மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 14 ஏப்ரல், 2014

என்னருமைக் காதலனே



வெற்றிலைக் கொடிக்காலோரம்
வெசனமா நிக்கயில
நெற்றியில முத்தமிட்டு
நெடுந்தூரம் போனவனே..!

கற்றாழைச் செடி பிடிங்க
கரம்பக்காடு போகயில
கடுதாசி கொடுத்து
காக்கவச்சிப் போனவனே...!

குடிதண்ணிக்காக குடத்தோடு
தனியே நான் போகயில
கைப்பிடித்து வம்பு செய்து
காணாமல் போனவனே..!

கருதறுக்கும் போது
நெல்மணியால் என் கழுத்தில்
குறுகுறுக்க வைத்து
கூறாமல் போனவனே...

பருத்தி எடுக்கயில
பக்கம் வந்து நின்னுக்கிட்டு
வெடிச்ச பருத்திபோல சிரிச்சி
பரிதவிக்க விட்டுப் போனவனே

எத்திசை பார்த்தாலும்
அத்திசையில் சிரிக்கிறாய்...
உறக்கம் மறந்து
உணவும் மறந்து
நினைவுகளைப் பருகி
உயிரை பிடித்திருக்கேன்
உன்னோட வாழ்த்தானே...

மழை கேட்கும் தரிசாட்டம்
காஞ்சிருக்கு எம்மனசு...
எப்பொழுது வருவாயென
முப்பொழுதும் ஏங்குகிறேன்...

அறுவடையும் முடிஞ்சாச்சு...
அக்காவுக்கும் கலியாணமாச்சு...
ஆடி வந்தா நீ போயி
வருசம் ஒண்ணாச்சு...

உலகம் மறந்து
உன்னையே நெனச்சு
ஓடி வருவாயென
ஒரு வருடமாக் காத்திருக்கேன்...

தேடித்தேடி பூத்த கண்ணு
தெருவத்தானே பாத்திருக்கு...
வாடிப்போன நெஞ்சு மட்டும்
வழி தெரியாம தவிச்சிருக்கு...

பரிதவிக்கும் பாவி என்னை
அள்ளி அணைக்க வருவாயென
எண்ணி எண்ணிக் காத்திருக்கேன்...
ஏமாற்றாமல் வந்துவிடு...


-'பரிவை' சே.குமார்.

8 எண்ணங்கள்:

Unknown சொன்னது…

புது வருட வாழ்த்துக்கள்,குமார்!///பரிதவிப்பு நன்று!

ஸ்ரீராம். சொன்னது…

இனிய புத்தாண்டு வாழ்த்துகள். கவிதை அருமை குமார்.

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள்

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ஏங்க வைக்கும் வரிகள் உருக வைக்கிறது...

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

அறிமுகப்படுத்தியவர் : செல்வி காளிமுத்து அவர்கள்

அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : என் மன வானில்

வலைச்சர தள இணைப்பு : செவ்வாயின் செவாலியர்கள்

Unknown சொன்னது…

பிள்ளே மருந்தைக் குடிக்கிறதுக்கு முன்னாலே சீக்கிரம் வந்தா தேவலே ! காதலன் உங்ககூட இருந்தா அனுப்பி வைங்க குமார் ஜி !(ஒரு வேளை நீங்களேதானோ?)
த ம +1

J.Jeyaseelan சொன்னது…

மிகவும் அருமையான கவிதை. பார்த்தேன்! படித்தேன்! ரசித்தேன்!

வெங்கட் நாகராஜ் சொன்னது…

அருமையான கவிதை குமார். பாராட்டுகள்.