலகம் இது
கற்காலத்தை நோக்கியல்லவா வேகமாகப் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.
நெஞ்சம் பதறுகிறது நண்பரே

ஸ்ரீராம். சொன்னது…

செய்தித் தாளைப் பிரித்தால் இது போன்ற செய்திகள் வருவது கண்டுதான் நல்ல செய்திகளைத் தேடிப் பிடித்து வெளியிடும் எங்கள் பாசிட்டிவ் செய்திகள் பகுதி தொடங்கியது.

முதல் படத்திலிருக்கும் பெண்ணின் வாழ்க்கை இப்படி முடிந்திருப்பது கொடூரம். பாவம், எத்தனை திவ்யாக்கள், எத்தனை இளவரசன்கள்...

மகிழ்நிறை சொன்னது…

அந்த பெண்ணின் கால்களில் இருக்கும் மருதாணியை பாருங்கள். எவ்ளோ கனவோடும், மகிழ்ச்சிவோடும், நம்பிக்கையோடும் அம்மா வீட்டிற்கு வந்திருப்பாள் :(( கொடுமை

கோமதி அரசு சொன்னது…

காதலை ஏற்றுக் கொண்டு குழந்தைகள் விரும்பி விட்டார்கள் என்று மணம்முடித்து வைக்கும் பெற்றோர்களும் இருக்கிறார்கள்.
இது போன்ற அரக்கமனம் படைத்த பெற்றோர்களும் இருக்கிறார்கள்.


//தங்கள் பிள்ளைகள் காதலித்தால் அது பிடித்திருந்தால் அவர்களை வாழ்த்தி வாழ வையுங்கள்... இல்லையா அவர்கள் கண்கானாத இடத்தில் உயிருடன் வாழவாவது விடுங்கள்... இந்த மண்ணில் காதல் வாழ வேண்டும் என்பதற்காக அல்ல... உங்களின் ரத்தம்... உங்களின் செல்லம்... உங்களின் வாரிசு வாழட்டும் என்பதற்காக...//

நன்றாக சொன்னீர்கள்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

திட்ட கூட அருகதை இல்லாதவர்கள்... இவர்கள் எல்லாம் மனிதர்களே இல்லை...

துரை செல்வராஜூ சொன்னது…

நெஞ்சு வலிக்கின்றது..

ராஜி சொன்னது…

பத்திரிக்கைகளில் வெளிவராத காதலுக்காக ஒரு கொலை எங்கள் வீட்டருகில் போன வாரம்தான் நடத்தி இருக்காங்க. பாவம் அந்த பையன் அடிச்சு விசம் சாப்பிட வச்சு சாகடிச்சுட்டாங்க. அவன் உருவம் இன்னும் என் கண்ணுக்குள்ளயே! அரும்பு மீசையும், குறும்பு சிரிப்பும் புது வீடு கட்டி அப்பா, அம்மா, மனைவின்னு ஊர் மெச்ச வாழனும்க்கான்னு அவன் சொன்னது இன்னும் என் காதுகளில்

Unknown சொன்னது…

என்ன செய்ய?சாதி ன்னு ஒண்ணு இருக்கிறதே தப்புன்னு அப்பவே,புரட்சிக் கவிஞர் பாடிட்டு...........................போயிட்டாரு!படிச்சவங்க/படிக்காதவங்க ங்கிற வேறுபாடே இல்லாம கௌரவ?! கொலை.ஹூம்...........யாருகிட்ட சொல்லி அழ?

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் சொன்னது…

ஊடகங்கள் நீங்கள் சொல்வது போல கௌரவம் என்ற வார்த்தையை அகற்றி, கொலைகாரன் என்றே சொல்லவேண்டும்..உயிரை மட்டுமல்ல, பிள்ளைகள் தன் மேல் வைத்த நம்பிக்கையைக் கொல்பவர்...
பாவம் மலரும்போதே நசுக்கப்பட்டுவிட்டதே இந்த உயிர்..

Unknown சொன்னது…

மிகவும் எளிமையாக ஆழமாக எழுதியமைக்கு எனது வாழ்த்துக்கள்.

Mrs.Mano Saminathan சொன்னது…

மனதை நெகிழ்த்தும் பதிவு! அன்றிலிருந்து இன்று வரை மாற்ரம் இல்லாதது இந்த ஜாதிப்பற்று மட்டுமே! இந்த வெறிக்கு முன் பாசம், தாய்மை, அன்பு எல்லாமே அடிபட்டு கருகிப்போகின்றன!

வெங்கட் நாகராஜ் சொன்னது…

இந்த கௌரவக் கொலைகள் வடக்கில் பல காலமாக நடந்து வருவது. அதுவும் ஹரியானாவில் மிக அதிகம். இங்கே Khap Panchayat என்று ஒன்று உண்டு. அவர்கள் இந்த திருமணங்களை ஏற்பதே இல்லை. வீட்டினரும் ஏற்பதில்லை. மணமக்களை பிடித்து அவர்களைக் கொன்று விடுவதை சர்வ சாதாரணமாகச் செய்கிறார்கள்.....

என்ன மனிதர்களோ...

ஜோதிஜி சொன்னது…

இது குறித்து வேறொரு பார்வையில் எழுத வேண்டும்

ஞா கலையரசி சொன்னது…

பெற்றோர்களே தங்கள் பிள்ளைகளைக் கொலை செய்வதை ஜீரணிக்கவே முடியவில்லை. இது போன்ற கொலைகள் அதிகரித்தால் தமிழ்நாடு சுடுகாடு ஆகிவிடும்.மனத்தைப் பாதித்த பதிவு!பகிர்வுக்கு நன்றி!

ஞா கலையரசி சொன்னது…

மனதை மிகவும் பாதித்த பதிவு. பெற்றோரே தங்கள் பிள்ளைகளைக் கொல்வதை ஜீரணிக்கவே முடியவில்லை!