மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 18 ஆகஸ்ட், 2014

கிராமத்து நினைவுகள் : கோழி


கிராமத்து நினைவுகளில் நீந்தி மகிழும் போது ஆடு, மாடு, கோழிகளை நினைக்காமல் நீந்தி மகிழ்வதென்பது இயலாத காரியம். கிராமங்களில் இன்று கோழிக்கூடுகள் எல்லாம் காட்சிப் பொருளாய் மாறி வந்தாலும் அன்று அவற்றுக்குள் எண்ணிலடங்கா கோழிகளும் சேவல்களும் இருந்தன என்பதை மறக்க முடியுமா?. 

கோழி அடைக்கும் பஞ்சாரங்களை அழகாகப் பின்னி சைக்கிளில் வைத்து ஊர் ஊராகச் சென்று விற்றவர்கள் இன்று மறைந்திருக்கலாம். ஆனால் சில வீடுகளில் இன்னும் பஞ்சாரம் பனை நாறால் அங்காங்கே கட்டுப்போட்டு காட்சி அளித்துக் கொண்டுதான் இருக்கின்றன.

எங்கள் வீட்டில் ஆரம்பத்தில் கோழிகள் எல்லாம் பஞ்சாரத்திலும் மரத்திலான கூட்டிலும்தான் அடைக்கப்பட்டன. பின்னர் அடுப்படி கட்டும் போது அதை ஒட்டி வெளியே பெரிய கோழிக்கூடு ஒன்றை போட்டு வைத்தோம். அதிலும் நிறையக் கோழிகள் வாழ்ந்து வளர்ந்தன. விடியற்காலை நாலு மணிக்கெல்லாம் சேவல் கூவ ஆரம்பித்து விடும். காலையில் கோழிகளைத் திறந்து விடும் போது அம்மா சில கோழிகளில் முட்டை இருக்கா என்று பார்த்து விடச் சொல்லுவார். அந்த டிபார்ட்மெண்டில் தம்பிதான் பி.ஹச்.டி, நமக்கு அதெல்லாம் தெரியாது... அழகா முட்டை பார்த்து பக்கத்தில் இருந்தால் அடைத்து வைப்பான். தூரத்தில் இருக்கு அப்புறம் வந்து இட்டுரும் எனச் சொல்லி சிலதை விட்டு விடுவான்.

அம்மாவோ தினமும் கோழி முட்டைகளை எடுத்து பத்திரமாக அரிசிப் பானைக்குள் அடுக்கி வைத்து வருவார். கோழி அடைக் கத்த ஆரம்பித்ததும் ஒரு நல்ல நாளில் பெரும்பாலும் ஞாயிற்றுகிழமையில் சாந்துச் சட்டியில் தெருவில் மண் அள்ளி வந்து அதன் மேல் வைக்கோல் போட்டு முட்டைகளை அடுக்கி வைத்து கோழியைப் பிடித்து அதன் மேல் அமர்த்தி கடகம் போட்டு மூடி வைத்து விடுவார். மூன்று நாளைக்கு ஒரு முறையோ நான்கு நாளைக்கு ஒரு முறையோ திறந்து விட்டால் கோழி வெளியில் சென்று ஒரு சுற்று சுற்றிவிட்டு இரை தின்று தனது கடனை எல்லாம் முடித்து மீண்டும் வந்து அமர்ந்துவிடும்.

சரியாக இருபத்தி ஓராவது நாளில் ஒவ்வொரு முட்டையாக உடைந்து குஞ்சி வெளிவர ஆரம்பிக்கும். முட்டை உடைந்து கோழிக்குஞ்சி கீக்கீக்குன்னு கத்திகிட்டே இருந்தால் அம்மா அந்த முட்டையை எடுத்து மெதுவாக கூட்டை உடைத்து கோழிக்குஞ்சியை வெளியில் எடுத்து விடுவார். ஒரு நாள் வைத்துப் பார்த்து பொறித்த குஞ்சுகளை எல்லாம் இறக்கி கோழியோடு சேர்த்து அடைத்து விட்டு பொறிக்காத கூமுட்டைகளையும் அடை இருந்த  சாந்துசட்டி மண்ணையும் தெருவில் கொட்டிவிடுவார்.

பின்னர் இரண்டு மூன்று நாளைக்கு பச்சரிசியை அம்மியில் பொடியாக அரைத்துப் போடுவார். கோழி திங்காமல் குஞ்சிகளுக்கு இரையைக் கொத்திக் கொத்திக் காண்பிக்கும். அப்புறம் காலை எழுந்ததும் அம்மா, டேய் போயி கரையான் அள்ளிக்கிட்டு வந்து போடுங்கடான்னு சொல்ல, ஒரு வாளியை எடுத்துக்கிட்டு கரையான் அள்ளப் போவோம். மாட்டுச் சாணத்தில் பிடித்திருக்கும் கரையானை தட்டி எடுத்து வாளியில் மண்ணுடன் சேர்த்து அள்ளி வருவோம். சில நாட்களில் நாங்களே காய்ந்த எருவைப் பொறக்கி ஒன்றாக வைத்து லேசாக தண்ணீர் தெளித்து வைப்போம். இரண்டு நாளில் கரையான் பிடித்து விடும்.

கதிர் அறுத்த நேரத்தில் கோழிக்குஞ்சு பொறித்திருந்தால் கரையான் அதிகம் கிடைக்கும். நெல் அடித்து... தூற்றி எடுத்ததும் கருக்காய்களை களத்தின் ஓரத்தில் குவித்திருப்போம். அதில் கரையான் அதிகம் பிடித்திருக்கும்... கொஞ்சம் அள்ளினாலே அதிகம் கரையான் இருக்கும்.. கரையான் போட்டால் கோழிக்குஞ்சு சீக்கிரம் பெரிதாகும். எங்க வீட்டில் கோழி, சேவல் என அம்பது அறுபது உருப்படி நின்றது. எங்க ரெண்டாவது அண்ணனுக்கு அதுகதான் உலகம். மேய்ச்சலுக்குச் சென்றாலும் அதுக மேயுற வயலுக்குப் போயி 'பேக்...பேக்..' என சப்தம் கொடுத்தாருன்னா எல்லாம் அவருகிட்ட ஓடி வந்திரும். அப்புறம் கொண்டு போன கம்பு, அரிசி எல்லாம் போட்டுட்டு வருவாரு... அந்தக் கோழிகளை ஒரு குரூப் கடத்திக்கிட்டுப் போனதும் எங்க சொந்தக்காரர் அதை மீட்டுக் கொண்டு வந்ததும் தனிக்கதை.

எங்க பெரியண்ணனுக்கு கோழி வளர்க்கிறதுன்னா அம்புட்டுச் சந்தோஷம்... அவரு அரவக்குறிச்சியில இருந்து சாதிச் சேவல் கொண்டு வந்து வளர்த்தாரு... சும்மா மயிலு கணக்கா இருக்கும்... ரெண்டு சேவலும் ஒண்ணு சொன்ன மாதிரி இருக்கும். கட்டித்தான் போட்டிருப்போம்... அவரோட திருமண வீடியோவில் அந்த சேவல்களும் இருக்கும். இப்பவும் அண்ணன் வீட்டிலும் சரி... அவர் வேலை பார்க்கும் இடத்திலும் சரி கோழி சேவல்களோடுதான் வாழ்ந்து வருகிறார்.

என்னடா இவன் கோழி சேவல்ன்னு புலம்புறானேன்னு நினைக்கிறீங்களா? ஒண்ணுமில்ல எங்க வீட்டு வாண்டு விஷாலுக்கு ஆடு, மாடு, கோழியின்னா ரொம்ப இஷ்டம்... எங்க வீட்டு போர்டிகோவில் அம்மாவை நச்சரித்து ஒரு கோழிக்கூடு வாங்கி வச்சி எங்க அண்ணங்கிட்ட ''அப்பா எனக்கு கோழி வேணும்... கொடுங்க' என நச்சரித்து சேவலும் கோழியும் வாங்கி வந்து அம்மாவை வளர்க்கச் சொல்லி தானும் பார்த்துக் கொண்டான்.

 முட்டையிட்டுக் கொண்டிருந்த கோழியை எதோ தீண்டிவிட அது மரித்துப் போனது. இப்போ ஒரு கோழி வாங்கி அது முட்டையிட்டு 11 குஞ்சும் பொறித்தது. அதில் நேற்று வரை எட்டு மிச்சமிருந்தது. இன்று கொஞ்சம் வங்கிப் பணி காரணமாக என் மனைவி அலைந்து திரிந்ததால் திறந்து விட்ட கோழியை மாலை வரை பார்க்கவில்லையாம். சாயந்தரம் வீட்டுக்கு வந்த கோழி மூன்று குஞ்சுகளைக் தொலைத்துவிட்டு வந்திருக்கிறது. விஷால் வருத்தமாய்ச் சொல்லிவிட்டு தூங்கிவிட்டான்.

கோழி, ஆடு, மாடு இவற்றுடன் வாழ்ந்த வாழ்க்கை என்றும் வசந்தம்தான். இப்போது எங்க வீட்டில் கோழிக்கூடும் மாட்டுக் கசாலையும் காட்சிப் பொருட்களாய் இருக்கின்றன. அங்கு வாழ்ந்த கோழிகளும் மாடுகளும் எப்போதும் நினைவில் நிற்கின்றன...

-கிராமத்து நினைவுகள் தொடரும்.
-'பரிவை' சே.குமார்.

8 எண்ணங்கள்:

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

அன்றைய கிராமங்களில் கோழியில்லா வீடிருக்காது.எனக்கும் கோழி வளர்ப்பில் ஆர்வம் இருந்தது.
60 ஆச்சு ஆனாலும் 10 வயதில் வளர்த்த கோழி அதன் கூடு எல்லாம் நினைவை விட்டகலவில்லை.
நினைவை மீட்டுவிட்டீர்கள்.

ஸ்ரீராம். சொன்னது…

பஞ்சாரங்கள் - புதிய சொல் எனக்கு.

கோழியை வியாபாரத்துக்கோ, சமைக்கவோ வளர்க்கவில்லையா குமார்? பெருகிக் கொண்டே போகுமே..

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

கோழி, ஆடு, மாடு இவற்றுடன் வாழும் வாழ்க்கை என்றும் வசந்தம்தான்

துரை செல்வராஜூ சொன்னது…

கோழிகள் நமக்குச் சொல்லும் பாடங்கள் ஏராளம்!..

இயற்கையை நினைவூட்டும் இனிய பதிவு!.. வாழ்க நலம்!..

Unknown சொன்னது…

இப்போதெல்லாம் அந்த நினைவுகளை மீட்டிப் பெருமூச்சு விடுவதோடு சரி.ஆடு,மாடு கோழி,நாய்,பூனை என்று......ஹூம்!

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் சொன்னது…

என் தாத்தா வீட்டில் இருந்த சேவல் கோழிகளையும் நினைத்துக்கொண்டிருந்தேன்..உங்கள் பதிவின் தலைப்பு இழுத்துவந்துவிட்டது என்னை. கோழி,சேவல், ஆடு என்று வீட்டில் வளர்ப்பது இனிமைதான்

”தளிர் சுரேஷ்” சொன்னது…

கிராமத்தில் வாழ்ந்தவர்களுக்கு கோழி சேவல் போன்றவை ஒரு வசந்த கால நினைவுகள்தான்! கோழிகள் வளர்த்தது இல்லை என்றாலும் கோழிகள் வளரும் ஊரில் வசித்தமையால் உங்களின் உணர்வுகளை புரிந்துகொள்ள முடிகிறது! நன்றி!

ezhil சொன்னது…

கோழிகள் பற்றி எழுதி நான் கோழி வளர்த்ததைப் பற்றியும் நினைவூட்டியிருக்கீங்க... உங்களை மாதிரி பண்ணை இல்லைன்னாலும் கொஞ்சமா வளர்த்தோம் பெயரெல்லாம் வைத்திருந்தேன் பள்ளி முடிந்து வந்ததும் என் பின்னாலேயே சுற்றிக்கொண்டிருக்கும்..அது ஒரு கனாக் காலம்...